நுண்பல் துவலை ஒருதிறம் நனைப்ப
தண்டுகால் ஊன்றிய தனிநிலை இடையன் .. (அகம், 274;7,8)
(தண்டுகால் ஊன்றிய இடையன்)
அறிஞர் தியாடோர் பாஸ்கரனின் கட்டுரையில் முதன்முதலாக சா.பாலுசாமியின் ஆய்வு பற்றி அறிந்துகொண்டேன். மாமல்லபுரத்திலுள்ள சிற்பத்தொகுப்புகள் பற்றிய இந்த நூல் பல்லவ கலைப்படைபுகளை சமநிலையோடு ஆய்வு செய்கிறது எனக் குறிப்பிட்டிருந்தார். மாமல்லபுரத்தில் உள்ள சாளுவன் குப்பத்துப் புலிக்குகையும், கிருஷ்ண மண்டபமும் பார்ப்பவர்களுக்கு பெரிய ஆச்சர்யம் தரும் சிற்பத்தொகுதிகள். வெறும் கற்சிலைகள் எனப்பார்ப்பவர்களுக்கு அவற்றில் அடங்கியிருக்கும் எண்ணிலடங்காத நுண்ணிய விவரங்கள் புரியாமல் போவதில் ஆச்சர்யமில்லை. அடுத்த முறை மாமல்லபுரம் போகுமுன் இந்த புத்தகத்தை கையிலெடுத்துச் செல்வது மிக விரிவான விவரங்களை நமக்கு அளிக்கும்.
நூலாசிரியர் சா.பாலுசாமி முன்வைக்கும் அவதானிப்புகள் மிகப் புதுமையானவை என முன்னுரையில் தியாடோர் பாஸ்கரன் குறிப்பிட்டிருக்கிறார். அப்படி என்ன புதுமைகள் இருக்கக்கூடும்?
(தமிழ்நாடு - கீழ்வாலை குகை ஓவியம்)
பண்டைய இந்திய குகைகளில் வரையப்பட்டுள்ள குகை ஓவியங்கள் கலை மதிப்புக்காகவோ, ஆட்சியாளரின் பெருமைகளை பறைசாற்றும் விதமாகவோ, ஓவியர்களின் திறமைக்கு சான்றாக அமைவதற்காகவோ வரையபடுபன அல்ல. கலை மதிப்பில்லாத குகை ஓவியங்கள் அக்கால மக்களின் வாழ்வியல் நம்பிக்கை சார்ந்து வாழ்வோடு ஒன்றிருக்கும் அம்சங்களாக அமைந்துள்ளதால் அவர்களது அடையாளமாகக் கூட அச்சிற்பங்கள் கருதப்படுகின்றன. சில கோடுகள் மூலம் வரையப்பட்ட வினோத மிருகங்கள், கூட்டு நடனங்கள், வேட்டை சார்ந்த ஓவியங்கள் இதன் சிறப்பம்சமாகும்.
பின்னர் உருவான குப்தர்கள், பல்லவர்களது ஆட்சிக்காலத்தில் கலை பொருட்களுக்கு அவற்றின் பயன்பாடு தாண்டிய மதிப்பு உண்டானது. ஏறக்குறைய இக்காலகட்டத்தில் வெளியான ஓவியங்களும் சிற்பங்களும் மிக செழுமையான செவ்வியல் படைப்புகளாக உருவாகின. படைப்புகளின் செழுமை நுண்மை சார்ந்து மதிப்பு உருவானது. அது மட்டுமல்லாது பலவடிவங்களில், மாறுபட்ட கோணங்களில், உடல்மொழியை வெளிப்படுத்தும் வண்ணம் படைக்கப்பட்டன. அன்றைய வாழ்வை சொல்வது மட்டுமல்ல செழுமையான மாதிரி வடிவங்களும் பண்பாட்டு ஆவணங்களாக வடிவமைக்கப்பட்டன. ஒரு விதத்தில் ஆட்சியாளர்களின் பெருமையை உணர்த்த உருவான கலைப்படைப்புகள் அவர்களது சமய நம்பிக்கைகளையும் உள்ளடிக்கியிருந்தது. சைவம், வைணம் பெரு மதங்களாக உருவான இக்காலகட்டத்தில் தொடர்ச்சியான நிதி உதவி மூலம் பலதரப்பட்ட சிற்பங்கள், ஓவியங்கள், கோவில்கள் மூலம் கலைஞர்களுக்கு நிரந்தர ஆதரவு கிடைத்து வந்தது. ஒரே காலகட்டத்தில் தமிழகத்தின் பல கோவில்களில் ஒரே வகையான சிற்பத்தொகுதிகளை உருவாக்கியதிலிருந்து இதை உணரலாம்.
