மலக்குவியலை மொய்க்கும் ஈக்களை போன்று பெருநகர வீதிகளில் எப்படியும் பிழைத்திடலாம் எனும் நம்பிக்கையை மட்டுமே சுமந்துக்கொண்டு மனிதர்கள் நகரங்களை ஒவ்வொரு நாளும் மொய்த்துக்கொண்டே இருக்கின்றார்கள். இதழ் விரித்துக் காத்திருக்கும் பலவண்ண உயிருண்ணும் பூச்செடியைப் போல் நகரம் மனிதர்களை தன்னகத்தே ஈர்த்துக் கொண்டே இருக்கிறது.
நாஞ்சில் நாடனின் மிதவை, அறுபதுகளின் பிற்பாதி மற்றும் எழுபதுகளின் தொடக்கத்தில் வாழும் தமிழக கிராமப்புற பட்டதாரி இளைஞனின் வாழ்க்கையைப் பேசுகிறது. கிராமத்து வேலைகளுக்குச் செல்ல தயங்குமளவிற்கு கல்வியும் அது சார்ந்த மிதப்பும், அரசாங்க வேலையை அடைவதில் நிலவிய போட்டியும் இணைந்து பலரை வேலையின்றி அலைகழித்த காலம் அது. இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தையும் மனதில் கொண்டு நம் தந்தை காலகட்டத்தில் இருந்த வாழ்வியல் போராட்டங்களை அணுகினால் அது பிழையான சித்திரத்தை அளிக்கக்கூடும். உலகமயமாக்கலும் தாராளமயமாக்கலும் நிச்சயம் அதன் அத்தனை சாதக பாதகங்களை கடந்து இன்று பல குடும்பங்களின் நிதிநிலைமையை உயர்த்தி மேலெழ வித்திட்டிருக்கிறது என்றே தோன்றுகிறது.
பி.ஏ. பட்டதாரியான சண்முகம் பெரிய ஒரு குடும்பத்தின் மூத்த வாரிசு. பெரியசாமி ஐயரின் நிலத்தைக் குத்தகையெடுத்து வெள்ளாமை செய்துகொண்டிருந்த தந்தை, கல்வி கற்ற தன் மகன் சண்முகம் குடும்ப பாரத்தை சுமப்பான் என்று ஆழமாக நம்புகிறார். இரண்டாம் வகுப்பில் பி.ஏ. தேறிய சண்முகம்தான் அவர்கள் குடும்பத்தின் முதல் பட்டதாரி. படிப்பை முடித்து மூன்றாண்டுகளாக வெவ்வேறு வேலைகளுக்கு விண்ணப்பங்கள் நிரப்பியும், அதற்கு பணம் கட்டியுமே காலம் கழிகிறது. உயரிடத்து சிபாரிசோ, வேலைக்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணமோ அவனுக்கு வாய்க்கவில்லை. மலைபோல் நம்பி இருந்த பட்டணத்து பெரியப்பாவிடமிருந்தும் எந்த தகவலும் இல்லை. வேலை தேடி பம்பாய்க்கு பயணமாகிறான். உணவும் வசிப்பிடமும் அமையாமல் வேலை தேடி நகரெங்கும் அலைகிறான். நகரத்து நெரிசலில் சிக்கி விழிபிதுங்கி நிற்கிறான். பல மாத போராட்டங்களுக்குப் பின்னர் ஒரு வேலையில் அமர்கிறான். சொற்ப சம்பளத்தில் பணம் சேமித்து ஊர் திரும்பவேண்டும் என கனவு காண்கிறான். கடைசியில் கடனாளியாக இருந்தாலும் கூட பூரிப்புடன் ஊர் திரும்புகிறான்.
