1980ல்
 வெளிவந்த இந்தத் தொகுப்பு, அதற்கு முந்தைய இருபதாண்டு 
காலத்தில் வெளியான சிறுகதைகளில் சிறந்த பதினாறு கதைகளைக் கொண்டது.  இவை 
அனைத்தும் தமிழில் எழுதப்பட்டவை என்பதையும், ஒரு குறிப்பட்ட 
இருபதாண்டுகளில் வெளியானவை என்பதையும் தவிர்த்து இவற்றின் ஊடாக ஒரு பொதுச்சரடு இருப்பதாகத் தெரியவில்லை. பதினாறும் வெவ்வேறு விஷயங்களைப் 
பற்றித்தான் பேசுகின்றன. இந்தத் தொகுப்பில் இருக்கும் கதைகளும் அவற்றுக்கான
 சுட்டிகளும் கடைசியில் இருக்கின்றன. சமூகக் கடமையை உத்தேசித்து நான் 
கொஞ்சம் நீட்டிமுழக்கப் போகிறேன்.
இத்தொகுப்பிற்கு அசோகமித்திரன் எழுதியிருக்கும் 
முன்னுரை, தமிழ் சிறுகதைகளின்/இலக்கியத்தின் நாற்பதாண்டுகாலப் போக்கை 
விவரிக்கிறது. பக்கம் பக்கமாக எழுதித்தள்ளப்பட்ட ஆராய்ச்சி இல்லைதான்; 
ஆனால் அதன் ஆழமும் தீர்க்கமும் அதிகம். பரபரப்புக்காக எழுதப்படும் எழுத்து,
 அந்த பரபரப்போடே அமுங்கிப் போய்விடும் என்று சொல்லும் அசோகமித்திரன், 
“பரபரப்பை மட்டும் முக்கியமாகக் கொள்ளாமல் பரிணாமத்தின் ஒவ்வொரு காலத்திய 
சூட்சுமங்களைக் கலையுணர்வோடு வடித்துத் தருபவை என்று எனக்கு உறுதியாகத் 
தோன்றும் கதைகளில் சிலவற்றை இத்தொகுப்பின் அமைப்புக் கட்டுத்திட்டங்களுக்கு
 இணங்கத் தேர்ந்தெடுத்திருக்கிறேன்” என்கிறார். அவர் சொல்வது எத்தனை 
உண்மையென்பது இத்தொகுப்பில் இருக்கும் எஸ்தர் போன்ற சிறுகதைகள் 
முப்பத்தியிரண்டு ஆண்டுகளுக்கு பின்பும்கூட முக்கியத்துவமும் நவீனத்தன்மையும்
 குறையாமல் இருப்பதைக் கொண்டு நாம் உறுதிப்படுத்திக்கொள்ளலாம்.
வெகுஜன இதழ்கள் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சிக்குக் 
காரணமாக இருந்தபோதிலும் அவை திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான 
எளிமைப்படுத்தப்பட்ட கருத்துகளையே வெளியிட்டு தங்கள் வியாபார நோக்கத்தால் 
இலக்கியம் மேலும் வளர அவர்கள் முட்டுக்கட்டையாகிவிட்டார்கள் என்ற வாதத்தை 
வைக்கிறார். இதன் தொடர்ச்சியாகவே தீவிர இலக்கியம், பத்திரிகை எழுத்து என்று
 தனித்தனியாக பிரித்துப் பார்க்க வேண்டிய அவசியம் எழுந்ததையும் 
விவரிக்கிறார். “…அறுபதுகளின் தொடக்கத்திலிருந்து தமிழ் வாசகர்-எழுத்தாளர் 
மத்தியில் இப்பாகுபாடு பற்றிய சிந்தனை பரவலாகத் தோன்ற ஆரம்பித்தது. இதன் 
விளைவு சிறு பத்திரிகைகளின் தோற்றம்.” வெகுகாலம்வரை பிரபலமடையும் எழுத்தே 
நல்ல எழுத்தாக அறியப்பட்டதாகச் சொல்கிறார் அசோகமித்திரன். இன்றைக்கு பலரைச்
 சென்றடைந்த எழுத்துக்கள் சிறப்பானதாக இருக்க முடியாது என்ற அளவிற்கு 
வந்துவிட்டது. அவை மேலோட்டமானவை; வாசகர்களைக் கிளர்ச்சியுறச் செய்து 
கவர்பவை என்ற எண்ணம் வலுத்துவிட்டது.
