எல்லாக் குடும்பத்துக்கும் ஒரு கதை இருக்கும். எழுதப்படாத கதை. ‘அந்த
காலத்துல நாங்களெல்லாம்…’னு தாத்தா, ‘உன் வயசுல நான் வேலைக்குப் போய், எங்க அப்பனுக்கும்
அம்மைக்கும் சோறு போட்டேன் தெரியுமா?’ என்று அப்பாவும், ‘எங்கம்மா வயித்துல நான் பொண்ணாப்
பொறந்து நான் பட்ட கஷ்டமெல்லாம் போதும்டா?’ன்னு அம்மாவும் சொல்வதற்கு பின்னால் நிறைய
கதைகள் இருக்கும். எவ்வளவோ பிரச்சனைகள் வந்தும் யாரும் சோர்ந்து உட்கார்ந்து விடவில்லை,
அவர்கள் அங்கேயே போதுமென்று நின்றுவிட்டிருந்தால் இன்றைக்கு நாம் இங்கே வந்திருக்க
மாட்டோம். நம்முடைய ஆரம்பகால நிலைக்கு முந்தைய தலைமுறையினர் காரணமாக இருக்கலாம். அதற்கு
மேலே ஏறிக் கொள்வதோ, இன்னும் கீழே போவதோ நம்முடைய சாமர்த்தியம்.
அப்பம் வடை தயிர்சாதமும் ஒரு குடும்பத்தின் கதை. ஐந்து தலைமுறைக்கு
நீளும் கதை. வைதீகத்தில் இனிமேலும் மதிப்பு கிடைக்காது என்ற நிலையில் சாம்பசிவ சாஸ்திரி,
தன்னுடைய மச்சினன்/மாப்பிள்ளை விஸ்வநாதன் மற்றும் மகன் சதாசிவனுடன் ஓட்டல் தொழிலுக்கு
மாறுகிறார். மாயவரம் ரயில்வே ஸ்டேஷனில் அனுமதி வாங்கி காலையும் மாலையும் அப்பம் வடை
தயிர்சாதம் விற்கத் துவங்குகிறார்கள். அது பெருகி, விஸ்வநாதன் இன்னும் சில ரயில்வே
ஸ்டேஷனிகளில் கடை திறக்கிறார்; சதாசிவம் மாயவரத்தில் ‘சங்கரபவன்’ திறக்கிறார். பின்னர்
விஸ்வநாதனும் சாம்பசிவ சாஸ்திரியும் சென்னையில் ஹோட்டல் திறக்கிறார்கள். சதாசிவன் மாயவரம்
ஹோட்டலை கவனித்துக் கொண்டு, பிள்ளை வைத்தீஸ்வரனை மட்டும் சென்னைக்கு பெரியவர்களுடன்
அனுப்புகிறார்.
வைத்தீஸ்வரன் எம்.ஏ படித்துவிட்டு கோட்டையில் குமாஸ்தாவாகச்
சேர்கிறார். அவருடைய மூத்தமகன் நீலகண்டன், பம்பாயில் ஒரு நெதர்லாந்து கப்பல் முதலாளியிடம்
வேலைக்குச் சேர்ந்து பின் சொந்தக் கப்பல் வாங்கி உயர்கிறார். பின் அவருடைய மகன் மகாதேவன்,
வளைகுடாவுக்குச் சென்று நிறைய சம்பாதித்துத் திரும்புகிறார்.
மகாதேவனுடைய மகன், ஷங்கருக்கு
அமெரிக்காவில் வேலை கிடைத்திருப்பதில் கதை தொடங்கி பின்நோக்கிப் போகிறது. இடம், தொழில்,
மொழி என்று ஒவ்வொன்றையும் காலத்திற்கேற்ப மாற்றிக் கொள்ளும் அந்தக் குடும்பத்திற்கு
கடைசியில் அப்பம் வடை தயிர்சாதம் விற்பது குலசாமிக்கு மொட்டை போடுவது போல ஒரு வேண்டுதலாக
நிலைத்துவிடுகிறது.
அந்த வீட்டுப் பிள்ளைகள், அந்தந்த நேரத்தில் என்ன தொழில் என்ன
இடம் செழிப்பாக இருந்ததோ அங்கே போய்ச் சேர்கிறார்கள். பொறாமை, த்ரோகம், சூழ்ச்சி, வஞ்சம்
என்று எதுவும் இல்லை. அல்லது சொல்லப்படவில்லை. அந்தக் குடும்பம் தன்னுடைய வைராக்கியத்தாலும்,
ஒழுக்கத்தாலும், உழைப்பாலும் முன்னேறிக் கொண்டே போகிறது. வைதீகத்திலிருந்து ஓட்டல்
தொழிலில் விஸ்வரூபம் எடுக்கும் அவர்கள், வைத்தீஸ்வரனின் காலத்தில் மேலேயும் போகாமல்
கீழேயும் இறங்காமல் தேங்கிவிடுகிறார்கள். வைத்தீஸ்வரனுக்கு எம்.ஏ பாஸ் பண்ணி கோட்டையில்
வேலைக்குச் சேர வேண்டும் என்பதைத் தாண்டி எந்த லட்சியமும் இல்லை. பின், நீலகண்டனின்
பாய்ச்சல். பிறகு, மகாதேவன் நிம்மதி போதும் என்று சம்பாதித்ததை முதலீடு செய்தி உட்கார்ந்துவிடுகிறார்.
