நாம் எவ்வளவு சாதாரண மனிதர்களாக இருந்தாலும், நமக்கு எவ்வளவு அவசர வேலைகள் இருந்தாலும் நாம் பல்வேறு கவனக் குறுக்கீடுகளைத் தாண்டிதான் நம் வாழ்க்கையை வாழ்ந்தாக வேண்டியிருக்கிறது. ஒரு சாலையைக் கடப்பதானாலும்கூட நாம் நம் வேலையைப் பார்த்துக் கொண்டு போக முடிவதில்லை. கண்டதையும் பார்த்துத் தொலைக்க வேண்டியிருக்கிறது. அட, அப்படிதான் பார்க்கிறோமே, உருப்படியாக ஒரு விஷயத்தைப் பார்க்கிறோமா, ஆற அமர அதன் அழகை, அதிசயத்தை ரசிக்கிறோமா என்றால், அதுவும் கிடையாது - அபூர்வமான விஷயங்கள் எத்தனையோ நம் கண்களைத் தாண்டிச் சென்று விடுகின்றன. நாம் பார்க்க விரும்புவதை மட்டுமே பார்க்கிறோம் என்பதுதான் பெரும்பாலான சமயங்களில் உண்மையாக இருக்கிறது.
விஷயத்துக்கு வருகிறேன். கல்கி, பாரதி, தி ஜானகிராமன், சுஜாதா, பாலகுமாரன், நகுலன் என்று ஜெயமோகன் அவர்களால் அண்மையில் போட்டுத் தள்ளப்பட்டவர்களின் பட்டியல் கௌரவமானது - வாசகர்கள் மறந்திருக்க வாய்ப்பில்லை, மறந்தாலும் மன்னித்திருக்கும் வாய்ப்பு சுத்தம். மிகையாகப் புகழப்பட்ட ஒவ்வொருத்தரையும் அவரவருக்குரிய இடத்தில் வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கம்தான் ஜெயமோகன் இந்த விமரிசனங்களை எழுதவே காரணமாக இருக்கிறதோ என்ற சந்தேகம்கூட இத்தனை நாட்களாக இருந்திருக்கிறது.
ஆனால் பாருங்கள், "மேற்குச்சாளரம்" என்ற அவரது புத்தகம் ஒன்றைப் படிக்க நேர்ந்தது - கல்கியும் பாரதியும் இன்ன பிறரும் ஜெயமோகனின் புழக்கடையில் சிக்கிக்கொண்டதுதான் அவர்கள் செய்த பாபம் என்பது அப்போதுதான் புரிந்தது. மிகவும் பழக்கப்பட்ட உபகரணங்களுக்கு எண்ணை போடுவது, சாணை தீட்டுவது, துடைத்துச் சுத்தம் செய்வது போன்றதான காரியங்களைச் செய்து இன்றைய நிலையில் அவற்றுக்குரிய பயன்பாட்டைப் புரிந்து கொண்டு ஆத்திர அவசரத்தில் எடுக்கக்கூடியபடியான சரியான இடத்தில் அவர்களை வைக்க வேண்டும் என்றுதான்,ஜெயமோகன் தன் அபிமானத்துக்குரிய தமிழ் இலக்கியப் புழக்கடையில் எதெதையோ குடைந்து கொண்டிருக்கிறார் என்பதாக அதை வாசித்து முடித்ததும் உணர்ந்தேன்.
ஏனெனில், மேற்குச்சாளரத்தில் அந்த மாதிரியான அவஸ்தைகள் எதுவும் இல்லாமல், ஒரு எழுத்தாளனாகத் தன் வாசிப்பைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார் அவர். கண்டாமுண்டா சாமான்களைப் புழக்கடையில் அவர் உருட்டிக் கொண்டிருக்கும் சத்தத்தைக் கேட்டு, "இவருக்கு வேற வேலை இல்லை," என்ற முடிவுக்கு வந்தவர்கள் மேற்குச்சாளரத்தில் வேறொரு ஜெயமோகனைப் பார்க்கலாம். ஜெயமோகனே தன் முன்னுரையில் குறிப்பிடுவது போல், மேற்குச் சாளரம் அவரது அந்தரங்கச் சமையலறை : நாம் மேற்கண்ட போட்டோவில் நம் ஆர்வதுக்கேற்ப எதையெல்லாம் கண்டு களிக்கிறோமோ, அதே போல் ஜெயமோகனும் இந்தத் தொகுப்பில் உள்ள ஏழு நாவல்களில் தனக்குப் பிடித்த விஷயங்களை மட்டும் ரசித்து ருசித்துச் சுவைத்திருக்கிறார் என்பது நமக்குத் தெரிகிறது.
