1972ம் வருடம், ஆல் இந்தியா ரேடியோவில் ரோமிலா தாப்பர் ஆற்றிய மூன்று உரைகளின் தொகுப்பே இந்தச் சிறிய புத்தகம். புத்தகம் சிறியது, ஆனால் பேசும் விஷயங்கள் கனமானவை. வரலாற்றை குறிப்பாக இந்திய வரலாற்றைப் படிப்பவர்கள் இந்தப் புத்தகத்தை அவசியம் படிக்க வேண்டும். வரலாற்றை எந்தப் பார்வை கொண்டு பார்க்கிறோம் என்பது முக்கியம்.
முதல் உரையில், இந்த வரலாற்றுப் பார்வை பற்றித்தான் பேசுகிறார். நிறைய ஆச்சரியமான விஷயங்கள். கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக எழுதப்பட்ட இந்திய வரலாற்றுக் குழப்பங்களிலிருந்து நம்மை விடுவிடுத்துக் கொண்டு, நம்முடைய வரலாற்றையும் நாகரிகத்தையும் நாமே ஆராய வேண்டும் என்கிறார். இந்தியாவின் மொத்த வரலாற்றை, கடந்த இருநூறு ஆண்டுகளில் புரிந்து கொள்ளப்பட்ட இந்திய வரலாற்றின் மூலமே அணுகுவது சரியல்ல என்பது அவருடைய எண்ணம்.
வரலாற்றுத் தேடல் இரண்டு வழிகளில் நடக்கலாம். ஒன்று, முறையாகத் திட்டமிடப்பட்ட, வரலாற்றுக் குறிப்புகளின் உண்மைகளைச் சரிபார்க்கும் முறைகள். மற்றொன்று, தேசியவாதத்தால் தூண்டப்பட்டு ஒரு பொதுவான மொழி, நாகரிகம், வரலாற்றைத் தேடிப் போவது. ஆனால், ஆசியா மற்றும் ஆப்பரிக்க காலனிகளில் ஆட்சிசெய்தவர்களுக்கு அந்தப் பகுதிகளின் வரலாறு என்பது ஆர்வம் என்பதைக் காட்டிலும் நிர்வாகத் தேவையாக இருந்தது. இரண்டு விதமான ஸ்டிரீயோடைப்கள் ஒன்று காலனியாதிக்கத்துக்கு ஆதரவானது மற்றொன்று காலனியாதிக்கத்திற்கு எதிரான இந்திய தேசியத்துக்கு ஆதரவானது. இந்த ஸ்டீரியொடைப்கள் வரலாற்றைப் புரிந்து கொள்வதில் தாக்கத்தை ஏற்படுத்தியதோடு, நவீன அரசியல் கொள்கைகளுக்கும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன.
அடுத்தது ஆரியர் ஆரியரல்லாதோர் பிரிவு. ரோமிலா சொல்வது, பண்டைய இலக்கியங்களில் இருக்கும் ஆரியா என்பது சமூகத்தில் உயர்ந்தவரைக் குறிக்கும். பேசும் மொழியாலும், வர்ணாஸ்ரமத்தாலும் மனிதர்கள் வித்தியாசப்படுத்தப்பட்டார்கள். வழிபாட்டு முறையும் மனிதர்களின் புறத்தோற்றமும் கூட வித்தியாசப்படுத்த பயன்பட்டது.ஆனால், ஆரியர்கள் தனி கலாசாரக் குழுவாக சொல்லப்பட்டார்களே ஒழிய அவர்கள் தனி இனம் அல்ல. இனம் என்பது மனிதர்களை வித்தியாசப்படுத்த இந்தியாவில் பயன்படுத்தப்பட்டிருக்க முடியாது, ஏனென்றால் இனம் என்பதே ஐரோப்பியர்களின் கண்டுபிடிப்பு.