(மாமல்லபுரம் கிருஷ்ண மண்டபம்)
சா.பாலுசாமியின் ஆய்வு சிற்பங்களின் வெளிப்புறத் தோற்றத்தை மட்டும் கொண்டு அமைந்த ஒன்றல்ல. புராணக்கதைகள், இதிகாச நிகழ்வுகள், சங்க இலக்கியங்கள், பல்லவ சிற்பம் சார்ந்த பொதுவான பான்மை ஆகியவற்றின் கலவையில் பல அவதானிப்புகளை முன்வைக்கிறார். இந்திய பண்பாடு மற்றும் வரலாறை நேர்கோட்டு நிகழ்வுகளின் தொகுப்பாகப் பார்க்கும் ஆய்வாளர்கள் விட இப்படிப்பட்ட ஆய்வுகள் உண்மைக்கு பன்முகத்தன்மையை அளிக்கின்றன. பல கோணங்களில் அன்றைய பண்பாடை நம்மால் நெருங்கிப் பார்க்க முடிகிறது.
(சாளுவன் குப்பத்து புலிக்குகை)
மாமல்லபுரம் அருகே இருக்கும் சாளுவன் குப்பத்து புலிக்குகை என்பது கோவிலே அல்ல என வெளியான பிற அறிஞர்களின் ஆய்வை மறுபரிசீலனை செய்கிறார் ஆசிரியர். முருகனையும் இந்திரனையும் பரிவார தெய்வங்களாகக் கொண்ட சிவன்கோயிலையும் வடக்கு முகமாகக் கொற்றவைக்குரிய சிம்மக்கோயிலையும் கொண்டதொரு கூட்டுக்கோயில் என முடிவுக்கு வருகிறார். இதை முன்வைக்க கொற்றவைக்குரிய பொது அம்சங்களான சிம்மம், யாளிகளின் வடிவங்களைச் சுட்டிக்காட்டுவதோடு திருமுருகாற்றுப்படை மற்றும் பரிபாடல்களின் வரும் பாடல்களின்படி முருகனுக்கு மயிலும் யானையும் வாகனங்கள் என்பதை இச்சிற்பங்கள் காட்டுவதாகத் தெரிவிக்கிறார். இதுவரை வெளியான ஆய்வுகளில் யானை மேல் உட்கார்ந்திருப்பவர் இந்திரன் ஆதலால் இந்திரவிழா நடக்கும் இடமாக புலிக்குகையை தவறாக சித்தரித்து உள்ளனர் எனக்கூறுகிறார். புலிக்குகை ஒரு நடன அரங்கோ, இந்திரவிழா நடக்கும் களியரங்கோ இல்லை அது ஒரு கூட்டுக்கோவில் என நிறுவுவதற்கு புராணங்களைத் துணைக்கழைக்கவும் அவர் தயங்கவில்லை.
