நான் மீண்டும் தனியாகிவிட்டேன். எனக்கு என்னாகிவிட்டது அதுவும் இந்த 65 ஆவது வயதில்? அங்கமுத்து, ஏபிள் தாம்ப்ஸன், சாமிராவ்சாமி - இவர்கள் ஒவ்வொருவரையும் பார்க்கும்போது அவர்களில் ஒரு அம்சம் இல்லாவிட்டால் இன்னொரு அம்சமாக நான் ஆகிவிடுகிறேன். ஏன், சொல்லப் போனால் என்னில் நான் சாமிராவ் சாமியின் இரண்டாவது அண்ணனையும் காண்கிறென். அவன் விஷயத்தில் பயம் அனுதாபத்தைத் தின்றுவிட்டது என்றால் என் விஷயத்தில் பயம் என்னை எதற்கும் செயல் அற்றவன் ஆக்கிவிட்டது என்றே சொல்லவேண்டும்.
- வாக்குமூலம், நகுலன்.
நண்பரிடம் நகுலனின் படைப்புலகம் குறித்து உரையாடினேன். கீழ்வருவது எனக்கும் அவருக்குமான உரையாடல்:
- வாக்குமூலம், நகுலன்.
நண்பரிடம் நகுலனின் படைப்புலகம் குறித்து உரையாடினேன். கீழ்வருவது எனக்கும் அவருக்குமான உரையாடல்:
நான்: ஒண்ணு சொல்லணும் நண்பரே - இது நான் படிக்கும் நகுலனின் நாலாவது நாவல். கிறுக்குத் தாத்தன் ஒவ்வொரு வரியாக அடிமேல் அடி வைத்து மொத்தமாக நம்மளை கிறங்கடிக்கச் செய்கிறார். தனித்தனி வரிகள், கருத்துகளாகப் பார்த்தால் ஒண்ணுமே இல்லாதது போலத் தோன்றும். ஆனால் ஒட்டு மொத்த கருத்துகளாகப் பார்த்தால் மிக பிரத்யேக உலகுக்கு நம்மை இட்டுச் செல்கிறார். அது எப்படி என்பது தான் புரியவில்லை.
நண்பர்: அதுக்கு காரணம் இருக்கு பைராகி. நீங்க நகுலனின் உலகம் இருண்ட அடர்வனம்னு சொல்லியிருக்கீங்க. அடர்வனம் செடி மரம் கொடிகள் பறவைகள் என்று உயிர்ப்புள்ள, ஆனால், வெளிச்சமில்லாத காரணத்தால் அறியப்பட முடியாத மர்மத்தைத் தன்னில் கொண்டது. நகுலன் காட்டும் உலகம் வரண்ட, வெறும் எண்ணங்களாலான உலகல்ல : அதில் புறவுலக போதங்களின் செழிப்பும் உயிர்ப்பும் இருக்கிறது, அதே சமயம் ஆளுமை சார்ந்த சிக்கல்கள் அந்த போதத்தை இருட்டடித்துக் குழப்புகின்றன.
நான்: அடடா! நண்பரே. நீங்கள் தான் இந்த விமர்சனம் எழுத சரியான ஆள். அவரது உலகமே அக உலகம் மட்டுமேன்னு சில எழுத்தாளர்கள் விமர்சனம் செய்கிறார்களே? புற உலகை காட்டாத எழுத்தா இது?
நண்பர்: அக உலகம் என்பதால் அவரது காலடி அளவேயுள்ள ஒரு சிறு நிலப்பரப்பாகவும் இருக்கலாம், அவரால் விரிக்கப்படும் உலகம் என்பதால் எல்லையற்று விரிவதாகவும் இருக்கலாம். அதன் பரப்பல்ல, அதன் மையத்திலுள்ள இருளும் அதையும் மீறி புலப்படும் போதமும்தான் நகுலனின் நாவலில் நமக்கு முக்கியமான விஷயம்.
நான்: ஆஹா! அற்புதமான விளக்கம் ஐயா. உங்களுடைய விளக்கத்தை எனது விமர்சனத்தில் சேர்த்துக்கொள்ளலாமா?
நண்பர்: தாராளமாக.