நாஞ்சில் நாட்டு கிராமம், சென்னை மற்றும் பம்பாய் என நாவல் மூன்று களங்களில் விரிகிறது. அந்தந்த ஊரின் மனிதர்களையும் அவர்களின் வாழ்க்கையையும் நம் கண் முன் நிறுத்துகிறார் நாஞ்சில். சண்முகத்தின் கதையைக் கொண்டு அன்றைய அரசியல்- சமூக நிலைகளையும் அதன் மீதான விமர்சனத்தையும் பதிவு செய்திருக்கிறார். உதாரணத்துக்கு ஒன்று: குத்தகைக்கு விட்ட பிராமணரின் வீட்டு திருமணத்தில் பிராமணர்களுக்கும் பிறசாதியினருக்கும் தனித்தனி பந்தியில் உணவு பரிமாறப்படுவதை எண்ணி வருந்தும் தந்தைக்கு, தன் நிலத்தில் பாடுபடும் கூலிகளை தாமும் அப்படித்தான் நடத்துகிறோம் என்பதை எப்படி புரியவைக்க முடியும் என்று சண்முகம் திகைப்பதாக எழுதுகிறார் நாஞ்சில் - சாதிப் படிநிலையில் உயர்ந்த இடத்தைக் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்திய பிராமணர்களுக்கு எதிராக இடைநிலைச் சாதியினரால் மேற்கொள்ளப்பட்ட திராவிட இயக்கம் சாதிமறுப்பு இயக்கமாக மாறாமல் தேக்கமடைந்த நிலையை இங்கு நுட்பமாகப் பதிவு செய்திருக்கிறார்.
பெரியப்பாவுடனான விவாதத்தின் போது, பெரிய வீட்டுப் பிள்ளைகள் மட்டும் தான் மருத்துவராகவும் பொறியாளராகவும் ஆக முடியுமா என்ன? அதை மாற்றிக் காட்டுவோம் என்று பிரச்சாரம் செய்து கொண்டிருந்த சூழலில் ஆட்சியை பிடித்த பின்னர் என்ன மாற்றம் கண்டுவிட்டது என நொந்து கொள்கிறான் சண்முகம். ஆட்சிக்கு வருவதற்கு முன்வரை இருந்த திராவிட கழக அரசியலின் மீதான நம்பிக்கை அவர்கள் ஆட்சிக்கு வந்த குறுகிய காலத்திலேயே பொய்த்துப் போனதைப் பற்றிய மனத் தாங்கலை இந்நாவலில் பதிவு செய்கிறார் நாஞ்சில். கிராமத்தில் இருக்கும் மாடசாமி அண்ணனும், பம்பாயில் நூலகத்தில் பதிவு செய்துகொள்ள உதவிய கவிபித்தனையும் கழக அரசியலின் எஞ்சி இருக்கும் லட்சியவாத பிம்பங்களாக கோடிட்டுக் காட்டுகிறார் நாஞ்சில். சாதியின் நுட்பமான அவமானங்களையும் அதை எதிர்க்க துணியாத தனது கையறு நிலையையும் ஒருங்கே மிதவையில் பதிவு செய்திருக்கிறார்.
‘தமிழ் நாவல் உலகில் வரலாறும் ஆன்மீகமும் தத்துவங்களும் வெகுவாக ஆட்சி செய்யும் நிலையில் எனது நாவல்கள் ஆன்ம, சமூக, பொருளாதார, அரசியல் விடுதலைகளைப் பெற்றுத் தரும் வல்லமை கொண்டவை அல்ல. கும்பி கொதித்தவனுக்கு சோறு வடித்த கஞ்சித் தண்ணீரில் தேங்காய் துருவிப் போட்டு , தேங்காய் சிரட்டையில் ஊற்றி, கறுப்புக் கட்டியைக் கடித்துக் கொண்டு கொதிக்கக் கொதிக்க உறிஞ்சத் தருவதைப் போல – என்று முன்னுரையில் குறிப்பிடுகிறார் நாஞ்சில்நாடன். ஆம், நாஞ்சிலின் நாயகன் மகத்தான லட்சியவாதியல்ல. ரயிலில் எதிரில் உறங்கும் பெண்ணின் காலை சுரண்டி இன்பம் காணும், ஆபத்தில் நண்பனுக்கு உதவும், அவமானங்களை மனதிற்குள் புதைத்து சகித்துக்கொண்டு தன்னை ஸ்திரபடுத்திக்கொள்ள முயலும் நம்மைப்போன்ற சாமானியன்தான் அவன்.
