Thunder Dog ஆசிரியர் : Michael Hingson with Susy Floryபுத்தகத்தை இணையத்தில் வாங்க: அமேசான்
வழிகாட்டி நாய். கண் பார்வையற்றவர்களுக்கு ஒரு வரம். அவர்களை சாலையில் சரியான வழிகளில் அழைத்துப் போவது, மேடு, பள்ளம், மரம், தபால்பெட்டி, போக்குவரத்து சிக்னல், மற்ற மனிதர்கள், வாகனங்கள் ஆகியவற்றில் அடி/இடிபடாமல் பத்திரமாக அழைத்துச் சென்று, வீடு திரும்புவதற்கு பயிற்சி அளித்திருப்பார்கள். இத்தகைய வழிகாட்டிகளை தங்கள் இரண்டாவது வயதில் இந்த வேலைக்கு விட்டு, பத்து அல்லது பதினோரு வயதில் - அதன் புலன்களின் திறன் குறைந்துவிடுவதால் - ஓய்வு கொடுத்து விடுவார்கள். அதன்பிறகு அந்த கண் பார்வையற்றவர் இன்னொரு வழிகாட்டியை தேட வேண்டியிருக்கும். சாதாரண மனிதர்கள் போலவே அவர்களும் நடமாடுவதற்கு உதவும் உற்ற தோழன்தான் வழிகாட்டி நாய். அப்படிப்பட்ட ஒரு வழிகாட்டிதான் இந்தப் புத்தகத்தில் வரும் - ரோசேல்.
மைக்கேல். பிறக்கும்போதே கண் பார்வையற்றவர். அவருக்கான சிறப்புப் பள்ளியில் போடாமல், மற்றவர்களைப் போலவே மைக்கேலும் இருக்க வேண்டும் என்றெண்ணி அவர் பெற்றோர் சாதாரண பள்ளியிலேயே மைக்கேலை படிக்க வைத்தனர். ஆனாலும், அவர்களுக்கு இவரின் எதிர்காலம் குறித்த கவலை இருந்து கொண்டே வந்தது. ஒரு நாள் அவர்கள் வீட்டுக்கு வந்த ஷாரோன் மூலமாக அவர் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்பம் ஏற்பட்டது. ஷாரோனும் ஒரு கண் பார்வையற்றவர். ஆனால் ஒரு வழிகாட்டி நாயின் உதவியுடன் தினமும் வேலைக்கும் போய் வருகிறார் என்று தெரிந்தவுடன் மைக்கேலுக்கும் அப்படியே செய்யலாம் என்று முடிவு செய்கின்றனர். அதன்படியே மைக்கேலும் தன் பதிமூன்றாம் வயதிலிருந்து, இந்த புத்தகம் எழுதும் ஐம்பதாவது வயது வரை, ஆறு வழிகாட்டிகளின் உதவியுடன் படித்து, பயணித்து ஒரு நல்ல வேலையிலும் அமர்கிறார். அவரது ஆறாவது வழிகாட்டியாக வந்து சேர்ந்ததே - ரோசேல்.
நியூயார்க் நகரத்தில் இருந்த இரட்டை கோபுரங்கள். 1353 அடி உயரம். இரண்டும் தலா 110 தளங்கள். 12,800 ஜன்னல்கள் ஒரு மணி நேரத்துக்கு 22 மைல்கள் வேகத்தில் பயணிக்கக்கூடிய, பயணிகளுக்கான மின்தூக்கிகள் 97. இத்தகைய பிரம்மாண்ட கட்டிடங்களை தீவிரவாதிகள் தாக்கிய நாள் - செப்டமபர் 11, 2001. உலகையே அதிர வைத்த அந்த சம்பவத்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் இறந்தனர். அந்த சம்பவத்தைப் பற்றி பல்வேறு புத்தகங்கள், பேட்டிகள், காணொளிகள் உள்ளன. ஆனால், அந்த கட்டிடம் இடிபட்ட சமயம், அதற்குள்ளே வேலை பார்த்து, அந்த இடிபாடுகளிலிருந்து தப்பித்து, பின்னர் அதைப் பற்றி புத்தகம் எழுதியவர், அநேகமாக இவர் ஒருவராகத்தான் இருக்க முடியும். அவர் - மைக்கேல்.
