சில மாதங்களுக்கு முன் இன்ஸ்பெக்டர் வலாண்டர் வரிசையில் `முகங்களற்ற கொலையாளிகள்` புத்தக விமர்சனம் ஆம்னிபஸில் வெளியானது. சொல்வனம் இணைய இதழில் வெளியான அஜயின் குற்றப்புனைவைத் தொடர்ந்து சென்றடைந்ததில் இன்ஸ்பெக்டர் வலாண்டர் தொடர் புத்தகங்கள் முக்கியமான வாசிப்பை அளித்தது. இந்த கட்டுரைத் தொடரில் பேசப்பட்ட அனைத்து குற்றப்புனைவு ஆசிரியர்களின் ஒரு படைப்பையேனும் படிக்க வேண்டும் எனும் முயற்சி எடுக்கத் தொடங்கினேன்.
அந்த வரிசையில் இன்று இன்ஸ்பெக்டர் மார்டின் பெக் தலைமையில் ஸ்வீடன் குற்றப்புனைவைப் பற்றிப் பார்க்கலாம். யோவால் மாய் (Sjowall, Maj) மற்றும் வாஹ்லு பெர் (Wahloo, Per) இரு எழுத்தாளர்கள் மார்டின் பெக் எனும் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தை உருவாக்கியவர்கள். இருவரும் ஸ்வீடன் நாட்டின் பொதுவுடமைக்கட்சி உறுப்பினர்கள். இன்ஸ்பெக்டர் மார்டின் பெக் மற்றும் ஸ்வீடன் காவல்துறையை முன்வைத்து பத்துக்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியுள்ளனர்.
உலகில் குற்றங்கள் எத்தனை வகை உள்ளதோ அத்தனை குற்றப் புலனாய்வு வகைகள் உள்ளன போலும். ஒவ்வொரு குற்றப்புனைவின் கதாநாயகனும் ஒவ்வொரு வகையில் குற்றங்களை ஆராய்கிறான்.
துல்லியமான பார்வை மற்றும் கூர்மையான மதியூகத்தைக் கொண்டு குற்றங்களைக் கண்டுபிடிக்கும் ஷெர்லாக் ஹோம்ஸ் ஒரு வகை என்றால், நமது துப்பறியும் சாம்பு போல் குருட்டு அதிர்ஷ்டத்தில் குற்றங்களைக் களைவது மற்றொரு வகை. பத்தொன்பதாம் நூற்றாண்டு குற்றப்புனைவுகள் முதல் வகை என்றால், இருபதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதி ரெண்டாம் வகை போலும். தேர்ச்சியாகச் செய்யப்படும் குற்றங்கள் என்றில்லாமல், நவீன உலகின் சமூக வகைமைக்கு ஏற்ப குற்றங்களும் மாறுபடுகின்றன. இருநூறு வருடங்களுக்கு முன்னர் கடத்தல் குற்றங்கள் இன்றைய சமூகங்களை விடக் குறைவானதாக நடந்திருக்கும். சமூக கட்டமைப்பில் மனிதர்கள் ஒருவரை விட்டு மற்றொருவர் விலகிப்போனபடி இருக்கின்றனர். எதிர் ஃப்ளாட்டில் வசிப்பவர்கள் எத்தனை பேர் என்பது கூட நமக்குத் தெரியாமல் போகிறது. உலகம் எந்திரமயமாக்கப்பட்டு சுருங்கிக் கொண்டிருக்கும் அதே நேரத்தில், எல்லாரும் தொடர்பு எல்லைக்கு வெளியே சென்றுகொண்டே இருக்கின்றனர். குற்றங்களின் சாத்தியங்களை இது அதிகப்படுத்துகிறது.
புலன்விசாரணை முறைகளை விட குற்றங்கள் ஓரடி முன்னே ஓடிக்கொண்டிருக்கின்றன. இணையம், குற்றவாளிகளின் தலைமுறைப் பட்டியல் என எல்லாமே கைக்குள் இருந்தாலும் அடுத்தத் தெருவில் நடக்கும் குற்றவாளியை நம்மால் கண்டுபிடிக்க முடியாது. அதனால், எத்தனை தொழில்னுட்ப சாத்தியங்கள் விசாலம் அடைந்தாலும், குற்றங்களை கண்டுபிடிப்பவர்கள் ஒரு விசாரணை முறையைக் கையில் எடுக்க வேண்டியிருக்கிறது. நடைமுறையில் அவை மிக மிக மெத்தனமாக நடக்கலாம். ஆனால், அவற்றைக் கடைபிடிக்காமல் குற்றங்களை சரிவர ஆராய முடியாது. இன்ஸ்பெக்டர் வலாண்டர், மார்டின் பெக் போன்றோர் இந்த முறை வழுவாமல் பின்பற்றுவர்.