ஆனால் அன்றைய சிறுபத்திரிகைகளின் அசராத 
முயற்சியினால்தான் இன்றைக்கு தமிழ்ச் சிறுகதை தன்னுடைய தனித்தன்மையை 
தக்கவைத்துக் கொண்டிருக்கிறது என்று சொல்லலாம். சிறுபத்திரிகைகள் பற்றி 
வெவ்வேறு பத்திகளில் அசோகமித்திரன் குறிப்பிடுகிறார் : -
“அறுபதுக்கு முற்பட்ட சிறு பத்திரிகைகளுக்கும் 
இந்த இருபதாண்டுச் சிறுபத்திரிகைகளுக்குமிடையே உள்ள முக்கிய வேறுபாடு, 
முந்தைய பத்திரிகைகளும் அவற்றின் ஆசிரியர்களும் பெருவாரி விற்பனையுள்ள 
பத்திரிகைளும் அவை ஆதரிக்கும் எழுத்தும் போரிட்டு அகற்றக்கூடியதொன்று, 
அகற்ற வேண்டியதொன்று எனச் செயல்பட்டார்கள். இன்றைய சிறுபத்திரிகைகள், 
 பெருவாரி விற்பனைப் பத்திரிகைகளை இந்த காலகட்டத்தின் ஒரு தவிர்க்க முடியாத
 அம்சமாக ஏற்றிருப்பதையும், அவற்றை ஒரு பொருட்டாகக் கருதாமல் தம்மட்டில் 
தீவிர இலக்கியப் பணிகளில் ஈடுபடுவதை ஓர் எதிர்வினையாகக் கொள்ளாமல் சுயமாகச்
 செய்யவேண்டிய பணியாக நினைப்பதையும் காண முடிகிறது.”
உண்மையில் ஒரு வாசகனால், எந்த முன்முடிவும் இல்லாமல் 
நல்ல எழுத்தை மற்ற எழுத்துக்களிலிருந்து அடையாளம் காண முடியும். அதைப் 
பொதுவில் அவன் நேர்மையாக ஒத்துக்கொள்கிறானோ இல்லையோ தனிப்பட்ட முறையில் 
அவன் அதை அனுபவித்துக் கொண்டுதான் இருப்பான். சிறந்த எழுத்துக்கான வாதம் வாசகனிடமிருந்தே தொடங்க வேண்டும் என்று சொல்வதில் ஒரு 
நியாயமிருக்கிறது.. ஏனென்றால், அவன் விமர்சகர்களைப் போல தன்னுடைய கருத்துக்களை 
ஆராய்ந்து ஒரு முடிவுக்கு வந்துவிடுவதில்லை, அவனது வாசிப்பைக் கோட்பாடுகள் 
கட்டுப்படுத்துவதில்லை. அவனுடைய வாசிப்பானுபவம் முன்முடிவுகளால் தடைப்பட்டுவிட்ட 
ஒன்றல்ல. எழுத்தாளர்களே கறாரான 
விமர்சகர்களாகவும் இருப்பதால், இது ஏதோ இலக்கியச் சண்டையாகவே 
பார்க்கப்படுகிறது; சில சமயங்களில் சிறுபிள்ளைத்தனமாகவும் கூட. 
எல்லாருடைய எழுத்துக்களையும் அலசி ஆராய்ந்து எழுதும் 
ஒருவருக்கு அதில் என்ன ஆதாயம் என்ற கேள்வி வந்துவிடுகிறது. எழுத்தாளர்களால்
 செய்யப்படும் விமர்சனங்களும் அலசல்களும் வாசகனிடம் ஒரு கேள்வியைத் தொடங்கி
 வைக்கின்றன. அவன் தன்னளவில் அந்தக் கேள்விக்கான பதிலைக் கண்டு 
பிடித்துவிடுவான். அந்த பதில்தான் அவனுடைய வாசிப்பின் அடுத்த கட்டத்தை 
தீர்மானிக்கிறது; அவன் விமர்சகர்களிடமிருந்து கேள்விகளை மட்டுமே எடுத்துக் 
கொள்கிறான்; முடிவுகளை அல்ல. அவனுக்குத் தன்னுடைய முடிவை ஊர் முழுக்க 
அறிவிக்க வேண்டிய தேவையில்லை. இதைப் பலர் தப்பாகப் புரிந்து கொண்டு 
பொதுவாசகன் கண்ணைக் கட்டிக் கொண்டு பயணப்படுவதாக நினைத்துக் 
கொண்டிருக்கிறார்கள். அவன் தன்னுடைய ஒவ்வொரு வாசிப்பையும் பிரக்ஞையோடே 
தொடர்கிறான்.
