சில எழுத்தாளர்களே நல்ல பேச்சாளர்களாகவும் இருக்கிறார்கள்.. தாமஸ் ஃபீரீட்மேன் (இவர் செல்லமாக டாம் ஃபீரீட்மேன் என்று அழைக்கப்படுகிறார்). டாம், நியூயார்க் டைம்ஸில் வேலை பார்ப்பவர். உலகம் முழுவதும் பல்வேறு செய்திச் சேகரிப்பு விஷயமாக பயணம் செய்ததால், உலக நிகழ்வு பற்றி மிகவும் தெளிவான அறிவு கொண்டவர். அருமையான பேச்சாளர், மற்றும் சிந்தனையாளர்.
இவருடைய பல்வேறு ஆரம்ப கால புத்தகங்கள் அவரது மத்திய கிழக்கு அரசியல் அனுபவங்களைப் பற்றியது. யூதரான இவர், பெய்ரூட்டில் (லெபனான்) மற்றும் ஜெரூஸலத்தில் பணி புரிந்த காலத்தைய பல்வேறு அனுபவங்களை அழகாக எழுதியுள்ளார். இன்று நாம் அறிமுகப்படுத்தும் புத்தகம், 2008 –ல் இவர் எழுதிய ‘Hot Flat and Crowded’ என்ற சூழலியல் பற்றிய அருமையான பதிப்பு.
2006-ல் முன்னாள் அமெரிக்க துணை அதிபர் அல் கோர், சூழலியல் பற்றிய விழிப்புணர்ச்சியை பல்வேறு காட்சியளிப்பு மூலம் உலக அளவில் மிக அழகாகச் சொல்லி வந்தார். ஆனால்,பெருமபாலானோர் இந்த முயற்சியைப் பாராட்டினாலும், யாரும் எது ஒன்றும் ஒன்றும் புதிதாகச் செய்யவில்லை. அன்றாட வாழ்க்கையில் பெரிய மாற்றம் எதுவும் நிகழவில்லை. (இன்றும் அத்தகைய அவல நிலை உள்ளது என்பதே உண்மை). டாம், இப்புத்தகத்தில், சூழல் காப்பு / கட்டுப்பாடு என்பது உண்மையிலேயே வெறும் மனசாட்சி சம்மந்தப்பட்ட விஷயம் மட்டுமல்ல, இது பெரிய ஒரு வர்த்தக தலைமைக்கான வாய்ப்பை தேசங்களுக்கும் நிறுவனங்களுக்கும் அளிக்கிறது என்று வாதிடுகிறார்.
இவரது சில வாதங்கள், அன்றாட வாழ்க்கைக்கு சரிப்பட்டு வருமா என்ற கேள்வி எழுந்தாலும், இவரது நோக்கம் மிகவும் நேர்மையானது என்பது இவர் எழுத்திலும் பேச்சிலும் தெளிவாக தெரிகிறது.
முதலில், இப்புத்தகம் வெளியிட்டவுடன் இவர் ஆற்றிய அருமையான உரையின் விடியோ இங்கே:
ஒவ்வொரு பத்து முதல் பன்னிரண்டு வருடங்களிலும் இவ்வுலக மக்கள் தொகை ஒரு இந்தியா அளவுக்குப் பெருகுகிறது ( 100 கோடி மனிதர்கள் அதிகரிக்கிரார்கள்).. இதில் இந்தியாவின் பங்கு மட்டும் ஏறக்குறைய 15%. இத்தகைய மக்கட்தொகை வளர்ச்சிக்கு உலகில் நிலம், நீர் மற்றும் கனிமப்பொருள்கள் இல்லை என்பதுதான் இவர் முதலில் நம் முன் வைக்கும் வாதம். இது முற்றிலும் உண்மை. அத்துடன், இவர் மிகவும் நகைச்சுவையோடு இன்னொன்றும் சொல்கிறார். வளரும் நாடுகள் அவசரமாய் வளரத் துடிக்கின்றன. இப்படி வளரும் நாடுகளில் மத்திய தரப்பினர் (middle class) வளர்ச்சியின் முக்கிய பங்காளர்கள் / நுகர்வோர் ஆகின்றனர். சமூகத்தின் கீழ் மட்டத்தில் இருக்கும் ஒரு குடும்பம் மத்திய நிலையை அடைந்தவுடன் தேடுவது என்ன? கண்மூடித்தனமான அமெரிக்கர் ஆகத்தான்
அமெரிக்கரான டாம், தன்னுடைய நாட்டினரையே அழகாக கிண்டலடித்து இந்த பிரச்சனையை புரிய வைக்கிறார். அதாவது, மைக்ரோவேவ் அடுப்பு, குளிர்சாதனப் பெட்டி, ராட்சச டிவி, துணி தோய்க்கும் எந்திரம், கணினி, மற்றும் கார் என்பது மத்திய தரப்பினரின் உடன் கனவு. இவை யாவும் மின்சாரம் உறிஞ்சுபவை. இன்றைய தமிழ் நாட்டின் மின்சார பற்றாக்குறையை இந்தப் பின்னணியில் சிந்தித்துப் பாருங்கள்.
