"...நம் கடமையைச் செய்வதுதான்
பிரார்த்தனையாக இருக்க முடியும் என்பதில் சந்தேகமேயில்லை, ஆனால்
வாழ்க்கை நகைச்சுவைமயமானது. வாழ்க்கையை மிகவும் சீரியஸாக எடுத்துக் கொள்பவன் மகிழ்ச்சியில்லாமல் இருப்பதற்குத் தன்னைத் தயார் செய்து கொண்டாக வேண்டும்.
இன்பங்களையும் துன்பங்களையும் ஒன்றே போல் வரவேற்பவன் வாழ்வின்
மகத்தானவற்றைப் பெறுகிறான்".
- சர்தார் வல்லப்பாய் படேல்.
சர்தார்
வல்லப்பாய் படேல் என்றால் என்ன ஞாபகம் வரும்? இரும்பு மனிதர், இந்தியாவின்
பிஸ்மார்க், ஆனால் அதையும் தாண்டி அவரை பற்றி நமக்கு என்ன தெரியும் ?
சர்தார் படேலை பற்றி இன்னும் கொஞ்சம் தெரிந்து கொள்ளலாம் என்று இணையத்தில்
தேடியபோது இந்தப் புத்தகம் கிடைத்தது, Life and work of Sardar
Vallabhbhai patel Editor : P.D Saggi, டொரோண்டோ பல்கலைகழகத்தின்
நூலகத்தில் இருந்த புத்தகம் ஸ்கேன் செய்யப்பட்டு மைக்ரோசாப்ட் நிறுவனத்தால்
டிஜிடைஸ் செய்யப்பட்டுள்ளது. இந்த புத்தகத்தை இலவசமாக பதிவிறக்கம் செய்து
கொள்ளலாம்.
புத்தகத்தை நாலு பகுதியா பிரிக்கலாம். 1. வல்லப்பாய்
படேலுக்கு புகழ் அஞ்சலி 2. சர்தார் படேலின் சிந்தனைகள் 3. படேல் ஆற்றிய
உரைகள் 4. படேலின் வாழ்க்கை பற்றி அவரது நண்பர்களின் பதிவுகள், இவற்றைத்
தவிர சர்தார் படேலின் அரிய புகைப்படங்களும் உள்ளன.
சிறு வயதில், தன் நண்பர்களோடு பள்ளிக்குத் தாமதமாக
வந்த ஆசிரியருக்கு எதிராகப் பாடுவது, ஆறு நாட்கள் பள்ளி மாணவர்களோடு
ஸ்டிரைக் செய்வது ,கள்ளச் சந்தையில் பள்ளி பொருட்களை விற்ற ஆசிரியரை
அம்பலபடுத்துவது என்று சிறு வயதிலேயே போராட்டங்கள். எந்த ஒரு விஷயத்தையும் "நாம் ஏன் செய்யக்கூடாது "? என முன்நிறுத்தியவர்
என்னை
பாதித்த இரு சம்பவங்கள் : சர்தார் படேல் நீதிமன்றத்தில் வழக்காடிக் கொண்டு
இருக்கிறார், ஒரு தந்தி வருகிறது, அவரது மனைவி இறந்து விட்டதாகச் செய்தி.
இருந்தாலும் தன் கடமையை முழுவதும் முடித்தபிறகே மருத்துவமனைக்கு
செல்கிறார். மற்றொரு சம்பவம்: காங்கிரஸ் கட்சி அமைச்சர்கள் மீது ஊழல்
குற்றச்சாட்டு வரும்போது, அந்த அமைச்சர்களை கடுமையாக விமர்சனம் செய்யத்
தவறுவதில்லை படேல்.
1916-17 அகமதாபாத் நகராட்சியில் ஏற்பட்ட ப்ளேக் நோயைக்
கட்டுப்படுத்தியது அவருக்கு தேசிய கவனத்தைப் பெற்றுத் தந்தது என்று
தெரிகிறது. அதன்முன் வரை காந்தியைத் தன் தலைவராக ஏற்று கொள்ளாமல்
இருந்தவர், மகாத்மாவைத் தன் குருவாக ஏற்றுக் கொள்கிறார். இதற்கு அவரது
அனுபவங்கள் காரணமாக இருக்கின்றன. காந்தியைப் போலவே, நாட்டின் உண்மையான
முன்னேற்றம் கிராமங்களில் உள்ளதே தவிர சோசியலிசம் என்ற கோட்பாட்டில் இல்லை
என்கிறார்
"உண்மையான சோஷலிசம் கிராம முன்னேற்றத்தில்தான்
இருக்கிறது. கூட்டு உற்பத்தியைத் தொடர்ந்து மேலை நாடுகளில் பரவலாகக்
காணப்படும் குழப்பம் மிகுந்த நிலைமையை நாமும் நம் நாட்டில் உருவாக்கிக்
கொள்ள வேண்டியதில்லை"என்று சொல்கிறார் அவர்.