மேலும் சமஸ்கிருதத்திற்கும் கிரேக்கத்திருக்கும் இருக்கும் ஒற்றுமைகளைக் கொண்டு, இவ்விரண்டு மொழிகளைப் பேசுபவர்களும் ஒரே இனமாகத் தான் இருக்க முடியும் என்ற எண்ணம் உருவானது. இந்திய ஆரியர்களை தம்முடைய உறவினர்கள் என்கிறார் மேக்ஸ் முல்லர். இந்தியாவில், வேதங்கள் ஆரியர்கள் கொண்டு வந்தவை என்றும், அவர்கள் அப்போதைய குடிமக்களை வென்று அவர்களை அடிமைப்படுத்தினார்கள் என்றும் நம்பப்படுகிறது. மேலும் இங்கே சாதி அமைப்புகள் மூலமாக ஆரியர்களுக்கும் ஆரியரல்லாதோருக்கும் வித்தியாசத்தை ஏற்படுத்தி ஆரிய இனம் தொடர்ந்து இருக்கும் படியான அமைப்பு உருவாக்கப்பட்டது என்றும் நம்பப்படுகிறது. இப்போது ஆரிய-திராவிட பிரிவும் வந்தாயிற்று. ‘இங்கே வரலாற்றாசிரியரிகளின் தவறு, மொழியையும் இனத்தையும் தொடர்புபடுத்தியது’என்கிறார் ரோமிலா. ஒருவாறு, இந்தியா பின் தங்கிய தேசம் இல்லையென்றும், அதன் நீண்ட நெடிய பாரம்பரியத்தையும் வரலாற்றையும் கொண்டது என்று பலர் ஒப்புக்கொண்டார்கள். மதப்பிரச்சாரம் செய்ய வந்தவர்கள் இதை எதிர்த்தார்கள்.
ஆரிய இனம் – இந்தியாவில் பலருக்கு மகிழ்ச்சியைக் கொடுத்தது. சாதி இந்துக்கள் தங்களை அவ்வினத்தோடு அடையாளப்படுத்திக் கொள்ள முற்ப்பட்டார்கள். இந்த ஆரிய இனக் கொள்கை, நிறைய பேருக்கு வரமாகப்பட்டது. அதில் ஜாதியை அழுத்தமாக நிறுவதும் ஒன்று. காலனியாதிக்க நாடுகள் அனைத்திலுமே பிரித்தாளும் சூழ்ச்சி உண்டு. இங்கே, ஒவ்வொரு குழுவும் தன்னுடைய தனித்தன்மையைத் தேடப் போக பிரிவு ஆழமானது. மேலும், ஆரியர்கள் வந்தேறிகள் என்றும், அவர்கள் இங்குள்ள மக்களை அடிமைப்படுத்தினார்கள் என்ற கொள்கையும் ஆழமாக நிறுவப்பட்டுவிட்டது.
இந்த உரைகளின் மூலம் ரோமிலா சொல்ல வருவது, ஆரியர்கள் போர் தொடுத்து வரவில்லை. அவர்களின் வருகை இயல்பாக நடந்திருக்க முடியும். அவர்களுக்கு இரும்பை பயன்படுத்தத் தெரிந்திருந்ததால், அந்நாளில் அவர்களும் அவர்களுடைய மொழியும் இரும்பு பயன்பாட்டில் இல்லாத இடங்களில் பரவின. இரும்பு பயன்பாட்டில் இருந்த தென்னிந்திய பிரதேசங்கள் சமஸ்க்ருதத்தின் தாக்கத்திற்குள் வரவில்லை. ஆக, பரவல் என்பது போரால் நிகழ்வில்லை, தொழில்நுட்பத்தால் நிகழ்ந்திருக்கலாம் என்கிறார் ஆசிரியர்.