டாமின் பார்வையில், இந்திய மத்திய வர்கத்தினர் புதிய அமெரிக்கர்கள். கடந்த 60 ஆண்டு காலமாக கண்மூடித்தனமாக அமெரிக்கர்கள் செய்ததை நாமும் இன்று செய்கிறோம். ஆனால், இந்த பூமி, 100 கோடி அமெரிக்கர்களை மட்டுமே தாங்கக் கூடிய அளவிற்கு மட்டுமே வளங்கள் கொண்டது. புதிய அமெரிக்கர்களை எப்படி சமாளிப்பது? 300 முதல் 400 கோடி அமெரிக்கர்களுக்கு, 3 பூமிகளாவது தேவை!
ஆனால், சமாளித்தே ஆக வேண்டும். வளரும் தேவைகள் அத்தனையையும் இறக்குமதியால் சமாளிக்க முடியாது. அப்படியே சமாளிக்க முயன்றாலும், வளங்களைத் திரட்ட ஏராளமான போட்டி நிலவும். இந்தியா, சைனா மற்றும் வளரும் நாடுகள் அரபு ஷேக்குகளிடம் கைகட்டி நின்று;, அவர்கள் விற்கும் எண்ணெய்க்கு எந்த விலையும் தயாராகி விட்டோம். இவர்களின் சர்வாதிகாரத்தையும் கண்டு கொள்ளாமல் அடுத்த வேளை எரிபொருளுக்காக எதையும் செய்யத் தயாராக இருக்கிறோம்.
மாற்று முயற்சிகள் அவசியம். இப்படியே போய் கொண்டிருக்க முடியாது. உலகின் எந்த நாடு இம்முயற்சிகளில் வெற்றி பெருகிறதோ, அந்த நாடே நாளைய தலைநாடு என்பது டாமின் வாதம். இதில், அமெரிக்கா சற்று தூங்கி விட்டது; உடனே செயல்பட்டால்தான் மற்ற நாடுகளால் மதிக்கப்படும் என்கிறார். இப்பிரச்சனை எல்லா நாடுகளையும் பாதிப்பதால், இதை ஒரு அமெரிக்க பிரச்சனையாகவும் விட்டு விட முடியாது.
இவர் சொல்லும் பல்வேறு மாற்று முயற்சிகள் மிகவும் சுவாரசியமானவை. முதலில், மின்சார வினையோகம் உலகம் முழுவதும் மாற வேண்டும். இன்னொரு நகைசுவையான விஷயத்தை டாம் இப்புத்தகத்தில் அழகாக சொல்லியுள்ளார். உலகின் அத்தனை மின்சார உற்பத்தியாளர்களும் பூபே உணவு முறையில்தான் (electron buffet) தங்கள் மின்சார உணவகத்தை நடத்தி வருகிறார்கள். அதாவது, ஒரு கட்டணத்திற்கு, எத்தனை வேண்டுமானாலும் சாப்பிடலாம். ஆனால், வயிறு நிரம்புவது எளிது. மின்சார தேவை நிரம்புவது கடினம். இன்று, டாம் சொல்வது போல, பல மேலை நாடுகள் Smart Meter என்ற மின்சார அளவுக்கருவிகளை நிறுவி வருகின்றன. இரவில் உறங்கும்போது குறைந்த கட்டணம், மற்றும் பகலில் எல்லோரும் உப்யோகப்படுத்தும்போது அதிக கட்டணம் என்று கணக்கிடுகிறது. இதனால், பல்வேறு மின்சாரக் கருவிகள், புத்திசாலித்தனமானதாக ஆக்கப்பட வேண்டும். அப்பொழுதுதான், மின் கருவிகள் தூங்கும் நேரத்தில் குறைந்த கட்டணத்தில் வேலை செய்யும்.
