எது இலக்கியம் என்பதை இப்போதெல்லாம் யாரும் அவ்வளவு தீவிரமாக வரையறுக்க முயற்சி செய்வதில்லை - இது இலக்கியம் என்று கொண்டாடப்படும் படைப்புகளைக் கொண்டு எதுவெல்லாம் இலக்கியம் என்று நாமேதான் ஓரளவுக்காவது அனுமானித்துக் கொள்ள வேண்டியிருக்கிறது.
முதலாவதாக, அர்த்தமுள்ள ஆவணப்படுத்துதல் இலக்கியமாகப் பேசப்படுகிறது. அது மட்டும் போதுமா என்றால், இல்லைதான், ஆனால் முதல்நிலையில் இலக்கியமாகப் பேசப்பட அதுவே போதுமானதாக இருக்கிறது. இராண்டாவதாக, ஒரு படைப்பைப் படித்தபின் அதைப் பற்றி எவ்வளவு பேசியும் தீராமல், தொடரும் வாசிப்புக்கும் கற்பனைக்கும் இடம் கொடுக்கும் படைப்புகள் இலக்கியமாக வகைமைப்படுத்தப்படுகின்றன, எளிய தீர்வுகளை அளிக்க மறுக்கும் இவற்றில் வெளிப்படும் சிக்கலான கதையமைப்பு வெவ்வேறு வாசகர்கள் விமர்சகர்கள் பார்வையில் பல பரிமாணங்களை வெளிப்படுத்துகின்றன. மூன்றாவதாக, ஒரு குறிப்பிட்ட பார்வையை, ஒரு எழுத்தாளனின் ஆளுமை சார்ந்த ஒருமைப்பாட்டை, அவனது அனைத்து படைப்புகளின் வழியாகவும் உணர்த்தும் எழுத்து இலக்கியமாக எடுத்துக் கொள்ளப்படுகிறது. இன்னும் பல கருதுகோள்கள் இருக்கலாம், எனக்கு இப்போது இவைதான் நினைவுக்கு வருகின்றன.
இவை மூன்றையும் காணும் சாத்தியம் சு. வேணுகோபாலின் "திசையெல்லாம் நெருஞ்சி" என்ற தொகுப்பில் இருக்கின்றது, எனவே சு. வேணுகோபால் ஒரு இலக்கியவாதிதான் என்று நான் சான்றிதழ் கொடுக்க வேண்டியதில்லை. அவரது படைப்பாற்றல் பலரால் அங்கீகரிக்கப்பட்டு உயர் விருதுகளால் கௌரவிக்கப்பட்ட ஒன்றுதான் - உண்மையில், ஏன் இவரது எழுத்து இலக்கியமாகக் கருதப்படுகிறது என்ற என் கேள்விக்கான விடைகளே முந்தைய பத்தியின் எண்ணங்கள்.
"ஆகட்டுமண்ணே, ஊத்தப்பம் ஒண்ணு, வெங்காயம் நெறையப் போட்டு ஒரு ஆம்லெட்டு" மீசை சொல்லி வாய் மூடியிருக்காது, குழந்தைக்குரல் ஒன்று வீல் என்று பெருங்குரலில் கத்தியது. சாப்பிட்டுக் கொண்டிருந்தவர்கள், ட்ரைவர்கள், கிளீனர்கள், கடைக்காரர்கள் விழுந்தடித்து ரோட்டை நோக்கி ஓடினார்கள். தொடை எலும்புகள் இருட்டிலும் தெரிந்தன. சதை தாமரை இலையளவு நசிந்து சிதைந்திருந்தது. "பெட்ராமாக்ஸ் பெட்ராமாக்ஸ்" என்று பக்கத்துக் கடைக்காரன் கத்த பேட்டரிகளையும் பெட்ராமாக்ஸ் விளக்கையும் தூக்கிக்கொண்டு ஓடிவந்தார்கள். தெற்குப் பள்ளத்திலிருந்து சேலையைக் குத்தாங்கூராகப் பொத்தி ஏறியவள் "ஐயையோ... ஏஞ் செல்லக்குட்டி போச்சே" என்று