”சிற்பி செதுக்கியதுதான் தெய்வச் சிலை. ஆனால் தெய்வம் அவனுக்குக் கட்டுப்பட்டதல்ல”
(சங்கச் சித்திரங்கள் புத்தகத்திலிருந்து)
”கவிதைகள், நாவல் போல, பழந்தமிழ் பாடல்கள், செய்யுள், பா'க்கள் படிக்க விருப்பம் தோன்றியிருக்கிறது. ஆர்வக்கோளாறில் சில பதவுரைகள் முயன்று பார்த்தேன். புரியவில்லை. ஒரு கட்டத்தில் ஆர்வமில்லாமல் போய்விடுகிறது. எதிலிருந்து துவங்கினால் சங்கத்தமிழ் வாசிப்பு சீராகும்? உதவுங்கள் அனுபவஸ்தர்களே!”
இப்படி இணையக் குழுமம் ஒன்றில் நண்பர் ஒருவர் கேள்வி ஒன்றைக் கேட்டிருந்தார்.
இந்தக் கேள்விக்கு மற்றோர் குழு உறுப்பினர் சொன்ன பதிலில் தொடங்கியது இந்தப் பதிவை எழுதுவதற்கான உந்துதல். அந்த பதிலைக் கடைசியில் பார்ப்போம், சங்கச் சித்திரங்கள் புத்தகம் பற்றி அதற்குமுன் பார்க்கலாம்.
ஒரு படைப்பு நம்முள் ஒரு அதிர்வை ஏற்படுத்த அது என்னவாக இருக்க வேண்டும்? எத்தகையதாக இருக்க வேண்டும்? அது ஒரு மூன்று வரிப் புதுக்கவிதையாக இருக்கட்டும், முப்பது வரித் திரைப்பாடலாக இருக்கட்டும், சிறுகதை, பெருங்காவியம், நாடகம், திரைப்படம் என்னவாக வேண்டுமானால் இருக்கட்டும். அது ஏற்படுத்தும் அதிர்வு எதனால் எங்கிருந்து ஏற்படுகிறது?
இது எனக்கு நிகழ்ந்த போது நன்றாயிருந்தது என எதையோ அசைபோட வைக்கிறது ஒரு படைப்பு. இந்த நிகழ்வு எனக்கு நிகழாமற் போகட்டும் என எதையோ பார்த்து அச்சமுறச் செய்கிறது இன்னொன்று. இப்படி ஒரு நிகழ்வு எனக்கும் நிகழ்ந்தால் எப்படி இருக்கும் என ஏக்கமுறச் செய்கிறது மற்றும் ஒன்று. அதிர்வின் காரணம் படைப்பில் இல்லை. படைத்ததைச் சொன்னவன் சொன்ன முறையினில் இல்லை. ஆனால், அதை வாங்கிக் கொண்டவன் வாங்கிக் கொண்ட விதத்தினில் இருக்கிறது.
ஒரு படைப்பின் சுவையை நாம் நம் சொந்த வாழ்வின் நுட்பமான அனுபவங்களின் வாயிலாக அறிதலே அழகு. சங்கப் பாடல்கள் நோக்கிய நம் அணுகுமுறையும் இத்தகையதாகவே இருக்கட்டும் என்று வலியுறுத்துபவர் ஜெயமோகன்.
சங்கப்பாடலின் அர்த்தத்தை எளிய நடையில் மொழிபெயர்ப்பது என்பது நாம் பள்ளியில் படித்த அருஞ்சொற்பொருள் அறிதல் மட்டுமேயன்றி வேறில்லை. புத்தகத்தை வைத்துக் கொண்டு யோகா, தியானம், சமையல், கராத்தே கற்பது எல்லாம் எப்படி சாத்தியமற்ற விஷயங்களோ அதே போன்றுதான் அருஞ்சொற்பொருள் விளக்கத்தின் வாயிலாக சங்கப் பாடல்களை அறிவதுவும். அருஞ்சொற்பொருள் தந்தவுடன் நின்றுவிடுவதில்லை அவற்றுள் பொதிந்துள்ள அர்த்தங்கள்.
