காலாபார் பழங்குடியினர் குழந்தைகளுக்குப் பல பொருள்களைக் காட்டுவார்கள். குடும்பத்தில் இறந்து போனவர்களுக்குப் பிடித்தமான பொருள்களைக் காட்டுவார்கள். குழந்தை அதில் எதையாவது தேர்ந்தெடுக்கும்போது அந்தப் பொருளுக்குச் சொந்தக்காரர்கள்தான் திரும்பப் பிறந்திருக்கிறார் என்று அனுமானிப்பார்கள் |
டேஜா வூ (Deja vu) என்ற வார்த்தையை நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? ஃப்ரெஞ்ச் வார்த்தையான இதற்கு Already seen, அதாவது “முன்னமே பார்த்தது” என்ற அர்த்தமாம். சிலநேரங்களில் சில இடங்களுக்கு நீங்கள் முதன்முறை செல்வீர்கள். ஆனால், அந்த இடத்திற்கு அதற்கு முன்னமே நீங்கள் வந்த நினைவு உங்களுக்குத் தோன்றும். அதே போல சில சம்பவங்கள் நிகழும்போது அவை உங்கள் வாழ்வில் முன்னமே நிகழ்ந்தது போல தோன்றும். இவை உங்கள் மூளை உங்களோடு விளையாடும் மாய விளையாட்டுகள் என்று அறிவியல் ஆராய்ச்சிகள் கூறினாலும் அந்த இடங்கள், சம்பவங்கள் நம்முள் ஏற்படுத்தும் உணர்வு, சலனம் ஆகியவை தீவிரமானவை.
”டேஜா வூ” என்னும் விஷயமே இப்படி என்றால் ரீஇன்கார்னேஷன் எனப்படும் மறுபிறப்பு சம்பந்தப்பட்ட விஷயங்கள் பற்றி யோசியுங்கள். பகுத்தறிவுக்கு உட்பட்ட விஷயமாக மறுபிறப்பு இல்லை என்றாலும், தொன்றுதொட்டு இது சார்ந்த நம்பிக்கைகள் எல்லா மதத்தவர்க்கும் பொதுவானவை. அந்த மறுபிறப்பு தொடர்பான ஒரு கற்பனை நாவல்தான் “ஆ..!”. 1992 'ல் விகடனில் தொடராக வந்த கதை.
சுஜாதா கதைகளுக்கு நிறைய சிறப்புகள் உண்டு. "ஆ...!"வின் முக்கியச் சிறப்புகளாக இரண்டைக் கூறலாம்.
1) விஷுவலைசேஷன் (அ) காட்சிப்படுத்துதல். சுஜாதா இந்த விஷயத்தில் எப்போதும் சமர்த்தர் என்பது தமிழ்கூறும் வாசிப்பு உலகம் அறிந்தது. கதையினுள் நம்மை அனாயசமாகப் பயணிக்க வைக்கிறார் சுஜாதா.
2) வித்யாசமான கதைக்களன். முன்ஜென்மம் / மனநலம் தொடர்பான கதை ஒன்றை கன்வின்ஸிங்காகக் கொண்டுசெல்தல் என்பது பெரும் சவால் மிக்க தொழில்.
கம்ப்யூட்டர் துறையில் வேலை செய்யும் தினேஷ். புதிதாய்த் திருமணம் ஆனவன். அம்மா, மனைவி என்ற சின்ன குடும்பத்தில் சந்தோஷ வாழ்க்கை. திடீர் என்று அவனுக்கு மூளைக்குள் புதிதாய்க் குரல் ஒன்று கேட்கத் தொடங்குகிறது. தற்கொலைக்குத் தூண்டுகிறது. டாக்டரை நாடுகிறான். அந்த டெஸ்ட், இந்த டெஸ்ட் என்று அலைச்சலில் நான்கு அத்தியாயங்கள் கடக்கின்றன, மீண்டும் குரல். இந்தமுறை கார் பயணத்தில் குரல் பாதிப்பில் வண்டி விபத்தாகி நண்பன் இறக்கிறான்.
ஜயலக்ஷ்மி, பண்டரி, ஷர்மா, கோபாலன் என்று இவன் அதுவரை போயிராத திருச்சியில் இருக்கும் பார்த்திராத நால்வர் உலகிற்கு இவனை அழைத்துச் செல்கிறது அந்தக்குரல். யோகி என்ற கார்பரேட் சாமியார் ஒருத்தரைப் பார்க்க டில்லி வரை போகிறான் தினேஷ். அவர் ஹிப்னாடிஸத்தில் இவனை ஆழ்த்தி ஆயிரத்து தொள்ளாயிரத்து ஐம்பதுகளில் திருச்சியில் வாழ்ந்தவர்கள்தான் அந்த நால்வரும் எனத் தெரிய வைக்கிறார்.
