முன் குறிப்பு - ஆம்னிபஸ் வாசகர்கள் இந்திய சுதந்தரம் பற்றி தமிழில் வெளியான நல்ல புத்தகங்களைப் பின்னூட்டங்களில் தெரிவிக்கலாம். அதிக அளவில் புத்தகங்களைக் குறிப்பிடும் அன்பர்களுக்குப் பெரும் பரிசு காத்திருக்கிறது என ஆம்னிபஸ் நிர்வாகிகள் சொல்லக்கூடும்.
'Yes, they will trample me underfoot, the numbers marching one two three, four hundred million five hundred six, reducing me to specks of voiceless dust, just as, all in good time, they will trample my son who is not my son, and his son who will not be his, and his who will not be his,until the thousand and first generation, until a thousand and one midnights have bestowed their terrible gifts and a thousand and one children have died, because it is the privilege and the curse of midnight's children to be both masters and victims of their times, to forsake privacy and be sucked into the annihilating whirlpool of the multitudes, and to be unable to live or die in peace'
- Midnight's Children.
இந்திய சுதந்தரம் பற்றி வெளியான புத்தகங்கள் குறித்து சுதந்தர தினத்தில் ரிலே ரேஸ் பதிவுகளைப் போடலாமா என பைராகியின் ஞானதிருஷ்டியில் ஆம்நிபஸ் நடத்துனர்கள் பேசிக்கொள்வது புலப்பட்டது. இந்திய சுதந்தரத்தைப் பற்றி விறுவிறுப்பான நடையில் சுவாரஸ்யமாகப் பல புனைவுகள் வந்திருந்தாலும் வரலாற்றின் சோகம் என்ற அளவில் தான் அபுனைவுகள் பதிந்திருக்கின்றன. உண்மையும் புனைவும் கலந்திருப்பதினால் நள்ளிரவின் குழந்தைகள் நாவல் இவ்விரு உலகங்களின் சாத்தியங்களையும் பயன்படுத்திக்கொண்டிருக்கிறது.
'நள்ளிரவின் குழந்தைகள்' படித்தவர்கள் இருவகையினர். படித்து முடித்தவர்கள் ஆஹா ஓஹோ எனப் புகழ்வார்கள், மற்றொரு வகையினர் படித்து முடித்திருக்கவே மாட்டார்கள் - புரியாமல் குழம்பிப் போய் பாதியிலேயே நிறுத்தி இருப்பார்கள். ஆனாலும் இந்த நாவல் பிரபல புக்கர் பரிசை 1981ஆம் ஆண்டு பெற்றதோடு, இருபத்து ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு புக்கர் ஆஃப் புக்கர் பரிசையும் பெற்று வாசகர்களை மிகவும் பாதித்த நாவல் எனப் பெயர் பெற்றிருக்கிறது. இத்தனைக்கும் இது இந்தியாவைப் பற்றிய புனைவு.
இந்திய சுதந்தரத்தின் பல முக்கிய கட்டங்கள் நாவலில் வருகின்றன. பின்னர் எப்படி உலகம் முழுவதும் இருக்கும் வாசகர்களை இது கவர்ந்தது? இந்தியரில்லாதவர்களும் ரசிக்கும்படியான அம்சம் என என்ன இருந்தது? அங்கு தான் சல்மான் ரஷ்டியின் புத்திசாலித்தனம் இருக்கிறது. ஒரு வரலாற்றுப் புனைவாக வரிசைப்படி நேர் கோட்டில் அமைந்தால் மிக சீரியஸ் படைப்பாக மாறியிருக்க வாய்ப்புண்டு. மேலும் வாசக ஆர்வத்தைத் தக்கவைக்கவேண்டுமேன்றால் சுதந்தர போராட்டத்தின் அவலங்களைப் பட்டவர்த்தனமாக வைப்பதும் ஆகாது. இவ்விரண்டையும் தாண்டி படிப்பவரின் வரலாற்று உணர்வுக்கு ஏற்ப உண்மைக்கதையாகவும் மாயப் புனைவாகவும் மாறும் தன்மை கொண்டது.
இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்டு பதினைந்தாம் நாள் நள்ளிரவு பனிரெண்டு மணி அடித்ததும் பிறக்கிறது. இருளில் இருந்து வெளிச்சத்துக்கு வரும் இளம் விடியல் நாளுக்கான எதிர்பார்ப்பைத் தக்கவைத்திருப்பது போல, இந்தியா எனும் பெரும் தேசத்தின் கனவுகள் முளைக்கும் தருணம். அந்த நேரத்தில் காஷ்மீரில் பிறக்கும் குழந்தை தான் சலீம் சினாய், நமது நாயகன். சரியாக முப்பத்தியொரு ஆண்டுகளுக்குப் பிறகு மும்பையின் ஊறுகாய் கம்பெனியின் கிடங்கில் கிட்டத்தட்ட ஜடம் போல முடங்கிக் கிடக்கும் நிலையில் தன பிறப்பின் கதையை அங்கு வேலை பார்க்கும் பத்மாவிடம் சொல்லத் தொடங்குகிறான். இந்தியாவின் தலையெழுத்து தான் தனது வாழ்வையும் திடமாகத் தீர்மானிக்கிறது என நம்புகிறான் - அல்லது ரஷ்டி நம்மை நம்ப வைக்கிறார். அவனது குறைபாடுகள் இந்தியாவின் பெரிய குறைகளாக மாறுகின்றன. பெரும் கனவுகளோடு வாழும் சலீம் சினாயின் வாழ்க்கை எப்படி இந்தியாவின் நிகழ்வுகளோடு தொடர்புபடுத்தப்படுகிறது என்பது நாவலின் சாரம்.
மேல் கட்டுமானத்தில் மிகவும் குழப்படியான கதையாகத் தெரிந்தாலும் முதல் பத்து பக்கங்களில் ஆசிரியரின் போக்கு பிடிபட்டதும் நாவலை விட்டு விலக மனம் வருவதில்லை. ஆரம்பத்தில் சலீமின் புலம்பல்களைத் தாண்டி ரஷ்டியின் கதை சொல்லும் விதம் பிடிபட்டதும் வாசிப்பு சுலபமாகிவிடுகிறது. ஆங்கிலத் திரைப்படம் Forrest Gump போன்ற குணவார்ப்புடையவன் சலீம் சினாய். ஒரே கோர்வையாக அவனால் தனது சரித்திரத்தை சொல்ல முடியாது. தனது தாத்தாவின் கதை நடக்கும் 1915 இல் தொடங்குகிறான். 'தகர டப்பா' (Tin Drum) நாவலின் நாயகன் ஆஸ்காரும் நமது நினைவுக்கு வரலாம். மாயயதார்த்தவாத எழுத்துமுறையில் கதை சொல்லப்படுவதால், தனது நீண்ட மூக்கினால் கலவரங்களை உணர முடியும் என நம்பும் சலீமும், தனது தகர டப்பாவைத் தட்டுவதன் மூலம் ஜெர்மன் நாட்டு வரலாற்றில் முக்கிய நிகழ்வுகளை உண்டாக்க முடியும் என ஆஸ்கரும் நம்புகிறார்கள். இது போன்ற தர்கத்தை மீறிய மாய நிகழ்வுகளுக்கு ஒப்புக்கொள்ள வேண்டியது வாசகனின் கடமை.
