முதலில் சில அவசியக் குறிப்புகள் : கிருத்திகா 1915ஆம் ஆண்டு பிறந்தவர், இயற்பெயர் மதுரம் பூதலிங்கம். வாஸவேச்வரம் 1966ல் பதிப்பிக்கப்பட்டது. 183 பக்கங்கள், மூன்று பகுதிகள் : பிரம்ம தேவன் விளையாட்டு, இந்திரன் தாபம், மாண்டவர் சாபம் (இங்கு மாண்டவர் என்பது மாண்டவ மகரிஷியைக் குறிக்கிறது). கதைக்களம் வாஸவேச்வரம் என்னும் கற்பனை கிராமம். கதை மாந்தர் அனைவரும் பிராமணர்கள். ஏறத்தாழ எல்லாரும் நல்ல நிலையில் இருக்கிறார்கள். கதையில் மிக முக்கியமான விஷயம் ஆண் பெண் ஈர்ப்பு. கொச்சையாகச் சொன்னால், எவன் எவளோடு போகிறான், அல்லது, எவள் எவனோடு போகிறாள். கதையை முன் அட்டை முதல் பின் அட்டை வரை படிக்க இந்த சுவாரசியமே போதுமானதாக இருக்கிறது. பெண்ணியம், சமதர்மம் என்றெல்லாம் பேச நிறைய விஷயம் கொடுத்திருக்கிறார் கிருத்திகா என்றாலும், அடிப்படையில் கதையை காமம்தான் முன்னகர்த்திச் செல்கிறது. நம்பி படிக்கலாமா என்று கேட்டால், படிக்கலாம் என்று தயக்கமில்லாமல் சொல்ல முடிகிறது. உயர்ந்த இலக்கியம் என்று லேபிள் ஒட்டுவதற்கான முகாந்திரங்கள் அத்தனை இருந்தாலும், அடிப்படையில் இது சுவாரசியமான மனிதர்களைப் பற்றிய சுவாரசியமான கதை, பக்கங்களை]த் திருப்பிக் கொண்டே போக முடிகிறது.
சுவாரசியமான மனிதர்கள் என்று பட்டியலிட்டால், முதலில் கதையின் நாயகி ரோகிணியைச் சொல்ல வேண்டும். அழகற்ற பெண்கள் நிறைந்த அந்த கிராமத்தின் ஒரே அழகி. படித்தவள். பட்டணத்துப் பெண். யாரோடும் ஒட்டாதவள். இந்தக் கதையில் உள்ள எல்லாரையும் போலவே தன் கவலை என்ன என்பதையும், அதன் காரணம் என்ன என்பதையும் அறிந்திருக்கிறாள். தன் கணவன் சந்திரசேகரய்யர் தன் அழகைத் துதிக்க வேண்டுமென்பதும், தன்னைக் கொண்டாட வேண்டும் என்பதும்தான் அவளது ஏக்கம். ஆனால், தனக்குரியதைப் பெற தான் ஏன் தாழ்ந்து போக வேண்டும் என்று சந்திரசேகரய்யர் முரண்டு செய்கிறார். ஊருக்கே ரௌடியாகவும், தன் கணவனுக்கு போட்டியாகவும் இருக்கும் பிச்சாண்டி, ரோகிணியின் மேலுள்ள காதலால் அவளைப் பார்த்ததும் பெட்டிப் பாம்பாய் பணிந்து போகிறான். அதனால் அவனிடம் அவளுக்கு ஈர்ப்பு ஏற்படுகிறது.
