வெளிநாட்டு வாழ்வை எழுதினால் ஏதோ ஒரு கட்டத்தில் மிகையாகவோ அல்லது பொய்த்தோற்றத்தையோ தரக்கூடிய சாத்தியங்கள் அதிகம். அதுவும் இந்திய மனதுக்கு அந்நியமான ஒரு வாழ்வை எவ்வளவு அணுக்கமாக எழுதினாலும் அதில் ஆசிரியரின் ஒன்றிரண்டு அவதானிப்புகள் துருத்தி நிற்கும். பொ.கருணாகரமூர்த்தியின் ‘பெர்லின் இரவுகள்’ எனக்கு அப்படி ஒரு சித்திரத்தை கொடுத்துவிடும் என்ற எதிர்பார்ப்போடு படிக்க உட்கார்ந்தேன். மூன்று வருடங்களாக என் அலமாரியில் உறங்கிக் கிடந்த உயிர்மை பதிப்பக நூல். பெர்லின் நகரின் இரவு வாழ்க்கையை ஒரு காரோட்டியின் கண்கள் வழியே சித்தரிக்கிறது.
பெர்லின் நகரம் மட்டுமல்ல எந்த பெருநகரின் இரவும் ரம்மியம் கலந்த கலக்கத்தை உண்டு செய்யும். மழைக்காடு காய்ந்ததும் சருகுகளுக்குக் கீழிருந்து வெளிவரத் துடிக்கும் பூச்சிகள் போல இரவின் கருமை மனிதர்களில் ஒரு சாராரை வெளியே அழைக்கிறது. களியாட்டங்களுக்கும் பெரும் கொண்டாட்டங்களையும் உள்ளடிக்கிய பெர்லின் நகரில் இரவு நேர காரோட்டியாக இருப்பதன் சங்கடங்களையும் சந்தோஷங்களையும் முன்வைக்கிறார் பொ.கருணாகரமூர்த்தி. ஒவ்வொரு கட்டுரையிலும் வெளிப்படும் வேடிக்கைகளையும் மன நெகிழ்வுகளையும் தாண்டி மனிதர்களை வினோத மனச்சித்திரங்களை புரிந்துகொள்ள முடிகிறது. இதே மனிதர்கள் மியான்மார், டோக்கியோ, சென்னை என எந்த நகரத்திலும் நமக்குக் கிடைப்பார்கள் என்பதைச் சொல்லத் தேவையில்லை.
ஜெர்மன் நாட்டுத் தலைநகரான பெர்லின் மாநகரத்து இரவு பொலிவுக்கும் கேளிக்கைக்கும் பெயர் பெற்றது. அப்படிப்பட்ட நகரில் இருபத்து ஐந்து வருடங்களாக இரவு நேர காரோட்டியாக இருந்து வருபவர் பொ.கருணாமூர்த்தி. இத்தொழிலின் வியாகூலங்களாக பல விஷயங்களைக் குறிப்பிடுகிறார் - ஊற்றிக்கொண்டு வரும் குடிமக்கள், களியாட்ட விடுதிகள் மசாஜ் கிளப்புகளிலிருந்து வரும் பெண்கள், பேச்சுத்துணையில்லாமல் சுற்றித்திரிந்து காரோட்டிகளிடம் மணிக்கணக்கில் வம்படிக்கும் கிழவிகள், உல்லாசபுரத்தின் விடுதிகளை நோக்கி செல்லும் ஆண்கள், வீட்டில் தங்குவதற்கு முடியாமல் மனைவியின் தொந்தரவுகளிலிருந்து தப்பிக்க நினைக்கும் ஆண்கள் என சகலரும் அவருடைய ஸ்னேகிதர்கள் தான். சொல்லப்போனால் சவாரிக்கு ஏற்றுச் செல்லும் பெரும்பான்மையான ராக்கோழிகள் மிகுந்த சுவாரஸ்யத்துடன் உலகமே காரோட்டியிடம் தான் உள்ளது போல மிக மகிழ்ச்சியாக பேசிவருவார்கள் என பொ.கருணாகரமூர்த்தி குறிப்பிடுகிறார்.
‘அப்ப நீ பூ விக்கலையா’ எனும் கட்டுரையில் பெர்லினின் வரலாற்று கட்டடங்கள் இருக்கும் பகுதியில் ராஉலா போனபோது நடந்த சுவையான சம்பவங்களை எழுதியுள்ளார். பாலியல் தொழிலாளியிடம் தான் நடத்திய நேர்காணலை எழுதும்போது, தமிழ்த் திரைப்பட நடிகையின் உடலசைவு போல நிமிடத்துக்கு ஒருமுறை கேசத்தை பின்னுக்குத் தள்ளிக்கொண்டிருந்தார் என விவரிக்கிறார். ஆண்களால் தான் இப்படி ஆனோம், குடும்பத்துக்காக சீரழிந்தோம் என பெண்ணியவாதிகளின் பேச்சை அடியோடு மறுக்கும் அவர் அவை மேலோட்டமான மதிப்பீடுகள் எனவும் இப்படிப்பட்ட தொழில் செய்வது எவ்விதமான மாரல் சீர்கேடு கிடையாது என வாதிடுகிறார். குறிப்பாக இது எங்கள் சுதந்திரம், மானுட விழுமியம், தர்மம், நியாயம் போன்ற தத்துவங்களை எங்கள் தலைகளில் கட்டாதீர்கள் என மிக தீர்க்கமாக வாதாடியதாக கருணாகரமூர்த்தி குறிப்பிடுகிறார். ஐரோப்பாவின் பாலியல் சுதந்திரம் எனக் கூப்பாடு போடும் பலருக்கு மிகவும் உவப்பானதொரு பேட்டி.
