ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒரு புத்தகம் புது எழுத்து இயக்கத்தைத் தோற்றுவிக்கும். அந்தந்த புத்தக எழுத்தாளர்களுக்கு அவர்களது எழுத்தின் பாதிப்பு இன்னின்னது என எழுதும்போது தெரியாது. கா.நா.சு-வின் பொய்த்தேவு, புதுமைப்பித்தனின் சிற்பியின் நரகம், சுந்தர ராமசாமியின் ஜே.ஜே.சில குறிப்புகள், ஜெயமோகனின் காடு என ஒவ்வொரு காலகட்டத்திலும் தமிழ் இலக்கியத்தின் புனைவு மையங்கள் திட்டவட்டமான மாற்றங்களைக் கொண்டுள்ளன. தமிழ் சூழலில் நாவல் எனும் வடிவத்தை முன்வைத்த ஆரம்ப கட்ட படைப்பாக பொய்த்தேவு நாவலையும், சராசரித்தனம் ஏதுமில்லாமல் புது எண்ணங்களின் வீச்சை முன் நடத்தக்கூடிய ஜே.ஜே எனும் ஆளுமையின் சித்திரம் கொண்ட படைப்பாகட்டும், கவித்துவ ரசனை எழுத்தை புனைவின் சாத்தியங்கள் கொண்டு படைப்பாக்கிய காடு நாவலாகட்டும் எல்லாமே தமிழ் படைப்பு உலகத்தில் பெரும் பாய்ச்சலை உருவாக்கியவை.
சிறுகதைகளில் நாம் செய்துபார்த்த புதுமைகளிலிருந்து மிகக் குறைந்த சதவிகிதமே நாவல் உலகில் வெளிப்பட்டுள்ளது. நாவலில் காட்டிய பாய்ச்சலில் மிகச் சொற்பமான பங்கு குறுநாவல்களில் வெளிப்பட்டுள்ளது. மேற்கூறிய பகுப்புகள் மேற்கு இலக்கிய உலகிலிருந்து கிளைத்தவை என்றாலும் இலக்கியத்தின் தரப்பகுப்பாய்வுக்கு மிகவும் தேவையான ஒன்றாக அமைந்துள்ளது. ஆனால், தமிழ் இலக்கிய உலகில் விமர்சனத்துறை அதிக வளர்ச்சி அடையவில்லை எனப் பொதுவான எண்ணம் நிலவுகிறது. அது ஓரளவுக்கு உண்மை என்றாலும், ஏற்கனவே நம்முன் இருக்கும் இலக்கிய தரங்களை நாம் எந்தளவு மதித்து வருகிறோம் என்பதும் யோசிக்க வேண்டிய விஷயம்.
ஆனால் ஒரு கட்டத்தில் கறாராக முன்வைக்கப்படும் ரசனை விமர்சன அளவுகோள்கள் நமது இலக்கியப் பாதையை மாற்றியுள்ளது. பாரதி, தர்மு சிவராமு, செல்லப்பா முன்வைத்த கவிதை ரசனை விமர்சன அழகியல் நவீன கவிதை முன்னகரக் காரணமாக அமைந்துள்ளது. அது போல, சுந்தர ராமசாமி, வெங்கட் சுவாமிநாதன், கா.நா.சு போன்றவர்கள் முன்வைத்த சிறுகதை விமர்சனங்கள் நமது புனைவுலகை நவீன இலக்கியப் பாதைக்கு திசை திருப்பியது.
ஜெயமோகன் எழுதிய `நாவல்` எனும் விமர்சனக்கோட்பாட்டு நூல் மேற்சொன்ன வரிசையில் தமிழில் நவீன நாவல் போக்கை மாற்றி அமைத்தது எனச் சொன்னால் அது மிகையாகாது. தொன்னூறுகள் வரை நாவல் என்றாலே நீள்கதைகள் மட்டுமே எனும் போக்கு பொதுவாக இருந்துவந்தது. ஒரு சில பாத்திரங்கள், எண்ணிலடங்கா நிகழ்வுகள் அமைந்துவிட்டால் ஒரு நாவல் களத்தை உருவாக்கிவிடலாம் என்ற எண்ணமும் ஓங்கியிருந்தது. போதாக்குறைக்கு வெகுஜன இதழ்கள் கொண்டுவந்த தொடர் கதைகள் நாவல்கள் உருவாக காரணமாக அமைந்திருந்தன. ஒவ்வொரு வாரமும் வாசக ஈடுபாட்டைத் தக்கவைவேண்டிய திருப்பங்கள் கொண்ட நிகழ்வுகள், எந்தவகையிலும் பாத்திரங்களின் ஆழத்துக்குப் போகாத படைப்புகள் வெளிவந்தபடி இருந்தன. தொடர் முடிந்ததும் ஒரு நாவலாக வெளியிட்டுக்கொள்ளும் சாத்தியமும் பதிப்பாளர்களுக்கு பெரும் வாய்ப்பாக இருந்தது.
