ராமானுஜ காவியம்
ஆசிரியர் : கவிஞர் வாலி
பதிப்பகம் : வானதி
பக்கங்கள்: 394
விலை : 150
விகடன் வாங்கியவுடன் அந்த xyz தொடரைதான் முதலில் படிப்பேன். எனக்கு அதுதான் ரொம்ப பிடிக்கும். அப்படி இப்படின்னு நிறைய பேர் சொல்வாங்க. நான் அதற்கு உல்டா. எந்த தொடர் மிகவும் பிடிக்குதோ, அதை மட்டும் கடைசி வரை படிக்கவே மாட்டேன். மற்ற பக்கங்கள், விளம்பரங்கள், அட்டைப்படம் எல்லாவற்றையும் படித்த பிறகே என் மனம்கவர்ந்த அந்த தொடருக்கு வருவேன். அதுவரை கிடைக்கும் சஸ்பென்ஸ் இருக்கிறதே, அப்பப்பா... அதுதான் சூப்பர். சிறப்புப் பேச்சாளர்கள் கடைசியில்தானே வரணும்? இப்படி ’கடைசியா’ படித்ததுதான் கவிஞர் வாலியின் தொடர்கள், கற்றதும் பெற்றதும் ஆகியன. வாராவாரம் படித்தாலும் ஒரு புத்தகமாய் ஒரே மூச்சில் படிப்பதில் கிடைக்கும் ஆனந்தமே தனி. ஆகையால், ராமானுஜ காவியம் பார்த்தவுடன் உடனே வாங்கி விட்டேன்.
விசிஷ்டாத்வைதத்தை தேசம் முழுதும் பரப்பிய இராமானுஜரின் வரலாறான இந்த புத்தகத்தில், இராமானுஜரின் திருஅவதாரம் முதல், அவரது பாரத திக்விஜயம், படைப்புகள், சீடர்கள் ஆகிய அனைத்தையும்/அனைவரையும் பற்றி கவிஞர் வாலியின் கவிதை வரிகளில் அழகாக சொல்லப்பட்டிருக்கிறது. பல இடங்களில் தத்துவ விசாரணைகள், எதுகை மோனையுடன், அழகிய சந்தத்துடன் அற்புதமான தமிழில் இருப்பதை படிக்கப் படிக்க இன்பம். சில விவரணைகளை கடக்கும்போது கண்களில் நீர் மல்குகிறது; மனமோ பேரானந்தத்தில் திளைக்கிறது.
காஞ்சிபுரம், உறையூர், திருவரங்கம், திருப்பெரும்புதூர், திருப்புட்குழி, திருக்கச்சி என்று பற்பல தலங்களின் அருமைகளையும்; அவற்றில் எழுந்தருளியிருக்கும் இறைவன்/இறைவியின் பெருமைகளையும் விரிவாகவும், மிகவும் அழகாகவும் விவரித்துள்ளார் கவிஞர். திருவரங்கத்தைப் பற்றி சில பக்கங்கள்; திருப்பெதும்புதூரைப் பற்றிய அழகிய வரலாறு இப்படி கொஞ்சுதமிழில் விவரிக்கும் கவிஞர், இராமானுஜரின் வரலாற்றில் முதல் இடத்தைப் பிடித்த, என் மனம் கவர்ந்த திருவல்லிக்கேணி பார்த்தசாரதியின் பெருமைகளை சொல்லியுள்ளார். அதை படிக்கையிலேயே உணர்ச்சிவசப்பட்டு உடனடியாக சென்று அந்த வெண்மீசை உடையோனை பார்த்து வந்தேன். இதோ அந்த வரிகள்:
பார்த்த சாரதியை; பாஞ்ச சன்னியம் ஊதி -
ஆர்த்த சாரதியை; அர்ச்சுனன் அவலம் -
தீர்த்த சாரதியை; திருவாயால் கீதைத் தேன்
வார்த்த சாரதியை; வளநாட்டை தருமன்கை
சேர்த்த சாரதியை; சுயோதனன் செருக்கைப்
பேர்த்த சாரதியை; பாஞ்சாலியை சேலையினால்
போர்த்த சாரதியை; புல்லர் கூட்டத்தைத்
தூர்த்த சாரதியை; திருகி திருகி திருமீசை
கூர்த்த சாரதியை; கூடாதார் கண்ணுக்குக்
கார்த்த சாரதியை; களத்தினில் தேரோட்டி
வேர்த்த சாரதியை; வேயிசையால் கறவைகளை
ஈர்த்த சாரதியை;
இராமானுஜரின் வரலாறு பலருக்குத் தெரிந்திருக்கலாம். இருந்தாலும் புத்தகத்தில் சொல்லியபடி முக்கிய நிகழ்வுகளை சுருக்கமாக இங்கே பட்டியலிடுகிறேன். அதைத் தொடர்ந்து என்னைக் கவர்ந்த வரிகள்/விவரங்கள்.