அந்த நால்வரில் தான் யார் என்பது அறிய அதே குரலின் வழிநடத்தலில் திருச்சி போகிறான். ஐம்பதுகளின் அந்தக் கதையும் ஜயலக்ஷ்மி யார் என்பதுவும் அறியக் கிடைக்கிறது. குரலாயிருந்தது அவனை முழுதாய் ஆக்ரமித்து இப்போது அவனாய் மாற, அவனாய் இருந்தவன் இப்போது வெளியே சென்று குரலாய் மாறுகிறான்.
நான், ’என் பேர் சர்மா, சிந்தாமணி ஸ்கூல்ல சம்ஸ்க்ருத வாத்தியார். இவ ஜெய்யூ, என் ஆம்படையாள்’, என்றேன்.
அவர் புன்னகையுடன், “அப்படியா! நீங்க இப்ப தினேஷ் இல்லையா?” ’இல்லைன்னு எத்தனை தடவை சொல்லிப் பாத்தாச்சு. யாரும் நம்பமாட்டேங்கறா.’ |
ஒரு கொலை அரங்கேறுகிறது.
எழுபத்தைந்து சதம் கதை நிறைந்தபின் கணேஷ்-வசந்த் உள்ளே நுழைகிறார்கள். சுவாரசியமான கோர்ட் நிகழ்வுகள். கடைசியில் இப்படிப்பட்ட கதைகள் எப்படி முடிய வேண்டுமோ அப்படிப்பட்ட ஒரு முடிவைக் காண்கிறது கதை.
மணிச்சித்ரதாழ் (தமிழில்: சந்திரமுகி), தனுஷ் நடித்த "மூணு" படங்களுக்கெல்லாம் "ஸ்பார்க்" இந்த நாவல் தந்திருக்கலாம்.நிறைய விஷயங்களை தொடர்புப்படுத்திப் பார்க்கமுடிகிறது.
கம்ப்யூட்டர் கோடிங் எழுதுபவன் தொழில் பற்றிச் சொல்லும்போது அந்தத் துறையின் அந்தக் காலகட்டத்தின் தகவல்கள் சொல்கிறார் சுஜாதா. முன்ஜென்மம் தொடர்பான நம்பிக்கைப் பகுதிகளில் கதை பயணப்படும்போது அது தொடர்பான வெவ்வேறு மதங்களின் கோட்பாடுகள், நம்பிக்கைகள் தொடர்பான செய்திகள், தர்க்கங்கள் எல்லாம் சொல்கிறார். மனநலம் தொடர்பாக கதை செல்கையில் அதன் பின்னணித் தகவல்கள், மருத்துவத் துறைசார் வார்த்தைகள், சிகிச்சை முறைகள் சார்ந்த தகவல்கள். கோர்ட் காட்சிகள் வருகையில் அது சார்ந்த பழைய கேஸ்களில் இருந்து மேற்கோள்கள், சுவையான வாதங்கள், எதிர்வாதங்கள் என அடுக்கடுக்காய்த் தகவல்கள்.
சிக்கலான அந்தந்த துறைசார் மொழியிலல்லாமல் இத்தனைத் தகவல்களையும் படிப்பவர்க்குப் புரியும் எளிய மொழியில் சொல்வதே சுஜாதாவின் சிறப்பு.
240 பக்கப் புத்தகத்தில் 175’ம் பக்கத்தில்தான் கணேஷ்-வசந்த் நுழைகிறார்கள். எனவே வசந்த்தின் வழக்கமான கலாட்டாகள் மிஸ்சிங் என்பது தவிர்த்து வேறெந்தக் குறையும் சொல்வதற்கில்லை.
ஒரு திரைக்கதையின் சுவாரசியத்தோடான இந்தப் புனைவு உங்களை நிச்சயம்
புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் வாசிக்க வைக்கும்.
புத்தகத்தைக் கீழே வைக்க விடாமல் வாசிக்க வைக்கும்.
ஆ..! - சுஜாதா
கிழக்கு பதிப்பகம்
240 பக்கங்கள் விலை ரூ. 120/-
இணையத்தில் வாங்க: கிழக்கு
படித்ததுண்டு... மீண்டும் படித்தாலும் அலுக்காத நாவல்... மிக்க நன்றி சார்...
ReplyDelete