‘ஒரு வரலாற்று புனைவு’ எப்படி எழுதப்பட வேண்டும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணம் என்று சிக்கவீர ராஜேந்திரனை பற்றி இணைய நண்பர் ஒருவர் ஒரு விவாதத்தின்போது குறிப்பிட்டிருந்தார். ஹேமா ஆனந்ததீர்த்தனின் மொழியாக்கத்தில் நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடாக, மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் எழுதி 1947 ஆம் ஆண்டு முதற்பதிப்பு கண்ட இந்த கன்னட நாவல் எதேச்சையாகத்தான் என் கண்ணில் பட்டது. 508 பக்கங்கள் கொண்ட இந்த நாவலின் (1990 ஆம் ஆண்டில் வெளியான) இரண்டாவது பதிப்பின் விலை 32 ரூபாய் எனும் முதல் அதிர்ச்சியில் இருந்து மீண்டு வரவே எனக்கு கொஞ்ச காலம் பிடித்தது.
குழந்தை கரையோரம் கட்டி விளையாடும் மணல் வீடுகளைக் கருணையற்ற தன் அலைநாவுகளால் கரைத்தழிக்கும் கடல்போல் ஒரு இந்திய சமஸ்தானம் காலத்தால் சுவடின்றி கொண்டு செல்லப்படுவதை விவரிக்கும் கதை மாஸ்தி வெங்கடேச அய்யங்காரின் ;சிக்கவீர ராஜேந்திரன்;. இது ஓர் ஒற்றை நிகழ்வா எனில் இல்லையென்றே சொல்ல வேண்டும். உண்மையில் குடகின் வீழ்ச்சியின் சித்திரம் பெரும்பாலான இந்திய சமஸ்தானங்களுக்கும் பொருந்துவதே. தரையில் சிதறி மெல்ல இணையும் பாதரசத் துளிகளாக அவை ஒவ்வொன்றும் ஆங்கிலேய பேரரசின் பெரும்பரப்பில் இணைந்து மறைந்தன.
தொட்ட வீரன், பின்னர் சதி செய்து அரியணை ஏறிய லிங்க ராஜன். இந்த வரிசையில் அவனுக்குப் பின்னர் குடகின் ஆட்சி பொறுப்புக்கு வருகிறான் சிக்கவீரன். அவனது அவையில் மந்திரியாக இருக்கும் நொண்டி பசவன் தனித்து வளர்ந்த மன்னனின் உற்ற தோழன். சிக்கவீரனை அவன் படிப்படியாக அழிவுப் பாதையில் இழுத்து செல்கிறான். மக்களை முற்றிலுமாக மறந்த அவனை மதுவும் பெண்பித்தும் முழுவதுமாக ஆட்கொள்கின்றன. பேரழிவைக் கொண்டு வரும் காட்டருவி வெள்ளத்தின் அடக்கமுடியாத வேகத்துக்கு தன்னால் முயன்றவரை அணைபோட முயன்று ஒவ்வொரு முறையும் உடைந்து சிதறினாலும், தளராமல் மீண்டும் மீண்டும் முயலும் மகத்தான காவியப் பெண்ணாக வருகிறாள் அவனது மனைவி, குடகின் குல விளக்கு கௌரம்மாஜி. அத்தனை துன்பங்களையும் பொறுத்துக்கொண்டு தன் மூர்க்க கணவனை காவல் தெய்வமாகக் காத்து நிற்கிறாள். மூத்த அமைச்சர்கள் மீது எரிந்து விழும் மன்னன் தன் மகள் புட்டவ்வாவை கடித்துகொள்ளக்கூட தயங்கும் வாஞ்சையுள்ள சாதாரண தந்தைதான்.
சிக்கவீரனைக் காட்டிலும் தானே அரசாளும் தகுதியுடையவன் என எண்ணும் தமக்கை கணவன் சென்ன பசவனைப் பழிவாங்க வேண்டும் எனும் நோக்கில் அவனது தங்கை தேவம்மாஜியை சிறையிலடைக்கிறான் சிக்க வீரன். தேவம்மாஜியின் கருவிலிருக்கும் குழந்தை மூலம் எதிர்காலத்தில் மன்னனின் உயிருக்கு மட்டுமின்றி அந்த குழந்தைக்கும் ஆபத்து என்று தனக்குச் சொல்லப்படும் ஆரூடத்தை நம்பும் சிக்க வீரனின் மனைவி கௌரம்மாஜியின் தீவிர முயற்சியால் அவனது தமக்கை தேவம்மாஜி விடுதலை அடைகிறாள்.
