‘என் வாழ்க்கையே எனது செய்தி’ - காந்தியின் இந்த ஒற்றை வரி எனக்கு கொடுத்த அலைக்கழிப்பும் தொந்தரவும் கொஞ்சநஞ்சம் அல்ல. தலையில் களிமண் பற்றுடன் பிரிட்டிஷ் வைஸ்ராயை சந்திக்கச் செல்லும் திமிரின் குரல் அல்லவா அது! தன் வாழ்வைப் பற்றி துல்லியமாக மதிப்பிட முடிந்த மனிதனால் மட்டுமே இப்படியொரு அறைகூவல் விடுத்திருக்க முடியும். மனம் பாதி உணர்ந்தும் உணராத அனுபவ ரகசியங்களின் நெரிசலில் சிக்கி மூச்சுத் திணறி, சுயத்தை இருளுக்குள் புதைத்துக் கொள்ளும் என்போன்ற ஒருவனுக்கு இப்படியொரு அறைகூவல் விடுக்கும் வாய்ப்பும் துணிவும் வாழ்வில் ஒருமுறையேனும் வாய்க்குமா?
காந்தி அளவிற்கே மகத்தான ஆளுமைகள் பலரும் வாழ்ந்த காந்தி யுகத்தின் பிற்பாதியைச் சேர்ந்த ஆளுமைகளில் மிக முக்கியமானவர் தரம்பால். சுதந்திர இந்தியாவின் முக்கியமான காந்திய சிந்தனையாளர், வரலாற்று ஆய்வாளர். பிரிட்டிஷ் ஆவணக் குறிப்புகளை ஆராய்ந்து இவர் எழுதிய ‘அழகிய விருட்சம்’ எனும் நூல் ஆங்கிலேய வல்லாதிக்கத்திற்கு முன்பான காலகட்டத்தில் நிலவிய இந்திய கல்வி முறையை ஆய்வு செய்கிறது. அதேபோல் நில நிர்வாக முறைகளை ஆரய்ந்து மதராஸ் பஞ்சாயத்து அமைப்பு எனும் நூலை எழுதினார் தரம்பால். 'பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய விஞ்ஞானமும் தொழில்நுட்பமும், ஒத்துழையாமை இயக்கமும் இந்திய மரபும்,; போன்ற முக்கியமான ஆய்வு நூல்களையும் பதிப்பித்துள்ளார். 1922 ஆம் ஆண்டு பிறந்த தரம்பால் தமிழகத்திலும் சில காலம் வாழ்ந்து, 2006 ஆம் ஆண்டு சேவாகிராம ஆசிரமத்தில் உயிர் நீத்தார்.
'காந்தியை அறிதல்' எனும் தரம்பாலின் இந்தப் புத்தகம் ஏழு கட்டுரைகளை உள்ளடக்கியது. காந்தி கனவு கண்ட சுயராஜ்ஜியம் எப்படிப்பட்டது? தொழில்நுட்பத்தை காந்தி எவ்வாறு அணுகினார்? காந்தி எந்த இலக்கை நோக்கி பயணித்தார்? அவர் வாழ்வு நமக்கு விட்டுச் செல்லும் செய்தி என்ன? காந்தியத்தின் வருங்காலம் என்ன? என்பன போன்ற ஆதார கேள்விகளுக்கு விடை தேடும் முயற்சியே இந்த நூல்.
காந்திய சகாப்தத்தின் குழந்தை என்று தன்னை அறிமுகம் செய்து கொள்கிறார் தரம்பால். அவரைப் பொருத்தவரை கோவில் கட்டி வழிபடப்பட வேண்டிய அவதாரம்தான் காந்தி. காந்தியோடு வாழ்ந்த அவருடைய நேர்மையான சீடர்கள்கூட காந்தியை முழுமைமாகப் புரிந்து கொள்ள முயலவில்லை என்கிறார் தரம்பால். மோட்சத்தை நாடி அவரைத் தங்கள் ஆன்மீக குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு தரப்பிற்கு அவரது அரசியல் சமூக கருத்துக்கள் ஒரு பொருட்டேயல்ல, மற்றொரு தரப்பிற்கோ காந்தி நம்பிய ஆதார விழுமியங்களிலிருந்து மிகப்பெரிய அளவில் ஒரு விலகல் இருந்தது. இதற்கு உதாரணமாக நேருவிற்கும் காந்திக்குமிடையே நடந்த கடித பரிமாற்றங்களில் இருந்து சில பகுதிகளை அளித்துள்ளார் தரம்பால்.
