உப்புச் சத்தியாகிரக யாத்திரை நடந்தது சித்திரை மாதத்தில். தமிழ் நாட்டில் அது கடுமையான வெயில் காலம். காலை எட்டு மணிக்கே கால் சுடும். தரை எல்லாம் சூடாக இருக்கும். நடந்து செல்வதே கடினம். தண்ணீர் தாகமிருந்து எளிதில் சோர்வு உண்டாகும்.
இயற்கையுடன் அரசாங்கமும் சேர்ந்து கொண்டு அவர்களுக்கு தொல்லை தர ஆரம்பித்தது.
அந்த வருஷத்தில், ஜே. ஏ. தார்ன் என்பவர் தஞ்சாவூர் மாவட்டத்திற்கு மாஜிஸ்ட்ரேட்டாக இருந்தார். ஆள் அப்படி ஒன்றும் பார்ப்பதற்கு பயங்கரமாக இருக்க மாட்டார். ஆனால் ஒத்துழையாமை இயக்கத்தை சமாளிக்க,, பிரிட்டிஷ் அரசுக்கு, ஒரு புதிய ஆயுதத்தைக் கண்டுபிடித்துக் கொடுத்தவர் இந்த தார்ன் துரைதான்.
தென்னாப்பிரிக்காவில் காந்திஜி சத்தியாகிரகம் செய்தபோது எதை சத்தியாக்கிரகிகள்மீது பிரயோகிக்க மார்ஷல் ஜான் ஸ்மட்ஸ் மனம் கூசினாரோ, அந்த குண்டாந்தடியை, சர்வதாராளமாக பிரயோகிக்க வழி காட்டினவர் இந்த தார்ன்தான்.
சத்தியாக்கிரகிகளைக் கைது செய்யாமல், அவர்களைக் கொடூரமாக அடித்து காயப்படுத்தும் மிருகத்தனமான செயலை ஏவி விடுவதை நியாயம் என்று சொன்ன புண்ணியவாளன் இவர்தான்.
இப்பேர்பட்ட கொடூர எண்ணமுடைய ராட்சதனான தார்ன், தம்முடைய அதிகார எல்லைக்குள்ளேயே சத்தியாக்கிரகம் செய்ய வருகிறார்கள் என்றால் சும்மா இருந்து விடுவாரா?
உடனே மாவட்ட அதிகாரிகளைக் கூட்டி, சத்தியாக்கிரகிகள் எல்லாம் சட்ட விரோதிகள் என்றும், அவர்களுக்கு உணவு, உடை, இருக்க இடம் அளிப்பது குற்றம் என்றும் அப்படி யாராவது செய்தால் அவர்கள் கடுமையாக தண்டிக்கப்படுவார்கள் என்றும் கிராமந்தோறும் தண்டோரா போடச் செய்தார். பயமுறுத்தும் துண்டு பிரசுரங்களை விநியோகிக்கச் செய்தார். அதிகாரிகளைவிட்டு மக்களை மிரட்டினார்.
|
அகிம்சை என்பது அன்பு நெறி என்று அடையாளம் கண்டுகொண்டு பிரிட்டிஷ் அரசு தன் வன்முறையைக் கைவிட்டு விடவில்லை - அன்பு நெறி என்பதற்காக அகிம்சைப் போராட்டம் இந்தியர்களால் தேர்ந்தெடுக்கப்படவுமில்லை. சுதந்திரப் போராட்டம் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது என்ற காரணத்தால், பிரிட்டிஷ் அரசு மனித உரிமைகளை மதிக்கும் அரசாகச் செயல்பட்டு இந்தியர்களின் அறப் போரை மதித்து இந்தியாவுக்கு சுதந்திரத்தை சும்மா கொடுத்துவிடவில்லை.
அல்லயன்ஸ் பதிப்பகத்தின், "வேதாரண்யம் உப்பு சத்தியாகிரகம் - ஒரு தொகுப்பு" என்ற புத்தகத்தில், சி. சு. செல்லப்பாவின் "சுதந்திர தாகம் என்ற நாவலிலிருந்து எடுத்தாளப்படும் உப்பு சத்தியாக்கிரகம் குறித்த பதிவுகள் தவிர்த்து வேறு எதுவும் புனைவல்ல - அதுவுமேகூட உண்மைச் சம்பவங்களை, உண்மை நிகழ்வுகளை, புனைவு வடிவில் பேசுகிறது. அதனோடு ஏ. என். சிவராமன், தி. ராமச்சந்திரன், பகீரதன், கே. அருணாசலம், ம.பொ. சிவஞானம், மற்றும் பெயர் குறிப்பிடப்படாத கஸ்தூர்பா காந்தி குருகுல வெளியீட்டுக் கட்டுரை ஆகிய அனைத்தும் வேதாரண்ய உப்புச் சத்தியாக்கிரகத்தை முன்வைத்து, அகிம்சைப் போராட்டத்தை மேற்கொண்டவர்கள் சந்தித்த அரசு வன்முறையை ஒவ்வொரு பக்கத்திலும் உணர்த்தும் ஆவணங்களாக இருக்கின்றன.
