தனிமையே ஒவ்வொருவருக்கும் விதிக்கப்பட்டுள்ளது. மாற்றமில்லாத , சமரசமில்லாத தனிமை. அதிலிருந்து தப்பித்துகொள்ளவே மனிதன் காவியங்களையும், கவிதைகளையும் உருவாக்குகிறான்.- விஷ்ணுபுரம்
மார்கஸ் ஒரு பேட்டியில், தனிமை என்பது ஒட்டுமொத்த மானுடகுலத்தின் பிரச்சனை , அதை ஒவ்வொருவரும் வெவ்வேறு வழியில் வெளிப்படுத்துகிறார்கள் என்கிறார். இவரது "நூறாண்டு காலத் தனிமை". மனிதர்கள் மீது கவிந்திருக்கும் அந்த மாற்றமற்ற தனிமையை, அதன் மகத்துவத்தை, அதன் குரூரத்தை நம் முன் அப்பட்டமாக நிறுத்துகிறது. ஒரு நகரம் கருவாகி , உருவாகி , வளர்ந்து, முதிர்ந்து இறுதியில் உதிரும் கதை. இதிலுள்ள அங்கதம் வாழ்வைப் பற்றிய மிகக் கூர்மையான, தீவிரமான அவதானிப்புகளை அடிப்படையாக கொண்டது. தொடர்ந்து வாழ்வின் அபத்தங்களை நுட்பமான கற்பனையுடன் சொல்லிச் செல்வது. விஷ்ணுபுரத்து சுமத்திரனின் அங்கதமும் திருவிக்ரமனின் தீவிரமும் இணைந்து ஒரு காவியத்தை உருவாக்கியிருந்தால் அது இப்படித்தான் இருந்திருக்கும்.
ஜோஸ் அர்கேடியோ பியுனிடா மற்றும் அவரது மனைவி உர்சுலா உட்பட பத்தொன்பது குடும்பங்கள் அவர்களுடைய ஊரை விட்டு வெளியேறி மகொண்டோ எனும் புதிய ஊரை உருவாக்குகின்றனர். மரணத்தின் நிழல்படாத மகிழ்ச்சியான சிறிய ஊர் அது.
வெளியுலகத்தோடு தொடர்பற்று இருந்த அந்த ஊரைத் தேடி ஜிப்சிக்கள் தங்கள் வித்தைகளுடன் வருகிறார்கள். மகொண்டோவின் மக்கள் அனைத்து அறிவியல் கண்டுபிடிப்புகளையும் அவர்கள் வழியாகவே ஆச்சரியத்துடன் அணுகுகிறார்கள். இந்த வெள்ளந்தி மக்கள் அறிவியல் கண்டுபிடுப்புகளை ஏற்றுகொள்வது நாவலின் சுவாரசியமான பகுதி. கிராவின் கோபல்ல கிராமத்தை நினைவுபடுத்துவது. உலகின் அறிவியல் பாய்ச்சலுக்கு மகொண்டோ ஈடுகொடுக்கவில்லை என்பதைப் புரிந்துகொண்ட பியுனிடா வெளியுலகத்தோடு தொடர்பு கொள்ள வெறியாக முயல்கிறார். இறுதியில் பித்து பிடித்து ஒரு மரத்தடியில் மரணமடைகிறார்.
முதல் பியுனிடாவின் கனவுகள் அவருடைய சந்ததியினரின் காலத்தில் நிறைவேறுகிறது. மகொண்டோவிற்கும் ரயில் வருகிறது. அறிவியல் கண்டுபிடிப்புகள் நுழைகின்றன. பன்னாட்டு நிறுவனம் வருகிறது. போர் வருகிறது. பசியும் பஞ்சமும் மரணமும் வருகின்றன. தொழிலாளர் புரட்சி வெடிக்கிறது. தேவாலயம் எழுகிறது. கிறிஸ்துவும் பாதிரியாரும் வருகிறார்கள். துருக்கியர்களும் அராபியர்களும் கருப்பர்களும் வருகிறார்கள். நீதிபதி வருகிறார். ராணுவம் வருகிறது. லிபெரல்களும் கண்செர்வடிவுகளும் மாறி மாறி ஆட்சி புரிகின்றனர். மெல்ல அந்த ஊர் தன் ஆன்மாவை இழக்கிறது. இயற்கை ஏமாற்றுகிறது. நான்கு வருடங்கள் தொடர் மழை பெய்கிறது. பத்து ஆண்டுகளுக்கு மேல் மழையே இல்லாமல் வறட்சியில் வாடுகிறது. மக்களால் கைவிடப்பட்டு , இறுதியில் ஒட்டுமொத்தமாக அழிந்து போகிறது மகொண்டோ.