இந்த நூலை வாசிக்கும்போது காந்தியைப் பிற தலைவர்களிடமிருந்து தனித்துக் காட்டும் அம்சங்கள் என சிலவற்றை அடையாளப்படுத்த முடிகிறது. 1915 முதல் 1948 வரையிலான 33 ஆண்டுகளில், சுமார் 6 ஆண்டுகளைச் சிறைகளிலும், 14 ஆண்டுகளை இந்த தேசம் முழுவதும் உள்ள இரண்டாயிரத்துக்கும் அதிகமான இடங்களுக்குமான பயணங்களிலும் கழித்தார் காந்தி. இது வேறு எந்த உலக தலைவரும் செய்திடாத சாதனை! ‘பல லட்சக்கணக்கான என் மக்களை அறிந்துகொள்வதற்கு என்னால் முடியும். ஒருநாளில் 24 மணிநேரமும் அவர்களுடனேயே இருக்கிறேன்.’- என்று அவரால் துணிந்து சொல்ல முடிந்தது. அவர்களின் இதயங்களில் இருக்கும் சத்தியத்தின் வடிவையே காந்தி கடவுளாக எண்ணி, அவர்களுக்கு சேவையாற்றுவதன் மூலம் மோட்சத்தை அடைய முடியும் என்று காந்தி நம்பினார்.
தனது உடனடி சுற்றுவட்டத்திலும், தன்னால் நடந்து போக முடிந்த தொலைவுகளிலும் தான் ஆற்றும் பணிகளே தனக்கு நிறைவளிப்பவை என்றார் அவர். வேகம் வாழ்க்கையின் நோக்கமாக இருக்க முடியாது என்றார் காந்தி. ஒரு வாசகர் காந்தியின் இந்தக் கருத்துக்கும் அவரது ரயில் பயணங்களுக்கும் இடையில் உள்ள முரண்பாடை சுட்டிக்காட்டி கேலி செய்து ஒரு கடிதம் எழுதுகிறார். அதற்கு பதிலளித்த காந்தி,
‘என்னுடைய லட்சியதிற்கும் எனக்கும் உள்ள இடைவெளியை வாசகர் உணரவேண்டும் என்பதற்காகவே அது குறித்து எழுதினேன். இலட்சியத்தை நோக்கிச் செல்லும்போதும் என்னுள்ளிருக்கும் தோல்விகளையும் பலவீனங்களையும் உலகறிய வெளிப்படுத்திக் கொள்வதன்மூலம் ஆஷாடபூதித்தனத்திலிருந்து நான் என்னைக் காப்பாற்றிக் கொள்வதோடு, அவமானம் கருதியாவது இலட்சியத்தை அடையவேண்டுமென்று முயற்சிப்பேன்.’ என்றார்.
மேலும்
‘நான் முழுக்க முழுக்க ஒரு நடைமுறைவாதியாக இருப்பதால் சொல்வதுபோல நடந்துகொள்பவன் என்ற முட்டாள்தனமான தோற்றத்திற்காக ரயில் பயணத்தையோ அல்லது மோட்டார் பயணத்தையோ தவிர்ப்பதில்லை," என்றார் காந்தி.
காந்தி ஒருபோதும் தன் பலவீனங்களை மறைத்ததில்லை. அந்தரங்கம் என்று எதுவுமே அவர் வாழ்வில் இல்லை. ஒளியிலேயே எப்போதும் வாழ்வதற்கு அசாதாரணமான மனவலிமை வேண்டும். அது அவரிடம் இருந்தது.
காந்தியின் ஆசிரமங்கள் உண்மையில் அவர் அமைக்க நினைத்த கனவு சமூகத்தின் மாதிரி அமைப்புகள் என்பது தவறான நம்பிக்கை என்கிறார் தரம்பால். உண்மையில் அது ஒருவிதமான ராணுவப் பயிற்சி மையம் போன்று செயல்பட்டு தேசமெங்கும் காந்தியின் செய்தியைக் கொண்டு சேர்க்கும் நரம்புப் பின்னல்களை உருவாக்க முயன்றது என்கிறார்.
