மற்றவை செய்கிறமாதிரி வெள்ளைச் சேவல், எந்த சேட்டையும் செய்யவில்லை. புள்ளிப்பொட்டை எப்போதுமில்லாத மாதிரி அதை உருக உருகப் பார்த்தது. நேராக அதனிடம் போய் இழைந்தபடி நின்றது. செல்லமாய், வலிந்து போய் வெள்ளைச் சேவல் கழுத்தில் ஒரு கொத்து கொத்தியது. வெள்ளை எந்தவித பதட்டமும் இல்லாமல் பரந்த றெக்கைக்குள் புள்ளிப் பெட்டையை வளைத்து ஏறி ஒரு மிதி மிதித்தது. புள்ளிப்பொட்டை ஓடவில்லை, கத்தவில்லை. அதற்குப் பிறகும் அதன் கையடக்கத்திலியே நின்றது. சந்தோஷமாய் எந்தவித சடசடப்பும் இல்லாமல், வெள்ளைச் சேவலின் ஆளுகையில் கால் உதறி சீழ்த்து பொறுக்கியது. இவ்வளவு நாளில் அன்றைக்குத்தான் கோழி கோழியாக மேய்ந்தது.
இணை பிரியாமல் அதன் கூடவே வளைய வந்து கொண்டிருந்ததைப் பார்த்தவள் சொல்லிக் கொண்டாள். "நாளைக்கி முட்ட இட்டு குஞ்சு பொறிச்சிதுன்னா, இந்த மாதிரி வெள்ள வம்சமா இருந்தா நெல்லா இருக்கும். ஊம்... ஒரு நாளைக்கி இம்மாம் அம்மாம்னு கணக்கு இல்ல. இதுல இதுதான்னு எப்பிடி..."
"காட்டுக் காடை ஊட்டுக் காடைய இட்டுக்கிட்டுப் போன கதயா, நல்லா மேய்ஞ்சுட்டு வந்து அடைஞ்சத, ஓங் கோழிதான் கெடுத்துட்டுது..." சேவல்காரி பேசிக்கொண்டே ராந்தலை எடுத்து வந்தாள்.
|
கொடி பாதை, ஆணிகளின் கதை, சமாதானக்கறி, புள்ளிப்பொட்டை, கிக்குலிஞ்சான், மழிப்பு ,ஏவல், வலை, ராக்காலம், ஆண், வனாந்திரம், சீவனம், வெள்ளெருக்கு, வண்ணம் என்று பதினான்கு சிறுகதைகள் கண்மணி குணசேகரனின் 'வெள்ளெருக்கு' சிறுகதைத் தொகுப்பில் இருக்கின்றன. இவற்றின் வட்டார வழக்கும் இயல்பான வர்ணனைகளும் கச்சிதமான கதைசொல்லலும் கதைகளைப் படிப்பது போலில்லை, பார்ப்பது போன்ற அனுபவத்தைத் தருகின்றன- கிராமங்களைப் பற்றிய நவீன கதைகள் என்று தயங்காமல் சொல்லலாம் : குறிப்பாக, நவீன சிறுகதைகளுக்குரிய வடிவ நேர்த்தி. வட்டார வழக்கில் எழுதப்படும் கதைகளில் இத்தகைய நவீன ரசனையின் வெளிப்பாட்டை நாம் பார்க்க நேர்வதில்லை. கண்மணி குணசேகரனின் கதைகளில் இதுதான் தனித்துவமான விஷயமாகத் தெரிகிறது.