உதாரணமாக,
என்று ஜெயமோகன் எழுதுவது விஷ்ணுபுரத்தைப் பற்றியல்ல."என் வாசிப்பில் இந்த நாவல், அமைப்புக்கும் ஆன்மீகத்துக்குமான உறவைப் பற்றிய படைப்பு. மதத்துக்கும் கடவுளுக்கும் இடையேயான உறவைப் பற்றிய படைப்பு. அது எந்த மதமாக வேண்டுமானாலும் இருக்கலாம், ஆன்மீகம் என்பது வினாக்களினால் ஆனது. உணர்வெழுச்சிகளினால் ஆனது. உச்சநிலைகளினால் ஆனது. அந்த மனநிலைகளைக் குறியீடுகளாக ஆக்கி அமைப்புகளாக நிறுவும்போது மதம் உருவாகிறது. சிந்திக்கும் செயல் ஆன்மீகமானது. சிந்தனைகள் அமைப்புகளாக ஆகின்றன. எந்தச் சிந்தனையும் அமைப்பாக மாறும், மாறுகையில் தேங்கும், நாற்றமடிக்கும். ஆகவே தன் கால கட்டத்து அமைப்புகள் அனைத்தையும் தாண்டி முன்னே செல்வதாகவே உண்மையான ஆன்மீகம் இருக்க முடியும்,"
ஜெயமோகனின் வாசகர்கள் தவற விடக்கூடாத தொகுப்பு. எடுத்துக்காட்டாக, மேரி கொரெல்லியின், நாவல் குறித்த "வெளியே செல்லும் வழி" என்ற கட்டுரையிலிருந்து ஒரு மேற்கோள்:
இங்கு தனிமை பேசப்படுகிறது:
மென்மையான இலையுதிர் காலத்து காலை நேரம். மறுநாள் நாத்ரதாம் தேவாலயத்தில் அபே வெரினியாட் உரையாற்றினார். அவரது வேண்டுகோளுக்கு இணங்க போன்ஃப்ரே மானுவேலுடன் அங்கே சென்றார். கையில் புதிய ஏற்பாடு பைபிளுடன் நின்று உரத்த குரலில் அபே பேச ஆரம்பித்தார்:
"... இது ஒரு மிகச்சிறிய நூல், நீங்களனைவரும் அறிந்துவிட்டதாக பாவனை செய்வது. ஒரு மணிநேரத்தில் இதை நாம் படித்துவிடலாம். இது ஏசுவின் நற்செய்தி. உண்மையில் நாம் எவருமே இதை முழுக்கப் படித்ததில்லை. முழுமையாக உணர்ந்ததும் இல்லை... நீங்கள் இதைப் படிப்பதில்லை. அதற்கு நீங்கள் பாதிரிகளை நம்பியிருக்கிறீர்கள். அவர்களுக்கோ இதில் ஆர்வமே இல்லை... அவர்களின் சொற்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். இந்த மேடையில் நானும் பல ஆண்டுகளாக இந்த நூலைப் பற்றிப் பேசியிருக்கிறேன். ஒரு சொல்கூட இதைப்பற்றி உண்மையாக இருந்தது இல்லை.." அபே வெரினியாட் பைபிளை வைத்துவிட்டு மேஜைமீது கைகளை ஊன்றிக் கொண்டு ஆழமாக சபையினரை உற்று நோக்கினார்.
""கவனியுங்கள் நண்பர்களே 'உனது கண்கள் தனியாக இருந்தால் உன் முழு உடலுமே ஒளி பெறுகிறது' என்றார் கிறிஸ்து. அவரது ஒரு சொல்கூட வீணல்ல என்று உணருங்கள். அடுத்த வரி என்ன? 'உனது கண்கள் தீமையானவையாக இருந்தால் உனது முழு உடலுமே இருளாக ஆகிறது,' என்கிறார், சிந்தித்துப் பாருங்கள். தனியாக என்பதற்கு எதிரீடாக அவர் தீமையை வைக்கிறார். நாம் என்றாவது உண்மையை நாமாகவே நின்று தணித்து நோக்கியிருக்கிறோமா? அர்த்தமற்ற மந்தையாக நாம் எப்போதும் நம்மை உணர்ந்திருக்கிறோம்... நினைவுகூருங்கள். தனக்குள் தனித்திருப்பவனுக்கே ஒளி உள்ளது..."