சார்லஸ் டிக்கன்ஸ், டால்ஸ்டாய் போன்ற பத்தொன்பதாம் நூற்றாண்டு நாவலாசிரியர்கள் தொடர்கதைகளாக தங்கள் நாவல்களை வெளியிட்டவர்களே. ஆனால், அவர்களது படைப்புகள் நாவலாக வெளிவரும் சாத்தியங்களையும், அகல ஆழப் பயணிக்கும் சாத்தியங்களையும் இயல்பாகக் கதையோட்டத்தில் கொண்டிருந்தன. அவர்களது எழுத்துக்களைப் படிக்கவும் மக்கள் வாராவாரம் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருப்பர். ஆனால், ஏதோ ஒரு நிர்பந்தந்தினால் மிக மேலோட்டமான கதைகள் மட்டுமே வெளிவந்தன. நாவல் எனும் வடிவத்தின் இந்த குறைபாடு இலக்கிய உலகத்தில் பொதுவாகப் பேசப்பட்டாலும் (காகங்கள் - சு.ரா) ஒரு திட்டவட்டமான கோட்பாடு உருவாக்கப்படவில்லை. அதற்கானத் தேவை அமையவில்லை என சு.ரா குறிப்பிடுகிறார்.
அப்போது ஒரு சம்பவம்.
இலக்கிய சிந்தனை விருது வாங்கிய `ரப்பர்` நாவலின் விழாவில் எழுத்தாளர் ஜெயமோகன் பேசிய பேச்சு விழாவுக்கு வந்த பலரின் சிந்தனையை அசைத்துப் பார்த்தது. வராதவர்களுக்கு வதந்திகளாக ஜெயமோகனின் பேச்சு சென்று சேர்ந்தது. நாவல் எனும் சாத்தியங்களை சவால்களை இன்னும் தமிழ் நாவல் உலகம் சந்திக்கவில்லை என அவர் கூறிய பேச்சு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. சுஜாதாவும் கடைசி பக்கங்களில் தமிழில் நாவல்களே வரவில்லை என ஜெயமோகன் சொன்னதாகப் புரிந்துகொண்டு அதை காட்டமாக எதிர்த்திருந்தார். ஆனால் அது அல்ல ஜெயமோகன் கூறியது. உலகத் திரைப்படத்துக்கு சவால் விடக்கூடிய திரைப்படங்களே தமிழில் வரவில்லை எனக்கூறினால் திரைப்படங்களே தமிழில் வெளியாகவில்லை என்றா அர்த்தம்?
அந்நாட்களில் பிரபலமாயிருந்த பல எழுத்தாளர்களை அது பாதித்ததாக கட்டுரைகள் வெளியாயின. அவற்றை எழுதிய அனைவரும் உலக இலக்கிய பரிச்சயம் கொண்டவர்கள் தாம். நாவல் உலகில் மேற்குலக சாதனைகளை நன்கு புரிந்து தனிப்பட்ட உரையாடகளில் அவற்றை வெளிப்படுத்தியவர்கள் தாம். ஆனாலும், ஜெயமோகன் முன்வைத்தது ஒரு சவாலாகவே பார்க்கப்பட்டது.