கதறி மார்பில் படபடவென அடித்தாள். அடித்த லாரிக்காரன் நிறுத்தாமல் போய்விட்டான். ரோட்டில் நசுங்கிக் கிடந்த குழந்தையை அவள் அள்ளி மடியில் போட்டாள். இரண்டு தொடை எலும்புகள் சதைத்துண்டுகளைக் கிழித்துக்கொண்டு மேலேறின. ரத்தம் இரண்டு பாகங்களுக்குத் தெரித்துக் கிடந்தது. "ஏங் கண்ணே! ஒனக்காகத் தாண்டா இந்த ஈனக் காரியத்தப் பண்ணப் போனேன்!". மார்பில் பட்பட்டென்று அடித்தாள். சீலை சுருண்டு அப்படியே விழுந்தது. சட்டைப் பொத்தான் போடாமல் விழுந்தடித்து ஓடிவந்திருக்கிறாள் என்பதை மார்பு காட்டியது. இரண்டு கைகளால் வயிற்றில் ஓங்கி ஓங்கிக் குத்தியபடி "எந் தங்கத்த நானே கொன்னுட்டேன், நானே கொன்னுட்டேன்," மீசையின் மனைவி குந்தாணி அவளை அணைத்தபடி அழுதாள். அவளைத் தூக்க முடியவில்லை. சிதைந்த உருவை மடியில் அணைத்திருக்க அவளை பழைய ரோட்டுப்பக்கம் நகர்த்தினர். புளியமரத்திற்குப் பின் குழந்தைக்காக விரித்துப் போட்ட சாக்கும் சாக்கின்மீது மடித்துப் போட்ட போர்வையும் அலுங்காமல் கிடந்தது. "எம் பிள்ளையே போனப்புறம் நான் உசுரோட இருக்க மாட்டேன். எந் தங்கத்த தொலைச்ச பாவி நான். செல்லம வேணாம்டா இந்த மாரு," இரண்டு முலைகளையும் பிய்த்து எறிய நாக்கைத் துருத்தினாள். நகக்கண்கள் கிழிந்து ரத்தம் சொட்டியது மார்புகளிளிருந்து. அன்று இரவு முழுக்க மார்புகளைப் பிய்க்கின்ற கோர உருவே கண்முன் தோன்றியது. பின் அங்கு தங்கியிருக்கவே பயம் வந்துவிட்டது. "உம்மில் யார் பாபம் செய்யாதவர்களோ அவர்கள் இந்த விபச்சாரிமீது கல்லெறியுங்கள்" என்று உபதேசித்தவர் கிறிஸ்து. அவள் இந்துவாக இல்லாது கிறித்துவச்சியாக இருந்திருந்தால் அந்த குழந்தையின் ரத்தத்தை சிந்த விட்டிருக்க மாட்டார் என்றொரு திடமான நம்பிக்கை உருவானதை அழிக்கவே முடியவில்லை...." - இரட்சணியம். |
ப்ளஸ் டூ பரிட்சையில் பெயிலாகி அந்தத் தோல்வியை எதிர்கொள்ளத் தவிக்கும் சிறுவன் - , தெரிந்தே செய்த பாபங்கள் அவனை வருத்துகின்றன இறை நம்பிக்கையைக் கொண்டு தன் குற்றவுணர்விலிருந்து மீள முயற்சிக்கிறான். அவன் அந்த இளம் வயதிலேயே சொந்தத்திலும் அயலிலும் பெண்களுடன் நம்ப முடியாத அளவுக்கு உறவு வைத்தவன்- அவனது நினைவுகளே கதை, அது கிறித்தவ நம்பிக்கையூடே. வெளிப்படுகிறது. இங்கு எடுத்தாளப்பட்டிருக்கும் மேற்கோளில் வருவதுபோல் எத்தனையோ முரண் நம்பிக்கைகள் ('பாபத்தின் கூலி மரணம்!). சுய ஏமாற்றுதல்கள், தோல்விகள்.
