கதை சொல்லும் விதங்கள் பலவகை உண்டு. வார்த்தை ஜாலம் காட்டி வசீகரம் செய்யலாம், பிழியப் பிழிய செண்டிமெண்டால் அடிக்கலாம், சொல்லும் எல்லாவற்றையும் வித்தியாசக் கோணத்தில் புனைந்து “ஆகா” போட வைக்கலாம், பத்திக்கு பத்தி துணுக்குகளைத் திணித்து கதை நெடூக கிச்சுக் கிச்சு மூட்டலாம், இன்னமும் கூட பலவகைகள் உண்டு.
இந்த ’பழகிய’ வகைகள் எவற்றிலும் அகப்படாத எழுத்து ஒரு சிலருக்கே அமையும். நாஞ்சில் நாடனின் பாணியின் தனித்தன்மை அப்படி அமைந்த ஒன்று. இவரின் பெரும்பாலான சிறுகதைகள் முடிவதற்கு சற்று முன்னரே தொடங்குகின்றன. அதுவரை வசவசவென்று.... ஆம் வசவசவென்று விவரணைகள்தாம். உங்களுடன் காலம் காலமாகப் பழகிய ஒருத்தர் போல் பேசிக் கொண்டே இருக்கிறார். எங்கே கதை நிறைகிறதோ அதன் தாக்கம் உங்களுக்கு முழுதுமாய்க் கிடைக்க வேண்டி அந்த உலகை தன் பேச்சினூடே நமக்கு நிர்மாணித்துத் தருகிறார். உங்கள் கை பிடித்து கடைசி பத்தி வரை பத்திரமாக அழைத்துச் செல்கிறார்.
கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை நாஞ்சிலார் அளவிற்கு துல்லியமாக நம் கண்முன் நிறுத்தும் எழுத்தாளர்களையும் கைவிட்டு எண்ணிவிடலாம்.
இருதினங்கள் முன் திருச்சிக்கு கோயில் குளங்களைச் சுற்ற குடும்பத்துடன் ஒரு உலா சென்றிருந்தேன். ஒவ்வொரு கோயிலிலும் கொடிமரத்தின் முன் விழுந்து சாஷ்டாங்கமாய் நமஸ்கரிக்கும்போது “சாத்தாங்கோயில்” நம்பியார் என் மேலே ஏறியமர்ந்து என்னை எழவிடாமல் செய்கிறார்.
வழக்கமாக விழுந்தவுடன் எழுபவன் அப்படியே வீழ்ந்த நிலையில் கிடக்கிறேன். ஒரு நிமிடநேரம் தரையையே வாசனை பிடிக்கிறேன். எனக்கே அது விசித்திரமாக இருக்கிறது, எனினும் ஒவ்வொரு கோயிலிலும் அதைத் தவிர்த்துவிட முடியவில்லை.
நாஞ்சில் நாடனின் “பரிசில் வாழ்க்கை” சிறுகதையின் நாயகர்தான் அந்த நம்பியார்.
ஒரு பூசாரியின் வாழ்க்கையை இதனினும் வீரியமாக விவரித்த கதையொன்றுமில்லை. நாஞ்சில் நாட்டு சாஸ்தா கோயில் ஒன்றின் பூசாரியான அந்த நம்பியார் சரிதச்சட்டியை உருட்டி உருட்டிக் காட்டிவிட்டு கடைசி பத்தியில் அதில் ஒரு கவளச் சோற்றை நம் கையில் சுடச்சுட வைக்கிறார் நாஞ்சிலார்.
மேலே சொன்னாற்போல் வளவளாவென ஒன்பது பக்கங்களுக்கு நம்முடன் அளவளாவுகிறார். நாட்டைச் சொல்கிறார், சாத்தாங்கோயில் (சாஸ்தா கோயில்) அமைந்த காட்டைச் சொல்கிறார், நம்பியாரின் தீராத தரித்திரத்தையும், தாங்கொணா இறையருளையும் இப்படி விவரிக்கிறார்.
பூசாரி வாழ்க்கைக்கு ஆடையிலும் கோடையிலும் சினங்கொள்ளக் கூடாது. ரௌத்திரமும் பழக இயலாது. சினம் என்பது சேர்ந்தாரைக் கொல்லி. எதற்கும் திளைத்துச் சிரிக்க வேண்டும். தொழில் தர்மம். ஊசியால் குத்தினாலும், கோடாரியால் வெட்டினாலும், வேட்டாங் கல்லால் எறிந்தாலும், ‘கல்லால் ஒருவன் அடிக்க காண்டீபம் எனும் வில்லால் ஒருவன் அடிக்க’ என்று என்.சி. வசந்த கோகிலம் பாடிய நிந்தாஸ் துதியைப் போல. மறு கன்னத்தையும் குதூகலத்துடன் காட்ட வேண்டும்.
முடிவில் ஒரு பேயறை வைக்கிறார். அப்படி நான் வாங்கிய ஒரு அறை’தான் என் கோயில் உலா நேரங்களில் என்னை எழ விடாமல் செய்தன.
ஆனந்த விகடன் தீபாவளிமலர் 2006’ல் இடம்பெற்ற இந்தச் சிறுகதை நாஞ்சிலாரின் இணையதளத்திலும் கிடைக்கிறது. சாகித்ய அகாடமி விருது பெற்ற “சூடிய பூ சூடற்க” தொகுப்பிலும் இந்தச் சிறுகதை இடம் பெற்றுள்ளது. நம்
இந்தப் பதிவைத் தொடர்ந்து அந்தப் புத்தகத்திற்கு நண்பர் ரவிக்குமார் எழுதிய விமர்சனப் பதிவு அடுத்ததாக இந்தத் தளத்தில், விரைவில்...
சிறுகதை: பரிசில் வாழ்க்கை - நாஞ்சில் நாடன்
(சூடிய பூ சூடற்க தொகுப்பிலிருந்து)
வெளியீடு - தமிழினி
சிறப்பான பகிர்வுக்கு நன்றி ஐயா...
ReplyDeleteஅவரின் தளத்திற்கு செல்கிறேன்...
அருமையான அறிமுகம் கிரி..இந்தியாவில் வாங்க எனக்கு புத்தக ரெகமண்டேஷன்கள் தருகிறீர்கள்..
ReplyDelete“சூடிய பூ சூடற்க” பற்றிய என் கருத்தை அறிய http://amanusiyan.blogspot.in/
ReplyDelete