தனக்கு எதிராக எழுதப்பட்ட கட்டுரைகளுக்குப் பதிலாக நாவல் எனும் கோட்பாட்டு நூலை அவர் எழுதினார். அதில் புனைவில் அமைந்திருக்கும் பல வடிவங்களை அவர் ஆராய்கிறார். சிறுகதை, குறுநாவல், நீள்கதை, நாவல் என ஒவ்வொன்றுக்கும் திட்டவட்டமாக ஒரு உள்ளார்ந்த வடிவம் உள்ளன. அளவு குறைந்திருந்தால் சிறுகதை என்றோ, பலப்பல பக்கங்களுக்கு நீண்டால் நாவல்கள் என்றோ நாம் புரிந்துகொள்ளத்தேவையில்லை. தமிழ் இலக்கிய உலகில் நவீன இலக்கிய பரிச்சயம் உள்ளவர்களுக்கு சிறுகதையின் வடிவம் புரிந்தே இருக்கும். ஒரு முடிவை நோக்கி விரையும் வடிவம் என்றளவில் ஒரு குறிப்பிட்டக் கால அளவுக்குள் நடக்கும் கதைகளை சிறுகதைகள் எனச் சொல்லலாம். ஆனால் குறுநாவல்கள் மற்றும் நாவல்களின் அமைப்புகளில் பெருங்குழப்பமே காணப்பட்டன.
சிறுதை காட்டுவது காலத்தின் ஒரு துளி,
குறு நாவல் காட்டுவது காலத்தின் சிறிய நகர்வு,
நாவலில் படமாக விரிவது காலத்தின் பிரவாகம்.
உச்சகட்டத்தை நோக்கிப் பயணிக்கும் கதைகளில் ஒரு இயல்பான கால ஓட்டம் அமைந்திருக்கும். இந்தப் பயணம் ஒருமைப்பாடாக அமைந்திருந்தால் அந்தப் படைப்பை சிறுகதை எனலாம். திட்டவட்டமாக ஒரு இலக்கை நோக்கி நகரும் பயண அனுபவத்தை சிறுகதைகளில் காணலாம்.
நாவல் என்பது ஒரு விவாத வெளி என்கிறார் ஜெயமோகன். குறிப்பிட்ட சிந்தனை ஓட்டங்களை நாவல் உலகம் முன்வைக்கும். அவற்றின் பலதரப்பட்ட சாத்தியங்களை கதாபாத்திரங்களின் நிகழ்வுகளாகக் காட்டி வாசகனுக்கு பன்முகத்தைக் காட்டுவது நாவலில் பணி என்கிறார். அந்த விவாதப்பரப்பில் கையாளப்படும் நிகழ்வுகளுக்குள் ஒருமை கைகூடி இருக்கலாம். ஆனால் அவை எப்போதும் ஒரு திட்டமிட்ட முடிவை நோக்கி செலுத்தப்படுபவை அல்ல. அவற்றுக்கு ஒரு முடிவு இருக்கவேண்டிய அவசியம் கூடக் கிடையாது என்கிறார். இதனாலேயே நாவல் என்பது ஒரு நிறைவுறாதப் பிரதியாக இருக்கும் சாத்தியங்களைக் கொண்டிருக்கும் எனும் முடிவுக்கும் அவர் செல்கிறார். ஏனென்றால் அது ஒட்டுமொத்தமாகத் தொகுத்து சொல்லும் சிந்தனைத்தளத்தைக் காட்டிலும் ஒட்டுமொத்தமாகக் காட்டப்படும் வாழ்க்கையில் நாவலின் சாரம் வெளிப்படும் என்கிறார்.
குறுநாவல் என்பது நாவலின் விவாதமும், சிறுகதையின் ஒருங்கிணைவும் சேர்ந்து அமைந்திருக்கும் வடிவம் என்கிறார்.
ஒவ்வொரு வடிவத்துக்கும் பலவிதமான படைப்புகளை உதாரணமாகக் காட்டுகிறார். பல சமயங்களில் நாம் நாவல் என நினைத்திருக்கும் படைப்புகளை குறுநாவல்களாக வகுத்துக்கொள்கிறார். புத்தம் வீடு, 18ஆம் அட்சயக்கோடு, தண்ணீர் போன்றவை ஒரு குறிப்பிட்ட இலக்கு நோக்கி நகர்வதால் குறுநாவல்கள் என வர்ணிக்கிறார். ஜெயமோகன் கூறும் திட்டவட்டமாக கோட்பாடுகளை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும் என்பது கிடையாது. பல விதிகளை அமைத்து ஒரு ரசிகக் கோட்பாடு அமைப்பதை தவறு என்று சொல்லிவிடமுடியாது. அவர் அமைத்துக்கொண்ட விதிகள் இலக்கிய உலகுக்குள் என்ன மதிப்பு எனப் பார்க்கும்போதுதான் நமக்கான புரிதல்கள் சாத்தியமாகின்றன. விவாதப்பொருட்களைத் தாண்டி ஜெயமோகன் முன்வைக்கும் கோட்பாடுகளைப் புரிந்துகொண்டு நமது விமர்சனம் அடிப்படைகளை சோதித்துப் பார்க்கலாம்.