சந்திரசேகரய்யர் முன் சொன்ன மாதிரி ரோகிணி தனக்குரியவள் என்று நினைக்கிறார். அது மட்டுமில்லை, அவளது அழகு அவரை அச்சப்படுத்துகிறது. அதனாலேயே எப்போதும் அவளிடம் முறுக்கிக் கொண்டேயிருக்கிறார். ஊரில் பெரிய பணக்காரராக வளர்ந்து விட்ட அவரது அதிகாரம் வீட்டில் படுக்கையறையில் செல்லுபடியாவதில்லை. ரோகிணி எப்போதும் வாதிட்டுக் கொண்டே இருக்கிறாள். அவளுக்குத் தேவை அங்கீகாரம். அதைச் சந்திரசேகரய்யர் தருவதில்லை.
"எப்போதும் நீ அப்படி இப்படீன்னு பொய் துதி செஞ்சுண்டு..."அவள் அழவாரம்பித்தாள்.உடனே அவர் கோபத்துடன், "என்னாலே அது மாத்திரம் முடியாது," என்று சொல்லிக்கொண்டே அவள் முகத்தைத் தன் முகத்தோடு சேர்த்து அழுத்திக் கொண்டார் (பக்கம் 88).
ஆனால் பிச்சாண்டி கதை வேறு மாதிரி.
"நீ சொல்லாட்டா போயேன் - உன் கண் சொல்றதே, உன் மனசிலே எம்புட்டு ஏக்கமுன்னு"அவள் மருண்டே போய் விட்டாள். ஒருவருக்கும் காட்டாமல் ஒளித்து வைத்திருந்த அந்த ரகசியத்தை அவன் எப்படி அறிந்தான்? நிமிர்ந்து அவனை ஏறிட்டுப் பார்க்க அஞ்சி அவள் தலை குனிந்தாள்.அவன் மேலே பேசினான், "எங்கே என்னைக் கொஞ்சம் நிமிர்ந்து பாரேன். உன்னோட மான் விழியிலேயிருந்து அந்த புண்பட்ட சாயலை துடைக்கணூமுன்னு நான் துடிச்சுண்டு இருக்கேன். எனக்கு அந்த பாக்கியத்தைத் தர மாட்டே? என் அன்பு மேல ஆணையா சொல்றேன் உன்னை சந்தோஷப்படுத்தத்தான் நான் உயிரையே வச்சுண்டிருக்கேன்," (பக்கம் 128).
"நீங்க பேசறதோ பெரிய பெரிய லட்சியங்கள். செய்யறதோ சிறுமைகள்," (பக்கம் 127) என்று ரோகிணி சரியாகச் சொல்கிறாள். சமுதாய அமைப்பைப் புரட்டிப் போட்டுவிடப் போகிறேன் என்று புரட்சி பண்ணக் கிளம்பிய பிச்சாண்டியின் கூட்டாளிகள் கிழவியின் வீட்டுத் திண்ணையில் ராவோடு ராவாக பாடை கட்டி வைப்பது, சந்திரசேகரய்யர் வயல்களில் சதி வேலை செய்வது என்றுதான் இறங்குகிறார்கள். ஒரு கட்டத்தில், அவர்கள் ஒரு கும்பலாக மாறி பிச்சாண்டியையும் அடிக்க வருகிறார்கள். அவர்களுக்குத் தேவை புரட்சியல்ல, ஏதோ ஒரு கிளர்ச்சி.
பிச்சாண்டியை எதிரியாக பாவிக்கும் டாக்டர் சுந்தா இதை சரியாகவே கணிக்கிறான். பெண் எழுத்தாளர் ஒருவர், திருமண பந்தத்துக்கு வெளியே உள்ள ஒருவனிடம் பெண்ணுக்கு ஏற்படும் ஈர்ப்பை எழுதியதை வைத்து இதில் பெண்ணிய பால் விழைவைப் பார்க்கும் விமரிசகர்களைவிட, சுந்தா கெட்டிக்காரன். "அழகென்ன, லட்சணமென்ன, எல்லாம் ஒருப்போலத்தான் இன்கறேன். எந்தப் பொண்ணையானாலும், கல்யாணமான புதுசிலே பிரியவே மனம் வராது. அவளை அறிஞ்சிக்கணூமுன்னு அம்புட்டு ஆவலாயிருக்கும். அப்பொறம் என்ன? ஆறின கஞ்சி, பழங்கஞ்சி. அழகொண்ணும் காரியமில்ல, எல்லாம் அந்தப் புதுமையிலேதானிருக்கு" (பக்கம் 114).
