இந்த நூற்றாண்டுச் சிறுகதைகள் -1,3 தொகுப்புகளைத் தொடர்ந்து , இந்த வாரம் அதன் நான்காம் தொகுப்பின் விமர்சனம். சில கதைகள் படித்து முடித்தவுடன் புரிவதில்லை, சில கதைகள் உதட்டோரம் குறுநகையை வரவழைக்கின்றன, சில கதைகள யோசிக்க வைக்கின்றன, சில கதைகள் எளிமையாக இருக்கின்றன, சிலது கடுமையான வார்த்தைப் பிரயோகத்துடன் படிக்கிற மக்களை தெறித்து ஓடச் செய்கின்றன. சில கதைகள் பழக்கப்பட்ட விஷயங்களுக்குப் புதிய தரிசனம் கொடுக்கின்றன, சில கதைகளின் முடிவை வாசகர்களே தீர்மானித்துக் கொள்ளட்டும் என்று விட்டுவிடுகிறார்கள். இந்தப் புத்தகத்தில் மேலே சொன்ன மாதிரி பலவகைக் கதைகள்.
சபேசன் காப்பி- ராஜாஜி : ஒரு சமயம் அம்மாவிடம் ஒரு விஷயம் கேட்க, சமையல் அறைக்கு போனேன், அப்போது நான் வருவது தெரியாமல், ஒரு தேக்கரண்டி சர்க்கரையை எடுத்து ,ரசத்தில் போட்டுக் கொண்டிருந்தார். நான் பார்த்ததை, கவனித்துவிட்ட அம்மா ஏதோ சமாதனம் சொல்லப் போக, "எத்தனை நாளா இதை நீ செய்யற?"ன்னு கேட்க வீடு ரணகளம் ஆனது.
இந்தக் கதையில் சுப்புக்குட்டி, சபேசனிடன் சேர்ந்ததிலிருந்து , சபேசன் நடத்தும் காப்பிப்பொடி விற்பனை அதிகரிக்கிறது. இது எப்படி நடக்கிறது என்றால், ஒரு நாள் சுப்புக்குட்டி வீட்டில் சபேசன் காப்பி குடிக்கிறார். அது அருமையாக இருக்கவே, அந்த ரகசிய முறையைத் தான் விற்பனை செய்யும் "சபேசன் காப்பி"பொடியிலும் கலக்க ஏற்பாடு செய்கிறார். அதைத் தொடர்ந்து தான் காப்பிப் பொடி அதிகம் விற்பனையாகிறது. ஆனால் இந்த "ரகசிய முறை" சுப்புக்குட்டிக்கு மட்டுமே தெரியும். சபேசன் இதை பற்றி எதுவும் கேட்கக் கூடாது என்பதுதான் ஒப்பந்தம். ரெண்டு வருடங்களில் காப்பிப் பொடி விற்பனை மேலும் அதிகமாகிறது. மனித மனம் ரொம்ப விசித்திரமானது - சபேசன் மனதில் சுப்புக்குட்டி தனியாகக் கடை ஆரம்பிக்கப் போவதாக செய்தி பதிய, அவன்மேல் வெறுப்பு உண்டாகிறது. இருவரும் பிரிகின்றனர். கொஞ்ச நாள் கழித்து நடேசன் என்பவருடன் சுப்புக்குட்டி சேர்ந்து நடேசன் காப்பி ஆரம்பிக்கிறார். தன் ரகசிய முறையை இதிலும் பயன்படுத்துகிறார். தனது வியாபாரம் இதனால் பாதிக்கப்பட, கோர்டில் வழக்கு போட்டு ஜெயிக்கிறார் சபேசன். ஜெயித்தும் பிரயோசனமில்லாமல் இறந்தும் விடுகிறார். எப்படியோ காப்பிப் பொடியில் சுப்புக்குட்டி கலப்பது சீயக்காய் பொடி என்ற ரகசியம் வெளிவந்துவிடுகிறது. எல்லோரும் வீட்டிலேயே காபிப்பொடி அரைத்து நல்ல காபியாகக் குடிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள்.
சீதாவின் சுயம்வரம் - மகாலிங்க சாஸ்திரி : கந்தசாமி ஐயருக்கு சீதா ஒரே பெண், சிறு வயதிலிருந்தே நல்ல குரல் வளம், கொஞ்ச காலத்திலேயே கர்நாடக சங்கீதத்தில் நல்ல தேர்ச்சி அடைகிறாள். கல்யாணப் பருவத்தை அடைந்ததும், தனக்கு வரும் வரன்களை , அவர்கள் செய்யும் சேஷ்டைகளுக்கு ஏற்ப பாடி, வரிசையாக நிராகரிக்கிறாள். கடைசியாக சப்-ஜட்ஜ் சாம்பசிவ ஐயரின் பிள்ளை சோமு பெண் பார்க்க வருகிறான். அவனைப் பார்த்தவுடன் அவளுக்குப் பிடித்துப் போகிறது, அவனுக்கு எதிரில் பாடும்போது சிறிது தடுமாறுகிறாள், அவனே வேறு பாடலை பாடி அவளது சங்கடத்தைத் தவிர்க்கிறான். இவளும் சோமுவைப் பிடித்து இருக்கிறது என்பதற்கு ஏற்ப வேறொரு பாடலை பாடி தனது சம்மதத்தை தெரிவிக்கிறாள். இரு வீட்டாரும் திருமணத்திற்கு இசைகின்றனர்
தண்ணீர்- ஞானி : நாலு வருடத்திற்கு ஒரு தடவை , ஒலிம்பிக் விளையாட்டு முடிந்தவுடனே , நம்மவர்கள் ஏன் இந்தியா ஒலிம்பிக்கில் பதக்கம் வாங்கவில்லை என்று கோபமாக எழுத ஆரம்பிப்பார்கள். அரசாங்கம் எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்றெல்லாம் பல அறிவுரைகள் வரும். ஆனால் வேரில் இருக்கும் பிரச்சனையை ஞானி அலசுகிறார். இராமலிங்கம், நீச்சல் -டைவ் அடிப்பதில் வல்லவன், சலீம் சார் அவனுடைய திறமையை கண்டறிந்து , அவனை மெட்ராஸ் அழைத்துப் போக முடிவு செய்கிறார். ஊருக்குப் போவதற்கு முதல் நாள் சலீம் சார் வீட்டில் தங்குகிறான். அப்போது அவனது குடிகார தந்தை, அவன் எங்கேயும் போகக் கூடாது என தன்னோடு அழைத்து சென்று விடுகிறார். ஒரு வாரம் கழித்து சலீம் சார் வீட்டில் டிவி பார்க்கும்போது மது தயாரிப்பு சம்பந்தமான விளம்பரம் வரவே டிவியை அணைத்து விட்டு வெளியே சென்று விடுகிறான்.
