மிக ஒல்லியான புத்தகம். இருநூறு பக்கங்களுக்கும் குறை. இதற்குள் எப்படி ஒரு குற்றப்புனைவு கதையைச் சொல்லிவிடமுடியும். அதுவும் குற்றப்புனைவு மாஸ்டர்களே பெரியளவு கதைக்களனைத் தேடி அலையும் போது 2006இல் வெளியான இந்த சிறு நூல் எப்படி பிரபலமாகியிருக்க முடியும்? மேலும் Friedrich-Glauser எனும் குற்றப்புனைவுக்கான ஜெர்மன் நாட்டுப் பரிசை வென்றது எப்படி எனும் ஆர்வமே இப்புத்தகத்தை வாங்கத் தூண்டியது. வெறும் வார்த்தைகளல்ல, உடம்பின் கடைசி நரம்புவரை பதைக்கவைக்கும் த்ரில்லரை ஆசிரியர் ஆன்ரியா மரியா ஷென்கெல் எழுதியுள்ளார்.
ஒன்றும் பெரிய கதையல்ல. சொல்லப்போனால் தலைப்பே கதையைச் சொல்லிவிடுகிறது. ஜெர்மன் நாட்டின் ஒரு கிராமத்துப் பண்ணையில் நடக்கும் கொலைதான் கதை. ரஷ்மோன் விளைவு போல கிராமத்தில் இருக்கும் சிறுவர் முதல் பெரியவர் வரை சாட்சி சொல்வது போலக் கதை சொல்லப்பட்டிருப்பது விஷேசம் நம்பர் 1. கொல்லப்பட்ட டேன்னர் குடும்பத்தை யாருக்கும் பிடிக்காது என்பதால் அவர்களைப் பற்றி முழுவதுமாகத் தெரிந்தவர் கிட்டத்தட்ட யாருமில்லாத நிலையில் ஜிக்சா போல ஒவ்வொரு சாட்சி சொல்வதைக் கொண்டு நமக்கு உருவாகும் சித்திரம் விஷேசம் நம்பர் 2. மூன்றாவதாக, முதல் பக்கத்திலிருந்து கொலையாளி நம்முடனே பயணிக்கிறான் - பண்ணையில் தீவனம் கலக்கிறான், பால் கறக்கிறான், கோடாலியை தீட்டுகிறான், பனிகாலத்துக்கான வைக்கோல் சேகரிப்புகளைச் செய்கிறான். நம் கழுத்தில் அவன் விடும் மூச்சை உணர்வதில்லை அவ்வளவுதான். மற்றபடி ஒவ்வொரு பக்கத்திலும் அவன் நம்முடனேயே பயணிக்கிறான். இதை அற்புதமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் ஆசிரியர்.
ஒரே ஒரு கொலையல்ல. டேனர், அவரது மனைவி, மகள், பேத்தி என அவரது குடும்பமே பண்ணையில் இறந்து போயிருக்க, ஒவ்வொருவரது குணங்களும் மிக மிக மிக மெதுவாக சாட்சியங்களின் வார்த்தைகளிலிருந்து விரிகிறது. டேனர் கோபக்காரர் என அனைவருக்கும் தெரிந்திருக்கிறது. அவரது மாப்பிள்ளை ஊரை விட்டு ஓடிவிட்டான் என்பதும் அரசல்புரசலான வதந்தி. ஆனால் டேனருக்கும் அவரது மகளுக்கும் இருந்த கள்ள உறவினால் தான் அவன் ஊரை விட்டு ஓடினான் என ஒரு சாராரும் (ஆண்கள்), டேனரின் மனைவி தந்த பணத்தில் தான் அவன் கம்யூனிச ரஷ்யாவுக்கு ஓடிவிட்டான் என ஒரு சாராரும் (பெண்கள்) நம்புகின்றனர்.