ரஷ்டி தனது தாத்தாவின் ஊரான காஷ்மீர் பள்ளத்தாக்கைப் பற்றி விவரிக்கும்போது 'குண்டு சத்தம் கேட்காத, திருப்புமுனைகளில் ராணுவவீரர்கள் இல்லாத, சுற்றுலாவுக்கு வந்தவர்களை சந்தேகத்தில் சிறை பிடிக்காத' காலகட்டம் என விவரிக்கிறார். 1915 ஆம் ஆண்டு காஷ்மீர் என சலீம் சொல்வதில்லை.இது தான் ரஷ்டியின் சொல்முறை. அதே போல சலிமுக்குப் பிறக்கும் தங்கை, ஜமீலா சிங்கர், தான் பாகிஸ்தானின் உருவகம். ஜெர்மன் நாட்டுப் பல்கலைக்கழகத்தில் மருத்துவர் பட்டம் பெற்ற சலீமின் தந்தை நமாஸ் செய்யக் குனியும்போது அவரது நீண்ட மூக்கைக் குறிபார்த்து தரை மேலெழும்பி பதம் பார்க்கிறது. அங்கிருந்து மூன்று சொட்டு ரத்தம் தரையில் சிந்துகிறது. இதற்கு பிறகு நமாஸ் செய்வதில்லை என உறுதி பூணும் அவர் மூன்று சொட்டுகளை விலையுயர்ந்த கற்களாகப் புரிந்துகொள்கிறார் - அதற்கான வியாபாரத்தில் இறங்குகிறார். இந்த மூன்று சொட்டு ரத்தம் நாவல் முழுவதும் வரும். அசீஸின் முதலிரவுக்குப் பின்னான படுக்கை விரிப்பில், 1919 அம்ரிஸ்தரில் நடக்கும் வன்முறையில், ஜாலியன் வாலாபாக் கொடூரத்தில், இந்திய பாகிஸ்தானின் பிரிவினை, இந்திய பங்களாதேஷ் பிரிவினை என 'மூன்று சொட்டு ரத்தம்' பல வடிவங்களை எடுக்கும்.
சரியாக பனிரெண்டு மணிக்குப் பிறந்த குழந்தை என்பதால் பிரதமர் நேருவிடமிருந்து வாழ்த்து கடிதம் வாங்குகிறது சலீமின் குடும்பம். பின்னர் அவனது மகன் ஆதம் சினாய் பிறக்கும் சமயத்தில் 'பெரும் விதவையிடமிருந்து' (இந்திரா காந்தி) எந்த கடிதமும் வரவில்லை எனக் குறிப்பிடுகிறார். கடிதம் கொடுக்கவில்லை, எனக்கு எமெர்ஜென்சியை கொடுத்தார் என நாவலின் முடிவுப் பகுதிகளில் குறிப்பிடுகிறார். இதற்காக ரஷ்டி மீது இந்திரா காந்தி வழக்கு தொடர்ந்தார். 1965 ஆம் ஆண்டும் ஒரு கடிதம் வருகிறது, பாகிஸ்தானுடன் போர் தொடங்குவதற்கான கடிதம். இப்படி ஒரு நல்ல செய்திக்கு வாழ்த்து சொன்ன கடிதமே பலவிதங்களில் உருமாறி கொடுமையான செய்திகளைக் கொண்டு வரத்தொடங்கின. தனக்கு முதல் கடிதம் அனுப்பியதால் தான் இப்படி ஆனது என சலீம் குறிப்பிடுகிறான்.
பனிரெண்டு மணிக்குப் பிறந்த ஆயிரத்தொரு குழந்தைகளும் சலில் சினாய் தலைமையில் 'நள்ளிரவின் குழந்தைகள்' என ஒரு குழு தொடங்குகிறார்கள். கண்ணாடி வழியாக நடக்கும் ஒருவன், புது மாயங்கள் செய்யும் ஒருத்தி என ஒவ்வொருவருக்கும் தனித்தனி மாயசக்திகள். கோடிக்கணக்கான மாயச் சக்திகள் இருந்தாலும் தனது வீழ்ச்சியைத் தடுக்க முடியவில்லை என சலீம் உணருகிறான்.
