’விமரிசனம் எதுவாக இருந்தாலும் அது படைப்புகளை வாசிப்பதற்கான ஒரு பயிற்சி மட்டுமே. என் வாசிப்பு இன்னொருவர் வாசிப்புக்கு சில புதிய சாத்தியங்களை அளிக்கும். அதன் மூலம் அவர் இன்னும் விரிந்த வாசிப்பு ஒன்றை அடைகிறார். எந்த விமரிசனமும் படைப்பை ‘மதிப்பிட்டு’ விட முடியாதென்றே நினைக்கிறேன். இது ஒரு வாசிப்பு மட்டுமே.’
- புதியகாலம் முன்னுரை.
புனைவாசிரியராக இருந்தபடி சமகால எழுத்தாளர்கள் பற்றி காத்திரமான விமர்சனப் பார்வையை முன்வைக்க அசாத்திய துணிச்சல் வேண்டும். 'நாவல் எனும் சாத்தியத்தை முழுவதும் உணர்ந்து படைக்கப்பட்ட நாவல்கள் தமிழில் இல்லை', என அகிலன் விருது விழா மேடையில் முன்வைத்தது தொடங்கி, 'அறுவைச் சிகிச்சைக்குக் கடப்பாரை' எனப் பெரியார் பற்றிய கட்டுரை போன்ற பொதுபுத்தி சார்ந்த கற்பிதங்களை மறுபரிசீலனைக்கு தூண்டுவது என கலைஞனுக்கு இருக்க வேண்டிய உருத்தல்களைப் பேசி வருகிறார் ஜெயமோகன். இத்தொகுப்பில் அவர் குறிப்பிடுவது போல, ‘கலகம் என்பது எது சமூகத்தின் ஆதாரமாக அதனால் பொத்திப் பாதுகாக்கப்படுகிறதோ எதைச் சொன்னா அச்சமூகமே கொந்தளித்தெழுமோ அதைச் சொல்வது. அதற்கு அறுவை சிகிச்சைக் கத்திபோல ஊடுருவிச் செல்லும் ஆய்வுப் பார்வை தேவை. ஒவ்வொன்றையும் அதன் மிகச் சிக்கலான வடிவிலேயே எதிர்கொள்ளும் மனவிரிவும் தேவை’, என போலி நம்பிக்கைகளையும் அடிப்படையற்ற தரவுகளையும் ஆய்வு செய்வதன் முக்கியத்துவத்தை கூறுகிறார்.
விமர்சகராக இவர் முன் நிறுத்தும் படைப்பாளிகளின் தரத்தேர்வில் குறைவில்லை. கோட்பாடுகளுக்குள் நுழையாமல் தனது நுண்மையான ரசனை மூலம் பலவகைப்பட்ட எழுத்தாளர்களை தெளிவாக இவரால் அடையாளம் காண முடிகிறது. சுந்தர ராமசாமி, ஆற்றூர் ரவிவர்மா போன்ற இலக்கிய ஆளுமைகளால் ஆற்றுப்படுத்தப்பட்டு அவர்கள் வழியில் சென்று தனக்கென புது கூழாங்கற்களை கண்டுள்ளார். கடற்கரை மணலில் கூழாங்கர்களுக்கிடையே ரத்தினம் தேடுபவனைப் போலில்லாமல், ஒவ்வொரு கல்லையும் பொறுமையாகச் சோதித்து ரத்தினங்களைச் சேகரிக்கிறார். படைப்பாளிகளை அல்ல படைப்புகளைத் தேடிக் களித்தபின் படைப்பாளியை முன் நிறுத்துவது அவர்களுக்கு கூடுதல் போனஸ் மட்டுமே. வெண்ணிலை, காவல்கோட்டம், மணல் கடிகை எனக் கடந்த இருபது வருடங்களாக தமிழ் இலக்கியப் பொதுப்பரப்பில் இவர் கவனத்துக்குக் கொண்டு வந்த தரமானப் படைப்புகள் ஏராளம்.
எழுத்தில் தங்களது அந்தரங்கத்தை முன்வைக்காத படைப்பாளியின் அந்தரங்கத்துக்குள் நுழைய விமர்சகனுக்குக் கூட உரிமை இல்லை. ஆனாலும் தனது அகக்குரலை சொந்த வாழ்வோடு இணைத்து எழுத்தாக மாற்றும் எழுத்தாளர்களைப் பற்றிய விமர்சனம் அவர்களது வாழ்விலிருந்து தான் தொடங்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளவர். ஒவ்வொரு விமர்சனமும் தனித்தனி வாசிப்பு எனும்போது ஜெயமோகனின் விமர்சன பாணியை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டும். விதையை அறியாத இலை போல எழுத்தின் வேர் பற்றிய பார்வை இல்லாத விமர்சனம் முழுமையாக இருக்காது.