தீவிபத்து போன்ற இடர்கள் நேர்ந்தால், இரட்டை கோபுரங்களில் உள்ளவர்கள் எப்படி நடந்து கொள்ள வேண்டும், எந்த வழியாக தப்பித்துப் போகவேண்டும் என்றெல்லாம் அடிக்கடி பயிற்சிகள் நடக்கும். அந்த சமயங்களில்
* பதட்டப்படக் கூடாது
* மின்தூக்கிகளை பயன்படுத்தக் கூடாது,
* அவசரகால படிகளிலேயே தப்பிக்க வேண்டும்.
* ஆபத்திலிருக்கும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும்
என்றெல்லாம் சொல்லியிருப்பார்கள். ஆனால் இதெல்லாம் பயிற்சியில்தான். நிஜமாகவே அப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்தால், பதட்டப்படாமல் ஒருவர் இருக்கமுடியுமா என்பது சந்தேகமே. அதுவும் அவர் பார்வையற்றவராக இருந்தால்?
தேதி 9/11. காலை 8.15. மைக்கேல் பணிக்கு வந்துவிட்டார். அவரது தளம் 78. வேலைகள் அனைத்தும் வழக்கம்போலவே நடைபெறுகிறது அந்த ‘டமார்’ என்னும் பெரும்சத்தம் கேட்கும்வரை. கட்டிடமே ஒருமுறை குலுங்கி நிற்கிறது. முதலில் நிலநடுக்கமாக இருக்குமோ என்று எண்ணுகின்றனர். எதுவாக இருந்தாலும் தப்பிப்பதே முதல் வேலை என்று படிகளில் இறங்க ஆரம்பிக்கின்றனர். 78 தளங்கள் - 1463 படிகளைக் கடந்தே கட்டிடத்தை விட்டு வெளியே வரமுடியும். அதற்குள் கட்டிடம் இடிந்துவிட்டால்?
ஆனால், அதைப் பற்றி இப்போது நினைக்க முடியாது. முதலில் இறங்குவோம் என்று ரோசேலின் உதவியுடன் இறங்குகிறார் மைக்கேல். கூடவே கட்டிடத்தில் பணிபுரியும் ஏகப்பட்ட மக்கள். அனைவரின் மனதிலும் குழப்பம். உயிருடன் வெளியே போவோமா இல்லையா?
மேலேயிருந்து நெருப்புக் கோளங்கள் விழுகின்றன. கட்டிடத்திற்குள் வழியும் விமான எரிபொருளின் அடர்த்தியான வாசனை மூச்சை அடைக்கிறது. ரோசேலும் அதனால் பாதிக்கப்படுகிறது. நாக்கை வெளியே நீட்டியவாறு பலத்த சத்தத்துடன் மூச்சு விடுகிறது. ஆனாலும், தன் முதலாளியை பத்திரமாகக் கூட்டிப் போகவேண்டும் என்ற எண்ணத்தில் அமைதியாக முன்னே போகிறது. அதன் பட்டையைப் பிடித்தவாறு மைக்கேல் பின்னே.
கீழிருந்து தீயணைப்பு வீரர்கள் மேலே போகிறார்கள். அந்தக் கட்டிடத்தை விமானம் இடித்துவிட்டதென்று அவர்கள் சொல்லியே மைக்கேலுக்கும், கூட நடப்பவர்களுக்கும் தெரிகிறது. கட்டிடம் எந்த நேரமும் இடிந்து விழலாம் என்றும் அவர்கள் சொல்கின்றனர். ஆனாலும் அவர்களின் கடமை மற்றவர்களை காப்பாற்ற வேண்டியதே என்பதால் அவர்கள் துணிந்து கட்டிடத்தில் ஏறிப் போகின்றனர்.