மேலும், புதிய கார்கள் இன்று சக்தி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. ஆனால், இவை உற்பத்தி செய்யும் சக்தியை மின் நிறுவனத்திற்கு விற்கும் வழி எளிதாக்கப்படவில்லை. எதிர்காலத்தில், (அதாவது இன்னும் 5 ஆண்டுகளுக்குள்) இது சாத்தியமாக வேண்டும். யார் வேண்டுமானாலும் மின்சக்தி உற்பத்தியாளராகக வழி செய்யப்பட வேண்டும். ஓரளவிற்கு, இன்று தமிழகத்தில் காற்று சக்தியை தனியார் மின்சக்தியாக மாற்றும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்கள். ஆனால், வளரும் தேவைகளை சமாளிக்கத் தவிப்பது உண்மை.
இப்புத்தகத்தில் பல்வேறு ஐடியாக்களை டாம் பல்வேறு கம்பெனிகளுடன் கலந்தாலோசித்து எழுதியுள்ளார். அத்தனையும் நடைமுறைக்கு ஒத்து வரும் என்று சொல்ல முடியாது. இவர் சொல்லும் ஐடியாக்கள், எல்லா நாடுகளுக்கும் பொருந்தும் என்றும் சொல்ல முடியாது. வெறும் எரிபொருள், மின்சாரம் என்பதுடன் நிற்காமல், இயற்கை வளங்களை சரியாக பயன்படுத்தும் புதிய முறைகளையும் டாம் இப்புத்தகத்தில் சொல்கிறார். இதைப் பற்றி ‘சொல்வனம்’ பத்திரிகையில் நான் எழுதிய கட்டுரைகள் இங்கே:
மேலும் மேற்கத்திய நிறுவனங்கள் இது சம்பந்தமாகப் பல்வேறு முயற்சிகளில் ஈடுபடுவதைப் பற்றிய ஆய்வுக் கட்டுரைகள் இங்கே: சர்ச்சை மூட்டும் பச்சை நிறமே - பகுதி -1 , பகுதி 2
உலகம் போற்றும் பெரிய ஒரு பத்திரிகையாளரான டாம், மிகுந்த சமூக அக்கறை கொண்டவர். உலக நாடுகள் சமாளிக்க வேண்டிய மிகப் பெரிய பிரச்சனையான சக்தி/ சூழல் பிரச்சனையை ஆராய்ந்து, தனக்கே உரிய பத்திரிகை முறைகளில் பல பேட்டிகள் மூலம், அருமையான பல வழிகளை (மிகவும் கடினமானவை) மிக எளிய நடையில், இப்பிரச்சனையைப் பற்றி தெரியாதவர்களுக்கும் அழகாக புரிய வைக்கிறார். சூழலியலில் ஆர்வம் கொண்ட ஒவ்வொருவரும் படிக்க வேண்டிய அவசியமான புத்தகம்.
Hot, Flat and Crowded - Thomas Friedman.
Picador.
புகைப்பட உதவி - thomaslfriedman.com
சார்,
ReplyDeleteநல்ல மதிப்புரை, எப்போதும் போலவே.
சில சந்தேகங்கள்
1)// ஆனால், இந்த பூமி, 100 கோடி அமெரிக்கர்களை மட்டுமே தாங்கக் கூடிய அளவிற்கு மட்டுமே வளங்கள் கொண்டது//இவர் இவ்வுலகம் அமெரிக்கர்களுக்கு மட்டும் சொந்தம் என்கிறாரா அல்லது figurativeஆக அமெரிக்க கலாசாரத்தைத் தழுவும் மத்திய வர்க்கத்தை சாடுகிறாரா/கிண்டலடிக்கிறாரா?
2)//மேலும், புதிய கார்கள் இன்று சக்தி உற்பத்தி செய்யும் திறன் கொண்டவை. // இது எனக்குப் புரியவில்லை? என்ன சக்தியை இவை தோற்றுவிக்கின்றன?