இணையத்தில் வெளியான விமர்சனங்களில் தொகுப்பாக இருந்தாலும் மொத்தமாகப் படிக்கும்போது ஜெயமோகனின் 'இலக்கிய முன்னோடிகளின் வரிசை' விமர்சனத் தொகுப்பின் தொடர்ச்சி போலத் தோன்றுகிறது. முன்னுரையில் எழுதியது போல அவர் ரசித்த படைப்புகளைப் பற்றிய பார்வை மட்டுமே இத்தொகுப்பில் உள்ளது.
விமர்சனம் என்பது ஒரு படைப்பின் மேல் படரும் காலமெனும் புகை போலத்தான். ஒவ்வொரு காலகட்டத்தையும் பின்புலனாக வைத்துப் படிக்கும்போது புனைவு வெவேறு நிறம் கொள்கிறது. அக்காலத்தில் மிக யதார்த்தக் கதையாக அமைந்திருக்க சாத்தியமுள்ள மகாபாரதம் கூட இப்போது பெரும் மாயயதார்த்த வகை நாவல் போலத் தோற்றமளிக்கிறது. இதெல்லாம் புத்தகப் பக்கங்களுக்கு இடையே மயிலிறகை சேமிப்பது போலத்தான். காலமும் சூழலும் புதுவித அர்த்தங்களை தரக்கூடும். நிராகரிக்கவும் கூடும். ஆனால் விமர்சகனின் சமகாலத்தில் அவற்றுக்கான பலவித வாசிப்பு லபிக்கும்போது படைப்பும் நிலைபெறுகிறது.
எஸ்.ராமகிருஷ்ணன், யுவன் சந்திரசேகர், ஜோ.டி.குரூஸ், சு.வேணுகோபால், வெங்கடேசன், கண்மணி குணசேகரன், சாரு நிவேதிதா, மனுஷ்யபுத்திரன் போன்ற எழுத்தாளர்களின் படைப்புகளைப் பற்றிய தொகுப்பு இது. எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய யாமம், நெடுங்குருதி, உறுபசி, உபபாண்டவம் மற்றும் யுவன் சந்திரசேகரின் பகடையாட்டம், மணற்கேணி, குள்ளசித்திரன் கதைகள் தனி விமர்சனங்களாகத் தொகுக்கப்பட்டுள்ளன.
விமர்சனத்துக்குள் நுழைவதற்கு முன் விமர்சனக் கட்டுரைகளின் தலைப்புகள் நம் கவனத்தைக் கவர்கின்றன. படைப்பின் மைய தரிசனத்தை உணர்த்தும் விதத்தில் தலைப்புகள் அமைந்திருக்கின்றன. இதிகாச நவீனத்துவம் (உபபாண்டவம்), காமத்துக்கு ஆயிரம் உடைகள் (உறுபசி), விடுபடும் விஷயங்கள் பற்றிய கதைகள் ( யுவன் சிறுகதைகள்), காவலும் திருட்டும், அதிகாரத்தின் முகங்கள் (காவல்கோட்டம்), எதிர் மரபும் மரபு எதிர்ப்பும் (ஸீரோ டிகிரி) என நாவலின் மையத்தைத் தலைப்பின் மூலம் கவனப்படுத்துகிறார்.