ஆசிரியக் குரலும் இதே கருத்தை எதிரொலிக்கிறது - "அது போலவே பெண்களும், மற்ற ஆண்கள் தங்களை இச்சையுடன் நோக்குவதைக் கண்டு மகிழ்ச்சியடைவார்கள். புதுமைத் தோற்றத்தினால் அவர்கள் அப்படி செய்கிறார்கள் என்று உணராமல், தம் கணவன்மார்களின் அசட்டையை எண்ணி வருந்துவார்கள். புதுமையான அனுபவங்களை நாடி மனிதன்தான் எத்தனை ஏக்கமுறுகிறான்?" (பக்கம் 115).
சந்திரசேகரய்யரிடம் கிடைக்காத அன்பும் அக்கறையும் பிச்சாண்டியிடம் கிடைக்கும் என்று ரோகிணி ஏங்குவதும் இப்படிப்பட்ட ஒரு உணர்ச்சிதான். பிச்சாண்டி அத்தனை பேசினாலும் வெப்ப மூச்சுக்களை நிறைத்தாலும் அவன் சுந்தாவையும் சந்திரசேகரய்யரையும்விட எந்த வகையில் இந்த விஷயத்தில் உயர்ந்தவன் என்று தெரியவில்லை.
கதையின் துவக்க பக்கங்களில் வரும் கதாகாலட்சேபத்தில் சுப்புக்குட்டி சாஸ்திரி, "சந்திரமதியை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். பெண்களுக்கு கற்பே அழகு பூஷணம். பதி பக்தியில் தவறுகிறவர்கள் வாஸவனுக்கு இணங்கிய மாண்டவ ரிஷி பத்னியைப் போல இகழ்ச்சிக்கு உள்ளாவார்கள்," (பக்கம் 18) என்று சொன்னால், "ஸ்திரீகள்தான் அவாளோடே கற்பைக் காப்பாத்திக்கணும். அவா கையில்தான் எல்லாமிருக்கு. சீதை ராமனிடத்தில் இருந்த மாதிரி அவா இருந்தா..." என்கிறார் முடிவில் (பக்கம் 182).
இந்த நாவல் பெண்ணிய பால் விழைவைப் பேசுகிறது என்று மட்டுமல்ல, பெண்ணின் பால் விழைவைப் பேசுகிறது என்று சொல்பவர்களும்கூட தவறு செய்கிறார்கள் என்று தோன்றுகிறது. பெண்ணியம் என்பது பெண் உடலில் அதிகாரத்தை நிறுவி, அதன் அசைவுகளில் ஆணைகளைப் பிறப்பித்தல் என்றிருந்தாலன்றி வாஸவேச்வரத்தில் நான் பெண்ணியத்தைக் காணவில்லை. பால் விழைவும்கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவாகத்தான் இருக்கிறது - பெண்களின் தனிப்பட்ட விரகம் என்று எதுவும் நாவலில் எங்கும் வர்ணிக்கப்பட்டுள்ளதாக நினைவில்லை. காமம் ஒரு கிளர்ச்சி அனுபவமாக மட்டுமே இருக்கிறது.