நியாயமாகப் பார்த்தால் உப்புச் சத்தியாகிரகத்துக்கான தேவையே இருந்திருக்கக் கூடாது புத்தகத்தின் இறுதிக் குறிப்பில் உள்ளபடி:
"பரங்கிச் சீமையிலிருந்து வியாபாரக் கப்பல்களுக்கெல்லாம் 'டெட்லோடு' ஆக மணல் மூட்டைகளுக்கு பதில் அங்கே விளையும் உப்பை மூட்டை கட்டி ஏற்றி வந்தார்கள். உப்பு கப்பலேறினால் விலை கூடாமல் என்ன செய்யும்?
எனவே இந்திய நாட்டு உப்புக்கெல்லாம் போடு வரியை. இங்கிலாந்து - கப்பல் உப்பு விலையைவிட - ஏற்றிவிடு விலையை. இதற்காகத்தான் வெள்ளையர் உப்பிற்கு போட்டாரையா வரியை!"
இப்படி ஒரு அறமற்ற செயலை எந்த அரசும் செய்யத் துணிந்ததே ஆச்சரியமான விஷயம். "ஐரோப்பாவே மூன்றாம் உலகின் உருவாக்கம்தான்" என்று ஃபானோனை மேற்கோள் காட்டும் நிக்கலாஸ் பி. டிர்க்ஸ், பிரிட்டிஷ் பேரரசின் துவக்கங்களே அறமற்ற செயல்களில் இருப்பதாகக் குறிப்பிடுகிறார், தன் "The Scandal of Empire," என்ற நூலில். அவர் தன் நூல் முழுவதும் ஆங்கில அரசு எவ்வளவு கேவலமான நடவடிக்கைகளால் தன்னைப் பேரரசாக உருவாக்கிக் கொண்டது என்பதை விவரிக்கிறார் : அதன் பின் அதற்கான நியாயங்களைக் கற்பிக்கப் புகுந்தது அதைவிட கேவலமான செயல். அந்த நியாயங்களை நம்மில் இன்னும் சிலர் நம்பிக்கொண்டும் இருக்கிறோம்.
உப்பு வரியின் நியாயமின்மை எவரும் புரிந்து கொள்ளக் கூடியது. இதற்கு எதிரான போராட்டத்தில் இந்தியர்கள் பெருமளவில் ஒன்றுபட்டுப் போராடிய தகவல்கூட ஆச்சரியமானதாக இல்லை ஆனால் களத்தில் போராடியவர்கள் கடைபிடித்த அகிம்சைதான் வியப்பாக இருக்கிறது. வேதாரண்யத்தில் சேகரிக்கப்பட உப்பைப் பறிமுதல் செய்ய போலிஸ் வன்முறையைப் பயன்படுத்துகின்றனர். அதற்கு எதிராக அங்கே உள்ள சத்தியாக்கிரகிகள் சுற்றி விரியும் தொடர் வளையங்களாக அணிவகுத்து, கைகோர்த்து தாங்கள் சேகரித்த உப்புக்குப் பாதுகாப்பாக அமர்கின்றனர். அவர்கள் கையை முறித்து முன்னேறும் போலீஸ் மையத்தில் இருக்கும் பதினாறு வயது சிறுவன் மேட்டுப்பாளையம் ராஜுவை எதிர்கொள்கின்றனர் : "நடுவில் உப்பின் மேல் உட்கார்ந்திருந்த திரு ராஜு தனது இரண்டு கையிலும் உப்பை வைத்துக் கொண்டு வாயிலும் உப்பை அடக்கிக் கொண்டு உட்கார்ந்திருந்தார். போலீஸார் எவ்வளவு கடுமையாக மணிக்கட்டில் அடித்தும், தொண்டையை நெறித்தும்கூட அவரிடமிருந்து உப்பைப் பறிக்க முடியவில்லை. போலீஸாரின் அடக்குமுறை தாங்காமல் மூர்ச்சித்து விழுந்துவிட்டார். உயிருக்கே ஆபத்தான நிலை வந்துவிட்டது." என்று எழுதுகிறார் ம.பொ. சி.
