கிமு-கிபி
ஆசிரியர் : மதன்
கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள் : 191
விலை : ரூ.125
* பள்ளியில் படித்த வரலாற்றுப் பாடங்களை மறுபடி ஜாலியாக படிக்க வேண்டுமா?
* உலக, இந்திய பழங்கால நாகரிகங்கள் எப்படித் தோன்றின, அதன் கதாநாயகர்கள் யார் என அறிய வேண்டுமா?
* இவற்றை மிக விரிவாகப் பார்க்காமல், முக்கியமான சம்பவங்களை மட்டும் சுருக்கமாக புரிந்து கொள்ள வேண்டுமா?
இவையே உங்கள் கேள்விகள் என்றால், மதனின் கிமு-கிபி புத்தகமே அதற்கு சரியான பதிலாகும். நான் ஒரு வரலாற்று ஆராய்ச்சியாளன் அல்ல; இது ஆழமாக அனைத்து நிகழ்வுகளையும் பதிவு செய்த புத்தகமும் அல்ல என்று அவரே முன்னுரையில் தெரிவித்து விடுகிறார்.
உலகத்தில் தோன்றிய முதல் பெண் (கி.மு.) முதல் இந்தியாவில் அசோகர் வரை (கி.பி.) பல்வேறு மன்னர்கள், அவரது ஆலோசகர்கள், அவர்களது படையெடுப்புகள், யுத்தங்கள் ஆகிய அனைத்தையும் காலக்கிரமமாக - நடுநடுவே மதனின் ஜாலியான கமெண்ட்களுடன் படித்து புரிந்து கொள்ள சரியான புத்தகம் இது. அவருடைய கமெண்ட்கள் சில:
* Modern man எனப்படுகிற நாம் தோன்றியது சுமார் நாலு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னர்தான். ஆனால் பல பெண்களை அலற வைக்கும் கரப்பான்பூச்சி சுமார் 25 கோடி ஆண்டுகளாக பூமியில் வசித்து வருகிறது. அதனால், கரப்பு நம்மைப் பார்த்து - நேற்று வந்த பய - என்று தாராளமாகச் சொல்லலாம்.
* ஆப்பிரிக்காவை விட்டு மற்ற இடங்களுக்கு வெளியேறிய மனித இனத்தினர் ஏதோ மாபெரும் அரசியல் பேரணிபோல ஊர்வலமாய் போனதாக கற்பனை செய்துகொள்ள வேண்டாம். இலக்கியக் கூட்டங்களுக்கு வரும் எண்ணிக்கை அளவுக்குத்தான் இருந்தார்கள்.
தற்போதுள்ள கண்டங்கள், நாடுகள் எப்படித் தோன்றின என்பது பற்றிய விவரங்கள் படு சுவாரசியம்.
ஆரம்பத்தில் இருந்த உலகமே வேறு. ஆப்பிரிக்கா, அரேபியா, இந்தியா, ஆஸ்திரேலியா, அண்டார்டிகா, தென் அமெரிக்கா இவையெல்லாம் ஒரே கண்டமாக இணைந்திருந்ததாம். சுமார் 15 கோடி ஆண்டுகளுக்கு முன் - ஜுராசிக் யுகத்தின்போதுதான் இவை துண்டு துண்டாகப் பிரிந்தன. அப்போது ஆப்பிரிக்காவுடன் இணைந்திருந்த இந்தியா சுமார் 5 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் பிரிந்து, கடலில் மிதந்து வந்து ஆசியாவோடு மோதி இணைந்தது. சுமார் 17,000 ஆண்டுகளுக்கு முன் உலகின் வெப்பம் சில டிகிரிகள் உயர்ந்ததால் பெரிய பெரிய மாற்றங்கள் ஏற்பட்டன. பனிமலைகள் உருகின. கடல் மட்டம் அதிகரித்தது. பல ஏரிகள், நதிகள் தோன்றின. அப்போதே இப்போதுள்ள மாதிரி பல கண்டங்கள், நாடுகள் உருவாகின.
கிரேக்க, எகிப்திய மற்றும் இந்திய நாகரிகங்கள் தோன்றி, வளர்ந்த விதங்களைப் பற்றிய மதனின் குறிப்புகள் மிகவும் அருமை. கி.மு’வுக்கு பற்பல ஆண்டுகளுக்கு முன்னர் இருந்த பல அரசர்களின் திறன், வீரம் ஆகியவை பற்றி படிக்கும்போது பெரும் வியப்பு ஏற்படுகிறது.
மெசபொடாமியாவை ஆண்ட மன்னர் ஹமுராபி. முதன்முதலில் ஆயிரக்கணக்கில் முறையான சட்ட திட்டங்களை ஏற்படுத்தியவர். கற்பழிப்பு, திருட்டு ஆகியவற்றிற்கு கடுமையான தண்டனைகளையும் ஏற்படுத்தியவர். இன்றளவும் நாம் பயன்படுத்தும் ‘An Eye for an Eye, A Tooth for a Tooth' என்ற சொற்றொடரை ஆரம்பித்தவரே ஹமுராபிதான். அவர் காலத்தில் இருந்த ஒரு ஆச்சரியமான சட்டம் - கொள்ளை போனவற்றை குறிப்பிட்ட காலத்திற்குள் கண்டுபிடிக்காவிடில் காவல் துறையினருக்கு அபராதம், தண்டனை கொடுப்பார்களாம். இதை இந்த காலத்தில் பயன்படுத்தினால் எப்படியிருக்கும்?