அப்பங்கொளம்அரண்மனையில் சிறைவைக்கப்பட்டிருந்த அவர்கள் குழந்தையைத் தூக்கிக் கொண்டு சில விசுவாசமான வீரர்களுடனும் ஆங்கிலேயர்களிடம் அடைக்கலம் தேடி பெங்களூருக்குத் தப்பி வர முயல்கிறார்கள். இடையில் குழந்தை தவறி விழுந்து சிக்கவீரனிடமே அகப்பட்டுவிடுகிறது. அதை மீட்கச் செல்லும் சென்ன பசவனின் விசுவாசியான சோமன் எனும் வீரன் பொதுமக்களின் முன்னிலையில் கழுவேற்றப்பட்டு அவனுடலை கழுகுகள் கொத்தித் தின்னும் சித்திரம் மனதை ஆழமாக தைத்து விடுவதாக இருக்கிறது. ‘கரிங்காளி, என் தாயே , இதுவும் உன் இஷ்டம். எஜமானையும் எஜமானியையும் காப்பாற்று தாயே. அவர்களின் குழந்தையையும் காப்பாற்று’ என்றுதான் கழுமரத்தின் கூர்மையான முனை தன் வயிற்றைக் கிழிக்கும்போதும் அலறுகிறான் சோமன்.
மாஸ்தி வெங்கடேச அய்யங்கார் |
சென்ன பசவனும் தேவம்மாஜியும் ஆங்கிலேயரிடம் அடைக்கலம் புகுந்திட, குழந்தை சிக்கவீரனிடம் சிக்கிக் கொள்கிறது. ஆங்கிலேயர்களின் நட்பு நாடான குடகின் பிரச்சனை தீர்க்க அவர்களின் உதவியை நாடுகிறான் சென்ன பசவன். 'குழந்தையை ஒப்படைத்து விடுங்கள்,; என ஆங்கிலேயர்களும், ;தங்கையையும் அவளது கணவனையும் அனுப்பி வையுங்கள்,' என சிக்க வீரனும் மாறி மாறி தூதுக் கடிதங்கள் அனுப்பிய வண்ணம் இருக்கின்றனர். நடுஜாமத்தில், குடிவெறியில் மன்னன் குழந்தையைக்கொல்லும்போது நம் மனம் பதைபதைக்கிறது. அதுவே இந்த நாவலின் உச்சம்.
இதைத் தொடர்ந்து மன்னனின் அணுக்க மந்திரிகள், போபன்னாவும் லக்ஷ்மி நாரயணய்யாவும் அவனுக்கு எதிராகத் திரும்புகிறார்கள். இளைஞர்களையும் வணிகர்களையும் கொண்ட காவேரித்தாய் எனும் ஒரு புரட்சிக் குழு உருவாகி அவர்களும் சிக்க வீரனுக்கு எதிராக திரள்கின்றனர்.
இந்த வாய்ப்பைத் தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள ஆங்கிலேய கும்பனி சர்க்கார் முடிவு செய்கிறது. போபண்ணா, லக்ஷ்மி நாரயனய்யா , ராணி கௌரம்மாஜி போன்றவர்கள் அரசனை மீட்க எடுத்த அத்தனை முயற்சிகளும் வீணாகின்றன. தன்னைத் தூக்கி வளர்த்த சாவித்திரி அம்மா, அந்தப்புரத்தை நிர்வகிக்கும் தொட்டவ்வா, ஒப்பற்ற வீரரான பெரியவர் உத்தைய தக்கன் போன்றவர்களை மீறவும் முடியாமல் உதாசீனப்படுத்தவும் முடியாமல் தவிக்கிறான் அரசன்.
இதற்கிடையில் தாந்த்ரிக உபாசனைகளை கற்றுத் தேர்ந்த பகவதி ஊருக்கு வருகிறாள். லிங்க ராஜனுக்கும் அவளுக்கும் பிறந்த வாரிசுதான் நொண்டி பசவன் என்பது இப்போது துலக்கமாகிறது. ராஜவிசுவாசமும், மதிநுட்பமும் நிறைந்த தன் மகன் நொண்டி பசவனை அரசனாக்க வேண்டும் என திட்டம் திட்டுகிறாள் அவள் . ஆனால் அவளது திட்டம் அவனுக்கு எதிராகவே திரும்பி இறுதியில் சிக்கவீரனின் கரங்களிலேயே நொண்டி பசவனும் மடிகிறான். இறுதியில் மக்கள் ஆதரவுடன் மடிகேரிக்கு நுழைந்து சிக்கவீரனை பதவி நீக்கம் செய்து அவனையும் அவன் குடும்பத்தையும் வேலூர் அரண்மனையில் அனைத்து வசதிகளுடனும் குடியமர்த்த ஆங்கிலேய அரசு ஆணையிடுகிறது. சரியான வாரிசுகள் வேறு யாரும் இல்லாத காரணத்தினால் கும்பனி நிர்வாகமே ஆட்சியை ஏற்றுகொள்ள முடிவு செய்கிறது. புட்டவ்வா ஆங்கிலேய அதிகாரியை மணந்துகொண்டு கிறித்தவத்தைத் தழுவி இங்கிலாந்துக்கு செல்கிறாள். மன்னனும் அவளுடன் இங்கிலாந்தில் வசித்து மறைகிறான். புட்டவ்வாவின் மகளான எலிசபெத்தை கதையாசிரியர் இங்கிலாந்தில் எதேச்சையாக சந்திப்பதாகவும், அவர் மூலம் இந்த கதையை கேட்டறிந்ததாகவும் கதை முடிகிறது.
