சிறப்புப் பதிவர்: ஜில்_ஆன்லைன் (காமாட்சிராஜன்)
கலகம், காதல், இசை என்கிற இந்த சின்னஞ்சிறிய புத்தகம், சமூகத்தின் வெவ்வேறு மாய அடுக்குகளை, இசைக் கலைஞர்களின் வாழ்வியல் வழியாக ஊடுருவிப் பார்க்கிறது. சீலேயில் கலைஞர்கள் அரசியலை நோக்கிப் பரவிய அசலான நிகழ்வை, புனைவைப் போல் விவரித்து பரவசப்படுத்துகிறது. இசை, அதனோடுகூட அரசியல், மானுடவியல், பூகோளம், கணிதம், வான சாஸ்திரம், பௌதிகம், கட்டிடக்கலை என எல்லாத்துறைகளையும் ரம்மியமான மொழியில் தீண்டிச் செல்கிறது. இந்த புத்தகத்தின் வாசிப்பு, முழுவதும் ஜன்னல்களால் ஆன அரண்மனைக்குள் நின்று கொண்டிருக்கும் உணர்வைத் தருகிறது. வாசகர்கள் தாங்கள் விரும்பிய ஜன்னலைத் திறந்து பார்க்கலாம்.
கணிதமும் இசையும் என்கிற கட்டுரையின் வாக்கியங்களில், அறிவியலும் இசையும் காமம் கொண்ட இரு பாம்புகளைப் போல் பின்னிக் கிடக்கின்றன. அரபி மொழியின், இசையின் அழகியலை பற்றி இந்த புத்தகத்தில் ஒரு கட்டுரை உள்ளது. அதைப் படித்து முடித்ததும் இன்னும் ஓர் எழுத்து கூட தெரியாத அந்த மொழியின் மீது மெல்லிய காதல் வந்து விடுகிறது. (இசை வடிவில் அமைத்துள்ள மொழி அரபி மொழி , மற்றொரு விசேஷம் அதன் எழுத்து வடிவம் ஓவியம்).
பெத்ரோ பௌலசின் யை (எழுத்தாளர் ) பற்றி புத்தகத்தில் வரும் எளிய குறிப்பு இதோ ....
"பெத்ரோ பௌலசின்யின் koliarda என்ற புத்தகம் 1971 இல் வெளிவந்தது. கிரீசின் ஓரினப் புணர்ச்சியாளர்களின் பேச்சு மொழி அகராதி இந்தப் புத்தகம். இதற்காக இவர் மீண்டும் சிறைப்படுத்தப்பட்டார். (ரெம்பேத்திக என்ற புத்தகத்திற்காக 5 மாதங்களும், ஹோமோ செக்ஸ்சுவல் அகராதிக்காக 7 மாதங்களும், உடல் என்கிற கவிதை தொகுதிகாகவும் 7 மாதங்கள் சிறையில் இருந்தார்.) history of the condom (1999) (படங்களுடன் விவரிக்கப்பட்ட 500 பக்க புத்தகம்.) இவர் எழுதிய புத்தங்களில் ஒன்று."
பெத்ரோ பௌலசின் போன்ற எண்ணற்ற ஆளுமைகள். ஆதிசங்கர், பிதாகரஸ் , ஹோமர் என அற்புதமான மனிதர்களை புத்தம் நெடுக சந்திக்க நேர்கிறது. இவற்றையெல்லாம் படிக்கும்போது இது போன்றதொரு தகவல் சேகரம் இன்னொரு மனிதனால், ஏன் இன்னொரு முறை இதன் ஆசிரியர் சாரு நிவேதிதாவால்கூட நிகழ்த்த முடியாது என்று எண்ணத் தோன்றுகிறது!
15 ஆண்டுகளாக நாடுகடத்தப்பட்ட Inti-Illimani (இயிமானி மலைச் சூரியன் ) என்ற இசைக்குழு, இசைக்காக பிதாகரஸ் நடத்திய ரகசிய பள்ளி, ஸாம்போ என்ற உலகின் முதல் லெஸ்பியன் பெண் கவி, உடலில் டைனமைட்டைக் கட்டிக்கொண்டு சிப்பாய்கள்முன் ஆனந்த நடனமாடிய நிலக்கரிச் சுரங்கத்தில் வேலை செய்யும் அடிமைகள், என இந்த புத்தகம் பல அலாதியான விசயங்களைப் பேசி நம்மைச் சிதறடிக்கிறது.
இந்த புத்தகம் எங்கே வேறுபடுகிறது என்றால், இசையைப் பற்றி தமிழில் வெளிவந்த சொற்ப புத்தகங்களில் ஒன்றுகூட வாகா எல்லையை தாண்டிப் பேசியதில்லை. கலகம் காதல் இசை அனாயசமாக எல்லாவற்றிலும் அத்துமீறல் செய்கிறது.
"கலகம், காதல், இசையை" , பயணங்களின்போதோ, டிவி பார்த்துக் கொண்டோ , just like that படிக்க முயல்வது அபத்தம். சிகரெட்டைப் பற்றவைக்க, கடைசித் தீக்குச்சியை உரசுபவனின் கவனத்தோடு படிக்க வேண்டிய புத்தகம் இது.
கலகம், காதல், இசை - சாரு நிவேதிதா
உயிர்மை பதிப்பகம்
விலை ரூ. 70.
ஆன்லைனில் பெற: 600024.காம் / கிழக்கு
No comments:
Post a Comment