புதுவை ஜீவானந்தம் ஸ்கூலில் எட்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தபோது எங்கள் க்ளாஸ் மிஸ் ஒருநாள் வகுப்பில் எல்லோருக்கும் மிட்டாய்கள் விநியோகித்தார்.
”இன்னைக்கு என்ன மிஸ் ஸ்பெஷல்”
“இன்னைக்கு கர்மவீரர் காமராஜர் பிறந்தநாள்டா பசங்களா. அவரைப் போல நேர்மையான ஒரு தலைவர் அவருக்கு முன்னாலயும் உருவானதில்லை, அவருக்குப் பிறகும் உருவாகலை. நானெல்லாம் படிச்சி உங்க முன்னாடி ஆசிரியரா இருக்க அவர் கொண்டு வந்த கல்வித்திட்டம்தான் காரணம்”, என்றார்.
காமராஜர் முன்னாள் தமிழக முதல்வர் என்ற தகவல் மட்டுமே அன்றுவரை நான் அவர்பற்றி அறிந்திருந்த தகவல்.
அதன் பின் காமராஜர் வாழ்க்கை வரலாறின் சிற்சில பகுதிகளை ஆங்காங்கே வாசித்திருந்தாலும் அவர் குறித்த முழுமையான ஒரு புத்தகத்தை இதுவரை நான் வாசிக்காமலேயே இருந்திருக்கிறேன்.
கிழக்கு பதிப்பக வெளியீடாக நாகூர் ரூமி எழுதி வெளிவந்திருக்கும் ”காமராஜ் ” புத்தகம் சமீபத்தில் வாசிக்கக் கிடைத்தது. இந்தத் தலைமுறை மக்கள் தமிழகம் கண்ட ஒரு மாபெரும் தலைவன் பற்றி அறிந்து கொள்ள வேண்டிய தகவல்களைக் கொண்ட ஒரு நல்ல அறிமுக நூல் இது எனலாம்.
இந்தப் புத்தகத்தை எழுதத் துவங்கிய போது நான் எட்டாம் வகுப்பில் அறிந்து வைத்திருந்த தகவலுக்கு எள்ளளவும் அதிகத் தகவல் நூல் ஆசிரியர் வசம் இல்லை. பத்திரிக்கைகள், நூல்கள், இணையம் என்று திரட்டிய தகவல்களைக் கொண்டே இந்தப் புத்தகத்தை எழுதியுள்ளார்.
நூற்று இருபதே பக்கங்களில் காமராஜரின் பிறப்பிலிருந்து இறப்பு வரை அந்தக் ”கருப்பு காந்தியின் வெள்ளை வாழ்க்கை”யை ஒரு கதை சொல்லியின் நேர்த்தியோடு சொல்லியிருக்கிறார் நாகூர் ரூமி.
இந்தியாவின் தென்கோடி ஊர் ஒன்றில் பிறந்த காமராஜர் எங்ஙனம் இருமுறை மத்தியில் ஆட்சி அமைய, பிரதமரைத் தேர்ந்தெடுக்க முக்கியக் காரணியாக அமைகிறார் என்ற தகவல் சொல்லும் ”கிங்மேக்கர்” பக்கங்கள் புத்தகத்தின் ஹைலைட்.
காமராஜரின் நேர்மை, அரசியல் தூய்மை, எளிமை போன்றவற்றை நம்மில் பலரும் அறிவோம். அவரின் நிர்வாகத் திறன் பற்றி நம்மில் எத்தனை பேர் அறிவோம்? ஒன்பது ஆண்டுகள் தமிழக முதல்வராக இருந்த காலத்தில் அவர் படைத்த சாதனைகளை நூல் ஆசிரியர் பட்டியலிடுகிறார். தமிழகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கெல்லாம் முதுகெலும்பாய் அமைந்த திட்டங்கள் அவை என்றால் அது மிகையில்லை.
மன்னர்கள் காலத்தில் அமைக்கப்பட்ட அணைகளுக்குப் பின் தமிழகத்தில் அமைக்கப்பட்ட அணைகளில் பெரும்பாலானவை காமராஜரின் ஆட்சி காலத்தில் கொண்டுவரப்பட்ட ‘நீர்த்திட்டங்களின்” வாயிலாக அமைக்கப்பட்டவைதானாம்.
காமராஜர் ஆட்சி காலத்தில் 13000’த்திற்கும் மேற்பட்ட தமிழக கிராமங்களுக்கு மின்சார வசதி செய்து தரப்பட்டதாம். இன்றைய நவநாகரீக உலகிலும் மின் தட்டுப்பாட்டின் இடையே புழங்கி வரும் நமக்கு, ஐம்பதுகளில் 13000 கிராமங்களுக்கு ஒளியேற்றிய ஒருவனைப் பற்றி படிக்கையில் சிலிர்க்கத்தான் செய்கிறது.
இவை நான் குறிப்பிடும் இரண்டே விஷயங்கள். பட்டியல் மிகப் பெரியது.
”காமராஜர் நீர் கொடுத்தார், நிலம் கொடுத்தார், தொழில் கொடுத்தார், தமிழ் கொடுத்தார், கல்வி ஒளி கொடுத்தார், மின்சார ஒளியும் கொடுத்தார். இதைவிட அதிகமாக ஒரு தனிமனிதனால் ஒரு சமுதாயத்துக்கு சேவை செய்துவிட முடியுமா என்ன?”என்கிறார் நாகூர் ரூமி.
நான்
நேரில் சந்தித்த, படத்தில் (அ) திரையில் கண்டவர்களுள்
காமராஜருக்கு இணையான கம்பீரத் தோற்றம் கொண்ட ஆண்மகன் யாருமில்லை என்பேன். கனகம்பீர உயரமும், முழுக்கைக் கதர் சட்டையும் ”கருப்புப் பேரழகன்” அவன்.
இறுதிவரை வாடகை வீட்டில் தங்கியிருந்த காமராஜர் மறைந்த போது அவரிடம் பத்து கதர் சட்டைகள், வேட்டிகள் மற்றும் பணமாக ரூபாய். 100 மட்டுமே இருந்ததாம்.
இன்றைய தலைவர்கள் நிலை நினைத்து நெஞ்சு விம்முகிறது. மறுபடியும்
ஒரு காமராஜர் பிறக்கமாட்டாரா என மனம் ஏங்குகிறது.
காமராஜர் - நாகூர் ரூமி
கிழக்கு பதிப்பகம்
120 பக்கங்கள்
விலை ரூ. 70/-
இணையத்தில் வாங்க: கிழக்கு
தங்களின் பதிவு முடிவில் மனதை நெகிழ வைத்தது... நன்றி ஐயா...
ReplyDelete