இந்த நாவலின் மிக முக்கியமான பலம் நாவல் முழுவதும் உயிரோட்டத்துடன் நடமாடும் மனிதர்கள். வீட்டைவிட்டு ஓடிச்சென்று சென்னையில் நடிகனாக மாறும் பெரியப்பா, அரும்பு மீசையுடனும் சந்தேகக் கண்களுடனும் சண்முகத்தை நோக்கும் சக பணியாளர் ஆச்சார்யா, பூனைக் குட்டியைத் தூக்கி வந்து பால் ஊற்றும் ரூபென் ஜோசெப், தங்க இடம் கொடுத்து ஆதரிக்கும் ஊர்க்கார ராணுவ வீரன் சுந்தரண்ணன், வாஞ்சையுடன் அன்னமிட்டு பம்பாயில் வேலை வாங்கிக் கொடுக்கும் அய்யர், சண்முகத்தின் குடிசை வீட்டிற்கு அருகில் வசித்து அவன் உடல் வேட்கையை சீண்டும் பருத்த உடல் கொண்ட அன்னம்மை, அரிசி கடத்தலில் சிக்கி சிறைசென்று திரும்பும் சகவாசியான செண்பகம் என ஒவ்வொரு பாத்திரமும் கச்சிதமான வார்ப்பு.
நாஞ்சில் நாடனின் நாவல்களைப் பற்றி பேசும்போது, நாஞ்சில் நாட்டு வட்டார வழக்கைப் பேசாமலிருக்க முடியாது. அந்த மண்ணின் தமிழுக்கு தனிப்பட்ட மொழிவடிவம் கொடுத்த முன்னோடிகளில் நாஞ்சிலும் ஒருவர் என நிச்சயம் சொல்லலாம். என்னைப் பொறுத்தவரை வட்டாரவழக்கில் எழுதப்படும் நாவல், வாசகனுக்கு அந்த பிரதேசத்து பண்பாட்டையும் வாழ்க்கையையும் புதிய சொற்களையும் அறிமுகப்படுத்தும் அதேவேளையில் நாவலை வாசித்து உள்வாங்க தடையாகவும் இருக்கக்கூடாது. இந்த சமநிலையை நாஞ்சிலின் எழுத்தில் காண முடிகிறது என்றே தோன்றுகிறது.
சில வருடங்களுக்கு முன் ஒருமுறை பம்பாய் சென்றுள்ளேன். டிட்டுவாலா பிள்ளையார் கோவில், எலிபண்டா குகைகள், ஜுஹூ கடற்கரை, இஸ்கான் கோவில் என சில சுற்றுலா தலங்களுக்கு சென்றுவந்தது சுமாராக நினைவில் இருக்கிறது. பொதுவான டூரிஸ்டுகள் பார்வையில் சிக்காத மற்றொரு பம்பாய் உண்டு. கிரெகொரி டேவிஸ் தன் வாழ்வனுபவங்களைக் கொண்டு எழுதிய சாந்தாராம் எனும் நூலில் பம்பாயின் இருண்ட பக்கங்களை அற்புதமாக சித்தரித்திருப்பார். பம்பாயின் நிழல் உலகத்தையும், விளிம்பு மனிதர்களையும், கழிவுகள் மிதக்கும் குப்பத்து வாழ்வையும் வாசிக்கும்போது மனம் பதறும். மிதவையில் நாஞ்சில் காட்டும் பம்பாயில் நிழலுலகச் சித்தரிப்புகள் இல்லையென்றாலும், விளிம்புநிலை மக்களால் நிரம்பி வழியும் நாம் பார்த்திடாத மற்றொரு பம்பாயை மிக நுணுக்கமாக விவரிக்கிறார். நேவிநகரில் ராணுவ குவாட்டர்சில் திருட்டுத்தனமாக பதுங்கி அங்கிருந்து தப்பிப் பிழைத்து 'சாலில்' இருபத்தேழு பேருடன் தங்கி பின்னர் அங்கிருந்து குடிசைக்கு இடம்பெயர்கிறான்.