வைரக்கல் வியாபாரத்தைத் தொடருவதற்காக சலீமின் தந்தை மும்பை நகருக்குக் குடிபெயர்கிறார். இங்கிருந்து சலீம் பாகிஸ்தான், இந்தியா என இரு நாடுகளின் சரித்தரங்களையும் தனது கதையோடு இணைத்துச் சொல்கிறான். வீ வில்லி விங்கி, சொர்சரர், ஈவன், ஜின்னா, ஹனுமான் என உண்மை மனிதர்கள், புராணக் கதாப்பாத்திரங்கள், ஆங்கில நர்சரி பாடலில் வரும் பாத்திரங்கள் எனக் கலவையாக பலர் வருகின்றனர். ஒரு விதத்தில் நிழலிலிருந்து நிஜத்துக்கும், கனவுகளில் இயல்பு நிகழ்வுகளை இணைத்துக்கொண்டே இருக்கிறார். அதனாலேயே இந்திய சரித்திரமாகப் படிப்பவருக்கு உண்மைச் சம்பவங்களின் நிஜம் உறுத்தும். இந்திய வரலாறு தெரியாமல் படிப்பவருக்கு ஒரு மாயக்கதை படிப்பது போன்ற அனுபவத்தைத் தரும். பல சமயங்களில் இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று இணையும் சாத்தியங்கள் இருக்கின்றன. இதனாலேயே மொழி நாடு எல்லை கடந்து பலருக்கும் இந்த நாவல் புது அனுபவத்தைத் தந்துள்ளது.
பெரிய சாதனைகள் செய்யப்போகும் குழந்தை என பிறக்கும்போது கணிக்கப்பட்ட சலீம் சினாய் சிற்சில நுட்பங்களில் முடங்குகிறான். உடலைக் கூட அசைக்க முடியாதவனாக மாறுகிறான். மெல்ல சரித்திரத்தின் சுமை அத்தனையும் தனது தலையில் போட்டுக்கொண்டு குழம்பித் தவிக்கிறான். அவனது தங்கை பாகிஸ்தானுக்குக் குடிபெயருகிறாள் - அங்கு பெரும் உயர் அதிகாரி ஒருவருக்கு மனைவியாக மாறுகிறாள். இயற்கையில் நல்ல குரல்வளம் பெற்றவளாக இருந்தாலும், பொதுவில் வந்து பாடமுடியாதபடி அச்சமூகம் மாறும் சித்திரம் அவளது வாழ்க்கை மூலம் வழங்கப்படுகிறது.
பங்களாதேஷ் பிரிவினை பற்றி சலீம் அளிக்கும் சித்திரம் இந்நாவலின் உச்சகட்டம். அவனே பங்களாதேஷ் பிரிவினையின் சமயத்தில் அங்குள்ள ராணுவ வீரர்களோடு காட்டில் ஒளிந்து சண்டை போடுகிறான். ஆனால் யாருக்குச சார்பாக சண்டை போடுகிறோம் என்பதே புரியாத நிலையில் ஓடிக்கொண்டே இருக்கிறான். நிகழ்வுகளை இணைத்தபடி புகை மூட்டம் கலைந்து கலைந்து உருவாவது போல அவனது வாழ்கை திணறுகிறது. பெரும் பாரத்தை சுமக்க முடியாமல் வழுக்கும் பாறைகளில் திணறும் அவனது வாழ்க்கை எமெர்ஜென்சி சமயத்தின் அடக்குமுறையில் முடங்கிபோகிறது. தனது சிறு தவறுகள் எல்லாம் இந்தியாவின் பெரும் தவறுகளாக உருமாறுவதாக அவனுக்குத் தோன்றுகிறது. எமர்ஜென்சி காலகட்டத்தை நாவலின் நிறைவுப் பகுதி மிகத் துல்லியமாக நம் முன் நிறுத்துகிறது. சஞ்சய் காந்தி, இந்திராகாந்தி, ஜெயில்சிங் என பல உண்மைப்பாத்திரங்கள் அப்பட்டமாகச் சித்தரிக்கப்பட்டுள்ளன.