விஷ்ணுபுராணத்தின்படி பாற்கடலைக் கடையும் போது வெளிவந்த ஐராவதம் எனும் வெள்ளையானை, கடும் நஞ்சு, அமிர்தம், உச்சைச்சிரவம் எனும் வெண்குதிரை, திருமகள் போன்றவற்றை பல தேவர்களும் பெருங்கடவுளரும் பகிர்ந்துகொண்டனர். ஐராவதம் மற்றும் உச்சைச்சிரவம் இரண்டையும் இந்திரன் எடுத்துக்கொண்டதால் புலிக்குகையின் கிழக்கு பகுதியில் உள்ள வெள்ளை யானை மற்றும் வெள்ளை குதிரை மீது இருப்பவர் இந்திரனே என வாதிடுகிறார். மேலும் குப்தர் காலத்தில் பெருந்தெய்வமாகக் கருதப்பட்ட இந்திரன் பல்லவர் காலத்தில் திசை தெய்வமாக ஆகியுள்ளதால் கருவரைக்குள் அவனது சிற்பம் இல்லை எனக் குறிப்பிடுகிறார்.
மாமல்லபுரத்தின் மற்றொரு சிறப்பான சிற்பத்தொகுதி கிருஷ்ண மண்டபமாகும். கோவர்த்தன மலையின் கீழ் கண்ணன் மற்றும் பலராமனின் வலப்புறத்தும் இடப்புறத்தும் ஆயர், ஆய்ச்சியர், குழந்தைகள், அரச குலப்பெண்டியர், பசு, எருது, கன்று மற்றும் விந்தை விலங்குகள் எனப்பலரும் நிற்கும் காட்சி இத்திரிக்கப்பட்டுள்ளது. ஆயர்களின் பண்பாட்டு சித்திரமாகக் கருதக்கூடிய அனைத்து குறிப்புகளையும் ஆசிரியர் விரிவாக விளக்குகிறார். ஆயர்களின் ஆயுதங்களான கோடரி, கோல், ஆய்ச்சியரின் மண் பானைகள், உறி, மோர் பானைகள், வாஞ்சையோடு கன்றை நாவால் நக்கும் பசு, செழுமையான எருது, நகை அலங்காரங்கள், வளை அணிந்திருக்கும் கோபியர் என சிற்பத்தை உயிரோட்டமுள்ள குடும்பச் சித்திரம் போல விவரிக்கிறார். குறிப்பாக சிற்பத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் சில அசைவுகளை சிற்பிகள் தத்ரூபமாகச் செதுக்கியதை சுட்டிக்காட்டுகிறார். அவர் சொல்லும் உடல்மொழி, மாறுபட்ட கோணங்களில் செதுக்கப்பட்ட சிற்பங்கள், விவரிக்கும் சிற்ப பாணிகள் முதலியன மாமல்லபுரத்துக்கு உடனே சென்று அவற்றைக் காண வேண்டும் எனும் ஆவலைக் கூட்டுகின்றன. உள்ளிருக்கும் கருப்பு-வெள்ளைப் படங்கள் தவிர வண்ணப்படங்கள் பின்னிணைப்பாக கொடுக்கப்பட்டுள்ளது.
குடைவரை கோவில் (மலையைக் குடைந்து உருவாக்கப்படும்) , ஒற்றைக் கற்றளி (Monolithic), கட்டுமானக் கோயில், திறந்தவெளிப் புடைப்புச் சிற்பங்கள் எனச் சிற்பங்கள் அமைப்பதில் பல பாணிகளை ஆசிரியர் விளக்கியுள்ளது சிற்பக்கலை பற்றித் தெரியாத எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது. மரபிலமைந்த கோயில்கள் மட்டுமல்லாத புதுமையான வடிவில் உருவாக்கப்பட்ட உருளைக்கோயில், சிம்ம வாகனங்களின் மார்பில் சதுரப்பிளவுக்கு உள்ளே உருவாக்கப்பட்ட கோயில் என பலவகைக் கோயில்களைக் குறிப்பிடுகிறார்.
(பாயும் உறியும் ஏந்திய இடைச்சி)
பெரும்பாணாற்றுப்படை, அகநானூறு, புறநானூறுப் பாடல்களில் ஆயர்களின் வாழ்வியல் நிகழ்வுகளைக் கொண்டு சிற்பத்தின் முக்கியமான பகுதிகளை விவரித்திருக்கும் பகுதி மிகவும் ரசிக்கத்தக்க வகையில் அமைந்துள்ளது.
