அள்ள அள்ளப் பணம் - பாகம் ஒன்று
ஆசிரியர் : சோம. வள்ளியப்பன்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 269
விலை : ரூ. 125.
***
* பங்குச்சந்தையில், ஆறு மாத காலத்திற்கு நான் முதலீடு செய்தால், வட்டி என்ன கிடைக்கும்?
* முதலுக்கு மோசம் வராதுதானே?
* இதுக்கு பதிலா நான் நிரந்தர வைப்பு நிதியில் போட்டால், பணம் பத்திரமா இருக்குமே?
பங்குச்சந்தையில் அவர்களது சேவைகள் குறித்து பேசுவதற்காக ஒரு நிதிஆலோசக நிறுவனத்திலிருந்து எங்க அலுவலகத்திற்கு ஒருவர் வந்திருந்தார். பேசினார், பேசினார், பேசிக்கொண்டே இருந்தார். கடைசியில் கேள்வி நேரம். அப்போது சில நண்பர்கள் கேட்ட கேள்விகளே மேலே பார்த்தவை. பேசியவர் ஆடிப் போனார். மறுபடி முதலிலிருந்து துவங்கினார்.
சந்தையைப் பற்றி மிக அடிப்படையான கேள்விகள் பலருக்கு இருப்பது கண்கூடு. பங்குகளை வாங்க/விற்க வேண்டும் என்று ஆசை. ஆனால், ஏதோ ஒரு சிறிய சந்தேகத்தால், அதை செய்ய முடியாமல் தவிப்பு. அப்படிப்பட்ட நபர்களுக்காகவே இந்த புத்தகம் உள்ளது.
பங்குச் சந்தையில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் பல வகைப்படுவார்கள்.
* காலையில் பணம் போட்டு உடனடியாக (அதே நாளில் அல்லது ஓரிரு நாட்களில்) லாபம் பார்க்க வேண்டும் என்று நினைப்போர்
* ஓரிரு மாதங்களில் லாபம் வரவேண்டும் என்று விரும்புவோர்
* நீண்ட கால முதலீடு செய்பவர்கள்.
இந்த அனைத்து வகையிலும் நன்மை/தீமைகள் இரண்டும் இருக்கிறது. லாப/நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. லாபம் அதிகமில்லை என்றாலும், நஷ்டத்தை எப்படி தவிர்ப்பது?. இதற்கு சந்தையைப் பற்றி நிறைய தெரிந்து கொள்ள வேண்டும்.
* எந்த துறையில், எந்த நிறுவனத்தின் பங்குகளை வாங்கலாம் / விற்கலாம்?
* எந்த விலையில் வாங்கலாம் / விற்கலாம்?
* எதையெல்லாம் வாங்காமல் இருக்க வேண்டும்?
* எதையெல்லாம் விற்காமல் வைத்துக் கொள்ள வேண்டும்?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் தரவுகள் மூலமாக பதில் சொல்ல வேண்டுமெனில், இந்திய, உலக அரசியல், தொழில் நடப்புகளை / மாற்றங்களை / செய்திகளை தினமும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். எந்த சம்பவத்திற்கு / எந்த செய்திகளுக்கெல்லாம் பங்குகளின் விலை உயரும் / குறையும் என்று ஒரு பெரிய பட்டியலே தந்திருக்கிறார் ஆசிரியர். லாபம் சம்பாதிக்க வழிகளை சொல்வதோடு, நஷ்டத்தை தவிர்க்கவும் பல வழிகளை சொல்லித் தருகிறார்.
சந்தையைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டும் என்று வருபவர்களே இந்த புத்தகத்தை படிப்பார்கள் என்பதால், பல இடங்களில் அவர்களுக்கு மிகவும் தேவையான எச்சரிக்கை விடுக்கிறார். இருக்கிற பணத்தை மொத்தமாக இதில் போட வேண்டாம். ஒரு இலக்கு வைத்துக் கொண்டு அதற்குள்ளாகவே முதலீடு செய்ய வேண்டும். சந்தை, அதன் நெளிவு சுளிவுகள் பிடிபட்ட பின்னர் மெதுவாக முதலீடுகளை அதிகரிக்க முடிவெடுக்கலாம். அதுவரை ஜாக்கிரதையாகவே இருங்கள் என சொல்கிறார்.
இவை எல்லாவற்றிற்கும் முன், பங்குச்சந்தையில் உலவும் பல தொழில்நுட்ப வார்த்தைகளைப் பற்றி அவசியம் தெரிந்து கொள்ள வேண்டும். அதற்கு இந்த புத்தகமே சரியான வழிகாட்டி. மளிகைக் கடையையும் பங்குச் சந்தையையும் ஒப்பிட்டு துவங்கும் முதல் அத்தியாயத்திலிருந்து, பங்குகள், பரஸ்பர நிதிகள் இவற்றைப் பற்றியும், காளை & கரடி, சந்தையின் ஏற்ற, இறக்க, மந்த நிலை, நிறுவனங்களின் லிஸ்ட், டீலிஸ்ட் போன்ற ஏகப்பட்ட தகவல்களும் நிறைந்த புத்தகம் இது. நிறுவனம் வெளியிடும்போதே பங்குகளை வாங்கிப் போடும் primary market, வெளிச்சந்தையில் வாங்குவது - இவ்விரண்டின் செயல்பாட்டினை தெளிவாக விளக்கியுள்ளார். Futures, Options, Derivatives போன்ற பல சொற்களை உதாரணங்களோடு அறிமுகம் செய்திருப்பதால் மிகவும் எளிதாக புரிந்து கொள்ள முடிகிறது.
1993ம் ஆண்டு ரூ.9,500க்கு Infosys பங்குகளை ஒருவர் வாங்கியிருந்தார் எனில், 2007ம் ஆண்டு அதன் மதிப்பு எவ்வளவு இருக்கும்? படிக்கும்போதே தலை சுற்றுகிறது. கிட்டத்தட்ட மூன்று கோடி ரூபாய்கள். அதுவே நிரந்தர வைப்பு நிதியில் போட்டிருந்தால் அதன் இன்றைய மதிப்பு ரூ. 50,000 மட்டுமே என்று சொல்லிவிட்டு, இதே உதாரணம் அனைத்து பங்குகளுக்கும் பொருந்தாது என்றும் எச்சரிக்கை விடுக்கிறார்.
இன்னும் பற்பல புதிய தொழில்நுட்பச் சொற்கள், உதாரணங்களுடன், பங்குச் சந்தையைப் பற்றி அறிந்து கொள்ள மிகச் சிறந்த கையேடு இந்த புத்தகம் என்று அடித்துச் சொல்லலாம்.
***
No comments:
Post a Comment