கொடி பாதை என்ற கதையில் பேருந்தில் பிள்ளைப் பேறு நடக்கிறது - அதன் கண்டக்டர் எப்போதும் ஒரு பிளேடைத் தயாராக வைத்திருக்கிறார் : கதையில் சொல்லப்படும் நிகழ்வுகளைவிட, இது சொல்லும் சேதிதான் கதை. அடுத்த கதையில் இடுகாட்டின் புளிய மரத்தில் ஆணியடித்துக் கட்டப்பட்டிருக்கும் ஆவிகளின் கதைகள் சொல்லப்படுகின்றன - செத்தும் அவற்றின் குணம் மாறவில்லை, காமமும் குரோதமும் அவற்றை இன்னமும் ஆட்டுவிக்கின்றன. சமாதானக்கறியின் மையத்தில் தாய் மாமனுக்கு முறைப்பெண்ணின் மீதுள்ள முழு உரிமை என்ற மரபின் மீதான விமரிசனம் இருக்கிறது, ஆனால் மிக இயல்பாக, மற்ற கதைகளைப் போலவே கட்சி எடுத்துக்கொள்ளாமல் சொல்லப்பட்ட கதை. உரத்த விமரிசனமாயில்லாத, நவீனத்துவ பார்வையுடன் கூடிய அமைதியான கதைசொல்லல் கண்மணி குணசேகரனுக்குரியது.
புள்ளிப்பொட்டை ஒரு கோழி - தனக்கென்று ஒரு இடமில்லாத கோழியின் சேவல் துயரங்கள் என்று மட்டும் ஒரு வரி இரண்டு வரியில் சொல்ல முடியாத கதை. இந்தத் தொகுப்பின் சிறந்த கதைகளில் ஒன்று : பல தளங்களில் பேசுகிறது. அதேபோல் கௌதாரிகளை வைத்துப் பிழைக்கும் கிழவனின் கடைசி காலங்களைப் பேசும் கிக்குலிஞ்சான் இன்னொரு அபூர்வமான கதை. இதுவும் பல தளங்களில் விரித்துப் பேசப்படக்கூடியது. இவ்விரண்டு கதைகளுக்கும் விரிவான விமரிசனம் தேவை.
மழிப்பு கதையில் ஒரு மெல்லிய கேலியும் சாடலும் இருக்கின்றன: சவரம் செய்யவேண்டி ரத்னவேலுவை அழாக்குறையாகக் கெஞ்சுகிறான் கட்டையன், அவன் சொல்வதெல்லாம் செய்கிறான், ஆனால் அவனுக்கு முடிவில் ஏமாற்றமே மிஞ்சுகிறது. ரத்னவேலுவைக கட்டி வைத்திருக்கும் சமூக கட்டுப்பாடுகளைப் பொருளாதார சுதந்திரம் தளர்த்திவிட்டது. நல்ல கதை ஏவல் என்ற கதையில் களத்தில் வேலை செய்கிறவன் பற்பல காரணங்களால் இரண்டாம் மணம் செய்து கொள்வது பேசப்படுகிறது. இந்தக் கதைகளை நினைத்துப் பார்க்கும்போது சிரிப்பு வருகிறது, ஆனால் வலி தெரியாமல் இல்லை. கண்மணி குணசேகரனின் குரல் எப்போதும் கதைகளுக்கு வெளியே இருக்கிறது, ஆனால் அதனால் அது இல்லாமல் போய் விடுவதிலை -அவரது கதைகளில் ஒரு மெல்லிய ஆசிரிய தொனி இருந்து கொண்டேயிருக்கிறது என்பதற்கு இந்தக் கதைகள் சிறந்த உதாரணங்கள்.
ராக்காலம், ஆண் ஆகிய இரு சிறுகதைகளையும் அறம் வரிசையில் சேர்க்கப்படக்கூடிய உணர்வெழுச்சியைக் கொடுக்கும் கதைகள். கொல்லையில் மேய்ந்து பயிர்களை நாசம் செய்யும் பக்கத்து ஊர் மாடுகளிடம் கருணை காட்டுகிறான் வெள்ளையன்; பிள்ளையில்லா சொத்தைக் கைப்பற்ற வட்டமிடும் சுற்றம், இங்கு ஒற்றைப் பனைமரத்தை நட்டு வளர்பப்து அருமையான படிமமாக அமைகிறது. இந்த இரு கதைகளிலும் அத்தனை ஏமாற்றங்களையும் தாண்டிய கருணை ஓங்கி உயர்ந்து நிற்கிறது.
