”பெண் என்கிற தீராத அதிசயத்தின் பால் எனக்குள்ள அன்பும் ஆச்சரியமும், ஏன், பக்தியும் தான் என்னை இதை எழுதச் செலுத்தும் சக்திகள்'' - சுஜாதா.
சென்னை கன்னிமாரா லைப்ரரியின் பக்கவாட்டில் அமைந்திருந்த “நிரந்தர புத்தகக் கண்காட்சி” ஸ்டாலில் ஒரு மதியநேரத்தில் எதையோ தேடி அசுவாரசியமாக இப்படியும் அப்படியும் நடந்து கொண்டிருந்த வேளையில் கண்ணில் பட்டது இந்தப் புத்தகம்.
சுவாரசியத் தலைப்பெல்லாம் ஒன்றுமில்லை, சுண்டியிழுக்கும் அட்டைப்படமும் இல்லை. சுஜாதாவின் பெயரைத் தாண்டி வேறொன்றுமில்லை. இப்படி ஒரு புத்தகத்தை சுஜாதா எழுதியிருக்கிறார் என்றுகூட அதுவரை நான் கேட்டதில்லை. சரி நம் கலெக்ஷனில் கிடக்கட்டும், நேரம் அமைகையில் படித்துக் கொள்வோம் என்றே வாங்கிப் போட்டது.
பையிலிருந்து புத்தகத்தை என் அலமாரிக்கு மாற்றப் போன கணத்தில் இரண்டு பக்கங்களைப் புரட்டத் துவங்கியவன் திரும்பக் கீழே வைக்க மனமில்லாமல் ஒரு மூச்சில் படித்து முடித்தேன். திரும்பத் திரும்ப சில அத்தியாயங்களைப் புரட்டிப் புரட்டி வாசிக்கிறேன். ஒரு வாரம் பத்து நாள்கள் இந்தப் புத்தகத்தை மறுபடி மறுபடி வாசிக்கிறேன். புத்தகத்தில் சொல்லப்பட்ட விஷயத்தின் கனம் மனதை விட்டு எளிதில் அகல மறுக்கிறது.
மங்கையர் மலர் மாத இதழில் சரியாக முப்பது ஆண்டுகளுக்கு முன் தொடராக வந்த இந்தப் படைப்பைத்தான் என்னைப் பொறுத்தவரை சுஜாதாவின் மாஸ்டர் பீஸ் என்பேன்.
அந்தாதி போலத்தான் இதன் கதை. ஒரு பெண்ணின் ஜனனத்தில் தொடங்கி அவள் தன் பெண்பிள்ளையை ஜனிக்கச் செய்யும் கணத்தில் நிறைகிறது. ஒரு சுழற்சி, அவ்வளவுதான் கதை. இருநூறு பக்கங்களில் அந்த ‘சின்னு’வின் வாழ்க்கையை சொல்கிறார் சுஜாதா. அவள் பார்வையில் உலகை வர்ணிக்கிறார்; உலகின் பார்வையில் அவளை வர்ணிக்கிறார். அவள் மனவெளியில் பயணிக்கிறது கதை. அறிவியில் ரீதியாக அவள் கருவில் இருக்கும் நிலை தொட்டு, மனதால்/உடலால் வளர்ந்து பெரியவளாகி அவள் கருவுரும் நிலை வரை அத்தனை நிலைகளிலும் பயணிக்கிறது கதை.
பிறந்த கணத்தில் தாயை இழந்து, தந்தையால் வளர்க்க முடியாத சூழலில் வேறோர் வசதியான வீட்டில் சில வருடங்கள் வளர்ந்து, தந்தையின் மறுமணத்திற்குப் பின் மீண்டும் பிறந்த இல்லத்திலேயே வளர்கிறாள் சின்னு. அவள் புறவுலகின்பால் கொண்ட பயம், ஆண்களின் சூழலில் வளைய வருகையில் அவர்கள் உலகம் பற்றின அவள் பார்வை, அவள் விருப்பு வெறுப்புகளுக்கு எதிராக நிகழும் விஷயங்கள், ஒரு கன்றுக்குட்டிக் காதல், செக்ஸ் பற்றிய அவள் பார்வை என நீள்கிறது கதை. அவள் அங்கீகரிக்காத ஒரு காதல், பக்குவப்படும் முன்னரே அவளுக்கு நடக்கும் திருமணம், அதன்பின் அவள் மணவாழ்வில் நடக்கும் சில சுவாரசிய தடுமாற்றங்கள், கருவுறல், குழந்தையை சுமக்கும் நேரத்து அவஸ்தைகள், பிரசவ காலஅந்தாதி முடிவு என நிறைகிறது கதை.
முப்பது வருடங்களுக்கு முன் எழுதின ஒரு படைப்பு இன்றைக்கும் ’புத்தம் புதிதாக’ இருக்கிறது.
மனோபாவத்தில் ஆணும் பெண்ணும் கொள்ளும் மாறுபட்ட நிலைகளான ஆதிக்க மனப்பான்மையும், அடங்கிப் போகும் குணமும் உருவாகும் சூழல்களையும் அவற்றைச் சுற்றி எழுப்பப்படும் நியாயங்களையும் “பொய்யில்லாமல் பாவனை இல்லாமல்” சொல்லவல்லவர் சுஜாதாவன்றி வேறு யார்?
எல்லோரும் அவசியம் படிக்க வேண்டிய ஒரு புத்தகம். ஒவ்வொருவர் வீட்டு லைப்ரரியிலும் நிச்சயம் இருக்க வேண்டிய ஒரு படைப்பு.
எப்போதும் பெண் – சுஜாதா
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூ.140/- (ஜனவரி 2012)
ஆன்லைனில் வாங்க: கிழக்கு / 600024.com
அறிமுகத்துக்கு நன்றி..
ReplyDeleteமிக்க நன்றி ரசனைக்காரரே!
ReplyDeleteஅருமையான தொடக்கம்...வாழ்த்துகள்.
ReplyDeleteசிறப்பான தொடக்கம்...
ReplyDeleteசிறப்பான நூல் அறிமுகம்...
நன்றி...
அருமையான பதிவு.
ReplyDeleteஎனது பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
வாழ்த்துகள்.
ஊக்கம் தந்த அனைவருக்கும் நன்றிகள் ஆயிரம்
ReplyDelete