கதையின் காலம் வெளிப்படையாக இன்ன இன்ன வருடம் என்று சொல்லப்படவில்லை.
மாறாக, பிரிட்டிஷ் ஆட்சி, ஆஷ் துரை கொலை, இரண்டு உலகப் போர்கள், காந்தியின் வருகை,
நேதாஜி என்று இந்திய சுதந்திரப் போராட்டத்தை ஒட்டியே கதை நகர்கிறது. தொடக்கத்தில் தஞ்சை
ஜில்லாவில் ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்கள் வெள்ளைக்காரன் கோட்டையில் வேலை தேடி
மதராஸுக்குப் பெயர்கிறார்கள். வாஞ்சி நாதன் ஆஷ் துரையைச் சுட்டுக் கொன்றுவிட, மாயவரம்
ரயில்வே ஸ்டேஷனில் வியாபாரத்திற்கு கெடுபிடி அதிகரிக்கிறது (1912). சாஸ்திரிகளும் விஸ்வநாதனும்
சென்னைக்குப் போகிறார்கள்; அப்போது தான் எம்டன் குண்டு போட்டுப் போயிருக்கிறது என்பதால்
சென்னையில் மனை விலை வீழ்ந்துவிட்டது (1914). மக்கள் மதராஸை விட்டுவிட்டு மீண்டும்
மாயவரத்துக்கே திரும்புகிறார்கள். காந்தியின் வருகை (1915க்கு பிறகு). வைத்தீஸ்வரனின்
நண்பர் முதலியார் நேதாஜியின் படையில் சேர்கிறார். (தோராமயாக 1944). மகாதேவன் பிறக்கிறார்
(ஆகஸ்ட் 15, 1947). காந்தியைச் சுட்டுக்கொன்ற அதிர்ச்சியில் சதாசிவம் இறக்கிறார்
(1948). கடைசியில் ஷங்கர் கணினி சம்பந்தமான வேலைக்குப் போகிறான் (2000). முதலில் காலத்தை
வெளிப்படையாக சொல்லியிருக்கலாம் என்று தோன்றியது. இப்போது அப்படித் தோன்றவில்லை.
கதை கிட்டத்தட்ட ஒரு நூற்றாண்டுக்கு நீள்கிறது. பிராமணக் குடும்பத்துக்
கதை. இந்தகாலகட்டத்தை எடுத்துக் கொண்டதற்கான காரணம்? உட்கார்ந்த இடத்தில் மற்றவர்களை
ஏவியும், வேதத்தைக் கொண்டும் இன்னமும் பிழைப்பு நடத்த முடியாது என்பதை அந்தக் குடும்பம்
சுதாரித்துக் கொண்டு, வியாபாரத்தில் இறங்குகிறது. நகரங்களுக்கு பிழைக்கப்போவது தன்னுடைய ஜபதபங்ளை குலைத்துவிடக்கூடும்
என்று முதலில் நம்பும் சாம்பசிவ சாஸ்திரிகள், பின்னர் நகரங்களைவிட்டால் மேலே போவதற்கு
வேறு வழியில்லை என்ற முடிவுக்குவருகிறார். அதையே அந்தக் குடும்பமும் பின்தொடர்கிறது.
மீண்டும் தங்களுடைய பழைய நிலைக்குத் திரும்பிப் போவதைப் பற்றி அக்குடும்பம் சிந்திக்கவில்லை;
ஏதோ பெரிய பாரம்பரியத்தை விட்டு விலகிப் போகிறோம் என்ற கலக்கமும் இல்லை. அவர்கள்
தங்களுடைய நிலைக்கு வருத்தப்படவில்லை. நீலகண்டன் பாம்பேக்குப் போகும் போது அவருடைய
தாத்தா விஸ்வநாதன் சொல்கிறார்,
“பாம்பேக்குப் போயிட்டு, மயிலாப்பூரையும் அம்மாவையும் அப்பாவையும் நினைச்சுண்டிருக்காதே... பாம்பேயே உன்னுடைய இடம். பாம்பேயே உன் வீடுன்னு வெச்சுக்கோ. நான் மாயவரத்தை விட்டுட்டு மெட்ராஸ் தான் எனக்குன்னு எப்படி வந்தேனோ... அதே போல, இந்த மண்ணை நன்னா உதறிட்டு, பாம்பேயை இறுகப் பிடிச்சுக்கோ. ஊரை கெட்டியா பிடிச்சுண்டா, உத்தியோகத்துல பிரியம் ஏற்படும். சொந்த ஊர் நினைப்பே இருந்ததுன்னா, உத்தியோகம் ஒட்டாது. உத்தியோகம் ஒட்டலைன்னா உயர முடியாது. உயரம் இல்லைன்னா, தாழ்த்தித்தான் பேசுவான். மண்மேல பாசம் வெச்சவன், மண்ணை விட்டுப் போகக்கூடாது. போறவன், பாசம் வைக்கப்படாது...’