* இராமானுஜரின் பிறப்பு, உபநயனம், திருமணம்
* குருவினைத் தேடி காஞ்சிபுரத்திற்கு இடப்பெயர்வு
* யாதவப் பிரகாசரை குருவாகக் கொள்ளுதல்
* ஆனால், யாதவப் பிரகாசரோடு கருத்து வேறுபாட்டால் அவ்வப்போது வருத்தமடைதல்.
* ஒரு முறை, கப்யாஸம் என்பதை கபி+ஆஸம் = குரங்கின் குதம் என்று யாதவப் பிரகாசர் சொல்ல, இராமானுஜரோ கபி+ஆஸம்=கதிரவன்+சிரித்தல் என்று பொருள் கூற சண்டை முற்றிற்று.* பிறகு குருவே, தத்துவம்தான் முக்கியம், தனி நபர் முக்கியமல்ல என்று சீடர்களை சமாதானப்படுத்தி, இராமானுஜரை வாரணாசிக்குக் கூட்டிப் போய் கங்கையில் தள்ளிவிட திட்டமிடல்
* இந்த திட்டம் இராமானுஜரின் தமையன் கோவிந்தனுக்கு (அவரும் ஒரு சீடர்) தெரிந்து, அதை அவர் இராமானுஜரிடம் தெரிவித்தல்
* வருத்தமுற்ற இராமானுஜர் இரவோடு இரவாக குருவை விட்டுப் பிரிதல்
* இவரைக் காணாமல் மற்றவர்கள் வாரணாசி போதல்
* காட்டில் வழிதவறிப் போன இராமானுஜரை, அந்த பெருமாளும், தாயாருமே வேடன், வேடச்சி வேடத்தில் வந்து காஞ்சிபுரத்திற்கு கொண்டு வந்து விடுதல்
* இராமானுஜரும் காஞ்சியில் தேவராஜப் பெருமாளின் திருமஞ்சனப் பணியினை செய்து வருதல்
* வாரணாசிக்குப் போனவர்கள் மறுபடி காஞ்சிக்கு வந்து, இராமானுஜரைக் கண்டு அதிர்ச்சியடைதல்
* மறுபடி யாதவப் பிரகாசரோடு குருகுலம்
* சிறுமன்னன் ஒருவரின் புதல்வியை பீடித்த பிரம்ம ராஷஸனை விரட்டியதில், மறுபடி இராமானுஜரிடம் மோதல் ஏற்பட்டு, அவரை விரட்டினார் யாதவப் பிரகாசர்.
* திருவரங்கத்தில் இருக்கும் யாமுனரின் பின்னணி; அவரே துறவறம் மேற்கொண்ட பிறகு ஆளவந்தார் என்னும் பெயர் பெறுதல்
* இதனிடையில் இராமானுஜரின் தாயார் இறைவனடி சேர்தல்
* எப்போதும் கோயில் பணி, கற்றல் இப்படியே இருக்கும் கணவனிடம் மனைவி கோபம் கொள்ளல்
* ஆளவந்தார் அனுப்பிய தூதர், பெரிய நம்பி இராமானுஜரை சந்தித்தல்.
* அவருடன் இராமானுஜர் திருவரங்கம் போய்ச் சேர்வதற்குள், ஆளவந்தார் திருநாடு அலங்கரித்தல் (இறைவனடி சேர்தல்)
* ஆகையால் மறுபடி காஞ்சிக்கு வந்து, திருக்கச்சி நம்பியையே குருவாக ஏற்க நினைத்து, அவரை வீட்டிற்கு உணவருந்த அழைத்தல்
* ஆனால், வைசியரான திருக்கச்சி நம்பியை வீட்டிலேயே நுழைய விடாமல், திண்ணையில் அமரவைத்து உணவளித்தார் தஞ்சமாம்பாள்
* மறைந்த ஆளவந்தாரின் ஆசைப்படி, பெரிய நம்பிகள் இராமானுஜரை தேடி வந்து, அவரை சீடராக ஏற்றுக் கொள்ளுதல்
* அவரை இராமானுஜர் தன் இல்லத்திலேயே தங்க வைத்தல்; ஆனால் தஞ்சமாம்பாளோடு ஏற்பட்ட தகராறில் அவர் வீட்டை விட்டு வெளியேறுதல்
* இந்நிலையில், இராமானுஜர் காஷாயம் தரித்துக் கொண்டார்.
