ஆசிரியர் : ஜனனி ரமேஷ்
முன்பு படித்த புத்தகத்தில் (சீனா - விலகும் திரை) பல்லவி தன் சீன மாணவர்களிடம் பல்வேறு விஷயங்களைப் பற்றி பேசும்போது, தலாய் லாமா பற்றியும் கேட்பார். அப்போது அந்த மாணவர்கள் அவரைப் பற்றி பேசவே பயந்தார்கள் / மறுத்தார்கள் என்று படித்தேன். அதே போல் என் சீன நண்பரும், தலாய் லாமா பற்றி ஏதேனும் கேட்டால், உடனடியாக பேச்சை மாற்றி விடுவார். அப்போதிலிருந்தே தலாய் லாமா பற்றி மேலும் தெரிந்து கொள்ளவேண்டும் என்ற அவா எழுந்தது. அதே போல், அவர் ஏன் இந்தியாவில் ‘அடைக்கலம்’ புகுந்திருக்கிறார்? சீனா - திபெத், திபெத் - இந்தியா ஆகிய உறவுகளைப் பற்றியும் படிக்க வேண்டும் என்றபோது, கிடைத்ததே இந்த புத்தகம். தலாய் லாமாவின் பிறப்பிலிருந்து இன்று வரை அவரது வரலாறு, இந்திய-திபெத்-சீனத்திற்கு இடையேயான உறவுகள் / பிரச்னைகள் ஆகிய அனைத்து கேள்விகளுக்கும் இந்த புத்தகத்தில் பதில் உண்டு.
திபெத் இந்தியாவிற்கு மேலே, இமயமலைக்கு மேல் உள்ள ஒரு குட்டி நாடு. சீனா எவ்வளவு பெரிய நாடுன்னு நமக்குத் தெரியும். ஆனால் ஒரு காலத்தில் இந்த சின்ன திபெத் அந்த பெரிய சீனாவை ஆண்டுகொண்டிருந்ததாம். படிக்கும்போதே வியப்பாக இருக்கிறது. இப்போது நிலைமை தலைகீழ். கிட்டத்தட்ட 60 ஆண்டு காலமாக திபெத்தை சீனா ஆக்ரமித்து, அதையும் தன் ஒரு மாநிலமாக எண்ணி பல அட்டகாசங்களை செய்து கொண்டிருக்கிறது என்று இந்த புத்தகத்தில் படிக்கலாம். தன் அணுக்கழிவுகளை திபெத்தில் போய் கொட்டுவது, அவ்வப்போது போர் நடத்தி ஏராளமான மக்களை கொடுமைப்படுத்திக் கொல்வது ஆகிய செயல்களை சீனா தொடர்ந்து நடத்திவருகிறது என்றும் தெரிகிறது.
தலாய் லாமா. திபெத் மக்களின் ஆன்மிக, அரசியல் தலைவர். கடந்த 60+ வருடங்களாக திபெத்தை சீனாவின் பிடியிலிருந்து விலக்கி, சுதந்தர நாடாக ஆக்க பற்பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். நூற்றுக்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்து, அந்தந்த நாடுகளின் தலைவர்களை பார்த்து, தன் தாய்நாட்டின் நிலைமையை விளக்கி வருகிறார். ஆனால், அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் பல நாடுகள் தலாய் லாமா & திபெத் நிலைமையை புரிந்து கொண்டாலும், சீனாவுடனான வர்த்தகத் தொடர்புகளால் அவர்களால் எதுவும் செய்ய முடியாமல் போகிறது என்பதை படிக்கும்போது கஷ்டமாகத்தான் இருக்கிறது.
திபெத்தை ஆக்ரமிக்கும் சீனா அந்த மக்களைக் கொல்லும் முயற்சியில் தலாய் லாமாவையும் கொன்று விடுவார்களோ என்று எண்ணிய மக்கள், அவரை வேறு நாட்டிற்குச் செல்லுமாறு பணிக்கின்றனர். நீண்ட யோசனைக்குப் பிறகு அதை ஏற்றுக் கொள்ளும் தலாய் லாமா 1959 ஆண்டு இந்தியாவில் அடைக்கலம் பெற்று, அன்றிலிருந்து இன்று வரை இந்தியாவில் இமாச்சலப் பிரதேசத்தில் தர்மசாலா என்ற இடத்தில் வசிக்கிறார். இப்போது 75 வயது ஆகிவிட்டதால், நான் ஓய்வு பெற்றுக் கொள்கிறேன், வேறு யாராவது இந்த சுதந்தரப் போராட்டத்தை எடுத்து நடத்துங்கள் என்று சொன்னாலும், திபெத் மக்களின் வற்புறுத்தலால் இன்றும் அதே பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்.
