ஒரு முருங்கைமரம் - ஒரு பசு - ஒரு வெட்டரிவாள் மூன்றுமிருந்தால் எண்பது சதுர அடியில் அறுபது வருடங்களைப் பத்து மைல் சுற்றளவில் வாழ்ந்துவிட்டுப் போய்விட முடிகிறது.
|
இந்தப் பூக்கள் விற்பனைக்கல்ல, இந்தக் குளத்தில் கல்லெறிந்தவர்கள், என் பழைய பனையோலைகள், கொஞ்சம் தேனீர் நிறைய வானம், தண்ணீர் தேசம், பெய்யெனப் பெய்யும் மழை, கவிராஜன் கதை - இவையெல்லாம் நான் வாசித்த (அ) புரட்டிப் பார்த்த வைரமுத்துவின் இதர படைப்புகள். இன்னமும் ஒன்றிரண்டு புத்தகங்களின் பெயர்களை நான் மறந்திருக்கலாம். படித்தபோது ஆஹாகாரம் போட்டுக் கொண்டு இவற்றில் சிலவற்றைச் சிலாகித்து வாசித்திருக்கலாம் நான். ஆனால், நிச்சயமாக இவற்றில் எந்த நூலும் என்னை எந்த விதத்திலும் எள்ளளவும் அசைத்தவை அல்ல.
இந்தக் கள்ளிக்காட்டு இதிகாசம் அப்படியொரு பத்தோடு பதினோராம் நூல் அல்ல. விகடனில் வெளிவந்த பொழுதில் வாரந்தவறாமல் வாசித்த தொடர். ஒருவகையில் இது மனசுக்கு மிகவும் நெருக்கமான நூல். காரணம்? ஆனந்த விகடன் அல்ல, வைரமுத்து என்னும் சினிமாக் கவிஞன் அல்ல, நூலின் அழுகாச்சி மூட்டும் கதைக்களனும் அல்ல. பின்னே? அந்தக் கதை சொல்லப்பட்ட முறை. கதைக்குள் வாழும் கதாபாத்திரங்கள். கதையோடே பின்னப்பட்ட நூற்றுக்கணக்கான நுண்ணிய தகவல்கள், இன்னும் நிறைய.
கள்ளிக்காட்டு இதிகாசத்தை நிறைய பேர் அத்தனை எளிமையாக புறங்கையால் தள்ளுவதைப் பார்க்கிறேன். சுமார் பத்து ஆண்டுகளுக்கு முன் வாசித்த கள்ளிக்காட்டு இதிகாசத்தை இப்போது மீண்டும் ஒருமுறை எடுத்துப் புரட்டிப் பார்க்க என்னை உந்தியதும் அப்படிப்பட்ட ஒரு சமீபத்தைய புறந்தள்ளலே.
அந்தவகைப் புறந்தள்ளல்களுக்கு இந்தப்புத்தகம் ஒரு சினிமாக்காரனால் எழுதப்பட்டது காரணமாக இருக்கலாம். அல்லது இந்தப் படைப்பிற்கு அகாடமி விருது என்னும் கௌரவம் கிடைத்ததும் காரணமாக இருக்கலாம். நல்லவேளையாக நான் வைரமுத்துவின் வெறித்தனமான ரசிகனாக இல்லாமல் போனதுவும், சாகித்ய அகாடமி விருது பெறுமுன் இந்த நூலை நான் வாசித்ததுவும் நல்லதாய்ப் போயிற்று. இந்த நூலை ரசிக்க அப்படிப்பட்ட இருவிதத் தடைகளும் எனக்கு இல்லை.
நம் மனசுக்கு ரொம்பவும் நெருக்கமான உணர்வுகள் ஒருவகையில் “பேத்தல்களாக” இருக்கக்கூடும். ”ஸாரி கொஞ்சம் ஓவர்” ரகங்களாக இருக்கக்கூடும். வெளியிலிருந்து பார்த்தால் “நாடகத்தனமாய்” இருக்கக்கூடும். ஆனால், அவை எல்லாமுமே மறுக்கவியலாத உண்மையாக இருக்கக்கூடும். நமக்கே நமக்கானதாக, நம்மால் மட்டுமே அறிந்து கொள்ளத் தக்கனவாக இருக்கக்கூடும். கள்ளிக்காட்டு இதிகாசம் அப்படிப்பட்ட ஒரு புரிதலுடன் படிக்கத்தக்க நூலாகிறது.
சில படைப்புகள் (பாடல்கள், திரைப்படங்கள், எழுத்துகள்) காலங்கடந்து வாசிக்கப்படும்போது / பார்க்கப்படும்போது நம்மை “இதையா நாம் முன்பு ரசித்தோம்” என்ற எண்ணம் கொள்ள வைக்கும். அதே போன்றதொரு மனோநிலையை இந்தப் புத்தகமும் தந்துவிடுகிறதா பார்ப்போம் என்றே மறுவாசித்தலில் இறங்கினேன். வாசிக்க வாசிக்க, எத்தனை ஆண்டுகள் ஆனாலும் என் ஆரம்பகால வாசிப்பு தந்த சிலாகிப்பு மாறாது என்று உணர்ந்தேன். இப்போது நான் பார்க்கும் ஒரே ஒரு வித்தியாசம் என்னவென்றால், ஒரு திரைப்படம் ஆக்கத் தகுந்த நேர்த்தியுடனான ஒரு திரைக்கதை வடிவில் இதைச் சமைத்திருக்கிறார் வைரமுத்து.
