விழுப்புரம் மாவட்டம் கண்டாச்சிபுரத்தில் வசிக்கும் காலபைரவன், ஆசிரியராகப் பணிபுரிகிறார். இயற்பெயர் விஜயகுமார்.வாழ்வின் மீது மனிதர்கள் செலுத்தும் வன்முறைகளையும், அதிலிருந்தெழும் துக்கங்களையும், பயங்களையும் கதைகளில் பதிவுசெய்யும் இவர் நவீன நாடகத்தின் மீதும் ஆர்வமுடையவர். விளிம்பு நிலை மக்களின் வாழ்வு சார்ந்த நுண் அரசியலையும், சிதைந்துவரும் கிராமங்களின் முகங்களையும் எழுதிப்பார்ப்பது இவரது விருப்பம். ஒழுங்கீனங்கள் வாழ்வின் மீது செலுத்தும் பரிவைத்தாம் எப்போதும் நேசிப்பதாகச் சொல்லும் இவரின் முதல் தொகுப்பு இது.
’கருத்து சுதந்தரத்துக்கு எதிராக நடத்தப்படும் போராட்டங்களுக்கு இடையில் கதையெழுத்தின் வடிவம் தொடர்ந்து தன்னைச் சிதைத்தபடி உருமாறிக்கொண்டே வருகிறது. நம் கண்ணெதிரிலேயே பூவைப் போல மனித நேயம் உதிர்ந்துகொண்டிருக்கிறது. அவை எப்படியெல்லாம் சிதைக்கப்படுகிறது, எவையெல்லாம் சிதைகின்றன என்பதைப் பற்றியே என் கதைகள் விவாதிக்கின்றன’, என முன்னுரையில் தெரிவிக்கும் காலபைரவனின் கதைகளின் சூழல்கள் தனித்துத் நிற்கின்றன. மிக எளிமையான மொழியைக் கொண்டுள்ளாலும் வித்தியாசமான நிகழ்வுகளைப் பற்றி எழுதியுள்ளதால் முதல் தொகுப்பிலேயே இலக்கிய விமர்சகர்களின் கவனத்தைக் கவர்ந்துள்ளார்.
மொத்தம் ஒன்பது கதைகள். செயற்கையாக வரிந்து அமைத்த நிகழ்வுகளோ நிலம் அதிரும் புரட்சி அறைகூவல் விடும் கதைக்களனோ அல்ல. சிறு அசைவில் அங்குலப் பாகை மாறும் திசைக்கருவியைப் போல உள்ளுணர்வின் ஓயாத முணுமுணுப்பை கதையாக்கியுள்ளார் காலபைரவன். மொத்தத்தையும் வாசித்து முடித்தபின் அப்படி என்ன சொல்லிவிட்டார் எனத் தோன்றினாலும் பசி நேரத்தில் புசிக்க எண்ணி தாயின் மார்பகத்தைத் தேடும் குழந்தைப் போல செறிவான சிறுகதைகள் என்பதால் முடித்தபின்னும் மீண்டும் படிக்க வைக்கின்றன.
நான் முதலில் படித்தது, ‘பூனைகள் யானைகளான கதை’என்னை மிகவும் கவர்ந்தது. உலகின் கடைசி தைரியசாலியான எழுத்தாளர்களிடம் தான் கூரிய ஆயுதம் கைவசம் உள்ளது என ஜார்ஜ் ஆர்வெல் எழுதுகிறார். உலகின் தீர்ப்புகளையும் அனுமானங்களையும் வாசக மனதினுள் திணிக்க எண்ணாத ஜோடனையற்ற கதை என்றாலும், கருத்து சுதந்தரமற்ற எழுத்தாளனின் இன்றைய ‘எழுத்து அரசியல்’ பற்றிப் பேசுகிறது. எதைப் பற்றி எவ்வளவு நுட்பமாக அல்லது தெளிவாக எழுதினாலும் எழுதுபவனின் அந்தரங்க ஊசலாட்டம் இதுதான் எனத் திட்டவட்டமாக நம்பும் ‘வாசிப்பு’ இன்று சகஜமாயிருக்கிறது. அரசியல் எனும் வார்த்தை சாணக்கிய சூது -> குழிபறி ஆட்டம் -> திட்டமிட்டு இருமை கட்டமைப்பது எனச் சகல அர்த்தங்களில் புழங்கி ஒருமுக வாசிப்பு எனும் பாணியை உருவாக்கியுள்ளது. விமர்சனத்தில் இதுவும் சகஜம் தான் என்றாலும், இப்படிப்பட்ட விமர்சகனின் முடிபுகள் அபாயகரமான சாத்தியங்களை உள்ளடக்கியதால் வாசிப்பு என்பதே நுண்ணரசியல் அவதானிப்பு என்பதாகிறது. அப்படி வாசிக்கும் ஒரு கட்சியினர் பற்றிய கதை.
