பெயர் :அங்கே இப்ப என்ன நேரம்
ஆசிரியர் : அ. முத்துலிங்கம்
உள்ளடக்கம் : கட்டுரைகள்
முகவரி :67, peters road, Royapettai.
Chennai-14.
Phone : +91-9884196552
E-mail :tamizhininool@yahoo.co.in
இப்ப
வரைக்கும் , நிறைய தமிழ் எழுத்தாளர்கள் தமிழ் நாட்டில் இருந்து எழுதின புத்தகம்
படிச்சு இருந்தாலும், இலங்கை தமிழ் எழுத்தாளர் எழுதின புத்தகம் ஒண்ணுகூட
படிச்சது இல்லை. கொஞ்சம் தயக்கத்தோடுதான் அ. முத்துலிங்கம் எழுதின "அங்கே
இப்ப என்ன நேரம்" புத்தகம் படிக்க ஆரம்பிச்சேன், சில இடங்களில், நான்
படித்திராத தமிழ் வார்த்தைகள் உபயோகப்படுத்தி இருந்தாலும், படிச்சு முடிச்ச
உடனே மனதில் ஆழமா தங்கிவிட்டார்.
இந்த புத்தகத்தில் கனடா வாழ்க்கை, சந்திப்பு, ரசனை, பயணம், கண்டதும் கேட்டதும், மொழிபெயர்ப்பு, விமர்சனம், அனுபவக் கதை, சிந்திப்பதற்கு என்ற ஒன்பது தலைப்புகளில் 48 கட்டுரைகள், ஒவ்வொரு தலைப்பிலும் 5 முதல் 8 கட்டுரைகள்.
"கனடா
வாழ்க்கை" என்ற தலைப்பில் கனடாவில் கடன் அட்டை பெறுவதில் இருந்து, வீடு
வாங்குவது, ஓட்டுனர் உரிமம் வாங்குவது உள்ள சிரமம்களை சொல்கிறார்.
உதாரணத்திற்கு,
"
நான் கார் ஓட்டுவதற்கு பத்து
விரல்களையும் பாவிக்கிறேன். கனடாவில் ஒன்பது விரல்களில் தான் கார் ஓட்ட
வேண்டும். அப்படித்தான் பலர் செய்கிறார்கள் . வலது கையின் நடுவிரலை எதிரே
வருபவர்களையும், பின்னுக்கு இருந்து வந்து வேகமாக முன்னேறுபவர்களையும்
, குறுக்கே மறிப்பவர்களையும் வசை பாடுவதற்கு தனியே வைத்திருக்க வேண்டும்.
என் குரு அதையும் படிப்பிக்கவில்லை".
"கனடாவில் சூப்பர் மார்க்கெட்"என்ற கட்டுரையில் அங்கு இருக்கும் சூப்பர் மார்க்கெட்டில் தினமும் சுற்றுவது,
கண்ணில் படும் பொருட்களை வாங்குவது, அங்கு கிடைக்கும் இலவச சாம்பிள்களை
ருசி பார்ப்பது என்றெல்லாம் எல்லாவற்றையும் ஒழுங்காகச் செய்கிறார், ஆனால்
மனைவி வாங்கிவர சொன்ன பொருட்களை மட்டும் மறந்துவிடுகிறார்.
"சந்திப்பு" தலைப்பில் சுந்தர ராமசாமியை கலிபோர்னியாயில் சந்தித்ததும், டேவிட் பெஸ்மொஸ்கிஸ் என்ற எழுத்தாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக முன்னாள் தமிழ் துறை பேராசிரியர் தொ .பரமசிவன், கனடாவில் புகழ் பெற்ற நாடக நடிகர், நெறியாளர், "Dean gilmour" பற்றி எழுதுகிறார்.
நடிகை பத்மினி கனடாவில் நடந்த
விழாவிற்கு சிறப்பு விருந்தினரராக வருகிறார், அ . முத்துலிங்கம் வீட்டில்
தங்குகிறார். நிறைய பேர் பத்மினியிடம் நீங்கள் ஏன் சிவாஜி கணேசனை திருமணம்
செய்துக் கொள்ளவில்லை என கேட்கும்போது அமைதியாக இருந்து விடுகிறார். ஆனால்
நிகழ்ச்சி எல்லாம் முடிந்து, யாரும் அதை பற்றி கேட்காத போது, "நான் நாயர் பொண்ணு, அவர் கள்ளர் ஜாதி" என்று அதன் காரணம்
சொல்லும் போது , ஒரு சின்ன அதிர்ச்சி ஏற்படுகிறது.
