ஈழம், இனப்படுகொலை, போர், இயக்கம் இதையெல்லாம் விட எம்.ஜி.ஆர் கொலை
வழக்கு எனப் பெயர்வைத்து அரசியலையும் இழுத்து இவை அத்துனையையும் கண்ணிவெடிகளாக தன்
பாதையிலேயே புதைத்துக் கொண்டு, வாசிப்பவனுக்குப் பதட்டத்தைக் கொடுத்து, கண்ணி
வெடிப் பாதையை தன் படைப்புகளால் கவனமாகக் கடந்திருக்கிறார் ஷோபா சக்தி.
ஈழத்துச் சிறுகதைகள் என்பதால் பதுங்குக்குழிகள், இயக்கம், பெடியள்
எனும் வார்த்தைகள் புத்தகம் நெடுக நம்மோடு பயணிக்கின்றன. டக்ளஸ், பரிதி, ஜெயவர்தனா
போன்ற கதாபாத்திரங்களும் தான். மேலும் இவை கதைகளின் நம்பகத் தன்மையையும்
அதிகரிப்பனவாகவும் இருக்கின்றன. எம்.பி கொல்லப்படுவதிலிருந்து, அருகிலிருந்து
பயணம் செய்பவனையும் இயக்கத்து ஆளாகக்காணும் சந்தேகத்தன்மை வரை எழுத்தில் ஈழத்துச்
சூழல் விரிகிறது.
கதைகள் அனைத்துமே அடர்த்தியானவை ஆனால் ஆழமானவை. மனைவியையும்
குழந்தையையும் விரட்டி விட்டு, விரும்பிய பெண்ணை அனுபவித்தலும், பின்னர் அவளைக்
கொன்று விட்டு, இயக்கத்தினரால் அவள் கொல்லப்பட்டதாக நிரூபிக்கும் குரூரத்தினைச்
சொல்லி, எந்தத் தவறாகினும் அது முதலில் இயக்கத்தினரின் மேல்தான் சந்தேகத்தைத்
தரும் என்னும் மனப்பாங்கைச் சுட்டியிருக்கிறார். போர்னோகிராபியில் நடிக்கும்
கதாநாயகிக்கு “ஜாஸ்மின்” என்பவளின் கதைக்கு “ரம்ழான்” என்று பெயர் சூட்டி சம்பிரதாயங்களைக்
கிண்டலடித்திருக்கிறார். எல்லா விளம்பரங்களிலும் தேவையில்லாமல் அரைகுறை ஆடையுடன்
பெண்கள் வருவதைப் பற்றி வேறோர் கதையில் நக்கலடித்திருக்கிறார். களம் தீவிரமானது
என்றாலும், கதைகளில் நகைச்சுவைக்குப் பஞ்சமில்லை. ஒரே பெயருள்ள இருவர்
சேர்ந்தாற்போல் உருப்படாமல் போவது பற்றிய கதை முழுவதுமே காமெடிதான்.
உடனிருப்பவர் மரணத்தைக் கூட சாதாரணமாகக் கடந்து செல்லும் மக்களின் மனநிலையை, பயங்கரத்தை, அதிர்ச்சியை வாசிக்கும் பொழுதுகளில் சாதாரண நிகழ்வுகள் கூட எழுத்தில்
அசாதாரணமாகத் தோன்றுவது போலான பிரம்மை ஏற்படுகிறது. உயிருக்கு பயந்து பாரீஸ்,
லண்டன் என தப்பிப் போய் பிழைக்கும் மக்களைப் பற்றியும் கூட சொல்லியிருக்கிறார்.
ஈழத்துக் கதைகள் என்றால் கவர்ச்சியும், ஆபாசமும்
நிறைந்திருக்கவேண்டும் எனும் டெம்ப்ளேட்டிற்கு ஷோபா சக்தியும் விதிவிலக்கல்ல. சில
கதைகளில் அங்கங்கு தூவப்பட்டிருக்கும் காமம் கதையின் போக்கிற்கு உதவுவதாய்த்
தானிருக்கிறது. ஆனால் தமிழ் எனும் ஒரு கதை ஒரு விபச்சாரியின் மரணத்தில்
தொடங்கி அதை பார்ப்பவன் பார்வையில் விபச்சாரத்தைப் பற்றியும் அவன் தன்
அனுபவங்களைச் சொல்வதுமாய் இருக்கிறது.
மேற்படி, இக்கதைகளுக்கும் எம்.ஜி.ஆர்’ருக்கும் உள்ள தொடர்பு
வாசித்தறிய வேண்டிய ஒன்று!
சிறுகதைத் தொகுப்பு | ஷோபா சக்தி | கருப்பு பிரதிகள் பதிப்பகம் | 2009
| விலை ரூ. 110
பகிர்வுக்கு நன்றி ஐயா...
ReplyDelete
ReplyDeleteநல்ல பயனுள்ள தகவல்
நன்றி,
ஜோசப்
http://www.ezedcal.com/ta (வலைப்பூ உரிமையாளர்களுக்கான தலையங்க அட்டவணை உருவாக்க உதவும் வலைதாளம் பயன்படுத்தி பயன்பெறுங்கள்)