கதையின் இறுதி மிகக் கொடுமையானது. மூன்று வயதான தன் குழந்தையைப் போர்த்து மறைத்து, இவனுடன் உறவாடுகிறாள் எதிர்வீட்டுக்காரப் பெண் ("ச்சூ! பேயி வரும் கண்ண மூடு, கண்ண மூடு."). இதுவரையான இவனது குறுகிய வாழ்நாளில் இவனோடு கலவாடிய பெண்களில் அவளும் ஒருத்தி - கிளாடியா சித்திக்கு கருக்கலைப்பெல்லாம் நடந்திருக்கிறது. இவர்களின் உறவாடலைப் பார்த்துப் பழகிய அந்தக் குழந்தை. "ஏன் மாமா எங்க அம்மாகூட சண்ட போடுறீங்க? எனக்கு அழுகையா வருது" என்று கேட்கிறது. தேர்வு முடிவுகள் வெளிவந்த நாளில், முன்னர் இனித்த அந்தத் துன்ப நினைவுகளைச் சுமந்தபடி காலையில் காணாமல் போய் மாலையில் வீடு திரும்பும் இவனது கண்ணீரை "அழாத மாமா. அம்மா அழுது" என்று கதையின் முடிவில் அந்தக் குழந்தை துடைத்து விடுகிறது. அப்போது, ""என் நீதியின் வலது கரத்தினால் உன்னைத் தாங்குவேன்' என்பது போல் இருந்தது சிறுவனின் புன்சிரிப்பு" என்று தேவனை நினைத்து இவன் தன் குற்றவுணர்வின் துயர் நீங்கி மன அமைதி கொள்ளும் இடம் எவ்வளவு உயர்வானது! உண்மையான கிறித்தவ கதை என்ற ஆசுவாசம் ஏற்பட்டாலும், இந்த முடிவின் முரண் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறது. எத்தனையோ முறை தன்னை ஏமாற்றிக் கொண்டவனின் இன்னொரு ஏமாற்றுதலாக இதுவும் இருந்தால்? நாமும் அல்லவா ஏமாந்து போகிறோம்? இதுபோன்ற கதை மிக அபூர்வமானது. மனித உள்ளத்தின் இரட்டை இயல்பை மிக அழகாக வெளிப்படுத்தும் கதை.
வேணுகோபால் காமத்தை சிறப்பாக எழுதுபவர் என்பது உண்மைதான், அவர் அதை அடிப்படையில் அசிங்கமான ஒன்றாகவோ அதீதமான ஒன்றாகவோ எழுதுவதில்லை, பெரும்பாலும் நாம் சினிமாக்களில் பார்த்த வகை விவரணைகள்தான் - மார்பைத் தொடுவது, வயிற்றைத் தடவுவது என்ற பார்த்துப் பார்த்து புளித்துப் போன காமம்தான் (தொப்புள்கூட உண்டு என்று நினைக்கிறேன்!) - ஆனால் அவை அவரது பாத்திரங்களின் உணர்வுகளோடு கலந்து வரும்போது வேறொரு தளத்துக்குச் சென்று விடுகின்றன.
இந்தக் கதையோடு ஒப்பிட்டால் உருமால் கட்டு மற்றும் திசையெல்லாம் நெருஞ்சி ஆகிய இரு கதைகளும் முற்றிலும் வேறு வகைப்பட்டவை. இவை சமூக யதார்த்தத்தைப் பேசுகின்றன. இங்கு ஆவணப்படுத்தப்படும் சமூக யதார்த்தத்தில் எனக்குத் தெரிந்து எந்த மனச்சாய்வும் இல்லை, இரக்கமில்லாமல், மிகையுணர்ச்சியில்லாமல் சொல்லப்பட்ட கதைகள்.
உருமால் கட்டு கதை, ஒரே சாதியை, ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களும்கூட, கல்வி கற்று நகரங்களுக்குப் போகும்போது தங்கள் வேர்களை முழுசாக வெட்டிக் கொண்டு சென்றுவிடுவதைச் சொல்கிறது : நகர் சென்றவர்களுக்கு சொந்த ஊரில் இருப்பவர்களும் தேவைக்குப் பயன்படுபவர்கள்தான் : தம் மக்களுடனான வேர் சார்ந்த உறவே அற்றுப் போய்விட்டது, வறுமையிலும் விவசாயம் செய்யும்,, பகைமையிலும் நேசம் துளிர்க்கும் ஆழமான உறவை, அதன் உணர்வை அவர்களால் புரிந்து கொள்ள முடிவதில்லை.
"தன் பூமியிலிருந்தும் அதன் பயிர்களிலிருந்தும் தன்னை அறுத்துக் கொள்ள முடியாதென்று வாழாவெட்டியாகத் தங்கி" விடுகிற கெங்கம்மாவுக்கு ஊரெல்லாம் கோவில் எழுந்த கதையும், பல்லாண்டு பகையை மறந்து உள்ளார்ந்த நேசத்துடன் வாழ்த்தும் மாமன் மற்றும் அவர்களது குடும்பத்தினர், ஒரு உதவி என்று கேட்ட மாத்திரத்திலேயே பெங்களூரில் கணிப்பொறி துறையில் வேலை செய்யும் குபெந்திரனின் மதிப்பீட்டில் அக்கணமே அவர்கள் சரிந்து விழுவதும் மண்ணைச் சார்ந்திருப்பவர்களுக்கும் பிழைப்பைப் பார்த்துக்கொண்டு போகிறவர்களுக்கும் இடையுள்ள வேற்றுமையை உணர்த்தும் அருமையான இடங்கள் - இங்கு சாதி சமூகம் என்று எந்த உறவும் பொருட்டல்ல.