அனைத்து ஆயுதங்களும் பிரிட்டிஷ் பேரரசிடம், தார்மீக நியாயம் மட்டுமே நம்மிடம் என்று போராடுகின்றனர் சத்தியாக்கிரகிகள். வேதாரண்யம் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக நாமக்கல் கவிஞர் எழுதிய பாடல் வரிகளில்,
"குதிரை இல்லை யானை இல்லை
கொல்லும் ஆசை இல்லையே
எதிரியென்று யாரும் இல்லை
எற்று ஆசை இல்லதாய்..
கோபம் இல்லை தாபம் இல்லை
சாபங் கூறல் இல்லையே
பாப மான செய்கை யொன்றும்
பண்ணும் ஆசை இன்றியே...
நடத்தப்பட்ட அகிம்சை அடிப்படையிலான சத்தியாக்கிரகம் பிரிட்டிஷ் அரசின் அனைத்து அடக்குமுறைகளையும் தளர்ச்சியின்றி எதிர்கொள்கிறது. உப்பு சேகரிக்க வேண்டும், அந்த முயற்சியில் வெற்றி பெற்று சிறை செல்ல வேண்டும் என்பது சத்தியாக்கிரகிகளின் நோக்கமாக இருக்கிறது. உப்பு சேகரிக்கும் முயற்சியை முறியடிக்க வேண்டும், சத்தியாக்கிரகிகள் சிறை செல்லும் நோக்கத்தில் வெற்றி பெற்றுவிடக் கூடாது என்பது அரசின் நோக்கமாக இருக்கிறது. சத்தியாக்கிரகிகளுக்கு உணவு, தண்ணீர், தங்குமிடம் முதலியவை மறுக்கப்படுகின்றன, இவற்றைக் கொடுத்து உதவுபவர்கள் கைது செய்யப்படுகிறார்கள். சத்தியாக்கிரகிகள் தங்குமிடங்களைவிட்டு வெளியே வரும்போதெல்லாம் அவர்களின் மீது தடியடி பிரயோகிக்கப்படுகிறது, போலிசுக்குத் தெரியாமல் அவர்கள் சேகரித்த உப்பு, கூடாரங்களுள் புகுந்து பலவந்தமாகப் பறிமுதல் செய்யப்படுகிறது. இந்த அடக்குமுறை அனைத்தையும் அமைதியாக தாங்கி நிற்கின்றனர் சத்தியாக்கிரகிகள். இவை அனைத்தினும் கொடுமையாக இந்தப் போராட்டத்தில் முன்னிற்கும் வேதாரண்யம் வேதரத்தினம் போன்றவர்களுக்கு சிறை தண்டனை விதிக்கப்படுவதோடல்லாமல், அவர்களின் சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படுகின்றன..
எந்த ஒரு போராட்டமும் சில விதிகளுக்கு உட்பட்ட ஒரு சமநிலைக்கு வந்துவிடுகிறது. இதில் ஒரு தரப்பு எந்த ஒரு விதியையும் அங்கீகரிக்காமல் தொடர்ந்து போரிடும்போது அழிவைத் தவிர்க்க முடிவதில்லை. எங்கு, யார் பின்வாங்குகிறார்கள் என்பதுதான் போராட்டத்தின் முடிவைத் தீர்மானிக்கிறது. சத்தியாக்கிரகிகளின் அகிம்சைக்கும் பிரிட்டிஷ் பேரரசின் அதிகபட்ச அடக்குமுறைக்கும் இடையிலான போராட்டம் தோல்விகளின் வழியாகவே வெற்றி காண்கிறது. இந்திய சுதந்திர வரலாறு என்பது வெற்றி வரலாறு என்பதைவிட தியாக வரலாறு என்று சொல்வதே பொருத்தமாக இருக்கும். இதை அதன் முழுப் பொருளிலும் நாம் வேதாரண்ய உப்பு சத்தியாக்கிரக வரலாற்றை வாசிக்கும்போது உணர முடிகிறது.
- தொகுப்பு 'பாரதமணி' ஸ்ரீநிவாசன்
வரலாறு
அல்லயன்ஸ் நூற்றாண்டு வெளியீடு
விலை ரூ. 70
சிறப்புப் பகிர்வுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteஇனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்... ஜெய் ஹிந்த் !!!
நன்றி தனபாலன் ஐயா...
ReplyDeleteதங்கள் தொடர்ந்த ஆதரவு எங்களை ஊக்குவிப்பதாக இருக்கிறது.