ஸ்டாக்ஹோம் நகரத்திலிருக்கும் பூங்காவில் ஒரு சிறுமியின் சடலம் கிடைக்கிறது. அதற்கு சற்று நேரங்களுக்கு முன் ஒரு நடுத்தர வயதுப் பெண்மணியை அடித்துக் காயப்படுத்தி அவளது கைப்பையை ஒருவன் திருடியிருக்கிறான். பெண்மணிக்கு அடிபட்டாலும் உயிர் பிழைத்துவிடுகிறார். இன்ஸ்பெக்டர் மார்டின் பெக்குக்கு திருடன் மட்டுமே இருக்கும் ஒரே துப்பு. ஆனால் நகரெங்கும் வரிசையாக பல திருடுகள் நடப்பதால் ஒருவர் மட்டும் செய்யும் காரியமாகவும் இது தெரியவில்லை.
சம்பவம் நடக்கும் இரு நாட்களுக்கு முன்னர் ஒரு மூதாட்டி காவல்நிலையத்துக்கு தொலைபேசி வழியே ஒரு புகார் கொடுக்கிறாள். அவளது எதிர் அடுக்குமாடிக் கட்டடத்தின் ரெண்டாவது தளத்திலிருக்கும் பால்கனி வழியாக ஒருவன் தொடர்ந்து தெருவை பைனாகுலர் வழியாக நோட்டம் விடுகிறான் எனக் கூறுகிறாள். ஆனால் ஜெராட்ல் எனும் மார்டினின் அசிஸ்டெண்ட் இந்த புகாரை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
மார்டின் பெக் தனது வழக்கமான முறையில் புலனாய்வு செய்கிறார். மிக நேர்மையான இன்ஸ்பெக்டராக இருப்பவர். வாரெண்ட் இல்லாமல் வீட்டை சோதனை கூட செய்யாத அளவு நேர்மையானவர். எந்த சிறு துப்பையும் விடாமல் துருவிப் பார்ப்பவர். மகா பொறுமைசாலி.
ஆனால், இந்த கேஸில் அவருக்கு எந்த துப்பும் கிடைக்கவில்லை. எட்டு வயதுப்பெண்ணைக் கொலை செய்திருப்பவன் நிச்சயம் மனநோயாளியாக இருக்க வேண்டும் என திடமாக நம்புகிறார். அதே போல், சிறு குழந்தைகளை பாலியல் பலாத்காரம் செய்யும் நபர்களையும் தொடர்ந்து விசாரிக்கிறார். ஆனால், கேஸ் எந்த திசையிலும் வளரவில்லை.
ஒரு நாள், விபச்சாரி ஒருவர் கூறும் துப்பைக்கொண்டு பூங்காவில் திருடும் நபரைப் பிடிக்கிறார்கள். இந்த கேஸின் முதல் லீட் கிடைத்துவிட்டது. ஆனால், அவனைப் பேச வைக்க முடியவில்லை. சம்பவம் நடந்த இரவைத் மீண்டும் மீண்டும் அவனோட அலசிப்பார்க்கிறார் மார்ட்டின். ஒரு கட்டத்தில் கொலை நடந்தது திருட்டுக்குப்பின்னர் என்பது விளங்குகிறது. ஆனாலும் அந்த நேரத்தில் சந்தேகப்படும்படியாக யாரும் அங்கு வரவில்லை, தான் ஒரு மரத்துக்குப் பின்னாடி ஒளிந்துகொண்டிருந்து நோட்டம் விட்டுக்கொண்டிருந்தேன் என ஒப்புதல் வாக்குமூலம் அளிக்கிறான். இப்போது கேஸ் ஒரு முட்டுச் சந்தில் நின்றுவிடுகிறது.
இறப்பதற்கு முன் பெண்ணோடு விளையாடிய நண்பர்களை விசாரிக்கிறார். மிகவும் பயந்துபோகும் குடும்பத்தினர் குழந்தைகளைப் பேச அனுமதிப்பதில்லை. ஆனாலும் அவர்களிடம் பொறுமையாகப் பேசி சம்பவம் நடந்த மாலை நிகழ்வுகளை மறுபடியும் செய்துபார்க்கிறார். பெண்ணோடு விளையாடிய மூன்று வயது சிறுவன் யாரையோ சந்தித்ததைப் பற்றி கூறுகிறான். ஆனால் தெளிவாகச் சொல்லவில்லை.