தன்னைவிட மேல்சாதியில் உள்ள ஒருத்தருக்குக் கொடுத்த காசைத் திருப்பிக் கேட்கப்போய் இவனிடம் யாரும் சவரம் செய்து கொள்ளக்கூடாது என்று விலக்கி வைக்கப்பட்டவனின் கதை 'திசையெல்லாம் நெருஞ்சி'. சாதி அமைப்பால் ஏற்கெனவே விலக்கி வைக்கப்பட்டவனாக இருந்திருந்தாலும் இவனுக்கும் அந்த ஊரில் வேர்கள் முளைத்திருக்கின்றன, இவனது மனைவியின் உணர்வுகள் அந்த ஊரைப் பிரிய சம்மதிப்பதில்லை. இரக்கமற்ற சாதிக் கொடுமை, இவன் செய்த, மற்றவர்களால் செய்ய முடியாத அத்தனை நற்செயல்களையும் நிராகரித்து விடுகிறது. அநியாயம் செய்பவனையும் அநாகரீகமாய் நடந்து கொள்பவனையும்கூட நியாயப்படுத்தி ஆதரிக்கும் மேல்சாதியினரின் உயர்சாதியபிமானம், இவனை ஒரு இறுதி முடிவை எடுக்க வைத்து விடுகிறது.
இந்தக் கதையில்,""விரகதாபத்தோடு பிரவாகமெடுத்து வரும் பாடல் மலையிலிருந்து மேகத்திரள் நிழல் பரப்பி இறங்கி வருவதுபோல் இருக்கும்" என்று சொல்லப்படும் சாக்கைக் கூத்து ஆடும் அம்பட்டன், தவறான உறவுக்காக கை வெட்டப்பட்டு மறைந்து முண்டக்கை அம்பட்டையனாராக வழிபடப்படும் கதை எழுச்சி மிகுந்த இடம். அதே போல், எதற்கு இக்கட்டான நேரத்தில் அம்பட்டையன் குழியைப் பார்க்கச் சொன்னார் அய்யா என்ற கேள்வியுடன் தான் எதற்கும் பயன்படாத மயிர்களைச் சேர்த்துச் சேர்த்து குவித்து வைத்திருப்பதை இவன் எதிர்கொள்ளும் கட்டம் மிக நுட்பமான உணர்த்துதலைக் கொண்டது.
முடிய வேண்டிய வகையில்தான் முடிகிறது என்றாலும்.எவ்வளவுதான் யதார்த்தத்தை ஒட்டிய இயல்பான முடிவு இந்தக் கதைக்குத் தரப்பட்டிருந்தாலும், எளிய தீர்வுகளை அவ்வளவாக ரசிக்காத எனக்கு மற்ற கதைகளைக் காட்டிலும் இந்தக் கதை ஒரு மாற்று குறைவாகவே இருக்கிறது. அப்படிச் சொன்னால் நன்றாக இல்லை என்று பொருளில்லை, அவையளவுக்கு சிறப்பாக இல்லை என்றுதான் எடுத்துக்கொள்ள வேண்டும்.
பொதுவாக சு. வேணுகோபாலின் கதைகள் உள்முரண்கள் கொண்டவை. வாழ்வின் சிக்கல்களை வெளிப்படுத்துபவை - நியாயம் அநியாயம், உயர்ந்தவை தாழ்ந்தவை என்று எந்த சார்பு நிலையும் எடுத்துக் கொள்ளாமல் அவற்றை ஒரே மாதிரியே பேசுகிறார் என்பது ஒரு விஷயம் என்றால், ஏதோ ஒரு வகையில் அவரது கதைகளின் மையம் அறம் சார்ந்ததாகவும், வடிவம் கவித்துவம் கொண்டதாகவும் உயர்ந்து விடுகின்றது என்பதுதான் எனக்கு ஆச்சரியம். இந்த உயிர்ப்பு அவரது எழுத்தில் எங்கு நுழைகிறது, எப்படி இப்படிப்பட்ட வெளிப்பாடு காண்கிறது என்பது புரிந்து கொள்ள முடியாத புதிராகவே இருக்கிறது.
திசையெல்லாம் நெருஞ்சி - சு. வேணுகோபால்
தமிழினி
குறுநாவல் தொகுப்பு
ரூ 60/
No comments:
Post a Comment