* உறங்காவில்லையையும், அவர் இல்லாள் பொன்னாச்சியையும் ஆட்கொண்டு அவர்களை பாகவதர்களாக ஆக்கினார்.
* திருக்கோட்டியூர் நம்பியை தேடிப் போன இராமானுஜர் அவரை தன் குருவாக ஏற்றார்.* ரகசியமாக வைக்கச் சொல்லிய உபதேச மந்திரத்தை, கோபுரம் ஏறி அனைவருக்கும் அறிவித்தார்.
* அனந்தாழ்வாருக்கும், வரதாழ்வாருக்கும் உபதேசம் அளித்து அவர்களுக்கு அருளுதல்
* சகோதரர் கோவிந்தனுக்கு எம்பார் என்னும் நாமம் அளித்து அவரை பாகவதராக ஆக்குதல்
* பிரம்ம சூத்திர பாஷ்யம் எழுதுவதற்காக முயற்சித்தல்; அதற்காக போதாயன பாஷ்யத்தை பார்க்க பிரியப்படுத்தல். அது காஷ்மீர் ஸ்ரீநகரில் இருப்பதாக கேள்விப்பட்டு, காஷ்மீர் பயணம் மேற்கொள்ளுதல்
* இதன்பிறகு, ஸ்ரீவைஷ்ணவ தரிசனத்தை ஊர் ஊராக சென்று பிரசாரம் செய்தல்;* திருக்குடந்தை, திருநறையூர், திருச்சேறை, திருக்கண்ணமங்கை, ஸ்ரீவில்லிபுத்தூர், காஞ்சிபுரம், திருவல்லிக்கேணி, மதுராந்தகம், திருவஹீந்திரபுரம் ஆகிய தலங்களுக்கு சென்று அருளுதல்
* திருமலையில் உள்ளது அரியா? சிவனா? என்னும் சர்ச்சையில் அது அரியே என்று நிரூபித்தல்
* கிருமி கண்ட சோழனின் ஆணைப்படி இராமானுஜரை கூட்டிப்போக வந்த வீரர்களிடம், தானே இராமானுஜர் என்று கூரத்தாழ்வார் செல்லுதல்
* விஷ்ணுவை விட சிவனே பெரியவர் என்று சொல்ல விரும்பாத கூரத்தாழ்வரின் கண்களை பறிக்கச் சொல்கிறான் சோழன்
* திருநாராயணபுரத்தில் யதிராஜ மடம் நிறுவுதல்
* தன்னைப் போலவே தத்ரூபமாய் ஒரு விக்கிரகத்தை வடிக்கச் சொல்லி - தன் அருட்சக்தியை அதனுள் பெய்தார்.* அந்த விக்ரகத்தை ஸ்ரீபெரும்புதூரில் பிரதிட்டை செய்து, வைகுந்தம் ஏகினார் ஸ்ரீராமானுஜர்.
இந்த வரலாற்றை 394 பக்கங்களில் கவிதை வடிவாக பொழிந்துள்ளார் கவிஞர். புத்தகத்தில் பிடித்த வரிகள் என்று சொல்ல ஆரம்பித்தால், மொத்த புத்தகத்தையுமே சொல்ல வேண்டியிருக்கும் என்றாலும், எனக்குப் பிடித்த வரிகளை மட்டும் இங்கே சொல்கிறேன். படித்து மகிழ்க.
இராமானுஜரின் அவதாரம் நிகழும் நேரம்:
சீர்மல்கும் சித்திரைத் திங்களில்
சந்திரன் பூக்கும் சுக்கில பட்சத்தில்
அரனார்க்குகந்த ஆதிரையில்
வானோர் ஏத்தும் வியாழனில்
நல்லொளி பரப்பும் நண்பகலில் -
அவதரித்த ராமானுஜருக்கு அவர் தாய்மாமனாகிய பெரிய திருமலை நம்பி என்னும் அடியார், இலட்சுமணன், இராமானுஜன், இளையாழ்வான் என மூன்று திருநாமங்களை சூட்டினார்.