வலை சிறுகதையில் வட்டார வழக்கை எடுத்துவிட்டால் அது எங்கும் எழுதப்படக்கூடிய கதை - இறந்த அக்காளின் கணவனை மணம் புரிவதை நோக்கி ஒரு பெண் மெல்ல மெல்லத் தள்ளப்படுகிறாள். கண்மணி குணசேகரனின் கதைகளில் காணப்படும் நவீன சிறுகதையின் கச்சிதமான வடிவமைப்புக்கு இந்தக் கதை ஒரு சிறந்த உதாரணம்.
சீவனம் சிறுகதை கிராமங்கள் நவீனத்தை நோக்கி முன்னேறிச் செல்லும்போது அதில் இடமில்லாதவர்கள் விழுந்து மறையும் பிளவைப் பேசுகிறது. நம்பிக்கைகளுக்கு இடமில்லாத கதை - அவநம்பிக்கையைச் சொல்லவில்லை, நாளை என்ற நம்பிக்கையைச் சொல்கிறேன். அதற்குத் தகுந்தாற்போல் உலைக்குத் தேவைப்படும் கரிக்காக மரணம் குறித்த நம்பிக்கைகள் உடைக்கப்படுகின்றன. இன்னொரு சிறந்த கதை. இதற்கு நேர்மாறான கதை வனாந்தரம். கணவனை இழந்த பெண்ணுக்கு நம்பிக்கை மட்டுமே வாழ்க்கையாக இருக்கிறது. ராஜீவ் காந்தி என்று பெயர் வைத்து ராவீசுகாந்தி என்று அழைக்கும் அந்தத் தாய் தான் பறிக்கும் முந்திரிகளில் ஒன்றைக்கூட சாப்பிட மறுக்கிறாள்: தன் பிள்ளையைப் பிடிவாதமாகப் பள்ளிக்கு அனுப்புகிறாள், தன் ஒவ்வொரு செயலிலும் வருமானத்துக்கு வழி பார்க்கிறாள். அம்மாவும் பிள்ளையும் வனாந்தரத்தில் முந்திரிக்காக அலைவது கதையின் கருப்பொருளுக்குப் பொருத்தமான களமாக அமைகிறது.
வெள்ளெருக்கு, வண்ணம் ஆகிய இரு சிறுகதைகளிலும் பள்ளி மாணவர்கள். எனக்கு வெள்ளெருக்கு கதையில் உள்ள முழுமையான நவீனத்துவ வடிவ நேர்த்தியின் காரணமாகவே அது பிடிக்கவில்லை. வண்ணம் சிறுகதையும் அப்படியே ஒன்றில் வாத்தியாருக்காக வெள்ளெருக்கைத் தேடிச் செல்கிறார்கள் மாணவர்கள், இன்னொன்றில் ஓவியத்தில் ஆர்வமுள்ள, மாணவப் பருவத்தை அப்போதுதான் கடந்த நாயகன் பொருத்தமான இடங்களில் கோயில் சிலைகளுக்குக் கருப்பு வண்ணம் பூசுகிறான் - வேறு வண்ணங்கள் பூச வேண்டும் என்று ஏங்குகிறான்.அருமையாக எழுதப்பட்ட கதைகள். ஆனால் இந்தக் கதைகளின் பிசிறுகள் இல்லாத கச்சிதமும் நேர்த்தியுமே அவற்றின் குறைகளாகவும் இருக்கின்றன. வட்டார வழக்குக் கதைகளை முன்முடிவுடன் அணுகுவதால் ஏற்படும் அகவயப்பட்ட, என் தனிப்பட்ட ரசனை அனுபவத்தால் மட்டுமே இந்த ஏமாற்றம் ஏற்பட்டிருக்கக்கூடும் : மற்றவர்களுக்கு இந்தக் கதைகள் மிகச் சிறப்பான கதைகளாக இருக்கலாம்.,
"வெள்ளெருக்கு" - சிறுகதை தொகுப்பு
எழுதியவர் : கண்மணி குணசேகரன்
பதிப்பகம் : தமிழினி, 67, பீட்டர்ஸ் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14.
முதல் பதிப்பு : டிசம்பர் 2004, இரண்டாம் பதிப்பு : டிசம்பர் 2009
விலை : ரூ. 90இணையத்தில் வாங்க : கிழக்கு உடுமலை
No comments:
Post a Comment