நவீன மீபொருண்மை (மெட்டாஃபிஸிக்ஸ்) உலகு என எஸ்.ராமகிருஷ்ணனின் யாமம் நாவல் உருவாக்கிய உலகை வர்ணிக்கிறார். எஸ்.ராமகிருஷ்ணன் தனித்தன்மையோடு உருவாக்கும் உலகில் காட்சிகள் கவியுருவங்களாகவும், நிகழ்வுகள் படிமங்கள் வழியாகவும் வாழ்வதாகக் குறிப்பிடுகிறார். யாமம் நாவலில் வரும் அத்தர் எனும் நறுமணம் சூஃபி மரபில் அல்லாவின் சொல்லெனப் பொருள் இருந்தாலும், எஸ்.ராவின் உலகில் அது சாத்தானின் மாயக்கருவியாக மாறியுள்ளதை விவரிக்கிறார். மெட்டாஃபிஸிக்ஸின் நவீன உருவகங்கள் பல துறைகளில் ஊடுருவியுள்ளது. இலக்கியத்தில் மீபொருண்மை ஒரு இன்றியமையாத கருவி என ஜெயமோகன் குறிப்பிடுகிறார். நவீன கவியுருவங்கள் மற்றும் படிமங்கள் மூலம் இலக்கியத்துக்குள் புது உலகை படைப்பாளியால் படைத்துவிட முடிகிறது. புற உலகை அமைத்திருக்கும் விதி போல இலக்கியத்தில் அமைந்திருக்கும் உலகு மாய விதிகளின் கரங்களில் உள்ளது. படிமங்களாகவும், உருவகங்களாகவும் உன்னதப்படுத்தும்போது சிறு குறியீடுகளும் பெரிய உலகின் வாசல்களாக அமைந்துவிடுகிறது. ஜெயமோகன் எழுதிய ‘இரவு’ நாவல், நெடுங்குருதி நாவலில் வரும் வெயில் பற்றிய உருவகங்கள், ஆழி சூழ் உலகு நாவலின் சுறா வேட்டை என படைப்பாளிகளின் தனி மொழி மூலம் புது உலகம் சிருஷ்டிக்கபடுகிறது. பழைய மண்ணையும், கூழ் கற்களையும் கொண்டு கெட்டியான சிமெண்டு உருவாவது போல நமக்குத் தெரிந்த பொருட்களின் மேல் விஷேச அர்த்தம் குவிகிறது. ஒரு கட்டத்தில், கண்ணை மூடி உலகம் காணாமல் போவதாக எண்ணிக்கொள்ளும் பூனை போல வாசகனும் புற உலகை மறந்து நாவல் காட்டும் உலகை நம்பத் தொடங்குகிறான். எஸ்.ராமகிருஷ்ணன் பல வருடங்களாக விதவிதமான முயற்சிகளை மேற்கொண்டு தனக்கென புது உலகை அமைத்துள்ளதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார்.
எஸ்.ராமகிருஷ்ணனின் உலகுக்கு நேர் எதிர்பாதையாக எம்.கோபாலகிருஷ்ணனின் மணல்கடிகை மற்றும் கண்மணி குணசேகரனின் அஞ்சலை நாவல்கள் அமைந்துள்ளன. தூய இயல்புவாதக் கதைகள். வாழ்க்கை இவ்வளவுதான் என உள்ளது உள்ளபடி சொல்லிச் செல்லும் நாவல்கள் என இவ்விரண்டையும் ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஓர் முதிர்ந்த வாசகனுக்கானது என்றும் கோட்பாடுகள், உணர்வெழுச்சிகளைத் தாண்டி வாழ்வை அப்பட்டமாகக் காட்டுவதில் இருக்கும் ஆர்வத்தை இயல்புவாத இலக்கிய பாணியாகக் குறிப்பிடுகிறார். இதுவும் இலக்கியம் தான். ஜோடனையற்ற, புது உலகை கட்டமைக்காத குறியீடற்ற உலகம். ஒரு விதத்தில் இது ஆரம்பகட்ட வாசகருக்கு சலிப்பூட்டக்கூடும். அப்பட்டமாக வாழ்வை படம் பிடிக்கும் கதைகளை கற்பனை செறிவுற்ற ஆரம்பநிலை வாசகன் விரும்பமாட்டான். அன்றாட சலிப்புகளிலிருந்து விலகி ‘காலக்குதிரையில் ஏறி’ பயணம் செய்ய் முற்படும் வாசகனுக்கு தான் அறிந்த புற உலகையே கட்டமைக்கும் கதைகள் மீது ஒரு ஒவ்வாமை வரக்கூடும்.