இந்தியா தொன்மையானது என்று நிறுவப்பட்டவுடன், வெளியிலிருந்து வரும் விஷயங்களுக்கு எதிரிப்புகளும் அதிகரித்தன. இயந்திரங்கள் மேற்குலகின் தாக்கத்தை இங்கே ஏற்படுத்திவிடும் என்று பயந்தார்கள். “It was not that we did not know how to invent machinery, but our forefathers, knew that if we set our hearts after such things, we would become slaves and lose our moral fibre” காந்தி கூட ஹிந்து சுவராஜ் நூலில் சொல்லியிருக்கிறாராம். இந்தப் பழம்பெருமைகள் எல்லாம், நிகழ்காலத்தின் குறைபாடுகளை மறைக்க உதவியாய் இருந்தது என்றும் ரோமிலா சொல்கிறார். இந்தியாவைப் பற்றிய விமர்சனங்களுக்கு, தற்காலத்தில் மேலை நாடுகளில் இருக்கும் liberal விஷயங்கள் அனைத்தும் எங்கள் இந்தியாவில் அன்றே இருந்தது என்று பதிலடி தரப்பட்டது. சமூக வரலாற்றைப் பொறுத்தவரை,இந்திய ஜாதி அமைப்பு உயர்த்திப் பிடிக்கப்பட்டது. நாடுபிடித்தவர்கள் வீரர்களாக உருவாக்கப்பட்டார்கள். இங்கே ரோமிலா, சமுத்திரகுப்தர் தெற்கே காஞ்சிபுரம் வரை படை செலுத்தினார் முன்னிறுத்தியவர்கள், சோழ அரசன் ராஜேந்திரன் வடக்கே கங்கை வரை படையெடுத்துச் சென்றைப் பற்றி ஒன்றுமே எழுதவில்லை என்கிறார். அவரவர் தங்களுடைய பழம்பெருமையை முன் வைக்க முட்டி மோதியிருக்கிறார்கள். ராஜபுத்திரர்கள் ராணா பிரதாப்பையும் மராட்டியர்கள் சிவாஜியையும் தங்களுடைய idolகளாக முன்னிறுத்தினார்கள்.
இந்தியாவைப் பற்றியும் வேறு சில கோட்பாடுகளுள், இந்தியச் சமூகம் அமைப்பு static ஆக இருந்தது என்பதும், இந்தியர்களின் பொருள் நாட்டமின்மையே அவர்களுடைய வளர்ச்சியின்மைக்கு காரணம் என்ற இரண்டையும் அடுத்தடுத்த உரைகளில் ரோமிலா மறுக்கிறார்.
இரண்டாவது உரையில் இந்தியச் சமூக அமைப்பைப் பற்றிப் பேசும் ரோமிலா, யார் யார் சமூகத்தில் அதிகாரம் உடையவர்களாக இருந்தார்கள் என்பதைக் கூறுகிறார். நில உடைமையாளர்களே அதிகாரம் நிறைந்தவர்களாக இருந்திருக்கிறார்கள். இன்று வரை அதிகாரமும் நில உடைமையும் சேர்ந்தே பயணிக்கின்றன என்பது என் எண்ணம். ஒன்று, நிலமுடையவர்கள் அரசியலுக்கு வருகிறார்கள், அல்லது அரசியலுக்கு வருபவர்கள் நிலங்களை வளைத்துப் போடுகிறார்கள். நில உடைமையாளர்களின் செல்வாக்கைப் பற்றி அறிய, இன்றைய பெங்களூரைக் கவனித்தால் புரியும். அன்றைக்கு விவசாய நிலம் இன்றைக்கு ரியல் எஸ்டேட்.
சாதி அடுக்குகள் பற்றி அவர் சொல்வது,
இந்திய சமூக அமைப்பு மற்றவர்கள் சொல்வது போல் மாற்றமே இல்லாத ஒன்று (static) அல்ல. ஆனாலும் flexibleலும் அல்ல. பூஜை செய்பவர்களை மேலே வைத்தும், சுத்தம் செய்பவர்களை கீழே வைத்தும் வர்ணங்கள் உண்டாக்கப்படுகின்றன. வர்ணங்களில் சில இடங்களில் மாற்றங்கள் இருந்தாலும், ஒருவனுடைய சாதி என்பது ஒரு காலமும் மாறாது.
இதில் பிராமணர்கள் மேலே இருக்கிறார்கள். புத்த மதத்தின் வீழ்ச்சிக்குப் பிறகும், குப்தர்களின் காலத்திற்குப் பின்னும் பிராமணர்களுக்கு அளிக்கப்படும் மாணியங்கள் அதிகரிக்கின்றன. அவை கல்வெட்டுக்களாகவும் செப்பேடுகளாகவும் இருக்கின்றன. அவர்களுக்கு நிலங்கள் வழங்கப்படுகின்றன. அவர்கள் அரசாங்கத்தின் நிர்வாகத்தில் வேலை செய்வதால் அவர்களுக்கு இந்த நிலங்கள் சம்பளமாக வழங்கப்படுகின்றன.