கதாபாத்திரங்கள் சுதந்திரப் போராட்டத்தைப் பற்றிப் போதும் போதும்
என்கிற அளவுக்குப் பேசுகிறார்கள். உலகப்போரின் விளைவுகள் பற்றி அலசுகிறார்கள். உலகப்போரில்
இந்தியாவுக்கு எந்த பெரிய ஆபத்தும் வராது என்று ஆருடம் சொல்கிறார்கள். நீலகண்டனுக்கு
சுதந்திர தினத்தன்று குழந்தை பிறப்பதும், காந்தியைச் சுட்டபின் சதாசிவம் பித்துப் பிடித்து
இறப்பதும் திணிக்கப்பட்டது போல் ஒரு உணர்வு. வைத்தீஸ்வரன் தான் சென்னையில் ஒரு கூட்டத்தில்
காந்தியைச் சந்திக்கிறார்; காந்தியிடம் பேசுகிறார். காந்தியின் பால் ஈர்க்கப்படுகிறார்.
காந்தியின் அறிவுரைப்படி குமாஸ்தா வேலையை விட்டுவிடாமல் தொடர்கிறார். ஆனால், சதாசிவத்திற்கு
காந்தியின் பால் இருக்கும் பக்தியென்பது, காந்தி இறந்த அதிர்ச்சியில் தான் வெளிப்படுகிறது.
அந்த அதிர்ச்சியில் அவர் இறந்து போகிறார். பல இடங்களில் கதையும், சுதந்திரப்போராட்டமும்
ஒன்றுக்கொன்று ஒட்டுதல் இல்லாமல் போய்விடுகிறது.
பாலகுமாரனுடைய ரசிகர்கள் பலருக்கு அவருடைய ஆரம்பகாலக் கதைகள்
பிடித்த அளவுக்கு அப்பம் வடை தயிர்சாதம் பிடிக்கவில்லை.
மெர்க்குரிப் பூக்களையோ, இரும்பு குதிரைகளையோ
எடுத்துக்கொண்டால், அப்பம் வடை தயிர்சாததில் அதுவரை பார்த்திராத பாலகுமாரன் தான்
தெரிவார். அவருடைய மற்ற படைப்புகள் பேசப்பட்ட அளவுக்கு அப்பம் வடை தயிர்சாதம் பேசப்பட்டதாகத் தெரியவில்லை. பிராமணப் பின்னனியை
நீக்கிவிட்டாலும் கூட, இந்தக் கதையின் பொருளில் எந்த மாற்றமும் இருக்காது. வாழ்க்கை
என்பது மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டேயிருக்கிறது. விழுமியங்கள் மாறிக்
கொண்டேயிருக்கின்றன. முன்னால் போக நினைப்பவன் செய்யவேண்டியது, தனக்கென ஒரு ஒழுக்கத்தை
ஏற்றுக்கொண்டு, தான் கைவிட்ட விஷயங்களைப் பற்றிக் கவலைப்படாமல், தயங்காமல் உழைப்பதே.
அப்பம், வடை, தயிர்சாதம் - பாலகுமாரன்
பக்கங்கள்: 368. விலை ரூ. 115/-
விசா பதிப்பகம்
என்னவோ, அப்பம் வடை தயிர்சாதத்தில் என்னை கவர்ந்தது ஒவ்வொரு காலகட்டத்திலும் அந்த குடும்பம் முன்னேற உழைத்ததும், அதற்காக தங்கள் தொழிலினை மாற்றிக் கொண்டே போனதும்தான், கதையின் துவக்கத்தினை கனவில் ஆரம்பிப்பது பாலகுமாரனின் க்ள்ஷே.
ReplyDeleteவிகடனில் தொடராக வந்தபோது படித்தது :) இவ்வளவு யோசிக்கல படிக்கும்போது அவங்க ஒவ்வொரு கட்டமா முன்னேறுவதும், காயத்ரி மந்திரம் பத்தியெல்லாம் சொல்றதும் சுவாரஸ்யமா இருக்கும், வருஷமெல்லாம் போட்டு விளக்கியிருக்கீங்க, நல்ல அறிமுகம் :)
ReplyDelete