(அதுவரை நண்பரின் அருகில் பதுங்கியிருந்த பழுப்பு நிறப் பூனை அவரோடு நடந்து மறைந்தது. அது விட்டுச் சென்ற அபத்தமான சிரிப்பு மட்டும் என் முன்னே மறையாமல் இருந்தது )
ஆகாயம் சாம்பல் நிறம்
அதனெதிர்
ஒரு ஊசிமரம்;
மைதான வெளியில்
ஆட்டம் கலைந்தபின்
உருவுமொரு
அம்பர சூன்யம்
ஆகாயம் சாம்பல் நிறம்
அதனெதிர்
ஒரு ஊசிமரம்;
மைதான வெளியில்
ஆட்டம் கலைந்தபின்
உருவுமொரு
அம்பர சூன்யம்
____
சரி, கதைக்குள் போவோம்.
யதார்த்தமாக ஆரம்பிக்கும் கதை. கதை நாயகன் ராஜசேகர் காலையில் எழுந்தவுடன் செய்தித்தாளில் அரசின் தேச முன்னேற்றச் சட்டம் (286) அறிவிப்பைப் பார்க்கிறார். அதாவது, அறுபது வயதுக்கு மேல் வாழ்பவர்கள் விருப்பப்பட்டால் கத்தியின்றி ரத்தமின்றி இன்முகத்துடன் அவர்களது இறப்பை அரசு நிறைவேற்றி வைக்கும் எனும் அறிவிப்பு. முட்டாள்கள் தினமான ஏப்ரல் ஒன்று அன்று இந்த அறிவிப்பு வெளியாகிறது. தற்கொலை செய்வது சட்டப்படி குற்றம் என்பதாலும், அரசு நிறைவேற்றும் கொள்கைகளில் நம்பிக்கை வைத்திருப்பதாலும் ராஜசேகர் இந்த திட்டத்தில் சேருவதற்கு ஆர்வம் காட்டுகிறார். நாளெல்லாம் இந்த அறிவிப்பே அவரது மனசை வியாபித்திருக்கிறது. ஒரு வேளை தனது பிரதியில் மட்டும் அப்படி இருக்கிறதோ எனும் அரிப்பும் ராஜசேகரனுக்கு உண்டாகிறது. பொது நூலகத்தில் மீண்டும் அந்த அறிவிப்பைப் பார்த்து சமாதானம் ஆகிறார்.
தனது நண்பர் அங்கமுத்துவுடன் அரசின் அறிவிப்பைப் பற்றி பேசுகிறார். நண்பர் இந்திய அரசுக்கு எதிர்ப்பானவர். இவங்க எந்த சட்டத்தைத் தான் சரியாக நிறைவேற்றி இருக்கிறார்கள் என அங்கலாய்க்கிறார். உருப்படியாக ஒன்றும் நடக்கப் போவதில்லை எனத் திரும்பத் திரும்பச் சொன்னாலும் ராஜசேகர் அவரை அரசு அலுவலகத்துக்கு கட்டாயமாக அழைத்துச் செல்கிறார். அங்கு ஏபிள் தாம்ப்ஸன் எனும் வசதி படைத்த அரசு அலுவலர் ஸ்போர்ட்ஸ் காரில் சிகரெட் பிடித்தபடி வருகிறார். அவரிடம் ராஜசேகர் தனது கோரிக்கையை முன்வைக்கிறார். வழக்கமான அரசு அலுவலர் போல எரிச்சல் உண்டானாலும் ஏபிள் விண்ணப்பப் படிவத்தை ராஜசேகரிடம் கொடுக்கிறார்.
விண்ணப்பதாரர் 'வாக்குமூலம்' எனும் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன்படி நூற்றுப் பத்து கேள்விகள் விண்ணப்பத்தில் இருக்கும். இந்தக் கேள்விகள் நாவலின் முக்கியமானப் பகுதி. அதற்கான பதிலைத் தயாரிப்பது விண்ணப்பதாரரின் வேலை. நாவலின் பிற்பகுதி முழுவதும் இந்த பதில்களுடன் பயணிக்கிறது. குடும்ப, சொத்து, கலை ஈடுபாடு, சமூக ஆர்வங்கள், நண்பர்கள், சிந்தனைகள், தற்கொலை முயற்சிகள், பழக்கங்கள் எனவிண்ணப்பதாரரின் வாழ்க்கையே கேள்விகளாகக் கேட்கப்பட்டிருக்கின்றது. நாவலின் முடிவில் அரசு சார்பில் ஓட்டெடுப்பு நடக்கிறது. பத்து நபர்களின் வாக்குமூலங்கள் தேர்வு செய்யப்பட்டாலும், முழுமை கருதி ராஜசேகரின் வாக்குமூலம் வெற்றி பெறுகிறது. அதற்கு சன்மானமாக அரசு சார்பில் பணம் ராஜசேகருக்கு வழங்கப்படுகிறது. அவரது கொலையை அரசு நிறைவேற்றியதா அல்லது தாமதமாக்கியதா எனும் முடிவு தெரியாமல் ராஜசேகர் வாக்குமூலம் எனும் நாவலை எழுதி முடித்து தனது நண்பருக்கு படித்துக் காட்டுவதுடன் நாவல் முடிகிறது.