நான் படித்தவரை, பொ.கருணாகரமூர்த்திக்கு நகைச்சுவை உணர்வு மிக அதிகம். அதுவும் சமூகத்தின் பல அடுக்களில் இருப்போரையும், விளிம்பு நிலையில் வாழக்கூடிய மனிதர்களைப் பற்றி பேசும்போது கூட தனது தீர்ப்புகளை அவர்கள் மேல் போடுவதில்லை. அவர்கள் விளிம்புநிலை மனிதர்கள் என்பதாக நாம் சொல்வது கூட ஒரு போலி அடையாளம் தான் எனச் சொல்லாமல் சொல்கிறார். அப்படி வாழ்பவர்கள் அதைப் பற்றி கவலைப்படுவதில்லை; மனித அறத்தைப் பேசும் ஒழுக்கவாதிகளின் போலி கற்பிதம். இதுவே இவரது எழுத்துகளை ரசித்து படிக்க வைக்கின்றது. மேலும் கலைஞன் என்பவனுக்கு இருக்க வேண்டிய சமூக தளைகளை மீறிய சமநிலைப்பார்வை இவரது எழுத்தில் வெளிப்படுகிறது. அதுவே மிக நெகிழ்வான கட்டுரைகளாக இவற்றை ஆக்குகிறது.
சரித்திரம் வாய்ந்த கட்டிடங்கள், வரலாற்று நாயகர்களின் பெயர் தாங்கிய சாலைகள், செயற்கையாக ஜொலிக்கும் இரவு நேர களியாட்ட விடுதிகள், தகறாரு செய்யும் கிழவர்கள், பேசியபடி திசையறியாது ஊர்சுற்றிக் காட்டச் சொல்லும் கிழவிகள், பிரோக்கர்களை ஏமாற்றிவிட்டு வம்படித்துத் திரியும் பாலியல் தொழிலாளிகள் என அவரைத் தொட்டுச் செல்லும் உலகம் மிக விநோதமானது. அதை ரசிக்கும்படி ரச்னையோடு நம்மோடு பகிர்ந்திருக்கிறார்.
அவரது வார்த்தைகளில் -
‘நட்சத்திரங்களின் முழு ஜொலிப்பையும் சிமிட்டலையும் உலகம் நன்கு ரசிக்கட்டுமே’ என்று செம்முகில்கள் சற்றே விலகி நின்ற பல இரவுகளில் நீல வானத்தின் பகைப்புலத்திலும், பல விடியல்களில் செவ்வானத்தில் வைலெற் ஊதா மென்னீல முகில்களின் பின்னணியிலும் தொலைக்காட்சிக் கோபுரக்கூண்டையும், சார்லோட்டன்பேர்க் அரண்மனையின் மணிக்கலசத்தையும், போரின் கொடூரங்களை உலகத்துக்கு நினைவுறுத்திக்கொண்டிருக்கும் கெய்சர் வில்கெல்ம் சர்ச்சின் திருத்தம் செய்யப்படாத கோபுரத்தையும், பிரெஞ்சு விக்டரி ஞாபகார்த்த கோபுரத்தின் உச்சியில் பறக்கும் தங்க்த் தேவைதையும், பிறாண்டென்பேர்க் கடவையின் மேல் பாயும் குதிரைகள் பூட்டிய செப்பு இரதத்தையும் கண்டு பெர்லினை ஏதோ நாம் தலைமுறை தலைமுறையாக வாழ்ந்துவரும் மண் போலெண்ணி நான் மோகித்திருக்கிறேன்.
பெர்லின் இரவு வாழ்வை தெரிந்து கொள்வதற்காகப் படிக்காமல், நம் கைக்கெட்டும் தூரத்தில் வாழும் பலவித மனிதர்களுடைய விசித்திர வாழ்வை விளக்கிக் கொள்ளவும் இச்சிறு நூல் பயன்படும். மிகத் துல்லியமாக புனைவு மொழியில் சொல்லப்பட்டுள்ள இக்கட்டுரைகள் பலமுறை ரசித்துப்படிக்கக் கோரும் தொகுப்பாகும்.
நூல் - பெர்லின் இரவுகள்
ஆசிரியர் - பொ.கருணாகரமூர்த்தி
பதிப்பகம் - உயிர்மை
உள்ளடக்கம் - கட்டுரைகள்
விலை - ரூ 75/-
இணையத்தில் வாங்க - உடுமலை.காம்
புத்தக விமர்சனம் அருமை...
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி ஐயா...
உலகம் மிக விநோதமானது. அதை ரசிக்கும்படி ரச்னையோடு பகிர்ந்திருக்கும் சிறப்பான விமர்சனப் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..
ReplyDeleteதிண்டுக்கல் தனபாலன் மற்றும் ராஜராஜேஸ்வரி
ReplyDeleteதங்கள் வரவுக்கு மிக்க நன்றி..தொடர்ந்து ஊக்குவிப்பு ஆம்நிபஸ்க்கு தேவை..
இந்த பைராகியின் ஆசிர்வாதங்கள்.