பெருநகரத்தில் ‘சன்டாசுக்கும்’ சாப்பாட்டிற்கும் அலைந்துகொண்டே இருக்கிறான் சண்முகம். நாவலை வாசிக்கும்போது இதையே ஏன் மீண்டும் மீண்டும் வளர்த்து எழுதுகிறார் என்று தோன்றக்கூடும். ஆனால், யோசித்துப் பார்த்தால், இடம்பெயரும் மனிதனுக்குள்ள மிக முக்கியமான பிரச்சனைகள் இவைதான் என்று தோன்றுகிறது. குறைந்த செலவில் நல்ல உணவைத் தேடி பம்பாய் முழுவதும் அலைகிறான் சண்முகம். தண்டவாளம், வெட்டவெளி, தமிழ் மையம், ரயில்நிலையம் என ‘சன்டாசுக்கு’ போக சுகாதாரமான இடத்தைத் தேடியும் அலைகிறான். நண்பர்களற்ற அன்னிய மண்ணில் ஆதரவையும் நட்பையும் தேடுகிறான்.
தன்னுடைய இடத்தை சண்முகம் வென்றுவிடுவானோ என்று அஞ்சி சண்முகத்தின் உழைப்பைச் சந்தேகிக்கும் ஆச்சாரியா பற்றி சிந்திக்கும் வேளையில் அவனுடைய தகுதியையும் திறமையையும் எண்ணி வியப்படைகிறான் சண்முகம். பரீட்சையில் தேறியவுடன் பெரியப்பா வீட்டில் அண்ணன் அவமானப் படுத்துகிறான். உணவு உண்ணும்போது தினமும் தந்தை அவமானபடுத்துகிறார். நூலகத்தில் உறுப்பினராக முயலும்போது அங்குள்ள நிர்வாகிகளால் அவமானபடுத்தபடுகிறான். தொடர்ந்து நுண்ணிய அவமானங்களைச் சந்தித்து வரும் புனைவின் நாயகன் சண்முகம் அவைகளை எண்ணி வருந்துகிறான், கோபப்படுகிறான் ஆனால் எவர் மீதும் காழ்ப்போ வெறுப்போ அவனுக்கு இல்லை. அவனால் தன்னை அவமதித்தவர்களை மன்னிக்க முடிகிறது. அவர்களுடைய உயர்ந்த குணங்களை அங்கீகரிக்க முடிகிறது. ஒருவகையில் நாஞ்சில் எனும் தனிமனிதனின் அகத்தை எனக்கு நெருக்கமாகக் காட்டுவதாக இது இருக்கிறது. அத்தனை அவமானங்களையும் சகித்துக்கொண்டு தனக்கான இடத்தை உருவாக்க முயன்றுக்கொண்டே இருக்கிறான் சண்முகம். ஒருவகையில் இதுவே இந்த நாவலின் ஆன்மீக அம்சம் என கருதுகிறேன்.
இந்த நாவல் நேஷனல் புக் ட்ரஸ்ட் அமைப்பால் பத்து மொழியில் மொழி பெயர்க்கப்படப் போவதாக முன்னுரையில் சொல்கிறார் நாஞ்சில். அதற்கான அனைத்து தகுதிகளும் இந்த நாவலுக்கு உண்டு என்பதில் ஐயமில்லை.
எதையாவது பற்றிக்கொண்டு கரையேறிவிட முடியாதா என்று மனிதர்கள் ஆழ்கடலில் தத்தளித்துக் கொண்டே இருக்கிறார்கள். ஆழியின் ஆழத்தில் அமிழ்ந்துவிடாமல் இருக்க கையில் கிடைக்கும் எதையும் பற்றிக்கொள்கிறார்கள். கரை கைக்கெட்டும் தொலைவில் நெருங்கும்போதேல்லாம் ஒரு பேரலை அவர்களை திசை மாற்றி அலைக்கழிக்கிறது. மனிதன் கரைதேடி அலைந்து கரையேற முடியாமல் அலைக்கழிந்து கரைந்து போகும் மிதவைதான் போலும். முடிவற்ற சாகரத்தில் காற்றால் அது விரும்பும் திசைக்கு அடித்துச் செல்லபடுகிறது கடலில் மிதக்கும் மிதவை. மிதவையின் இலக்கை அது முடிவு செய்து கொள்வதில்லை. மனிதனின் வாழ்வும் அப்படித்தான் இருக்கிறது.
மிதவை
நாஞ்சில்நாடன்
தமிழ், புனைவு, நாவல்
விஜயா பதிப்பக வெளியீடு
பக்கம்- 152, விலை-rs.60/-
சுகி
No comments:
Post a Comment