அனைத்திலும் அரசியல் தேடுபவர்கள் பூனைகளை மட்டும் விட்டுவைத்திருப்பார்களா? பூனைகளை மையமாகக் கொண்ட கதை எழுதி முடித்த மசி காய்வதற்குள் சொல்முறையின் கனம் வாசகர் மனதில் எவ்வளவு பெரிய பாதிப்பை உண்டாக்கும் என உணர்ந்த கருத்துக்காவலர்கள் பூனைகளை சென்சார் செய்கின்றனர். தடைப்பட்ட வார்த்தைகளில் ஒன்றான பூனை கதவிடுக்கில் கசியும் வெளிச்சம் போல புனைவில் நுழைவதை அவர்கள் அனுமதிப்பதில்லை. தமிழ்நாட்டில் பூனை வளர்க்கக்கூடாது எனப் போராடும் கட்சியினர் நமது கதாசிரியர் எழுதிய கதையை பறிமுதல் செய்கின்றனர். ஒன்று வெளியிடாதே அல்லது ‘தமிழ் சீராக்கி’ எனும் மென்பொருள் கொண்டு பூனைகளை யானைகளாக மாற்றிவிடு. பஷீர் எழுதாத பூனையா என ஆசிரியர் அங்கலாய்க்க, பூனை வளர்ப்பதும், அவைகளை நிஜத்திலோ கற்பனையிலோ நடமாடவிடுவதும் தண்டனைக்குறியது என கட்டளையிட்டுச் செல்கின்றனர். சட்டென பூனைகள் யானைகளானது கண்டு எழுத்தாளர் பெருமூச்சுவிடுகிறார். அதையும் மீறி நாளை யானைகள் கூடாது என்றால் ’தமிழ் சீராக்கி’ மூலம் யானைகளை பானைகளாக மாற்றிவிடலாம் என்பதை உணர்ந்து பெரும் நிம்மதி கொள்கிறார்.
அடுத்து எனக்கு மிகவும் பிடித்த கதை ‘வனம்’. வகுப்பறை ஆசிரியர் புது பாணியில் மாணவர்களுக்கு படிப்பனுவத்தை கற்றுக்கொடுக்கும் கதை. வீட்டிலும் பள்ளியிலும் விளையாட இயலாத குழந்தைகளுக்கு புது உலகைக் காட்டுகிறார். வகுப்பறையை ஒரு வனமாக கற்பனை செய்து பெரும் சாகசப் பயணத்தில் மாணவர்களை பங்கேற்கச் சொல்கிறார். அடர்ந்த வனப்பகுதியில் பயணப்படும் மாணவர்கள் தங்கள் கற்பனைக்கேற்ப பலவிதமான சூழல்களை உருவாக்கிக் கொள்கின்றனர். மரத்தடியில் உறங்கும் சிங்கத்தைப் பார்க்கின்றனர், மரத்துக்கு மரம் தாவும் குரங்கை ரசிக்கின்றனர். ஓட்டை விழுந்த கூரை போல ஆங்காங்கே சரியும் ஒளிக்கற்றைகளுக்கிடயே மறைந்து விளையாடுகிறார்கள். இவையெல்லாம் பள்ளி நிர்வாகி வகுப்பறைக்குள் நுழையும்வரை தான். ஆசிரியர் கூட்டத்தில் தனக்கு வழங்கப்படும் அறிவுரைகளைக் கேட்டு இனி தான் பாடம் மட்டும் நடத்தவேண்டும் என முடிவெடுக்கிறார். ஒருவிதத்தில் முழுமையடையாத கதை தான் என்றாலும் ஆட்டம் முடிந்தபின்னும் நம்முள் ஏதோ ஒரு சத்தம் கேட்டுக்கொண்டேயிருக்கிறது.