பியுனிடா குடும்பத்து கதையுடன் ஒட்டுமொத்த வரலாற்றையும் பின்னிப்பினைந்து அற்புதமான சித்திரத்தை அளிக்கிறார் மார்க்குவஸ். இது மகொண்டோ எனும் ஒரு ஊரின் கதையோ , அல்லது பியுனிடா குடும்பத்தின் கதையோ மட்டுமல்ல - பல ஆயிரமாண்டு மானுட வரலாற்றின் நுண்ணிய குறுக்குவெட்டுச் சித்திரம் அல்லவா இது!
செவ்வியல் படைப்புகளை பற்றிப் பேசும்போதுள்ள சிக்கல் என்னவென்றால், அவற்றை எவ்வளவு பேசினாலும் , எழுதினாலும்கூட அந்த மூல படைப்பு அளிக்கும் முழுமையுணர்வை நம்மால் விளக்க முடியாது என்பதே. இந்த நாவலை மாய யதார்த்தவாதத்தின் ஆகச்சிறந்த எடுத்துக்காட்டு என்று விமர்சகர்கள் புகழ்கின்றனர். இத்தகைய கோட்பாடுகள் வகைப்படுத்தவும் புரிதலை ஆழப்படுத்தவும் சிலருக்கு உதவியாக இருக்கலாம் என்பதைத் தாண்டி வாசிப்பிற்கு அது எந்த அளவிற்கு முக்கியம் என்பது விவாதத்திற்கு உரியதே.
அதிமானுட நிகழ்வுகள் இத்தகைய படைப்புகளில் சாதாரண, அன்றாட நிகழ்வுகள் போல் கட்டமைக்கப்பட்டிருக்கும். பெரும்பாலும் இந்த வகையிலான கதைகளில் நாட்டாரியல் கூறுகளை நாம் காண முடியும். அசாதாரணமான நிகழ்வுகளைக்கூட துல்லியமான வர்ணனைகள் மூலம் சாதாரணமாக சொல்லிச் செல்வது மாய யதார்த்த கதைகளின் முக்கிய அம்சமாக இருக்கிறது. இந்த நாவலில் இறந்தவர்கள் சாதாரணமாக நடமாடிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தக் கதை வேறு எப்படியும் எழுதப்பட்டிருக்க முடியாது என்பதே இதன் பலம்.
காமமும், காதலும், மரணமும், ஜனனமும், தனிமையும், வெறுமையும் பின்னிப்பினைந்து ஒற்றைச் சரடாகிறது. இந்த நாவலின் ஒவ்வொரு பாத்திரமும் வெகு நுட்பமாக படைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக நாவலின் பெண் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் அபாரம். முதல் பியுனிடாவின் மனைவியாக வரும் உர்சுலா எனக்கு அம்மாவை, பாட்டியை நினைவுபடுத்தினாள். வாசிக்கும் ஒவ்வொருவருக்குமே தம் முன்னோர்களை பற்றிய நினைவு வரும் என்றே எண்ணுகிறேன். இதுவரையிலான எனது புனைவு வாசிப்பில் நான் கண்டுகொண்ட ஆகச் சிறந்த தாய் உர்சுலா என்றுதான் தோன்றுகிறது. தெளிவுடனும் தீர்க்கத்துடனும் தன் குடும்பத்தை நிர்வகித்து வந்தவள் தன் வாழ்வின் இறுதி கட்டத்தில் நினைவாற்றலை இழந்து தன் கொள்ளுப் பேரனும் பேத்தியும் விளையாடும் பொம்மையாகிப் போகிறாள். மெலிந்து வற்றி சருகாகி மீண்டும் குழந்தையை போல் ஒரு கூடையில் அடைத்துவிடும் அளவிற்கு சுருங்கி மரிக்கிறாள்.
இந்த நாவலில் பல ஆண்டுகள் நீடித்த உள்நாட்டுபோரின் சித்திரம் வருகிறது. போரின் உச்சகட்டத்தில் அந்த போர் கொள்கைகளின் போர்வையில் அகந்தைகள் முட்டி மோதும் வெற்றுப் போர்க்களம் எனும் உண்மையை கண்டடையும் தருணம் உக்கிரமானது. உன்னத லட்சியத்தின் பேரால் தொடங்கப்பட்ட அத்தனை மானுடப் போர்களும் இப்படி இறுதியில் அகங்கார விளையாட்டாக மாறிப்போவது மானுடகுலத்தின் மாறாத விதி போலும். ஒரு குழந்தையுடன் விளையாடும் சதுரங்கம் போல் மனிதன் மரணத்துடன் விளையாடிக் கொண்டிருக்கிறான். தான் வகுத்த விதிமுறைகளுக்குள் மரணத்தைக் கட்டுப்படுத்தி, அதை வெல்ல முடியும் என கனவு காண்கிறான். ஆனால் பாதியில் ஆட்டத்தை கலைத்துவிட்டு தன் போக்கிற்கு போகும் ஆர்வமிழந்த குழந்தையைப் போல் மரணம் மனிதனைத் தன் உதாசீனத்தால் வெல்கிறது.