சில பேர்தான் பிள்ளைகளைப் பெறுகிறார்கள்; பலபேர் பத்துமாதம் சுமந்து பிரச்னைகளைப் பெறுகிறார்கள்.
“ஒழச்சாத் தானப்பா ஒழக்கு நிறையும்”, என்றார் அவர். “கழுத பேஞ்சா கம்மா நெறையப்போகுது?” என்றான் அவன். |
”அது வேறு உலகம்” - வைரமுத்து இப்படித்தான் துவங்குகிறார் இந்தப் படைப்பை.
1950’களில் வைகை அணை கட்டிய நேரத்தில் அரசாங்கத்தால் அதன் நீர்பிடிப்புப் பகுதியில் இருந்து துரத்தப்பட்ட ஒரு சாமானியனின் நிஜக்கதையைப் புனைவின் பின்னணியில் சொல்லியிருக்கிறார் வைரமுத்து. புனைவை நான் இங்கே ”பின்னணியில்” என்று குறித்தாலும், நிஜத்தில் புனைவே முன்னணியில் நிற்கிறது. அது வறட்டுத்தனமான ஒரு வாழ்க்கையைச் சொல்ல முக்கியப் பலமாகவும் ஆகிறது.
விவசாயத்தை நம்பி ஜீவனம் நடத்தும் ஒரு கள்ளிக்காட்டுக் கிழவர் பேயத்தேவரின் கதைதான் முன்னணியில் நிற்கும் அந்தப் பின்னணிப் புனைவு. துக்கிரிப் பயலான ஒரு தறுதலை மகன், விதவையாகி மறுமணம் கண்டு தடுக்கி விழுந்தால் பத்து பவுனுக்காய்க் கண்கசக்கி வாசல் வந்து நிற்கும் மகள், தன்னோடே வளரும் அவள் வயிற்றுப் பேரன், நோயாளியாக வீட்டில் முடங்கிய மனைவி என முக்கியப் பாத்திரங்கள். அவர்கள் எப்போதாவது தரும் சந்தோஷங்களும், எப்போதும் தந்து கொண்டிருக்கும் துயரங்களுமே கதை.
வறண்ட நிலத்தோடு மல்லுக்கு நிற்கும் பேயத்தேவர் கலப்பை பிடித்து ஏர் ஓட்டும் போதும், கிணறு தோண்டப் பாடுபடும் நேரங்களிலிலும் வாசிப்பிலேயே அந்தக் கிழ்வரின் வியர்வை மணத்தை நம்மால் உணரமுடிகிறது.
வெள்ளாவிச் சீலயின் உவர்மண் வாசனைக்குக் கீழே சின்னதாய் - சன்னமாய் - உரிமைக்காரன் மட்டும் உணருவதாய் - நாப்பத்தஞ்சு வருசமாய் நாசியில் படர்ந்திருக்கும் அனுபவமாய் - புடைவையின் வெந்து போகாத ஆன்மாவின் அடிமடிப்பி இன்னும் ஒட்டியிருந்தது அழ்கம்மாவின் அந்த வாசம்.
|
ஒரு கிழவனின் தினசரித் துயரை எத்தனை தூரம்தான் வாசிப்பீர்கள்? இங்கே நான் கட்டம் கட்டிச் சுட்டிக் காட்டியிருப்பன போன்ற நெருக்கமான சம்பவங்கள், உரையாடல்கள், அனுபவங்கள் மூலமாக அந்தத் துயரத்தையும் நம்மை வாசிக்க வைக்கிறார் வைரமுத்து.
கதாபாத்திரங்களின் குணாதிசயங்களை, அவர்களின் சின்னச் சின்ன அசைவுகளை நுணுக்கமாக வைரமுத்து விவரிப்பதே அலாதியானது. குறிப்பிட்டுச் சொல்லவேண்டும் என்றால், வண்டி நாயக்கர் சூடான சுய்யத்தை டீயில் அமுக்கித் தின்னுவதைச் சொல்லும் இடம்.
கதையினூடே புளி ஊறுகாய் செய்வது தொடங்கி, கோழிக் குழம்பு வைப்பது, வண்ணான் தொழில் சொல்வது, சிதை எரிப்பது, கிணறு வெட்டுவது, மார்க்க கல்யாணம் என்னும் சுன்னத் செய்வது, பசுவுக்குப் பிரசவம் பார்ப்பது போன்ற நிறைய விஷயங்களை அறியத் தருகிறார்.
கள்ளிக்காட்டு இதிகாசம் - வைரமுத்து
வெளியீடு: சூர்யா லிட்ரேச்சர் (பி) லிமிடெட்.
376 பக்கங்கள் / விலை: ரூ. 150/-
No comments:
Post a Comment