திபெத்தின் பிரச்னையை நன்றாகப் புரிந்து கொண்ட அப்போதைய இந்தியப் பிரதமர் நேரு, தலாய் லாமாவிற்கு அடைக்கலம் தந்ததோடு மட்டுமின்றி, புலம் பெயர்ந்த திபெத் மக்களுக்காக ஒரு தனி வாரியம் அமைத்து, அவர்கள் முன்னேற்றத்திற்காக பற்பல ஏற்பாடுகளை செய்து கொடுத்திருக்கிறார். அந்த ஏற்பாடுகள் இன்றளவும் இந்திய அரசால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்றும் அறிகிறோம். அவர்களுக்காக இந்தியா ஒதுக்கிக் கொடுத்த தர்மசாலாவில், 5000க்கும் மேற்பட்ட திபெத்தியர்களைக் கூட்டி அவர்களின் மொழி, கலாச்சாரம் ஆகிய அனைத்தையும் மறந்துவிடாதவாறு அவர்களுக்குக் கல்வியளித்து, வெளிநாடுகளில் நல்ல வேலைகளில் அமர்த்தும் அரும்பணியினை தலாய் லாமா செய்து வருகிறார்.
தலாய் என்றால் மங்கோலிய மொழியில் கடல் என்று பொருள். லாமா என்றால் திபெத்திய மொழியில் குரு என்று பொருள். இந்த இரண்டையும் சேர்த்து தலாய் லாமா என்றால் ‘அறிவுக் கடல்’ என்று சிலர் பொருள் கூறுகிறார்களாம். ஆனால் தலாய் லாமாவோ, தான் ஒரு சாதாரண திபெத்தியக் குடிமகன் என்று அழைத்துக் கொள்கிறார். மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்த இவர் தலாய் லாமாவாக எப்படி ஆனார்? தலாய் லாமாவை கண்டுபிடிக்கும் விதமே அலாதியானது. ஒரு புனித ஏரிக்கரையில் துறவிகள் அமர்ந்து தியானம் செய்வார்களாம். அப்போது தேவதை அவர்கள் கனவில் தோன்றி, பலவித குறிப்புகளை (clues) கொடுப்பாராம். அந்தக் குறிப்புகளை சரியான முறையில் உள்வாங்கிக் கொண்டு, விளக்கங்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அதன்படி, அந்தக் கிராமத்திற்குச் சென்று, பல சிறுவர்களிடையே சோதனைகள் நடத்தி, அனைத்திலும் வெற்றி பெற்ற, 14வது தலாய் லாமாவாகிய டென்சின் கியாட்சோவை கண்டுபிடித்தார்கள்.
மிகச் சிறிய வயதில் தலாய் லாமா ஆகிவிட்ட இவரை, குடும்பத்திலிருந்து பிரித்து, கல்வியளித்து ஆன்மிகப் பாதையில் திருப்பி விட்டிருக்கின்றனர். அன்றிலிருந்து திபெத்தியர்களின் ஆன்மிகக் குருவான தலாய் லாமா, 1950ல் சீனா, திபெத்தில் தன் ஆக்ரமிப்பைத் துவக்கிய நாளிலிருந்து அவர்களின் அரசியல் குருவாகவும் ஆனார். அதன்பிறகு திபெத்தின் சுதந்தரத்திற்காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட தலாய் லாமா இன்றுவரை அதே முயற்சியில் உள்ளார். அவரது முயற்சிகளும், நடவடிக்கைகளுமே இந்த புத்தகத்தில், வருடவாரியாக மிகவும் விரிவாகக் கொடுக்கப்பட்டுள்ளது.
இன்னொரு கொடுமையான சம்பவத்தைப் பற்றி புத்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. தென்னாப்பிரிக்காவில் ஒரு சர்வதேச அமைதி மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. அமைதிக்கான சர்வதேச நோபல் பரிசு பெற்றவர் என்ற முறையில் தலாய் லாமா கண்டிப்பாக அழைக்கப்பட வேண்டும். அவரும் திபெத் போராட்டத்தைப் பற்றி அந்த அரங்கில் சொல்லத் தயாராகிறார். ஆனால், தென்னாப்பிரிக்க நாடு, சீனாவின் கட்டாயத்தால், தலாய் லாமாவிற்கு அழைப்பிதழே அனுப்பவில்லை. இதற்கு அமெரிக்காவின் எதிர்க்கட்சியும், இங்கிலாந்தும் எதிர்ப்பு தெரிவித்ததால், அந்த மாநாட்டையே ரத்து செய்துவிட்டார்களாம்.
சிறிய புத்தகமே ஆனாலும், ஏகப்பட்ட தகவல்கள் நிறைந்ததாக இருப்பதால், தலாய் லாமா & திபெத் வரலாறு பற்றி அறிய, படிக்க வேண்டிய புத்தகமாகும்.
திபெத்தின் இந்த நீண்ட நெடிய வரலாற்றைப் படிக்கையில், தமிழராக நமக்கு தோன்றுவது ஒன்றுதான். இதே போல் நம் இன்னொரு அண்டை நாட்டிலும் போராட்டம் நடைபெற்று வருகிறது. ஆனால் திபெத் போராட்டத்தை புரிந்து கொண்ட அளவிற்கு, நம் இந்திய தேசியத் தலைவர்களால், அந்த இன்னொரு போராட்டம் புரிந்து கொள்ளப்படவில்லையோ என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.
***
No comments:
Post a Comment