சரி! சங்கச் சித்திரத்திற்கு வருவோம்.
சங்கச் சித்திரங்கள் ஆனந்த விகடனில் தொடராக வெளி வந்தது. ஒவ்வொரு அத்தியாயத்திலும் ஒரு சங்கப்பாடலை (அல்லது அதன் ஒரு பகுதியை) நமக்கு அறிமுகப்படுத்துகிறார் ஜெயமோகன்.
சங்கப்பாடல் ஒன்று, புதுக்கவிதை வடிவில் எளியநடையில் அதற்கான மொழிபெயர்ப்பு, அந்தப் பாடல் சார்ந்த அர்த்தம் பொதிந்த தன் வாழ்வின் உக்கிர அனுபவம் ஒன்று என ஒவ்வொரு அத்தியாயத்தையும் மூன்று லேயர்களாகப் பிரித்துச் சொல்கிறார் ஜெயமோகன்.
அந்த நாற்பது பாடல்களில் ஒரு உதாரணம் பார்ப்போம்:
காதலனோடு ஓடிப் போகும் தன் மகளின் பயணப் பாதையெங்கும் நிழலும், குளுமையும் நிறைந்ததாய் இருக்கட்டும் என எண்ணி அவள் அன்னை பாடும் பாடல் இது. குறுந்தொகையை ஏதோ ஒட்டுமொத்தமாகக் காதல் கவிதைகளின் தொகுப்பு மட்டுமே என்று நினைத்திருந்த எனக்கு இந்தப் பாடல் வேறொரு பரிமாணத்தைப் புரிய வைத்தது.
ஞாயிறு காணாத மாண்நிழற் படீஇய
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே
- (குறுந்தொகை 378, கயமனார்).
மலைமுதல் சிறுநெறி மணல்மிகத் தாஅய்
தண்மழை தலைய வாகுக – நம் நீத்துச்
சுடர்வாய் நெடுவேல் காளையோடு
மடமா அரிவை போகிய சுரனே
- (குறுந்தொகை 378, கயமனார்).
மனிதனின் மனதில் மாறாமல் தேங்கிப் போன சாதீய உணர்வுகளின் உக்கிர சொரூபத்தை ஜெயமோகன் தரிசித்த ஓர் வாழ்வனுபவம் இந்தப் பாடலின் அர்த்தத்தை நம் முகத்தில் அறைந்து புரிய வைக்கிறது. இந்த உக்கிரத்தின் வெம்மை நாம் ஒவ்வொருவரும் எங்கேனும் தரிசிப்பதே.
சங்கப் பாடல்களோடு பரிச்சயம் பண்ணிக் கொள்ள விரும்புபவர்கள் இந்தப் புத்தகத்தின் நாற்பது அத்தியாயங்களையும் வாசித்தல் நலம்.
இதையேதான் நம் இணையக் குழு நண்பர் இந்தப் பதிவின் ஆரம்பத்தில் மற்றொரு நண்பருக்குப் பதிலாய்ச் சொன்னார், இப்படி:
”ஜெயமோகனின் சங்கச் சித்திரங்கள்தான் சரியான துவக்கம்.
சங்கக் கவிதைகள் என்றில்லை, தமிழ் மொழியின் தனித்தன்மையையே உணர்வுகளோடு அறிய அதுதான் சரியான துவக்கம்.
அந்தப் புத்தகத்தை வாசித்தபின் பல சமயம் அவர் அதில் சொல்லியிருக்கும் கருத்துகளை, அவர் முன்வைக்கும் பார்வையை நினைத்துப் பார்த்திருக்கிறேன்.
இன்னமும் சொல்லப்போனால், இன்று நவீன விஷயங்களை எழுதவும்கூட சங்கச் சித்திரங்களை வாசிப்பது உதவக் கூடும்.
அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகங்களில் ஒன்று”
ஜெயமோகன்,
சங்கச் சித்திரங்கள்,
288 பக்கங்கள்,
கவிதா பப்ளிகேஷன்
டிசம்பர், 2002 பதிப்பு
விலை ரூ.100
இணையத்தில் கிழக்கு / உடுமலை
No comments:
Post a Comment