இக்கோட்பாடுகளை உருவாக்குவதற்காக வாசக இடைவெளி எனும் கருதுகோளை ஜெயமோகன் முன்வைக்கிறார். வாசகருக்கும் எழுத்தாளருக்கும் படைப்பை முன்வைத்து சில இடைவெளிகள் உண்டாகின்றன. அந்த இடைவெளிகளை இட்டு நிரப்பியபடி வாசகன் ஒரு படைப்பைப் படிக்கிறான். அவனை முட்டித்தள்ளி செல்ல முடியாத திசைகளை மூடிவைக்கும் நிகழ்வுகள் இடைவெளிகள் அல்ல. எழுத்தாளன் சொல்லாமல் விட்டுவைக்கும் மெளனங்களை ஒரு வாசகன் நிரப்பும்போது ஒரு படைப்பின் முழுமை கூடுகிறது. அப்படிப்பட்ட இடைவெளிகள் இல்லாமல் இருக்கும் படைப்பு வடிவம் சிறுகதை எனலாம். அங்கு வாசகனுக்கு இடமே இல்லை. எல்லாவற்றையும் எழுத்தாளன் எப்படியாவது (குறியீட்டு வழியே அல்லது நிகழ்வுகளின் நாடகத்தருணங்கள் வழியே) சொல்ல வேண்டிய நிர்பந்தம் உள்ளது. படைப்பில் சொல்லாமல் விடப்படும் இடங்கள் வழியே வாசகன் வளர்த்துகொள்ளும் சிந்தனைகளும், பதில்களும் ஒரு படைப்பைப் பூர்த்தி செய்கிறது எனும்போது நாவல் வடிவத்தில் வாசகனின் தேவை அதிகம் இருப்பதை நாம் உணர முடிகிறது.
விவாதப்பரப்பின் சாத்தியங்கள் வாசக இடைவெளியால் நிரப்பப்படுவது எனும் முக்கியமான கருதுகோளை நாம் தெளிவாகப் புரிந்துகொள்ளும்போது ஜெயமோகன் குறிப்பிடும் இலக்கிய வகைமைகள் நமக்குப் பிடிபடத்தோன்றுகின்றன. அதன்படி, பக்கங்களைக் கணக்கிடாமல் புனைவு காட்டும் உலகை நாம் அணுகத் தொடங்குகிறோம்.
இதுவரை தமிழில் வெளியான பிரபலமான நாவல்கள், குறுநாவல்கள், நீள்கதை முயற்சிகள் ஒவ்வொன்றையும் ஜெயமோகன் உதாரணங்களாக முன்வைத்து அலசுகிறார். பொதுவாக மேற்கே எழுதப்படும் இலக்கியத் திரணாய்வு கட்டுரைகள் மிகவும் தீவிரமாக கோட்பாடுகளை உருவாக்கி தர்க்க ரீதியாகப் படைப்புகளை ஆராயும். why do we read classics, modern poetry criticism போன்ற நூல்கள் விமர்சனத்துறையில் ஈடுபடுபவர்களுக்காக அதே துறையில் இருப்பவர்கள் எழுதிய நூல்கள். ஆனால், நம் சூழலில் இலக்கியத் திறணாய்வு மிகக் குறைவாகவே நடைபெறுகின்றன என்பதால் விமர்சன மொழியினூடாக ஒரு விமர்சன நூல் வரும் சாத்தியம் மிகத் தொலைவில் உள்ளது. அப்படியே வெளியானாலும் அது ஆய்வறிக்கையைப் போல சாதாரண வாசகனின் வாசிப்பு எல்லைக்கு மிகத் தொலைவில் அமைந்திருக்கும். ஒரு தீவிரமான கோட்பாட்டு விமர்சனம் நூலாகவும், வாசகர்கள் அணுகக் கூடிய வகையில் எழுதப்பட்ட நூலாகவும் `நாவல் கோட்பாடு` நூல் இருப்பதும் நமது இலக்கிய பதிப்பு சூழலைக் காட்டுகிறது. அதே சமயம் நம்மால் அணுக முடியக்கூடிய விதத்தில் எழுதப்பட்டிருப்பதால் ஆரம்ப நிலை வாசகனும் இதை எளிதில் புரிந்துகொள்ள முடியும்.