அளவுக்கதிகமான வதந்திகளைத் தாண்டி கணக்கிடமுடியாத நம்பிக்கைகள் என கிராமத்தில் அனைவரும் வெவ்வேறு உலகில் வாழ்ந்தவர்கள் போல சாட்சி அளிக்கிறார்கள். இவர்கள் அனைவரும் சுட்டுவது ஒரு குடும்பத்தைப் பற்றியா எனும் சந்தேகம் படிப்பவர்களுக்கு வலுக்கிறது. ஒரு சந்தர்ப்பத்தில் கொலை செய்தது யார் என்பதே முக்கியமல்ல என்பது போல எனக்குத் தோன்றியது. இது ஐரோப்பிய கிராம வாழ்வின் மேல் வைக்கப்படும் விமர்சனம் எனும் அளவுக்கு மக்கள் தனித் தனித் தீவுகளாக உள்ளனர். போதாக்குறைக்கு கிராமத்து ஷெரிப் மற்றும் பாதிரிக்கும் கூட டேனர் குடும்பம் மீது நல்ல அபிப்ராயம் இல்லை. இறப்பதற்கு ஒரு நாளுக்கு முன் டேனரின் மகள் தன்னிடம் பாவமன்னிப்பு கேட்க வந்தபின் ஏதோ நினைத்தவளாய் பணத்தை மட்டும் கொடுத்துவிட்டு வீட்டுக்குச் சென்றுவிட்டாள் என பாதிரி கூறுகிறார். தந்தையுடன் இருந்த உறவை எண்ணி, அவளது முகத்தில் தீவிரமாக சுயவெறுப்புத் தெரிந்தது எனக் குறிப்பிடுகிறார்.
ஒவ்வொரு பக்கமும் நம் படபடப்பை அதிகப்படுத்தும். பண்ணையின் விவரணையைக் கூறும்போதுகூட எந்த இடத்தில் என்ன நடந்திருக்குமோ எனும் எண்ணம் அதிகமாயிருந்தது. சொற்களை மிகக் கவனமாகத் தேர்ந்தெடுத்திருக்கிறார். எளிமையான நடை என்றாலும் காட்சிப்படுத்தியிருப்பதைப் போல துல்லியமான விவரணைகளால் மிக உயிர்ப்போடு இருக்கிறது. எந்த சிறு தகவலும் கொலையாளியை நமக்கு அடையாளம் காட்டும் எனும் எதிர்ப்பார்ப்பு இருப்பதால் பக்கத்துக்குப் பக்கம் முக்கியத்துவம் பெறுகிறது.
குற்றப்புனைவுப் பிரியர்களுக்கு பிடிக்கும் என உத்திரவாதமாகச் சொல்ல முடியாது. புகழ்பெற்ற புனைவுகள் போல நாயகத்தன்மை இல்லையென்றாலும், ஐரோப்பிய பனிக்காலத்தை நினைவூட்டும் வகையான ஒரு bleak novel.
ஆசிரியர் - Andrea Maria Schenkel
உள்ளடக்கம் - நாவல் (மொழியாக்கம்)
பதிப்பகம் - Quercus.
இணையத்தில் வாங்க - ஃப்லிப்கார்ட்.காம்
ஆசிரியர் - Andrea Maria Schenkel
உள்ளடக்கம் - நாவல் (மொழியாக்கம்)
பதிப்பகம் - Quercus.
இணையத்தில் வாங்க - ஃப்லிப்கார்ட்.காம்
தங்களின் பதிவே ஒரு விறுவிறுப்பை தருகிறது ஐயா...
ReplyDeleteபுத்தக தகவலுக்கு நன்றி...
நன்றி திண்டுக்கல் தனபாலன்!
ReplyDeleteபைராகியின் ஆசிர்வாதம். தங்களது தொடர் ஆதரவு மகிழ்ச்சி தருகிறது.
பைராகி
ஓம்!ஓம்!ஓம்!