இந்த நாவல் உருவான விதத்தைப் பற்றி மிக சுவாரஸ்யமாக சல்மான் ரஷ்டி இங்கு எழுதியுள்ளார். நாவலில் உருவாக்கத்தை சரித்திரத்தின் நிகழ்வுகளோடு தொடர்புறுத்தி எழுதியுள்ளார். நாவலின் ஒரு வரியின் மேல் இந்திரா காந்தி போட்ட வழக்கு பற்றியும், அதிலிருந்து வெளியான விபரங்களும் இக்கட்டுரையில் உள்ளன. புனைவு மொழியிலேயே அவரது அபுனைவு கட்டுரைகளும் அமைந்திருப்பது ஆச்சர்யமான ஒற்றுமை. இந்த ஆண்டு தீபா மேத்தா தயாரிப்பில் திரைப்படமாகவும் வெளியாக உள்ளது இந்நாவல்.
ஒரு விதத்தில் உண்மையையும் புனைவையும் கலந்து எழுதப்பட்டிருக்கும் 'நள்ளிரவின் குழந்தைகள்' நாவல் இன்றைக்கு இந்தியா இருக்கும் நிலைமையை திரும்பிப் பார்க்க உதவலாம். நள்ளிரவின் குழந்தைகளாகிய நாம் இன்றைய இந்தியாவின் சரித்திரத்தை ஒவ்வொரு கணமும் அலசலாம். அதைச் சாத்தியப்படுத்துவதில் பெரும் வெற்றி பெற்றிருக்கிறார் சல்மான் ரஷ்டி.
தலைப்பு - நள்ளிரவின் குழந்தைகள்.
ஆசிரியர் - சல்மான் ரஷ்டி
உள்ளடக்கம் - நாவல
இணையத்தில் படிக்க - Midnight's Children
மிக நேர்த்தியான கதைச் சுருக்கம் நண்பா. வெறும் வாசிப்போடு நிற்காமல்,அடுத்த கட்ட புரிதலுக்கு நீங்கள் பயணித்துள்ளீர்கள் என்பது உங்களது இக்கட்டுரையின் உள்ளடக்கத்திலேயே தெரிகிறது. வாழ்த்துக்கள். நான் முதல் 50 பக்கங்களை தாண்டுவதற்குள் எனக்கு ஒன்று புரிந்தது. தாங்கள் கூறியது போல ஒரு இந்தியனாக இந்நாவலை புரிவதற்கு இந்திய வரலாறை ஆழமாக வாசித்தல் அவசியம் என உணர்ந்தேன். மீண்டும் வரலாற்றை வாசித்து மீண்டும் தொடர்வேன்...
ReplyDeleteதொடர்ந்து எழுதுங்கள்.
தங்கள் ஊக்குவிப்புக்கு நன்றி வருணன்.
Deleteதொடர்ந்து நீங்களும் எங்களோடு பயணிக்க வேண்டும் - இங்கு பேசப்படும் புத்தகங்கள் குறித்த தங்கள் கருத்துகளை ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்.
நன்றி.
நல்ல பதிவு.
ReplyDelete//'நள்ளிரவின் குழந்தைகள்' படித்தவர்கள் இருவகையினர். படித்து முடித்தவர்கள் ஆஹா ஓஹோ எனப் புகழ்வார்கள், மற்றொரு வகையினர் படித்து முடித்திருக்கவே மாட்டார்கள் - புரியாமல் குழம்பிப் போய் பாதியிலேயே நிறுத்தி இருப்பார்கள்.//
நான் முதல் வகை. எனது விருப்ப புதினங்களில் முதலிடம் இதற்குத்தான். One Hundred Years of Solitude, A Fine Balance போன்ற புதினங்கள் பற்றி பேசும்போது Midnight's Children பாத்திரங்களை மேற்கோள் காட்டியிருக்கிறேன். Midnight's Children பற்றி பேச யாருமில்லையே என்ற வருத்தம் எனக்குண்டு. உங்களின் இப்பதிவில் மகிழ்ச்சி.
Midnight's Children பற்றிய எனது பதிவிது: http://puththakam.blogspot.in/2009/12/54-midnights-children.html
- ஞானசேகர்