அதே காலத்தில் சாதாரணமாக, சிறியதாக இருந்த கோவில்கள் பெரிய மையங்களாக உருவாகின்றன. அவற்றோடு மடங்களும் உருவாகின்றன. கோவில்களுக்கும் நிலங்களும், விளைச்சலும் வேலையாட்களும் அடிமைகளும் வருகிறார்கள். கோவில்கள் கல்வி சார்ந்த இடமாகவும் ஆகின்றன. இக்கோவில்கள் எல்லாம் பிராமணர்கள் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவர்களின் செல்வாக்கு அதிகரிக்கிறது. தனிப் பிராமணனும் சரி, மத அமைப்புகளும் சரி, சமூக அடுக்கில் உயர்ந்த இடத்தைப் பிடிக்கிறார்கள். வேறு எவரும் இந்த இடத்திற்கு வர முடியாது.
ஆனால், சத்திரிய வர்ணம் அப்படியில்லை. இடத்திற்கு இடம் சத்திரிய வர்ணத்தில் இருக்கும் சாதிகள் மாறுகின்றன. பிராமணர்கள், சில கீழ் சாதிகள் என்று கிட்டத்தட்ட அனைவருமே அரசாண்டிருக்கிறார்கள். சில இடங்களில் சேனாதிபதியாக ஒரு சிறிய ஊரை ஆளும் அரசர்கள், இரண்டு தலைமுறைக்குப் பின் சேனாதிபதி என்ற பட்டத்தை விட்டுவிட்டு மகாராஜா என்ற பட்டத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். சில அரசர்கள் தங்கள் முன்னோர் பற்றிய பொய்யான வரலாற்றை தங்களுக்காக எழுதிக் கொண்டார்கள்.
வைசிய வர்ணத்தவர்களும் செல்வாக்குடன் இருந்திருக்கிறார்கள். குறிப்பாக புத்த மத எழுத்துக்களில் அவர்களுக்கு நல்ல செல்வாக்கு இருந்ததாகச் சொல்லப்படுகிறது.
ஆனால், சூத்திரர்கள் மேலே வருவதற்கான வாய்ப்பு மிகக் குறைவு. அவர்கள் ஏதாவது சமூகப் புரட்சியின் அங்கமாக இருந்தோ, அல்லது புதிய மதங்களில் இணைந்தோ, அந்த மதங்கள் பின்னால் இந்து மதத்தோடு இணையும் போதோ மட்டுமே சாதி அடுக்குகளில் அவர்களுடைய நிலை உயர்ந்திருக்கிறது. மேலும், சமூகத்தை விட்டு விலகியிருந்த காட்டுவாசிகள், சமூகத்தோடு இணையும் போது சூத்திரர்களாகவே அறியப்பட்டார்கள். எல்லா வர்ணங்களிலும் ஒரு சாதியிலிருந்து பிரித்துக் கொண்டு சில சாதிகள் உருவாயின. ஆனால், ஒரு சண்டாளன் கடைசி வரை சண்டாளனாக மட்டுமே இருக்க முடிந்தது.
கடைசியாக, இந்தியாவின் வளர்ச்சி. காலனியாதிக்கத்தின் போது இந்தியாவின் வளர்ச்சியின்மைக்கு காரணம், இந்தியர்களுக்கு பொருளில் நாட்டமில்லை என்றொரு கோட்பாடு முன்வைக்கப்படுகிறது. அது தவறு என்பதற்கு, இந்திய தேசங்களின் தொழில் நாடலையும் அவர்கள் உலகெங்கும் வணிகம் செய்ததையும் ஆதாரத்தோட்டு சுட்டுகிறார் ஆசிரியர்.
The Past and Prejudice | Romila Thapar | National Book Trust, India | 70 Pages | Rs. 25
No comments:
Post a Comment