தன் கணவனை அன்பாலும் அழகாலும் ஈர்க்க விரும்பும் ரோகிணியிடம் நாம் காண்பது பால் விழைவல்ல, அதிகார விழைவு -
"அப்போ, நான் கைகட்டி, கால்கட்டி வாயில்லாப் பூச்சியா, உன் அடிமையா இருக்கணும், இல்லையா?" அவர் சீறினார்."ஆமாம்," என்று சொல்ல ரோகிணிக்குக் கூச்சமாக இருந்தது. ஆமாம். அன்பென்றால் அப்படித்தான். அன்பென்றால், ஈதல். காதலியிடம் தன் எல்லாவற்றையும் ஒப்படைத்துவிடுவது. "உன் ஆக்ஞை என் விருப்ப"மென்று சொன்னால்... அந்த ஒரு இணக்கத்தில் அவள் சுவர்க்கத்தையே கண்டு விடுவளே..." (பக்கம் 41).
இதுதான் அவளுக்குப் பிச்சாண்டியிடம் கிடைக்கிறது. இந்த அதிகார இழுபறியே கணவன் மனைவி இருவருக்குமிடையில் உள்ள பாலுறவை பங்கப்படுத்துகிறது. இந்தக் கதையின் மற்றொரு முக்கிய பாத்திரமான சுப்பையா தன் மனைவி விச்சுவிடம் புருஷனாக நடந்து கொள்ள முடியாமல் போகவும் இதே அதிகாரம் காரணமாக இருக்கிறது. அவனது பின்னடைவும் அதனால் ஏற்படும் தாழ்மையும் விச்சுவின் மனதில் விலகலை உருவாக்குகின்றன. அவளது பால் விழைவு என்பது பாலுறவு மறுப்பாகவே வெளிப்படுகிறது. சுப்பு தங்கம் உறவிலும் தங்கத்தின் கை, ஏதோ ஒரு விதத்தில் ஓங்கியுயரும் கணங்களில் சுப்புவை இயக்குகிறது. பப்புவை மணம் புரிய விரும்பும் கோமுவுக்கும்கூட பால் விழைவு பாதுகாப்பான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள விரும்பும் பெண்ணின் இறுதிகட்ட சூதாட்டப் பகடையாகவே இருக்கிறது. வாஸவேச்வரத்தில் அதிகார கலப்பில்லாத பால் விழைவு என்பது கிடையாது, அதுவும் குறிப்பாக பெண்களிடத்தில்.
இந்திரன் காமம், மாண்டவ ரிஷியின் சாபம் என்ற பின்கதையில் வாசிக்கும்போது ஒரு காவிய அளவிலான டிராஜடியின் பின்புலத்தில் காமிக்கல் பாத்திரங்களாக வாஸவேச்வரத்தின் கதைமாந்தர் நடமாடுகின்றனர் ("அவ்வப்போது இவ்வித அர்ச்சுனன்கள் தோன்றுவதால்தான் உலகம் நடக்கிறது" என்று இன்ஸ்பெக்டர் பெரிய பாட்டா குறித்து நினைத்துக் கொள்வது இத்தகைய ஒரு காவிய அபத்தமாகதான் இருக்க வேண்டும்). இவர்கள் தங்களைப் பற்றி எல்லாம் அறிந்திருந்தாலும் தங்களுக்கு வெளியே எதுவும் அறியாமல் இருக்கின்றனர் - "மாண்டவர் சாபம் நெனவு இருக்கட்டும். எல்லாத் தீவினைக்கும் காரணம் இந்த ஆசை," (பக்கம் 181) என்று அவ்வளவு பேசும் சுப்புக்குட்டி சாஸ்திரியும் கதையின் கடைசியில் வெறுங்கையோடு போனால் எடுத்தெறிந்து பேசுவாள் என்று கதாகாலட்சேபம் செய்து முடித்ததும் சுண்டல் பொட்டலத்தை ஞாபகமாக முடிந்து வைத்துக் கொண்டு ஆனந்தாவைத்தான் தேடித் திருட்டுத்தனமாக ஓடுகிறார்.
வாஸவேச்வரம்,
கிருத்திகா,
காலச்சுவடு பதிப்பகம் (2007)
183 பக்கங்கள், ரூ. 140
No comments:
Post a Comment