கிழக்கு வெளியீட்டின் முன்னுரையில் ஜெயமோகன் குறிப்பிடுவது போல, நாவல் கோட்பாட்டு நூல் வெளியானப்பின்னர் நாவல் எனும் வடிவத்தின் மீது கவனம் அதிகமாகத் திரும்பியுள்ளது. நாவல் என்பது முடிவில்லாத காலவெளியில் பன்முக விவாதங்களைக் காட்டவேண்டிய வடிவம் எனும் கருதுகோள் ஒருவாறு இலக்கிய உலகில் அங்கீகாரம் பெற்றுவருகிறது. மணல்கடிகை, கொற்கை, ஆழி சூழ் உலகு, பயணக் கதை என அதற்குப் பல உதாரணங்கள் அமைந்துள்ளன. அந்த விதத்தில் நாவல் கட்டமைப்பு பற்றிய பிரக்ஞையைப் பரப்பியதில் இந்த புத்தகத்துக்கு மிகப் பெரிய பங்குண்டு.
புத்தக தலைப்பு - நாவல் கோட்பாடு
எழுத்தாளர் - ஜெயமோகன்
பதிப்பகம் - கிழக்கு.
ஜெமோ தனது தளத்தில் நாவல் கோட்பாடு, வாழ்விலே ஒரு முறை ஆகிய இரண்டு புத்தகங்களின் ஆம்னிபஸ் மதிப்புரைகளுக்கும் லிங்க் கொடுத்துள்ளார். (http://www.jeyamohan.in/?p=36881) இவை இரண்டுக்கும் இடையில் (தொடர்ச்சியாக) வெளியிடப்பட்டுள்ள சொல்முகம் மதிப்புரையை விட்டுவிட்டார்! நான் அதில் இரோம் ஷர்மிளா இடுகை பற்றி விவாதத்தைப் பின்னூட்டமாக எழுப்பிய (சூழலைக் கெடுத்தது?) தான் காரணமாக இருக்குமோ?!
ReplyDeleteநீங்க வேணா ஜெயமோகன் நூல்கள் தொடர்பாக இங்கு இருக்கும் எல்லா பதிவுகளிலும் அவரை எதிர்மறையாக விமரிசித்து பின்னூட்டம் இடுங்களேன், கொடுத்த லிங்கை எல்லாம் கட் பண்ண வைத்த புண்ணியம் உங்களுக்குக் கிடைக்கும்!
Delete:-)))
Deleteஆனாலும் தலைவர் இணையத்தில் தன்னைப் பற்றிய 'தவளைக் கூச்சல் விமர்சனங்களை'த் தான் பொருட்படுத்துவதில்லை, படிப்பதில்லை என்று காட்டிக்கொள்ள இவ்வளவு மெனக்கெட வேண்டாம் :-))
என் தனிப்பட்ட கருத்து இது:
Deleteதன் புத்தகங்கள் மட்டுமல்லாமல் சூழியல் குறித்து ஆம்னிபஸ்ஸில் வந்த நூல் அறிமுகங்களையும் தன் தளத்தில் தன் வாசகர்களுடன் பகிர்ந்து கொண்டவர் ஜெயமோகன். ஏதோ ஒன்றிரண்டு பதிவுகள் விட்டுப் போயிருக்கலாம் (எதை பகிர்வது என்பது அவர் இஷ்டம்), மொத்தத்தில் ஆம்னிபஸ் விஷயத்தில் ஜெயமோகனை நன்றியுடன்தான் நினைத்துப் பார்க்கிறேன்.
அவரைத் தவிர தன் தளம் வாயிலாக ஆம்னிபஸ் பதிவுகளை அங்கீகரித்த மற்றொரு எழுத்தாளர் திரு எம்.டி.முத்துக்குமாரசாமி அவர்கள்தான். அவருக்கும் நன்றிகூற எனக்கு இது ஒரு வாய்ப்பாகிறது.
இதைச் சொல்ல உங்கள் பின்னூட்டம் ஒரு வாய்ப்பாக அமைகிறது - எனவே, உங்களுக்கும் நன்றிகள்.