ஹேராம் என்றொரு கதை. சீதையைத் தொலைத்த ராமன் குஜராத் கலவரத்தில் சிக்கிக்கொள்வது பற்றிய புனைவு. கிழம் தட்டிய ராமர் மிகவும் களைப்பாக ஆசிரியருக்கு அருகே பேருந்தில் உட்கார்ந்திருக்கிறார். ஹேராம் எனச் சொல்லியபடி தன்முன்னே நடக்கும் கொலைகளின் பின்புலம் புரியாமல் தவிக்கிறார். ஒருபக்கம் வெட்டுபவன் தனது பெயரை ஆக்ரோஷமாக உதிர்க்கும்போது மற்றொரு பக்கம் உயிர்பயத்தில் தனது ஆதரவு தேடிக் கதறும் கூட்டத்தையும் சந்திக்கிறார். ஏன் இப்படி நடக்கிறது எனப்புரியாமல் போனாலும் சீதாவைத் தேடும் முயற்சியில் கவனத்தைக் குவிக்கிறார்.யுகம்யுகமாய் அவதாரப்புருஷன் எனும் சுமையை எப்படி உங்களால் சுமந்து வரமுடிகிறது? எனது சுகதுக்கங்களைப் பற்றி என்றேனும் கவலைப்பட்டுள்ளீர்களா? அதனால் உங்களை விட்டுப் பிரிகிறேன் என கடிதம் எழுதிப் பிரிந்துபோய்விடுகிறாள் சீதா எனப்படும் ஜானகி. காலங்காலமாய் தொடரும் பெண்ணின் பிரச்சனையை சில சித்திரங்கள் வழி காட்டியது அருமையாக உள்ளது. எந்த காலத்திலும் ஆண்-பெண் உறவில் விழுப்புண்களும், விலகி பின்னர் தூண்டிலில் சிக்கிய மீன் போல் துடிப்புடன் வெளியேறுவது பெண் தானே?
புலிப்பானி ஜோதிடர் எனும் கதை தொகுப்பிலேயே ஆகச் சிறந்தது. நிகழ்வுகளிலிருந்து நம்பிக்கைகளும் கற்பனைகளிலிருந்து கதைகளும் உருமாறும் சித்திரத்தை அளிக்கும் கதை. புலிப்பானி ஜோதிடர் தாத்தாவின் ஹேஷ்யங்கள் மிகப் பிரபலம். ஊர் ஊராகச் சென்று பலருக்கு ஜோசியம் சொன்ன காலத்திலும் பின்னர் முக்கியஸ்தர்கள் வீடு தேடி வந்தபோதும் தாத்தாவின் ஜோசியம் பலிக்காமல் இருந்ததில்லை. அப்படி ஒரு நம்பிக்கை எல்லாருக்கும் இருந்திருக்கிறது. தீபாவளிக்கு பின்னர் பத்து நாட்கள் நடக்கும் சூரசம்ஹாரத் திருவிழா. மாமா, சித்தப்பா, சித்தி, அத்தை எனச் சகலரும் படையலுக்குத் தயார் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். ஜோசியர் தாத்தாவின் நான்காவது நினைவு தினம். கதைசொல்லி வீட்டுக்குள் நுழையும்போது அனைவரும் கூடிக் கூடிப் பேசிக்கொள்கின்றனர் இவனிடம் விஷயத்தைச் சொல்லாமல். மெல்ல ரகசியம் கசிவது போல சமையல் கொட்டகையில் தாத்தா வந்துபோன காலடிச் சுவடு பதிந்திருக்கும் விஷயம் இவனிடம் சொல்லப்படுகிறது.
‘உண்மைக்கும் பொய்க்கும் ரொம்ப வித்தியாசம் கெடையாது. நாமதான் ரெண்டையும் எதிரெதிர் துருவங்களா நெனச்சிகுனு இருக்கோம். கஷ்டம்னு எங்கிட்ட வராங்க. நாலு வார்த்தை ஆறுதலா சொன்னா அவங்களுக்கு ஒரு திருப்தி. இதுல யாருக்கும், எதுவும் கொறஞ்சிடப் போறதில்லை’
கதைசொல்லியின் சிறுவயதில் புலிப்பானி ஜோசியர் சொன்னது. ஒவ்வொரு முறை ஜோசியம் சொல்லும்போதும் ஒரு உண்மை உருவாகிறது. பொய்யிலிருந்து விலகி நேரெதிராக உருமாறும் உண்மையல்ல. பல உண்மைகளில் ஓர் உண்மை. கேட்பவர் நம்ப விரும்பும் உண்மையும் அவற்றில் ஒரு முகம் தான்.