பேர் ஊரும் சிற்றூரும் கெளவை எடுப்பவள்போல்
மோரொடு வந்தாள் - தகை கண்டை; யாரோடும்
சொல்லியாள் அன்றே வனப்பு.. (கலித்தொகை)
கலித்தொகை பாடலில் செம்மார்ந்த நடையை உடையவள்; தலையில் மோர்ப்பானையுடன் அழகாலும் இளமையாலும் மிக்கு உடையவளாய் பேரூரின் கண்ணும் சிற்றூரின் கண்ணும் ஆரவாரம் எழுமாறு செல்பவள் போல், மோரோடு வந்தவள் அழகை நெஞ்சே காண்பாயாக, யாரோடும் சொல்லி ஒப்பிடமுடியாத வனப்பை உடையவள் - என சிற்பத்தின் அழகு அம்சங்களை பாடலுடன் விவரிக்கிறார்.
ஒரு விதத்தில் பார்த்தால் வாழ்வில் இருப்பவற்றை எந்தவித மிகையுமில்லாது விவரிப்பவையாக சங்கப் பாடல்கள் இருக்கின்றன. பல்லவர் காலத்தில் இருந்த ஆயர் சமூகத்தை இதனுடன் இணைத்துப்பார்க்கும்போது நமது பண்டைய இந்திய வாழ்வை படம் பிடிப்பதற்கு எத்தனை விதமான வழிமுறைகள் இருந்திருக்கின்றன என்ற எண்ணம் மனதை மகிழ்விக்கிறது. வரலாறு எனும் நிகழ்வுகளின் தொகுப்பை ஒரே பாங்கில் படம் பிடிக்காமல் புராணம், இதிகாசம், சங்க இலக்கியம், சமய பக்தி இலக்கியங்கள், சிற்பங்கள், கோவில்கள் என எத்தனை எத்தனை விதங்களில் நமது பண்பாடு நம்முன் விரியக்காத்திருக்கிறது! பக்கசார்பு எடுக்காமல், சமய ஆவ்ணங்களோடு ஒன்றிவிடாமல் பல விதமான குறிப்புகளிலிருந்து தேர்ந்தெடுத்து செய்யப்பட்ட ஆவணமாக இந்நூல் அமைந்துள்ளது. ஆய்வறிக்கை போலில்லாமல் படிப்பதற்கு மிகவும் சுவாரஸ்யமாக தேவையான இடங்களில் சிறப்பான படங்களோடு அமைந்திருப்பது புத்தகத்தை பலதரப்பட்ட வாசகர்களுக்கு கொண்டு சேர்க்கும்.
புகைப்படங்கள் நன்றி- Kilvalai wikipedia , புத்தகத்திலுள்ள புகைப்படங்கள்.
தலைப்பு - புலிக்குகையும் கிருஷ்ண மண்டபமும்
ஆசிரியர் - சா.பாலுசாமி (சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி தமிழ்த் துறை)
உள்ளடக்கம் - ஆய்வுக் கட்டுரைகள்
பதிப்பாசிரியர் - காலச்சுவடு பதிப்பகம்
இணையத்தில் வாங்க - உடுமலை.காம்.
சூப்பர் பைராகிஜி!
ReplyDeleteநல்லது நடக்கட்டும்..ஆசிகள் நடராஜரே
ReplyDeleteபைராகி
ஓம்!ஓம்!ஓம்!
பிரமாதம், சாமிஜி, சிற்ப கலை பற்றி வாசிக்க வேண்டும் என ஆவல் ஆனால் எங்கிருந்து தொடங்குவது என்று தெரியாமல் இருந்தேன். இது மிக சரியான துவக்கமாக இருக்கும் என்று எண்ணுகிறேன். திருமையத்தில் உள்ள புடைப்பு சிற்பத்தில் நடன அசைவை அப்படியே வடித்திருப்பார்கள் அது நினைவுக்கு வருகிறது.
ReplyDeleteஉருப்படியான விஷயங்களையும் புத்தகமாகப் போடுகிறார்கள் என்பதை அறிய மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல பதிவு. நன்றி பைராகி
ReplyDelete