இலைகள் சிரித்தன -பாதசாரி : தந்தைக்கும் மகனுக்குமான உறவு எப்போதும் சிக்கலான ஒன்று. தந்தையால் மகனைப் புரிந்துக் கொள்ள முடிவதில்லையா, இல்லை மகனால் தந்தையை புரிந்துகொள்ள முடியவில்லையான்னு ஆராய்ச்சி செய்துகொண்டே இருக்கலாம். இரவில் வெகு நேரம் புத்தகம் வாசித்துவிட்டுத் தூங்கப் போகும் மகன், முப்பது ஆண்டுகளாக மனைவி துணையின்றி ,தனியாக இருக்கும் தந்தையை அந்த இரவு நேரத்தில் அவரது கட்டிலில் காணாமல் பரிதவிக்கிறான் அவன். முதலில் கொஞ்சம் தைரியமாக இருந்தாலும் நேரமாக நேரமாகப் பதட்டப்படுகிறான். தான் சரியான பிள்ளையாய் வாழ்ந்திருக்கிறேனா என்று மனதுக்குள் கேள்வி-பதில் போராட்டம், தான் செய்த அனைத்து விஷயங்களையும் தந்தையோடு தொடர்புபடுத்திப் பார்க்கிறான். இரவில் ரோந்து சென்ற தந்தை திரும்பி வந்தவுடன் கொஞ்சம் கோபமாகப் பேசினாலும், இருவருக்குமான புரிதல் அந்த இரவில் வலுப்பெறுகிறது.
தகனம் - இரா. கதைப்பித்தன்: தந்தையோடு ஒரு குடிசையில் வாழும் வேலைதேடும் பிராமணப் பையன், தீடீரென தந்தை இறந்துவிடவே அவரின் அந்திமக் காரியங்களுக்கு பணமில்லாமல் அவதிப்படுகிறான். ஒவ்வொருவரும் அவனை அலைக்கழிக்க மனம் நொந்து போகிறான். ஊரின் ஓரமாக இருக்கும் வெட்டியான், தன்னுடைய வேலையாள் வேலைக்கு வருவதில்லை எனப் புலம்பிக்கொண்டே போகிறான். யாரும் உதவிக்கு இல்லாத நிலையில், வெட்டியானே அவனது தந்தையின் சடலத்தைப் பாடையில் வைத்து "கோவிந்தா, கோவிந்தா" என்று சொல்லி கடைசி காரியங்களை முடித்து தருகிறான். "உன்னுடைய வேலையாளாக என்னைச் சேர்த்துக் கொள்கிறாயா?" என அந்த பிராமணப் பையன் கேட்பதுடன் கதை முடிவடைகிறது.
விழுது- விழி.பா.இதய வேந்தன் : சாவுகளில் சங்கு ஊதும் வேலையில் இருக்கும் சுப்பராயன் எந்த வேலையும் கிடைக்காமல் கஷ்டப்படுகிறான். இதற்கு முந்திக் கிடைத்த வேலைகளிலும் போட்டி. இந்த வேலையிலும் முன்னைப் போல் தினமும் சாவு வருவதில்லை. வந்தாலும் போட்டி வேறு அதிகமாக இருக்கிறது. தினமும் வாழ்வதே கடினமாக இருக்கும் நிலையில் , மகன் ஆனந்தனையும் கூட்டிக்கொண்டு சங்கு ஊத ஒரு சாவுக்குச் செல்கிறான். அடுத்த நாள் சுப்பராயனே இறந்து போய்விடுகிறான். மகனே தந்தைக்கு சங்கு ஊதி அந்த வேலையை எடுத்துக் கொள்கிறான்.
இந்த ஆறு சிறுகதைகளையும் தாண்டி ”ஒரு நாள்- ப்ரதிபா ஜெயச்சந்திரன், இவன் அவள் அரேபியா -ஏ. ஏ. ஹெச். கே. கோரி, பாம்பும் பிற கனவுகளும்- கோகுல கண்ணன், அவரவர் ஏமாற்றம் -ஷங்கர் ராமன், ஓய்ந்தவர்கள் - கமலாலயன் தொடர்வது- தமயந்தி , எலிசபெத் ராணி- விக்ரமாதித்யன், கமல விஜயம் -வா.வே.சு.ஐயர்” என மற்ற சிறந்த கதைகளும் இந்தத் தொகுதியில் என்னைக் கவர்ந்தன.
.
.
.
.
.
.
No comments:
Post a Comment