திருவிழா முடியும் நாளன்று கதைசொல்லியின் சித்தப்பாவும் சித்தியும் உக்கிரமாக ஆடியபடி மேளக்காரர்களோடு வீட்டுக்குள் நுழைகின்றனர். சாமியாடியபடி பூஜை அறைக்குள் நுழையும் அவர்கள் கூட்டத்தினர் கேள்வி கேட்பதற்காகக் காத்திருந்தனர். சித்தப்பாவுக்குள் புலிப்பானி ஜோசியர் ஏறியிருந்தார். காலையில் சமையல் கொட்டகையில் வந்தது நானே என வாக்குமூலம் கொடுக்கிறார். தான் மூச்சு விட்ட இடத்தை யாராவது தீட்டு கழிக்கவேண்டும் என நினைவூட்டிவிட்டு சாமி இறங்கிவிடுகிறார். ஒரு புது கதை உருவாகி உண்மையென நிறுவப்படும் கனம். பெரும் பாரத்துடன் அனைவரும் அவரவர் வேலைக்குள் மூழ்க்குகிறார்கள். மாலையில் சித்தியின் ஐந்து வயது மகன் கேட்கிறான்
‘யாரும்மா வந்தது?’
‘உங்க தாத்தாடா’
‘நீங்க பாத்தீங்களா?’
சூழல் அமைதியானது. கனத்த மெளனம். யாரும் பதில் சொல்லவில்லை. எல்லா கதைகளுமே இப்படித்தான் ஆரம்பிக்கின்றன என கதைசொல்லி முடிக்கிறார்.
மொத்தத்தில் மிக நெகிழ்வானதொரு கதைத் தொகுப்பு. கருத்து சுதந்தரம் என்ற பெயரில் பல நுண்ணிய தளங்களில் நடக்கும் பேதங்களே இவரது கதைச் சூழல்கள். இவை ஏன் ஒருவரை பாதிக்க வேண்டும் எனக் கேட்க முடியாது என்றாலும், கருத்து சுதந்தரம் முடக்கப்படும் சமூகத்தில் உண்மைகள் பல முகங்களோடு உலவும். கதைக்களன் ஒன்றாகவும் அது சுட்டுபொருள் வேறொன்றாகவும் மாறியிருக்கும். ஹேராம் கதையில் சீதையைத் தேடும் ராமர் பல உண்மைகள் காண்கிறார் என்றாலும் சீதா அவரைப் பிரிந்தது எனும் உண்மையை மட்டும் தேடிப்போகிறார். பெரும் போர்கள், கலவரங்களில் பாதிக்கப்படுவது பெண்கள் என்பதுமட்டுமல்ல, வீட்டரசியலில் நுணுக்கமாக உதாசீனப்படுத்தப்படுவதும் அவள்தான் எனும் உண்மையை காலங்காலமாய் உணர மறுக்கிறார். நம்பும் நிகழ்வை மட்டும் நிஜமென நினைக்கும் மனத்தடை நம் எல்லாரைப் போல அவருக்கும் இருக்கிறது. ஆனால் கடலில் மூழ்கியுள்ள பனிப்பாறையைப் போல மிகச் சிறிய நுனி மட்டுமே நம் கண்ணுக்குத் தெரிகிறது. மனித உறவுகளுக்கிடையே நிகழும் உரசல்கள் தான் எத்தனை பூடகமானவை/ நுண்மையானவை என காலபைரவனின் கதைகளைப் படிக்கும்போது வியக்காமல் இருக்கமுடியவில்லை.
சிறு சம்பவங்கள் மூலம் புதுவிதக் கதைகளை எழுதியுள்ளார் காலபைரவன். நிகழ்வுகள் அனைத்தும் கிட்டத்தட்ட திட்டம் போட்ட வரையறைக்குள் மட்டுமே நிகழ்வதும். மொழியின் சாத்தியங்களை ஒரு எல்லைக்கு மேல் பரிச்சயித்துப் பார்க்காததும் இக்கதைகளின் பலவீனம். மற்றபடி மிக இயல்பான சம்பவத் தொகுப்புகளை ரசிக்கத்தக்க வகையில் கதையாக மாற்றியுள்ளார் காலபைரவன். நவீன தமிழ் சிறுகதைகளின் புதுவிதப் பாய்ச்சலை இவரது கதைக்களன் நிகழ்த்தியுள்ளது. தொடர்ந்து இவரது கதைகளை வாசிக்கும் ஆர்வத்தையும் தூண்டுகிறது.
தலைப்பு - புலிப்பானி ஜோதிடர்
ஆசிரியர் - காலபைரவன்
உள்ளடக்கம் - சிறுகதைகள்
சுவாரஸ்யமாக உள்ளது...
ReplyDeleteநன்றி...