நுண்ணிய வர்ணனைகளோ , உணர்ச்சிப் பெருக்குகளோ இல்லாத எளிமையான நேரடி மொழி மாஸ்தியுடையது. கதையும் குழப்பங்கள் ஏதுமற்ற நேரடி கதைதான். ஒவ்வொரு முடிச்சாக கதை விரிந்துகொண்டே போகிறது. இதுவரையிலான எனது புனைவு வாசிப்பில் ஆகச்சிறந்த மொழியாக்கம் என இதையே குறிப்பிட வேண்டும். இந்த மன்னன் எப்படியாவது அழிவிலிருந்து மீண்டுவிட மாட்டானா என்றே மனம் ஏங்குகிறது. நடக்கக்கூடாது என நாம் எண்ணும் மிக மோசமான தேர்வுகளையே இறுதிவரை சிக்கவீரன் தனதாக்கிக் கொள்கிறான். அவனுடைய அத்தனை அட்டூழியங்களுக்கும் அப்பால் அவன் ஆங்கிலேயர்களிடம் சரணடையும்போது மனம் கனக்கவே செய்கிறது. அவனை எண்ணி பரிதாபப்படவே முடிகிறது. வரலாற்று நிகழ்வுகள் என்பது கடல்பரப்பிலிருந்து எம்பி நிற்கும் பனி சிகரங்களை போல். அதன் ஆழத்தையும் விரிவையும் புனைவின் மூலம் கச்சிதமாக பொருத்துவதே நல்ல வரலாற்று புனைவாக இருக்க முடியும். வரலாறும் புனைவும் மிக கச்சிதமாக ஒன்றையொன்று நிரப்பி முழுமை செய்துகொள்ளும் அற்புதத்தை இந்த நாவல் செய்துள்ளது. வரலாற்று நாவல்களில் ஒரு முன்னோடி என கொண்டாடப்பட இது ஒரு முக்கிய காரணமாக இருக்கக்கூடும். மாஸ்தி வரைந்து காட்டும் இந்த உலகம் ஸ்கேல் வைத்து எந்த மீறல்களும் இல்லாமல் வரையப்பட்ட சதுரங்கள் போல தெளிவான தர்க்கத்தால் ஆனது.
போர்குதிரைகளும், ரகசிய தூதுவர்களும் , வில்லன் மந்திரிகளும் , அழகிய ராணிகளும் இளவரசிகளும் மட்டும் கொண்ட உலகம் அரசர்களுடையது எனும் எண்ணத்தை இந்த நாவல் முழுவதுமாக உடைக்கிறது. சிக்கவீரனின் ஒழுங்கீனமும் பொறுப்பற்ற வாழ்வும் பெரும்பாலான இந்திய மன்னர்களின் பொதுகுணமாக இருந்திருக்கிறது. ஒருவகையில் பார்த்தால் ஆங்கிலேயர்கள் எளிய மக்களுக்கு பயன்படும் அளவிற்கு மேலான நிர்வாக அமைப்பை ஏற்படுத்தி இத்தகைய மன்னர்களிடமிருந்து மக்களை மீட்டனர் என்றே தோன்றுகிறது.
வரலாறு நம் கணக்குகளை பொருட்படுத்துவதில்லை. நம் விருப்பங்களுக்கு இடம் கொடுப்பதில்லை. தன் போக்கில் அது மனிதர்களை புரட்டிபோட்டுக்கொண்டே முன்னகர்கிறது. இதுவே இந்தியாவிலும் நிகழ்ந்திருக்கிறது. பிரம்மாண்டமான ஒரு கான்கிரீட் கட்டிடம் ஒவ்வொரு தளமாக வெடி வைத்துத் தகர்க்கப்பட்டு, இறுதியாக தரையோடு தரையாகி மண்ணில் மட்கும் கோர அழிவின் சமரசமற்ற சித்திரம் சிக்கவீர ராஜேந்திரன். இதுபோல் இந்தியாவின் அத்தனை சமஸ்தானங்களும் பிரிட்டிஷ் பேரரசால் ரத்தத்தாலும் சட்டத்தாலும் வென்று அழிக்கப்பட்டிருக்கின்றன. அவற்றின் எழுதப்படாத கதைகள் எத்தனை.
சிக்கவீர ராஜேந்திரன்
மாஸ்தி வெங்கடேச அய்யங்கார்
கன்னட நாவல்- தமிழில் ஹேமா ஆனந்ததீர்த்தன்
நேஷனல் புக் ட்ரஸ்ட் வெளியீடு.
- சுகி
Is this book currently available anywhere ?
ReplyDeletehttp://www.nbtindia.gov.in/writereaddata/attachment/Sunday-January-29-20123-10-34-PMcat-tamil.pdf
ReplyDeleteசந்தேகமாகத்தான் இருக்கிறது..இந்த சுட்டியில் கிடைக்க வாய்ப்பிருக்கிறது..முயற்சி பண்ணி பாருங்க..
கண்டிப்பா முயற்சி பண்றேன்..bit skeptical...best bet is old book shops I guess.
ReplyDeletesro.nbt@nic.in
ReplyDeleteNBT bangalore office has some copies .contact using this mail id .. I got a copy last week.