பெரும்புதூரிலிருந்து காஞ்சிக்கு இடம்பெயர்கையில் :
தன்னைத் திருப்பெரும்புதூரை விட்டு
காஞ்சியில் குடியேறி - அவனது அருள்மிகு
மூஞ்சியில் முழிக்குமாறு
பணிக்கிறான் என்றும்; பகவான் அவனோடு - தன்னை
பிணிக்கிறான் என்றும்; தனது துன்ப விலங்குகளைத்
துணிக்கிறான் என்றும்; தனக்குற்ற வெப்பங்களைத்
தணிக்கிறான் என்றும்; தீனன் தன்மேல் - திருவருளைத்
திணிக்கிறான் என்றும்; காரண காரியங்களை - அவன்
கணிக்கிறான் என்றும்; நுகரும் இரு வினைகளை - அவன்
நுணிக்கிறான் என்றும்; குணங்களின் விசேஷங்களைக்
குணிக்கிறான் என்றும்;
இளையாழ்வானாகிய இராமானுஜன் ஓர்ந்தான்;
விசிஷ்டாத்வைதத்தின் தத்துவம்:
சித்து; அசித்து; இவை இரண்டுக்கும்
வித்து - விட்டுணு; விட்டுணுதான்
விசுவமாயும் - வேறுள்ள சித்து
அசித்தாயும் விரியும் அணு;
இராமானுஜரின் சூளுரை:
வேதங்களைத் தொகுத்த வியாச பகவானையும்;
விஷ்ணு புராணத்தை யாத்த பராசரையும் -
மனிதகுலம் மறவாதிருக்கச் செய்வேன்;
இருவர் புகழையும் பாவில் நெய்வேன்.
பராங்குசரின் திவ்வியப் பாசுரங்களை பாரெங்கும்
பரப்புவேன்; திருவாய்மொழியால் நாட்டார் செவிகளை
நிரப்புவேன்.
பகவான் வியாசரின் பிரம்ம சூத்திரத்திற்கு
விசிஷ்டாத்துவைதத்தின் வழியில் - விரிவுரை
ஒன்று ஆக்குவேன்; வைணவ நெறியை ஊக்குவேன்.
வரதராஜப் பெருமாள் அருளிய வாசகங்களாக திருக்கச்சி நம்பி சொன்னது:
பரத்வம் நாமே! பேதமே தர்சனம்!
உபாயமும் பிரபத்தியே! அந்திஸ்மிருதியும் வேண்டா!
சரீர அவஸானத்திலே மோஷம்! பெரிய நம்பி திருவடி பேணல்!
இதன் பொருள்:
அனைத்திற்கும் நாராயணனே ஆணி வேர்;
ஜீவாத்மாவும் பரமாத்மாவும் ஒன்றல்ல; வேறு;
ஆண்டவனை அடைய ஒரே வழி - அடைக்கலம் புகுவதே;
நாராயணனை நாளும் நம்பி வாழ்பவன் -
உயிர் பிரியும்போது அவன் பேரை உச்சரிக்க வேண்டியதில்லை!
அத்தகு அடியார்க்கு - ஆவி நீத்ததும் வீடு நிச்சயம்!
பெரிய நம்பிகளைப் பேராசானாகப் பேணி -
அவர் திருவடிகளைத் தொழுக!
***
படிக்க படிக்கத் தெவிட்டாத தமிழில், இராமானுஜரின் சரிதையை அறிய விரும்புபவர்கள் கண்டிப்பாக படிக்க வேண்டிய புத்தகம் இது.
***
ராமானுஜ காவியம் படித்துச் சில வருடங்கள் ஆகின்றன. மீண்டும் அது குறித்து அசைபோட இந்தப் பதிவு மூலம் ஒரு வாய்ப்பு கிடைத்தது. நன்றி.
ReplyDeleteதமிழ்க்கடவுள் என்ற தலைப்பில் கந்தபுராணத்தை வாலி எழுதியுள்ளார். சமயமிருந்தால் படித்துப் பார்க்கவும். நன்றி.
வாங்க கோபி,
ReplyDeleteநலம்தானே?
ஆம்னிபஸ் ஆரம்பிச்சு ஒருமாசம் ஆச்சு. உங்க மாசம் அட்லீஸ்ட் ”ஒரு பதிவு” வாக்கை இந்த வேளையில் நினைவுப்படுத்தறேன்
கிரி, புது வேலை. புத்தகங்கள் கையில் இல்லை. என்ன செய்வதென்று தெரியவில்லை:-(
ReplyDeleteபடிக்கத் தூண்டும் பதிவு !!!
ReplyDelete