ஒருவழியாக மைக்கேல், ரோசேலுடன் வெளியே வந்துவிடுகிறார். சிறிது தூரம் தள்ளிப் போய் இருவரும் உட்காரலாம் என்று நினைத்தபோது பலத்த சத்தத்துடன் அந்த இரு கட்டிடங்களும் இடிந்து விழுகின்றன. அனைவரும் தலைதெறிக்க ஓடுகின்றனர். மைக்கேல், ரோசேலின் உதவியுடன் வேகமாக நடக்கிறார். பல தெருக்கள் தள்ளி, ஒரு வண்டி பிடித்து இன்னொரு இடத்திற்குப் போய் ஒரு நண்பரின் வீட்டில் சிறிது நேரம் தங்குகிறார். மாலையில் அங்கிருந்து மின்சார ரயில் பிடித்து வீடு போய் பத்திரமாக சேருகிறார். பிறகு தொலைக்காட்சியில் பார்த்து, அவர் மனைவி அவருக்கு காலையிலிருந்து நடந்தவற்றை சொல்கிறார். அந்த சம்பவத்தின் அதிர்ச்சியிலிருந்து வெளிவருவதற்கு மைக்கேலுக்கு பலகாலம் பிடிக்கிறது.
இதற்குள், வழிகாட்டியின் பொறுமையாலும், திறமையாலும் இடரிலிருந்து தப்பித்த மைக்கேலின் அனுபவம் பற்றி அவரது மருத்துவர், கண் பார்வையற்றவர்கள் சங்கம், வழிகாட்டி நாய் வழங்கிய நிறுவனம் ஆகிய பலருக்கும் தெரிகிறது. அந்த அனுபவத்தைப் பற்றி தொலைக்காட்சியில் பேச மைக்கேலுக்கு ஒரு வாய்ப்பு கிடைக்கிறது. அதன் மூலம், அமெரிக்கா முழுதும் அறியப்பட்ட மைக்கேல், மேலும் பற்பல ஊர்களுக்குச் சென்று பல சங்கங்கள், கூட்டங்களில் - இடர் காலங்களில் செய்ய வேண்டியன, கண் பார்வையற்றவர்களுக்கு இருக்கவேண்டிய தன்னம்பிக்கை, வழிகாட்டி நாய்களுக்கு அளிக்கவேண்டிய பயிற்சி - ஆகிய தலைப்புகளில் பேசத் தொடங்குகிறார்.
அன்றைய தினத்திலிருந்து பத்து வருடங்கள் கழித்து 2011ல் இந்தப் புத்தகத்தை வெளியிடுகிறார் மைக்கேல். இதில் :
* மைக்கேலின் இளமைப் பருவம்
* வழிகாட்டியை தேடும், தேர்ந்தெடுக்கும் விதங்கள்
* அதற்கான பயிற்சி முறைகள்
* மைக்கேலின் குடும்பம், திருமணம் மற்றும் வேலை பற்றிய விவரங்கள்
* 1463 படிகளில் இறங்கும்போது நடக்கும் சம்பவங்கள்
ஆகிய அனைத்தைப் பற்றியும் விரிவாக சொல்லப்பட்டுள்ளது.
ஒரு துயரமான சம்பவத்தைப் பற்றி விவரிக்கும் இந்தப் புத்தகத்திலும் மைக்கேலின் எழுத்தில் மெல்லிய நகைச்சுவை அங்கங்கே இழைந்தோடுகிறது. ஒரே ஒரு உதாரணம். சிறுவயதிலிருந்தே மைக்கேலுக்கு, கண் பார்வையற்றவர்கள் பயன்படுத்தும் கைத்தடியை வைத்துக் கொண்டு நடப்பது பிடிக்காதாம். ஏன்? சாலையில் நடக்கும் மக்களுக்கு தாங்கள் எங்கே போகிறோம் என்றே தெரிவதில்லை. கண் தெரியாமல் என் கைத்தடியில் தடுக்கி அதை உடைத்துவிடுவார்கள். ஒவ்வொருமுறையும் $40 கொடுத்து என்னால் கைத்தடி வாங்க முடியாது என்று சொல்வாராம்.
***
No comments:
Post a Comment