இந்த நாவலில் காலம், தலைமுடியில் சிக்கிக்கொண்ட ரெட்டைவட சங்கிலிப்போல் சிடுக்குகள் நிறைந்ததாக இருக்கிறது. முன்னும் பின்னும் என அனேக திசைகளில் சுழன்று பயணிக்கிறது.
செவ்வியல் படைப்புகள் உடலுக்குள் நுழைந்த வைரஸ் கிருமிபோல் பலவீனமான ஒரு தருணத்திற்காக காத்துகொண்டிருக்கின்றன. இலக்கிய வாசகன் தன்னை பலவீனமாக உணரும் அந்த தருணத்தில் அவன் மனதை முதலில் ஆக்கிரமிப்பது அவன் வாசித்த செவ்வியல் படைப்புகள்தான். சட்டென்று எங்கும் பரவி அதுவே அவனை முழுவதுமாக வியாபிக்கிறது.
எழுதப்பட்ட அத்தனை பேரிலக்கியங்களைக் காட்டிலும் வாழ்க்கை அதிபிரம்மாண்டமானது. புனைவுகள் அந்த பிரம்மாண்ட பேருருவத்தின் சில பகுதிகளை உடைந்த கண்ணாடிச் சில்லுகள் வழியாக நமக்குக் காட்டுகின்றன. அப்படி வாழ்க்கையை நமக்கு காட்டும் சற்றே பெரிய கண்ணாடி சில்லுதான் 'நூற்றாண்டுகால தனிமை'. வாசிப்பின் முடிவில் பலநூறாண்டுகள் வாழ்ந்த நிறைவும் அலுப்பும் நெஞ்சை நிறைக்கிறது.
( கேப்ரியல் கார்சியா மார்க்குவஸ் - இலக்கிய நோபல் பரிசு பெற்ற முக்கியமான இலத்தீன் அமெரிக்க எழுத்தாளர் )
நாவலின் ஆங்கில வடிவை இணையத்தில் பி.டி.எப் வடிவத்தில் வாசிக்க..
One Hundred Years of Solitude - Gabriel Garcia Marquez (Author)
உள்ளடக்கம் : நாவல்
சுமார் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்பு பொன்னீலன் தில்லியில் என் வீட்டிற்கு வந்தபோது இந்தப் புத்தகத்தைத் தேடினார். கடைசியில் பி.ஏ. கிருஷ்ணனிடம் வாங்கி நகலெடுத்துக் கொடுத்தேன். அப்போதிருந்தே எதிர்பார்ப்பு ஏற்பட்டிருந்தது. ஏற்கெனவே வாங்கிய ஆங்கில நூல்களே இன்னும் படிக்கப்படாதிருக்க இதையும் வாங்குவதா என்ற தயக்கம் வேறு இருந்தது. பிடிஎப் வடிவ நூலுக்கு சுட்டி கொடுத்தமைக்கு நன்றி.
ReplyDeleteஷாஜஹான் சார்..
ReplyDeleteஉங்கள் பின்னூட்டத்திற்கு நன்றி..நான் மின்நூலாகவே வாசித்தேன், ஆகவே அந்த சுட்டியை கொடுத்தேன்..நன்றி..
Midnight's Children, One Hundred Years of Solitude. என்னை ஒரு நல்ல வாசகனாக மாற்றிய புதினங்கள் இவை இரண்டும். பெரும்பாலும் ஆங்கிலத்தில் இந்த இரண்டு புத்தகங்களைத் தான் நண்பர்களுக்குப் பரிசளிக்கிறேன். எனது பதிவிது:
ReplyDeletehttp://puththakam.blogspot.in/2011/12/83-one-hundred-years-of-solitude.html
- ஞானசேகர்
நன்றி. தங்கள் தளத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்களில் நானும் ஒருவன். அருமையாக எழுதுகிறீர்கள், மேம்போக்கான பதிவுகளாகவும் இல்லாமல், தன் மேதைமையை வெளிக்காட்டிக் கொள்ளும் ஆய்வு அறிக்கைகலாகவும் இல்லாமல், புத்தகங்களுக்கு மிகச் சிறப்பான அறிமுகம் கொடுக்கிறீர்கள்.
Deleteமிகவும் நன்றி.
நன்றி ஞானசேகர் சார்.
Delete