மரத்துக்குப் பின்னாலிருந்து தாக்கித் திருடும் திருடன் மற்றும் மூன்று வயது சிறுவன் - இருவர் சொல்லும் நிகழ்வுகளைக் கொண்டு ஒரு கொலையைக் கண்டுபிடிக்க முடியுமா?!
மார்ட்டின் விடாமல் எல்லா வழிகளிலும் பயணிக்கிறார். காவல்துறையினரின் புலனாய்வு முறை மிகத் துல்லியமாக இந்த நாவலில் வெளிப்படுகிறது. எடுத்தோம் கவிழ்ந்தோமென யாரையும் விசாரிக்க முடியாது. அதே போல், கார், காவல்துறை என சகல வசதிகளும் ஒருவர் கையில் இருக்காது. ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட கேஸ்களை சமாளிக்க வேண்டியிருக்கும். அலுவலக வண்டி உடனடியாகக் கிடைக்காது. கிடைத்தாலும் பெட்ரோல் போட்டு பணத்தைத் திரும்ப வாங்குவது அத்தனை சுலபம் அல்ல. போதாக்குறைக்கு குடும்பத்தோடு இல்லாமல் 24 மணிநேரங்களும் ஓடிக்கொண்டே இருக்க வேண்டும்.
இத்தனைக்கும் நடுவே சமநிலையோடு இருப்பது மிகவும் கடினம். அதே சமயம் எந்த துப்பையும் விட்டுவிட முடியாது. மார்ட்டினின் அசாத்தியமான பொறுமை நாவல் முழுவதும் தென்படுகிறது. ஒரு கட்டத்தில், பத்திரிக்கை, தொலைக்காட்சி, ரேடியோவில் கொலையாளியின் குத்துமதிப்பான உருவத்தை வெளியிடுகிறார்கள். அடுத்த நாளிலிருந்து நகரின் பல மூலைகளிலிருந்தும் கொலையாளியைப் பார்த்ததாக செய்தி வருகிறது.
இந்த நேரத்தில் சம்பவம் நடப்பதற்கு முன் தொலைபேசியில் அழைத்த மூதாட்டியின் நினைப்பு மார்ட்டினுக்கு வருகிறது. அன்றைய தினத்தை நன்றாக நினைவு கூறச் செய்தும் பாட்டியின் பெயர் நினைவுக்கு வரவில்லை. இப்படி ஒரு புகார் வந்ததைப் பற்றி பத்திரிக்கைகளில் செய்தி கொடுக்கிறார்.
மீண்டும் பல நாட்கள் காத்திருப்பு. அதற்குள் ஊரில் மற்றொரு சிறுமியின் கொலையும் நடந்துவிடுகிறது. மக்கள் பீதியடைகிறார்கள். அவர்களே பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்து பொது இடங்களைச் சுற்றிக் காவல் இருக்கிறார்கள். ஒரு குற்றவாளியைத் தேடி மறைந்திருக்கும் மார்ட்டின் பெக்கை குற்றவாளி என நினைத்து ஒரு பொதுஜனம் அடித்துவிடுகிறார். ஒரே குழப்பம்.
கொலையாளியை மார்டின் பெக் கண்டுபிடிக்கவில்லை. நகரின் காட்டுப் பகுதியில் ஒரு இளைஞன் சிக்குகிறான். அவனது சட்டைப்பையிலிருந்து ஒரு சிறுமியின் துணியைக் கண்டெடுக்கிறார்கள். அவன் தான் கொலை செய்தவன் என ஒத்துக்கொள்கிறான். மார்டின் பெக் கொடுத்த அடையாளங்களோடு அவன் ஒத்துப்போவதாக கைப்பற்றிய இன்ஸ்பெக்டர் தெரிவிக்கிறார்.
எத்தனை விதமான விசாரணை தந்திரங்கள் இருக்கிறது என ஒரு பக்கம் உரைத்தாலும், புலனாய்வு செய்வது எத்தனை நிதானமான காரியம் என்றும் புரிகிறது. ஒரு விஷயத்தைக் கையில் எடுத்துக்கொண்டால் மார்ட்டின் பெக் காட்டும் அசாத்தியமான உழைப்பு அசர வைக்கிறது. காவல்துறையினரின் தனிப்பண்புகளை மிகத் துல்லியமாக இந்த நாவல் காட்டுகிறது. அசாதரணமாக செய்கைகள் செய்பவர்கள் அல்ல அவர்கள். சாதாரண செயல்களை அசாதாரண உழைப்பை கொடுத்துச் செய்பவர்கள்.
தலைப்பு:- The man in the balcony.
எழுத்தாளர்கள் - ஸ்லோவா, மாய் ; வாஹ்லோ, பெர்
இணையத்தில் வாங்க - The man in the balcony
No comments:
Post a Comment