"கூட்டம் பிரமைபிடித்து அமர்ந்திருந்தது. முற்றிலும் எதிர்பாராத பேச்சு அது. அபே வெரினியாட் தொடர்ந்தார். "நாம் நமக்கு நாமே பொய் சொல்லிக் கொள்ள முடியாது. நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள முடியாது. நமது பாவங்களை நன்கறிந்தவர்கள் நாமே. ஆகவேதான் கிறிஸ்து நமது கண்கள் தனித்திருக்க வேண்டும் என்றார். ஊனக் கண்களை அல்ல, நம்மை நாமே நோக்கும் நம் அகக்கண்களையே சொன்னார் அவர்"
"அபே வெரினியாட் அன்று தன் உச்சகட்ட நாவன்மையுடன் இருந்தார். தன்னையே கிழித்து மேடையில் வைத்தார் அவர், ஏதோ தெய்வீகமான வல்லமைக்கு ஆட்பட்டவர் போல. சட்டென்று ஒரு குண்டு வெடித்தது...."
|
"ரால்ஃப் ஹொஷூத் எழுதிய "பிரதிநிதி" என்ற நாடகம் குறித்த "பாவ மௌனம" என்ற அத்தியாயத்தில் இதே கருத்து வேறொரு பொருளில் ஜெயமோகனால் முன்னிறுத்தப்படுகிறது:
"கார்ல் ஜாஸ்பெர்ஸ் இந்த நாடகத்தைப்பற்றி விரிவாகவே ஆராய்ந்திருக்கிறார். 'குற்றகரமான மௌனம்' என்ற அவரது பிரபலமான கோட்பாடு இந்த நாடகத்தைப் பற்றிய ஆராய்ச்சியில் இருந்து உருவானதே. அநீதிக்குமுன் எதிர்த்துப் போராடாமல் மௌனம் சாதிப்பதும் அநீதியே ஆகும் என்று கார்ல் ஜாஸ்பெர்ஸ் வாதிடுகிறார். அநீதி ஒரு வேளை வெல்லப்படாது போகலாம், ஆனால் எதிர்க்கப்படாத அநீதி என்பது நிறுவப்பட்ட அநீதியாகும். வெல்லப்படாத அநீதி நிகழ்காலத்தை அழிக்கக்கூடியதென்றால் எதிர்க்கப்படாத அநீதி எதிர்காலத்தையும் அழிக்கக்கூடியது".
ஏழு நூல் மதிப்புரைகள் ஒவ்வொன்றிலும் இதுபோல் பல பகுதிகளை மேற்கோள் காட்ட முடியும். அவை ஜெயமோகனால் மீண்டும் மீண்டும் அவரது புனைவுகளிலும் கட்டுரைகளிலும் பேசப்படுபவைதான். முன்சொன்ன மாதிரியான புழக்கடைப் பராமரிப்பின் அவஸ்தை இல்லாமல், சமையற்கட்டின் அமைதியில் ஜெயமோகனுடன் இணைந்து அவரது அடிப்படை அக்கறைகளைக் கண்டு உணர, "மேற்குச்சாளரம்" ஒரு நல்ல இடம்.
மேற்குச் சாளரம்| ஜெயமோகன் | உயிர்மை பதிப்பகம் | 128 பக்கங்கள் | விலை ரூ.75
மேற்குச்சாளரம்| ஜெயமோகன் | உயிர்மை பதிப்பகம் (2009) | 128 பக்கங்கள் | விலை ரூ.75
இணையத்தில் வாங்க.
புகைப்படத்துக்கு நன்றி :தயாஜி வெள்ளைரோஜா , Peripheral Vision
// நாம் மேற்கண்ட போட்டோவில் நம் ஆர்வதுக்கேற்ப எதையெல்லாம் கண்டு களிக்கிறோமோ, //-Cheap stunt. What are you trying to say???
ReplyDeleteபின்னூட்டத்துக்கு நன்றி திரு....
Deleteஎதை நீங்க சீப் ஸ்டனண்ட்னு சொல்றீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா? ஏன் அப்படி சொல்றீங்க?
எக்ஸ்க்யூஸ்மீ மிஸ்டர் நட்பாஸ்,
Deleteவானத்திலிருந்து குதிக்கும் ஒரு அனானி திரு’வாகத்தான் இருக்க வேண்டுமென்று என்ன கட்டாயம்?
திருமதியாக, இளம்மதியாக, வளர்மதியாக, வளராத மதியாகக் கூட (மதி வளராத என்று வாசித்துவிட வேண்டாம் ப்ளீஸ்) இருக்கலாம்.
உங்கள் எதிர்-ஆணாதிக்க சிந்தனையை வன்மையாகக் கண்டபடி உருண்டு புரண்டு கண்டிக்கிறேன்.