ராஜசேகரின் வாக்குமூலம் எனும் பகுதி நாவலின் மிக உயிர்ப்பான சித்திரத்தை தரவல்லது. குறிப்பாக தனது உள மாற்றத்தை சொல்ல முடியாமல் ‘வார்த்தைகள் தவிக்கின்றன. தப்பி ஓடப் பார்க்கின்றன. ஓலமிடுகின்றன’ என ராஜசேகரின் தவிப்பு மிக அருமையாக வெளிப்பட்டிருக்கிறது. அவரது கனவுப் பகுதி போல நிழலுடன் நடத்தும் விவாதமும், தனக்குள் பலரும் இருப்பது போன்ற பயத்தில் அவர்களுடன் நடத்தும் உரையாடல்களும் ராஜசேகரின் உளச்சிக்கலை வெளிப்படுத்துகிறது. இதற்கு முன் ராஜசேகர் தனக்கிருக்கும் மனக்குமறலை நேரடியாகச் சொல்லாமல் இயல்பான மனிதன் போல இருக்கிறார். வாக்குமூலத்தில் அவரது குரல் முதல்முதலாக பலவாகப் பிரிகிறது. சாமிராவ்சாமி எனும் பிளவாளுமையுடனான உரையாடலில் ‘மனிதன் எப்போதுமே ஒரு குற்ற உணர்ச்சியுடன் இருக்கிறான் என்பதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என எண்ணுகிறேன்’எனக்கூறியதுடன் தேடல் முடிவடையாத மனிதன் வாழ்ந்துகொண்டே தான் இருக்கிறான். தேடல் முடிவடைந்ததும் தூக்கம் மட்டுமே உள்ளது என தான் நம்புவதாக ராஜசேகர் தெரிவிக்கிறார். தான் ஒரு கனவுலகில் வாழ்வதாக சாமிராவ்சாமி நம்புவதை தான் நம்பவில்லை என்றும் அதனால் தேச முன்னேற்ற சட்டத்தை உபயோகிக்க விருப்பமில்லை எனவும் வாக்குமூலத்தை முடிக்கிறார்.
தேச முன்னேற்றம் எனும் பெயரில் வாழவும் விடாமல் சாகவும் விடாமல் இருக்கும் தத்தளிப்புகளை இந்த சிறு நாவல் விவரிக்கிறது. புற வாழ்வின் எதார்த்தங்களை மீறிய படைப்புகளையும், மூச்சு முட்டும் அக உணர்வுகளின் அடைப்பை வெளிப்படுத்தும் நகுலனின் நாவல்களில் இது மாறுபட்டது. மிகத் தெளிவான புற உலக வர்ணனை, கதாபாத்திரங்களின் கையாலாகாத்தனம் போன்றவற்றை கச்சிதமாகக் காட்டுவதினால் நகுலனின் கடைசி நாவலான வாக்குமூலம் ஒரு முதிர்ச்சியடைந்த படைப்பாகிறது. அக நெருக்கடிகள், செயலின்மையின் தத்தளிப்புகள், கனவுலகில் சஞ்சாரிக்கும் நிகழ்வுகள் போன்றவை மற்ற நகுலன் நாவல்களின் மையக்கருத்தாக இருந்து வந்திருக்கிறது. வாக்குமூலம் அவற்றைத் தாண்டிய ஒரு நிதர்சனப் பார்வையை கனவுலகிலிருந்து மீட்டு வெளிப்படுத்தியிருக்கிறது.