இந்த நூலைப் பொருத்தவரை கட்டுரைகள் எவ்வளவு முக்கியமோ, அவ்வளவு முக்கியமாக அவர் அளித்திருக்கும் அடிக்குறிப்புகளும் இருக்கின்றன. காந்தியின் மரணத்திற்குப் பின்னர் சர்தார் படேல், ஜெயப்ரகாஷ் நாராயணனுக்கு எழுதிய கடிதத்தில் ஏதேனும் ஒரு சிறிய பிரதேசத்தை முற்றிலும் காந்திய வழிமுறைப்படி நிர்வகிக்க உரிய ஏற்பாடுகளைச் செய்து தருவதாக உறுதியளிக்கும் கடிதம் இந்த நூலின் கடைசி அத்தியாயத்தின் அடிக்குறிப்பு ஒன்றில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இது இந்திய வரலாறு குறித்த நம் அவதானிப்பில் ஒரு மிக முக்கியமான திறப்பைத் தரக் கூடியது. அப்படி எதுவும் நடந்திருந்தால் அதுவே அவருக்கு செலுத்தப்பட்ட ஆகச்சிறந்த அஞ்சலியாக இருந்திருக்கும். அதேபோல் தாழ்த்தப்பட்ட குடிகளையும் ஏனைய சிறுபான்மையினரையும் துருப்பு சீட்டாகப் பயன்படுத்திக் கொள்ள நினைத்த பிரிட்டிஷ் அரசின் முயற்சிகள் காந்தியால் பின்னடைவு காண்கின்றன, முஸ்லீம்களை போல் அவர்களையும் தங்களுக்கு ஆதரவாக மாற்றும் எண்ணத்திற்கு எதிராக காந்தி எவ்வளவு வலுவான தடையாக இருந்தார் என்ற உண்மையை வெளிப்படுத்தும் பிரிட்டிஷ் வைஸ்ராயின் கடிதமும் மிக முக்கியமான ஆவணம்.
காந்தி மாபெரும் கனவுகளை சுமந்து திரிந்தார். அவரது கிராமங்களைத் தன் கனவுகளில் உயிர்ப்பித்து வைத்திருந்தார். ஆனால் காந்தியின் கால்கள் வலுவாக நிலத்தில்தான் பதிந்திருந்தன. வெறும் கனவுகள் மட்டும் கண்டு கொண்டிராமல், அவற்றை நோக்கி தொடர்ந்து முன்னகர்ந்தபடியே இருந்தார். தரம்பால் சொல்வது போல், நாம் காந்தியின் அத்தனை வார்த்தைகளையும் அப்படியே எடுத்துக் கொண்டு அவற்றைப் பிடித்து தொங்கிக் கொண்டிருக்க வேண்டும் என்றில்லை, அவருடைய வழிமுறைகளை அடிப்படையாக கொண்டு அவரவர் நடைமுறை அனுபவங்களின் வழியாகவே தீர்வை நோக்கி முன்நகர வேண்டும். அதுவே அவருக்கு நாம் செய்யும் உரிய மரியாதை,
செறிவான மொழிபெயர்ப்பில் வந்துள்ள இந்த நூல் அவசியம் வாசிக்கப்பட வேண்டியது என்பதில் ஐயமில்லை.
காந்தியை அறிதல்- தரம்பால்
தமிழில்- ஜனகப்ரியா
காலச்சுவடு வெளியீடு
உள்ளடக்கம்- கட்டுரை
-சுகி
நல்ல அறிமுகம். நன்றி சுனில்.
ReplyDeleteநன்றி சார்..
Deleteஅருமை சுனீல் தம்பி. ரொம்ப நல்லா எழுதியிருக்கீங்க. ஆசிகள்.
ReplyDeleteபைராகி
ஓம்!ஓம்!ஓம்!
சாமிகளோட ஆசிகளால் தண்யன் ஆனேன்..
Deleteவிளக்கம் அருமை...
ReplyDeleteநல்ல நூல் அறிமுகத்திற்கு நன்றி ஐயா....
தொடர் ஊக்கத்திற்கு நன்றி சார்
Delete