சின்ன வயதில் நாம் விரும்பிச் செய்த விஷயங்கள், சில வருடங்களில்
மறந்துவிடுகிறோம் , ஆனால் அந்த நினைவுகள் அப்படியே மனதில் தங்கி
விடுகின்றன.. கிராமத்தில் கூத்து பார்த்து பழக்கப்பட்டு இவர் ,
டொராண்டோவில் காரில் செல்லும் போது "காத்தவராயன் கூத்து" விளம்பரம்
கண்ணில்பட உள்ளே செல்கிறார், இந்த கூத்து மறுபடியும் இவருக்குத் தனது பழைய
நினைவுகளை ஞாபகபடுத்துகிறது, அதே மாதிரி கூத்து மீண்டும் நடக்குமா, இது
மாதிரி கூத்து விளம்பரம் இன்னும் தன் கண்ணில் படவே இல்லை என
வருத்தப்படுகிறார்.
நாம் எது இலக்கியம் என வரையறை
செய்துகொண்டு இருக்கும்போது, கனடாவில் 2001ஆம் ஆண்டு பெண்களுக்கு ஆன டென்னிஸ் இறுதி போட்டியை காண செல்கிறார். இந்த போட்டி ஒரு மறக்க முடியாத அனுபவம் என்று சொல்லி விளையாட்டை பற்றி எழுதுவதும் இலக்கியம் தான் என்று சொல்கிறார். அதற்கு எடுத்துகாட்டாக குதிரை பந்தயம் முதல், ஜப்பானிய போர்
பிரபுகள், குத்துச் சண்டை போட்டிகள் பற்றி எழுதிய புத்தகங்களை இப்படி
குறிப்பிடுகிறார்,
".. ஆனால்
அவை கலைதன்மையுடன் படைக்கபட்டிருந்தன, அந்த வரிகளில் இலக்கியம் இருந்தது,
இலக்கியம் படைப்பதற்கு வரையறை கிடையாது, அது குதிரை ரேஸிலும் இருக்கும்,
குத்துச் சண்டையிலும் இருக்கும்".
இந்தப் புத்தகத்தின் மிக சிறந்த விஷயம், ஆசிரியர் , தான் படித்த புத்தகங்கள், சந்தித்த எழுத்தாளர்கள் , அவர்களுக்கு பிடித்த எழுத்தாளார்கள் என குறிப்பிட்டுக் கொண்டே போகிறார். அதேமாதிரி தான் பார்த்து ரசித்த படங்களையும் பகிரும்போது, மனதுக்கு மிக நெருக்கமாகி விடுகிறார். நிறைய நாடுகளில் வேலை பார்த்த அனுபவம் இருப்பதால், அங்கே இருக்கும் மனிதர்கள் , அவர்களின் குணாதியசங்கள் என்று சொல்லிக் கொண்டே போகிறார், பாகிஸ்தானில் வேலை செய்தபோது, இந்திய தூதரகம் விடுத்த அழைப்பில் கலந்துக் கொள்ள, பாகிஸ்தான் உளவுத்துறை கண்காணித்தது முதல், சூடானில் வேலை செய்த போது , தெற்கு சூடானில் இருந்து வருபவர்களைத் தனியாக ஒதுக்குவது, அப்படி வேலை செய்த ஒருவர் திடீர் எனக் காரணம் இல்லாமல் மறைந்து விடுவது பற்றி எழுதும் போது மனதை என்னவோ செய்கிறது.
இந்தப் புத்தகத்தில் ரஷ்யாவில் இருந்து குடிபெயர்ந்து கனடாவில் வாழும் எழுத்தாளர், "டேவிட் பெஸ்மொஸ்கிஸ்" சந்தித்து நேர்காணல் செய்யும்போது அவரிடம் "உங்கள் சிறுகதையில் அங்கங்கே ஹீப்ரூ வார்த்தைகள் வருகின்றன், கதையைப் படிக்கும்போது புரிதலுக்கு கஷ்டமாக இருக்காதா என கேட்க " ,டேவிட் அதற்கு , " மொத்த கதையின் உணர்ச்சியையும் உள்வாங்குவது தான் முக்கியம்" என கூறுகிறார்.
அவர் சொன்னது முத்துலிங்கத்துக்கும் பொருந்தும். எனக்குத் தெரியாத வார்த்தைகள் புத்தகம் முழுவதும் விரவி இருந்தாலும், மொத்த புத்தகமும் , வெளிநாட்டில் இருந்து வரும் நமது நெருங்கிய நண்பர் சொல்லும் அனுபவங்கள் போல் உள்ளது.
No comments:
Post a Comment