சிறுகதையுலகில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை 
ஏற்படுத்தியவை என்று இரண்டு வெளியிடுகளை அசோகமித்திரன் குறிப்பிடுகிறார். 
முதலாவது, 1967ல் நகுலன் தொகுத்து வெளியிட்ட குருஷேத்திரம் என்ற நூல். 
இதில் பல எழுத்தாளர்களுடைய கட்டுரைகள், கவிதைகள், சிறுகதைகள், ஒரு 
குறுநாவல், ஒரு நாடகம் என்று நானூறு பக்கங்களுக்குமேல் இருந்ததாம். 
அடுத்தது, நான்கு எழுத்தாளர்கள் சேர்ந்து வெளியிட்ட ‘கோணல்கள்’ தொகுப்பு. 
இதில் பன்னிரெண்டு சிறுகதைகள். அந்த நால்வர், ராமகிருஷ்ணன்,  சா.கந்தசாமி, ந.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மா.ராஜாராம்.
இறுதியாக அசோகமித்திரன் சொல்கிறார்,
“முன்னரே
 குறிப்பிட்டபடி இத்தொகுப்பு ஒரு காலகட்டத்தில் தமிழ்ச் சிறுகதை இயங்கிய 
தளத்தை, அதன் உயர்ந்த நிலையில், பிரதிபலிக்கச் செய்யும் முயற்சி. இதுவே 
எக்காலத்துக்குமான தமிழ்ச்சிறுகதைத் தொகுப்பாகாது. ஆனால் அப்படி ஒரு 
தொகுப்பு தயாரிக்கப்படுமாயின் அதில் இத்தொகுப்பின் பல கதைகள் இடம் பெறுவது 
உறுதி.”
இந்தச் சிறுகதைகள் மட்டுமல்ல, அதன் 
ஆசிரியர்களும் இன்றைக்கும் சிறந்தவர்களாகத்தான் அறியப்படுகிறார்கள். இந்தக்
 கதைகள் இன்னமும் புதியதாகவே இருக்கின்றன. அந்நாளைய மனிதர்களுடைய 
யதார்த்தமும் கனவுகளும் இன்றைக்கு மாறியிருந்தாலும், இன்றைய 
யதார்த்ததுக்கும் கனவுகளுக்குமான இடைவெளி அன்றைய யதார்த்தத்துக்கும் 
கனவுகளுக்குமான இடைவெளியின் அளவிலோ அல்லது அதைவிட அதிகமாகவோ தானே 
இருக்கிறது.
தொகுப்பில் உள்ளவை
- மருமகள் வாக்கு - கிருஷ்ணன் நம்பி
- மிலேச்சன் - அம்பை
- நிழல்கள் - ஆதவன்
- எஸ்தர் - வண்ணநிலவன்
- உத்தியோக ரேகை - சார்வாகன்
- தொலைவு - இந்திரா பார்த்தசாரதி
- சண்டையும் சமாதானமும் - நீல. பத்மநாபன்
- நாயனம் - ஆ.மாதவன்
- நகரம் - சுஜாதா
- ஒரு வருடம் சென்றது - சா.கந்தசாமி
- ஒரு ‘இந்நாட்டு மன்னர்’ - நாஞ்சில் நாடன்
- தனுமை - வண்ணதாசன்
- நாற்காலி - கி. ராஜநாராயணன்
- அந்நியர்கள் - ஆர். சூடாமணி
- பகல் உறவுகள் - ஜெயந்தன்
- காலமும் ஐந்து குழந்தைகளும் - அசோகமித்திரன்
புதிய தமிழ்ச் சிறுகதைகள் | தொகுப்பாசிரியர்: அசோகமித்திரன் | நேஷனல் புக் டிரஸ்ட், இந்தியா 182 பக்கங்கள் | விலை ரூ.80
பின்குறிப்பு:
மேலே குறிப்பிட்டிருக்கும் கோணல்கள் சிறுகதைத் தொகுப்பு இங்கே கிடைக்கும். விலை ரூ. 40
 


 

தனுமை - வண்ணதாசன்
ReplyDeletehttp://azhiyasudargal.blogspot.com/2010/07/blog-post_14.html
நன்றி ராம். மேலோட்டமாக கூகுள் செய்துவிட்டு இல்லையென்று முடிவு செய்துவிட்டேன். அட்டகாசமாகச் செய்திருக்கிறீர்கள்.
Delete