சிறப்புப்பதிவர்: நவீன்
சினிமாவை விரும்பாதவர்களை நாம் விரல் விட்டு எண்ணிவிடலாம். ஆனால், வரலாறு அப்படியல்ல. வரலாறைச் சுவைபட படிக்கத்தக்க வகையில் சொல்தல் என்பது தனிக்கலை. தமிழ்ச் சூழலில் சினிமாவின் ஆரம்ப கால வரலாறை சுவாரசிய நடையில், இழுவை ஏதுமின்றி சுருக்கமாக இந்தப் புத்தகத்தில் படிக்கத் தந்திருக்கிறார் சாரு.
நாடக உலகம் திரையுலகாய் மாறத் தொடங்கிய காலத்தின் சூப்பர் ஸ்டார்களான எம்.கே.தியாகராஜ பாகவதர், எல்.ஜி.கிட்டப்பா, பி.யு.சின்னப்பா, கே.பி.சுந்தராம்பாள், அதற்கு அடுத்த காலத்து எம்.ஜி.ராமச்சந்திரன், எம்.ஆர்.ராதா ஆகியோர் வாழ்க்கை வரலாறு இது. அவர்களைப் பற்றிய வரலாற்றுத் தகவல்கள் பல புத்தகங்களில் முழுமையாக இருந்தாலும் இந்தப் புத்தகத்தில் அவர்களின் வாழ்க்கையின் எழுச்சியும் வீழ்ச்சியும் கட்டுரைகளாக சுவைபட இருக்கின்றன. அதுவும் சாருவின் பாணியில் கட்டுரை என்பது வெறும் கட்டுரையாக மட்டுமல்லாமல் பல விமர்சனங்களையும் முன்வைத்துச் செல்கிறது.
எம்.கே.டியின் வரலாற்றில் இருந்து தொடங்குகின்றது புத்தகம். சினிமாத்துறையின் முதல் சூப்பர் ஸ்டாரின் எழுச்சியும் வீழ்ச்சியும் கண்முன்னே பரந்து விரிகின்றது சாருவின் நடையில். உச்சகட்ட நடிகர் ஒருவர் தேவையில்லாத குற்றத்துக்காக சிறை சென்றுவந்து, மூன்றே ஆண்டு காலத்தில் அதலபாதாளத்துக்குச் சென்றதைப் படிக்கும்போது சற்று திகைத்துத்தான் போகிறோம் நாம். அரிதாரம் பூசுபவர் வாழ்வின் நிலையாத் தன்மை ஒரு தொன்று தொட்ட நிகழ்வுதான் போல.
பி.யு.சின்னப்பாதான் முதலில் தமிழில் இரட்டை வேடங்களில் நடித்த நடிகர். படம்: உத்தமபுத்திரன் எம்.ஜி.ஆர்-சிவாஜி,ரஜினி-கமல்,விஜய்-அஜித் ரசிகர்களின் சண்டைகளுக்கு எல்லாம் ஆரம்பப் புள்ளியே சின்னப்பா-பாகவதர் ரசிகர்களின் சண்டைகளே என்பவை எல்லாம் இந்தப் புத்தகம் நமக்கு அறியத் தரும் சுவாரசியத் தகவல்கள்.
எல்.ஜி.கிட்டப்பா சினிமா நடிகர் என்றே நினைத்திருந்த எனக்கு அவர் சினிமாவில் நடிக்கவேயில்லை, நாடகத்தில் மட்டுமே நடித்தவர் என்பது இந்த புத்தகம் படித்து பின்னர்தான் தெரிந்தது. கிட்டப்பா பற்றிய கட்டுரைகளில் முத்தாய்ப்பாய் அவருக்கும் கே.பி.சுந்தராம்பாளுக்கும் இடையேயான காதல் கடிதங்களும், அவருக்கும் அவரின் நண்பருக்கும் இடையேயான நட்பு கடிதங்களும் சில கொடுக்கப்பட்டிருக்கின்றன . நெஞ்சைத் தொடும் கடிதங்கள் அவை.
முதிய தோற்றத்திலேயே நம் மனதில் நிலைத்துவிட்ட கே.பி.சுந்தரம்பாளே இந்த புத்தகத்தின் நாயகி தீராக்காதலி இளம்பருவத்திலேயே நாடகத்தில் நடிக்க வந்துவிட்ட அவருக்கு அந்த காலத்தில் ஜோடியாக நடிக்க ஏற்றவர் எவரும் இல்லை மக்களும் யாரையும் ஏற்கவில்லை. அப்போது தைரியமாக உடன் நடித்து கே.பி,எஸ்ஸையும் தன் குரலால் வென்று வசப்படுத்தினார் கிட்டப்பா.
கிட்டப்பாவுடன் - கே.பி.எஸ் இருவரும் சேர்ந்து வாழ்ந்தது ஏழு வருட வாழ்க்கைதான் (அதுவும் சட்டப்பூர்வமான திருமணம் இல்லை). ஆனால், அந்த ஏழு வருடங்களுக்காய் (இதிலும் பல மாதங்கள் பிணக்கால் பிரிந்தே இருந்தனர் ) 47 வருடங்கள் விதவையாகவே வாழ்ந்து மறைந்தார் கே.பி.எஸ்.
எம்.ஆர்.ராதா குறித்த ஒரு கட்டுரையில், ஒரு பத்திரிக்கையாளர் சந்திப்பில் அவர் பேசுவதை கவனியுங்கள்
“தோழர்களே இவ்வளவு காலம் கழித்து இன்று எனக்கு வரவேற்பு அளித்துள்ளீர்கள் காரணம் இன்று நான் சினிமாவில் இருப்பதால்தான். நான் நாடகத்தில் எவ்வளவோ சாதனைகளை செய்தபோது எனக்கு அளிக்காத வரவேற்பை இப்போது அளிக்கிறீர்கள் சினிமா எனது ரிட்டையர்ட் லைப் சினிமாக்காரர்களை உயர்த்தாதீர்கள் ”, எத்தனை பேரால் வளர்ச்சி நிலையில் இப்படிப் பழையன மறவாமல் பேச இயலும்?
நாம் மேலே பார்த்தவர்களில் பலர் சூப்பர்ஸ்டார்களாய் வலம்வந்த காலத்தில் துண்டு வேடங்களில் நடித்துக் கொண்டிருந்தவர் எம்.ஜி.ஆர். அதன் பிறகான அவர் கண்ட வளர்ச்சியும் சரித்திரங்களும் இந்த உலகறிந்தது.
சிறிய புத்தகம் என்றாலும் அவர்களின் வரலாற்றை, இழுவைகள் இல்லாமல் தேவையான விஷயங்களை மட்டும் சொல்லும் மாபெரும் மனிதர்களின் எழுச்சியும் வீழ்ச்சியும் பற்றி அறிந்து கொள்ள நல்லதோர் நூல்
தீராக்காதலி - சாரு நிவேதிதா
No comments:
Post a Comment