காவல்கோட்டம் பற்றிய நீண்ட விமர்சனம் இத்தொகுப்பின் மிக முக்கியமான கட்டுரையாகும். காவல்கோட்டம் நாவலுக்கு வெளியான மிகச் சாதகமான விமர்சனமாக மட்டுமல்லாது வரலாற்று நாவல்களின் அடிப்படைகளை மிகத் துல்லியமாக முன்வைத்ததாலும் முக்கியமாகிறது. கல்கியின் பொன்னியின் செல்வன் நாவலை முன்வைத்து வரலாற்றுப் புனைக்கதைகளின் அடிப்படைகளை தமிழ் நாவல்கள் நிறுவியிருந்தாலும், சிக்கவீர ராஜேந்திரன் பிரபஞ்சனின் மானுடம் வெல்லும் போன்ற படைப்புகளால் அது சீர்த்திருத்தப்படுகிறது. காவல்கோட்டம் நாவலை ஏன் ஒரு வரலாற்றுப் புனைவாகக் கொள்ள வேண்டும், வரலாற்றெழுத்தில் தென்படும் தொன்மங்கள் மற்றும் வரலாற்றையும் எப்படி பிரித்துப்பார்ப்பது எனப் பல கவனப்படுத்தல்களை முன்மொழிந்ததில் மிகச் செறிவான கட்டுரையாக அமைந்துள்ளது.
மரபு எதிர்ப்பும், எதிர்மரபும் எனும் கட்டுரையில் சாரு நிவேதிதாவின் ஸீரோ டிகிரி நாவலுக்கு மதிப்புரை எழுதியுள்ளார். மிக சுவாரஸ்யமாக படிக்க வைக்கக்கூடிய எழுத்து இந்த நாவலின் குறிப்பிடத்தக்க அம்சமாகக் கருதுகிறார். பின்நவீனத்துவம் எனும் பெயரில் கற்பனையற்ற வரண்ட நடையில் பல கதைகள் வெளியான காலகட்டத்தில் படிக்கவைக்ககூடிய இலக்கிய வகையாக இந்த நாவல் அமைந்திருக்கிறது என குறிப்பிடுகிறார். எஸ்.ராமகிருஷ்ணன் ஆக்கங்களைப் போல் தனிமொழி கூடிய படைப்பாக ஸீரோ டிகிரியைப் பார்க்கலாம். வடிவமற்ற வடிவம், கதையின் மையத்தை நிறுவாத போக்கு, பல வடிவங்கள் சங்கமிக்கும் கொலாஜ் வடிவமாக நாவல். கற்பனையற்ற விவரிப்பும், கலகம் எனும் பெயரில் மேலோட்டமான சாடல்களும் இந்த நாவலின் எதிர்மறைப்போக்காக இருந்தாலும் தமிழ் நாவலில் குறிப்பிடத்தக்கப் படைப்பு எனக் குறிப்பிடுகிறார்.
இலக்கியத்தைப் புரிந்துகொள்ளும் முயற்சியே விமர்சனம் என்கிறார் ஜெயமோகன். ஒரு விமர்சகராக முன்னோடிகளின் படைப்புகளைப் பேசுவதை போல சமகால ஆக்கங்களைப் பேசுவதும் இக்காலகட்டத்தைப் புரிந்துகொள்ளத் தேவையானக் கருவியாகிறது எனக் குறிப்பிடுகிறார். இலக்கிய விமர்சனம் என்பது சலூனில் எதிர் எதிர் நிற்கும் கண்ணாடி போன்றது எனத் தோன்றுகிறது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு நாவலை வாசிக்கும்போது, கதையின் காலத்தை எந்தளவு புரிந்துகொள்கிறோமோ அதே போல நாவலையும் புரிந்துகொள்கிறோம். இவை இரண்டையும் கொண்டு விமர்சகனின் வாசிப்பையும் புரிந்துகொள்கிறோம். இதன் மூலம் திட்டவட்ட நிகழ்வுகளை முதன்மைப்படுத்தும் விமர்சகனைப் புரிந்துகொள்கிறோம். மீண்டும் அவனது வார்த்தை வழி படைப்பை அணுக முயற்சிக்கிறோம். ரசனை விமர்சனை மரபுக்கு செழுமை சேர்ப்பதாக அமைந்திருக்கும் இந்தத் தொகுப்பு மூலம் இலக்கிய முன்னோடிகள் விமர்சனத் தொகுப்பு மிகச் செறிவான தொடர்ச்சி அமைந்திருக்கிறது.
புகைப்படங்கள் நன்றி- உடுமலை.காம்
தலைப்பு - புதியகாலம்
ஆசிரியர் - ஜெயமோகன்
உள்ளடக்கம் - விமர்சனக் கட்டுரைகள்
பதிப்பாசிரியர் - உயிர்மை பதிப்பகம்
இணையத்தில் வாங்க - உடுமலை
No comments:
Post a Comment