நகுலனின் அக உலகு சித்தரிப்புகள் இருண்ட குகைக்குள் கிடப்பவன் சிறு வெளிச்சக் கீற்றுக்கு ஏங்குவது போன்ற பாரத்தை தரவல்லவை. நாவலின் இறுதிப் பகுதியில் வரும் கனவு வழியாக ராஜசேகரின் வாழ்வில் நடந்த சிறு சம்பவங்கள் வெளிப்படுகின்றன. நந்தலாலா படத்தில் வரும் பைத்தியம் சொல்வது போல, 'இந்த உலகம் ரொம்ப மோசம். இங்கிருந்து தப்பிக்கணும் என்றால் சாவணும்', என்பதைத் தாண்டி இருப்பைத் தக்கவைத்துக்கொள்ளவும் வாழ்வு-சாவு போராட்டமாக தினப்படி புற உலகம் இருப்பதையும் நாவல் காட்டுகிறது. அக ஆளுமை சிக்கலுக்கும் புற போதங்களுக்கும் உள்ளான இழுபறி போராட்டமாக ராஜசேகரது இருண்ட அடர்வனம் போன்ற உலகம் நமக்கு காண்பிக்கப்படுகிறது. அந்த இருட்டு அவரது காலடி நிழலின் அளவு சிறிய நிலப்பரப்பாகவும் இருக்கலாம், அல்லது உலகப் பரப்பளவு கொண்டதாகவும் இருக்கலாம்.
புற யதார்த்தத்தின் தீவிரத்தை முழுவதும் சந்திக்க இயலாத உளச்சிக்கல் கொண்டதால் ராஜசேகரால் முழுவதுமாக சட்டத்தின் விருப்பத்துக்கு இயைந்து போக முடியவில்லை. தனக்குள் இருக்கும் பிளவாளுமைகள் தான் தனது இருப்புக்கான அடையாளம் என நம்பத் தொடங்குவதோடு, அவை இருக்கும்வரை தனது தேடல் தொடரும் எனவும் வாக்குமூலத்தில் தெரிவிக்கிறார். சுவர்களை எழுப்பிக் கொண்டு தனது நிழலைத் தேடும் மக்களுக்கு நடுவே ராஜசேகர் போன்ற பிளவாளுமைகளின் தேடல் முடிவிலாதது எனத் தோன்றுகிறது. கனவுலகில் வாழும் தனது உறக்கத்தில் இனி கனவுகள் கிடையாது எனத் திடமாக நம்புகிறார். தன்னைக் கைவிடாத இருப்பின் அடையாளங்களாக அவற்றை பாவிக்கிறார்.
மிகவும் நிதானமாக முடிவுகளை எடுப்பவராகத் தெரியும் ராஜசேகர் வாக்குமூலத்தின் கேள்விகளை தனது வாழ்வோடு பொருந்திப் பார்க்கிறார். நகுலனின் கதைகளில் வரும் பூனை இதிலும் பழக்கத்துக்கு அடிமையாக வருகிறது. ராஜசேகர் உணவு தரும் நேரத்தை எதிர்பார்த்திருக்கிறது, சமையலறை அருகே இருந்தும் திருடச் செயலற்று ஜன்னலில் உட்கார்ந்திருக்கும் வெள்ளை-மஞ்சள் பூனை.
புகைப்படங்கள் நன்றி- உடுமலை.காம்
தலைப்பு - வாக்குமூலம்
ஆசிரியர் - நகுலன்
உள்ளடக்கம் - நாவல்
பதிப்பாசிரியர் - காவ்யா
பதிப்பகம்
இணையத்தில் வாங்க - உடுமலை
நன்றாக எழுதியிருக்கிறீர்கள். வாக்குமூலம் நாவலையும் சமீபத்தில் அருணா ஷான்பாக் வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பையும் வைத்து ஒரு கட்டுரை எழுத எண்ணியிருந்தேன். முடியவில்லை.
ReplyDelete\\விண்ணப்பதாரர் 'வாக்குமூலம்' எனும் படிவத்தை நிரப்ப வேண்டும். அதன்படி நூற்றுப் பத்து கேள்விகள் விண்ணப்பத்தில் இருக்கும். இந்தக் கேள்விகள் நாவலின் முக்கியமானப் பகுதி. \\
சரியாகச் சொன்னீர்கள்
நன்றி கோபி ராமமூர்த்தி!
ReplyDeleteதங்கள் வரவுக்கும் கருத்துக்கும் மிக்க நன்றிகள். பைராகியின் ஆசிகள் என்றும் உங்களுக்கு உண்டு.
நீங்கள் எழுத நினைத்த கட்டுரையை இப்போது கூட முடித்து ஆம்னிபஸ்ஸில் வெளியிடலாமே! ஓட்டுனர்கள் மிகவும் சந்தோஷப்படுவார்கள்.
என்னுடைய ஆசிர்வாதம்!
பைராகி
ஓம்!ஓம்!ஓம்!