ஆசிரியர் : என்.சொக்கன்.
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 255
விலை: Rs.135
இணையத்தில் வாங்க: கிழக்கு / உடுமலை
மொத்தம் ஏழு பேர். வெவ்வேறு ஊர் / சூழல் / மொழி. ஆனால் அனைவருக்கும் ஒரே நோக்கம். மகாத்மா காந்தியை கொலை செய்வது. அவர்கள் ஒவ்வொருவரின் பின்னணியையும், அவர்களின் நோக்கத்திற்கான காரணங்களோடு தனித்தனியாக விளக்கி, அவர்கள் எப்படி இணைகிறார்கள் என்பதை சொல்லி, திட்டத்தை எப்படி நடத்தி முடிக்கிறார்கள் என்று துல்லியமாக தேதிவாரியாக விளக்குகிறார் ஆசிரியர்.
இந்திய பாகிஸ்தான் பிரிவினையில் துவங்குகிறது பிரச்னை. அப்போதைய கலவரத்தில் புலம் பெயர்ந்தவர்களுக்கு / அவர்கள் உறவினர்களுக்கு காந்தியின் மேல் ஏற்பட்ட வெறுப்பு, கோபம் ஆகியவை கொலை செய்யும் அளவிற்கு போகிறது என்று துவங்கும் அத்தியாயம் முதல், இறுதிவரை பல பின்னல்கள், திருப்பங்கள் நிறைந்த வரலாற்றில், நமக்கு ஏற்கனவே முடிவு தெரிந்தாலும் ஒரு துப்பறியும் நாவல் போல் பரபரவென்று போகின்றது புத்தகம்.
கொலை செய்தாயிற்று. பிறகு அந்த கொலையாளிகள் என்ன ஆனார்கள்? அவர்களுக்கு என்ன தண்டனை கிடைத்தது? யார் அவர்கள் மேல் வழக்கு தொடுத்து, குற்றத்தை நிரூபித்து தண்டனை பெற்றுக் கொடுத்தார்கள்? அந்த வழக்கு நடந்த சமயத்தில் நிகழ்ந்த சம்பவங்கள் - இவையும் புத்தகத்தில் விவரமாக உள்ளன.
காந்தியை சுட்டவர் கோட்ஸே, காந்தியை சுட்டவர் கோட்ஸே - என்ற வாக்கியத்தை மட்டும் மனப்பாடம் செய்து வந்தவர்களுக்கு, அந்தப் படுகொலைக்குப் பின்னால், எவ்வளவு பேர் இருக்கின்றனர், எவ்வளவு திட்டமிடல்கள் தேவைப்பட்டிருக்கின்றன என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. அந்தக் குறையை தீர்க்க வந்ததே இந்த புத்தகம். பற்பல புத்தகங்களை படித்து, ஆதாரங்களை திரட்டி, நாம் படிப்பதற்கு மிகவும் எளிதாக காலஅட்டவணையுடன் கொடுத்திருக்கிறார் ஆசிரியர்.
ஜனவரி 30, 1948க்கு முன்னரே பல முறை கொலை முயற்சி நடந்ததாகவும், அப்பொழுதே அந்த கொலை முயற்சி செய்தவர்களை தேடிப் பிடித்திருந்தால், மகாத்மா காந்தி - இந்திய சுதந்தரத்திற்காக பாடுபட்டவர் - இந்தியாவின் தேசப்பிதா - இன்னும் சில காலம் வாழ்ந்திருப்பார் என்று தெரியவரும்போது ஒரு பெருமூச்சு மட்டுமே வருகிறது.
காந்திய வரலாற்றில் ஆர்வமுள்ளவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம்.
ஆம்னிபஸ் வாசகர்கள் அனைவருக்கும் இனிய சுதந்தர தின நல்வாழ்த்துகள்.
என்னுடைய புத்தகத்தை அறிமுகம் / விமர்சனம் செய்தமைக்கு நன்றி சத்யா :)
ReplyDeleteஎன். சொக்கன்,
பெங்களூரு.
பக்கக் கணக்கு தவறாக உள்ளதோ?
ReplyDeleteஎனக்கு புத்தகம் படிக்கணும் போல ஆர்வமாக உள்ளது.
ReplyDelete