படையெடுப்பு, போர் ஆகியவற்றில் கவனம் செலுத்திய மக்கள், இலக்கியம், கலைகளிலும் ஆர்வம் கொண்டு பல்வேறு புத்தகங்களை எழுதியது ஆச்சரியமான விஷயமே என்கிறார் மதன். பாபிலோனியர்கள் உருவாக்கிய ‘கில்கெமெஷ் காவியம்’ என்பது நம் இராமாயணம், மஹாபாரதம் ஆகியவற்றின் தாத்தா எனவும், அதை இன்றளவும் மிகச் சிறந்த இலக்கியப் படைப்பாகவும் கருதுகிறார்களாம்.
கிமு’வில் கடவுள் பக்தி எப்படி இருந்தது? பல மன்னர்களின் விருப்பம் வெவ்வேறாக இருந்ததால், பல்வேறு கடவுளர்களின் வழிபாடு நடந்துள்ளது என்று படிக்கிறோம். ஒரு சமயம் எகிப்தில் சுமார் நூற்றுக்கு மேற்பட்ட கடவுள்களின் கோயில்கள் இருந்தபோது, அக்நெடான் என்ற மன்னர் - இனி சூரியன் மட்டும்தான் கடவுள், மற்ற அனைத்து கோயில்களையும் இடித்துத் தள்ளவும் என்று ஆணையிட்டாராம். அவரது மரணத்திற்குப் பிறகு மறுபடி அனைத்து கடவுள்களும் வந்துவிட்டனர் என்பதும் வரலாறு.
மருத்துவத் துறையும் ஆச்சரியத்தக்க விதத்தில் இருந்தது என்கிறார் மதன். சாதாரண தலைவலி, காடராக்ட் (கண் அறுவைச் சிகிச்சை) முதல் தலையில் ஆழமான வெட்டுக் காயம் ஏற்பட்டால் செய்ய வேண்டிய மருத்துவம் வரை அனைத்திலும் தேர்ந்தவர்களாக கிரேக்கர்கள், எகிப்தியர்கள் இருந்தார்களாம்.
விளையாட்டுத் துறையில் கிரேக்கர்கள் மிகவும் திறமையுள்ளவர்களாக இருந்தார்கள். பல்வேறு போட்டிகள், அதற்கான விதிமுறைகள், வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் என பலவற்றை நடைமுறைப்படுத்திய அவர்கள் காலத்தில்தான், ஒலிம்பிக்ஸ் போட்டியும் துவங்கியுள்ளது.
மேதைகள், அறிஞர்கள் பலரும் வாழ்ந்த காலகட்டம் அது. தத்துவ மேதையான சாக்ரடீஸ் மேல், நாட்டில் குழப்பம் விளைவித்ததாகவும், ஆட்சிக்கு எதிராக புரட்சி நடத்தியதாகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஒரே ஒரு முறை மன்னிப்பு கேட்டுவிட்டால் விட்டுவிடுகிறோம் என்றதையும் அந்த மேதை மறுத்துவிட, விஷம் குடித்து இறக்க வேண்டும் என்ற தண்டனை விதிக்கப்பட்டது. அவரது வழக்கு குறித்த அனைத்து விவாதங்களையும் அவரது சீடர் ப்ளேடோ மிகவும் விவரமாகக் குறித்து வைத்துள்ளார். ப்ளேட்டோவும் ஒரு பெரிய அறிஞரே. அவரது சீடர் அரிஸ்டாட்டில். இவர்களைப் பற்றி ஓரிரு அத்தியாயங்களில் மிகவும் அருமையாக விளக்கியுள்ளார் மதன்.
பின்னர் வந்த அலெக்சாண்டர் இந்தியா வரை படையெடுத்து வந்ததில், மௌரியர்களைப் பற்றிய பல விவரங்கள் தெரிய வருகிறது. சந்திரகுப்த மௌரியரின் காலம் இந்தியாவின் பொற்காலம் என பலரும் அறிந்திருக்கலாம். அவரது குரு சாணக்கியர். இவர்களது வீரம், பக்தி, மேலாண்மை குறித்தும் பல அரிய தகவல்களை இந்தப் புத்தகத்தில் படிக்கலாம்.
இப்படி, ஆட்சி, மருத்துவம், விளையாட்டு, தத்துவம் ஆகிய அனைத்திலும் மேம்பட்டிருந்தனர் கிரேக்கர்கள், எகிப்தியர்கள் மற்றும் இந்தியர்கள் என்று படிக்கும்போது அவர்களைப் பற்றி மேலும் அறிய வேறு சில புத்தகங்களை படிக்க வேண்டும் என்று தோன்றும். அதுவே இந்த புத்தகத்தின் நோக்கம் மற்றும் வெற்றியாகும்.
***
No comments:
Post a Comment