இந்தியா
விடுதலை பெற்றபின் சிறு/குறு மன்னர்கள் ஆட்சியை முடிவுக்கு கொண்டு வந்தது
தெரிந்ததே ஆனால், ஒவ்வொரு ராஜ்யத்தின் பொருளாதார/அரசியல்/நிதி கொள்கைகளை
நெறிமுறைப்படுத்த படேல் எடுத்துக்கொண்ட உழைப்பு நமக்குத் தெரியாதது. அவற்றை
முழுவதுமாக ஒழுங்கு செய்வதற்குமுன் அவரது உடல் நிலை மோசம் அடைந்து
விடுகிறது, மகாத்மா காந்தியின் தீடீர் மரணம் அவரது உடல்நிலையை மேலும்
கடுமையாக பாதிக்கிறது. இந்த செய்தி நான் இதுவரை அறியாத ஒன்று. அதே போல்,
இந்தியா பிரிவினையை எதிர்கொண்டபோது, அவரின் துணிச்சலான நடவடிக்கைகள் நிறைய
மனித உயிர்களை காப்பாற்றியது என்பது தொடர்பான தகவல்களும் நம்
பாடப்புத்தகங்களில் இடம் பெறுவதில்லை.
இந்தப் புத்தகத்தில் அவரது சில கருத்துகள் சிந்திக்க
வைப்பதாக இருக்கின்றன. குறிப்பாக, மும்பை போன்ற நகரங்களில் வாழ்வது கடினமாக
உள்ளது ஏன் என்பதற்கு இப்படிச் சொல்கிறார்:
"பம்பாய்
போன்ற நகரங்களில் எனக்கு இருப்பு கொள்வதில்லை. எனக்கு கிராமங்களில்தான்
அமைதி கிடைக்கிறது. பம்பாய் போன்ற நகரங்கள் நம்மை ஆளும் பிரிட்டிஷ்
பேரரசின் பிரதிநிதிகளாக இருக்கின்றன. ஊரெங்கும் பகட்டு, ஆரவாரம், ஆணவம்.
அரண்மனை போன்ற கட்டிடங்கள், மோட்டார் வாகனங்கள், ஹோட்டல்கள், திரையரங்குகள்
- இப்படிப்பட்ட ஒரு வாழ்க்கைமுறை இருக்கும் இடத்தில் எந்த ஒரு
விவசாயியின்ன் மனமும் நிலை கொள்ளாமல் தவிக்கும். இது நம் பாரம்பரிய
பண்பாட்டிற்கு முற்றிலும் மாறான ஒன்று. செயற்கையான பலவற்றையும் நாம் மேலைப்
பண்பாட்டிலிருந்து நமதாக்கிக் கொண்டிருக்கிறோம்"
படேல் போன்ற தேசத் தலைவர்களின் கவலைகளை நம்
அரசாங்கங்கள் தொடர்ந்து அலட்சியம் செய்து வருவதால்தான் கிராமம் நகரம் என்ற
பிளவு ஏற்படுகிறது. விவசாய நிலங்கள் வீட்டு மனைகளாக மாறுகின்றன, விவசாயம்
செய்ய வேண்டியவர்கள் கட்டிடக் கூலிகளாக நகரங்களின் குடிசைகளில்
வாழ்கிறார்கள்.
புத்தகத்தின் ஒன்று குறை இது - நிறைய புதிய செய்திகள்
இருந்தாலும், அவை மீண்டும் மீண்டும் வருவதால் ஒரு வித அலுப்பு ஏற்படுகிறது ,
ஆனால் சர்தார் வல்லப்பாய் படேலை நமக்கு நெருக்கமானவராக அறிமுகப்படுத்தும்
இந்தப் புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது சர்தார் படேலை பற்றி வி. பி.
தனபாலா சொல்வதை நம்மால் ஏற்றுக் கொள்ளவும் முடிகிறது -
"காந்திஜி காங்கிரசுக்கு உத்வேகமளித்தார், ஜவகர்லால்
நேரு அதன் பார்வையை பரந்துபட்ட ஒன்றாய் விரித்தார், ராஜேந்திர பிரசாத்
அதைத் தூய்மையான ஒன்றாய்ச் செய்தார், சரோஜினி நாயுடு அதற்கு நளினமான
தோற்றம் கொடுத்தார். ஆனால் வல்லப்பாய் படேல் மட்டுமே காங்கிரசின்
நோக்கங்களை வெற்றிகரமாகச் செயல்படுத்திக் காட்டினார், அதன் செயல்களில்
ஒழுங்கையும் ஆற்றலையும் நடைமுறைப்படுத்தினார்"
No comments:
Post a Comment