சிறப்பு பதிவர் - மானஸி
அப்பா, அம்மா, 5 பிள்ளைகள், அவர்களின் மனைவியர், குழந்தைகள் என ஒரே கூரையின்கீழ் வாழும், பணத்துக்குக் குறைவில்லாத ஒரு கூட்டுக் குடும்பம். ஆனால் மனதளவில், உணர்வுகளை கவனித்துப் பார்த்தால், இவர்கள் அனைவருமே ஒரு கூரையின்கீழ் வாழும் தனித்தனி மனிதர்களகத்தான் இருக்கிறார்கள். இவர்களிடையே நடக்கும் பரிவர்த்தனைகள் கடமையாகவும், தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்கும்தான் நடக்கின்றன.
வீட்டுக்குப் பெரியவர், அத்தனை செல்வத்துக்கும் உடைமையாளர், அன்பான மனைவி இருந்தும் அவளால் தன் உடல் தேவைகளை ஈடு கட்ட முடியாமல் போகும்போது வேறு உறவுகளை நாடிப் போய் குடும்பத்திடமிருந்து உணர்வளவில் பிரிந்து விடுகிறார்.
வீடு இரவு தங்க மட்டும் போகும் இடமானது... பணத்தைத் துரத்த துரத்த அதைக் குவித்து வைத்து எண்ணும் போதை வெறியாக மாறிவிட துரத்தலின் காரணமே தெரியாமல் காலம் ஓடியது.
அண்ணன் தம்பிகளிடையே நிலவும் உறவு ஒரே நிறுவனத்தில் உடன் பணிபுரிபவர்கள் போலத்தான் இருக்கிறது. பெண் குழந்தைகள் என்பதினால் தன் குழந்தைகளையே ஒதுக்கும் ஒரு மகன். வீட்டுப் பசுமாடுகளிடம் காட்டும் அன்பைக்கூட அவரால் பாசத்துக்கு ஏங்கும் தன் பெண்ணிடம் காட்ட முடியவில்லை. ஓடி வரும் குழந்தையைத் தூக்கிக் கொஞ்ச முடியாதபடிக்கு, இன்னும் பல வருடம் கழித்து அவள் திருமணத்துக்குப் போட வேண்டிய நூறு பவுன் நகைதான் அவருக்கு மனதில் சுமையாய் இருக்கிறது. வியாபாரம், பணம் சேர்த்தல் என்கிற வெறி பிடித்த ஓட்டத்தில் குடும்ப உறவுகள் சுமையாகவும் கடமையாகவுமே தெரிகின்றன.
நால்வருமே வெளியின் திசைகளில் அலைந்து களைப்புறும்போது இளைப்பாறும் இடமாகவே வீட்டைக் கருதினர். அவர்களுடைய வெளியுலகத்தின் நீட்சியாக இருக்கவியலாத வீட்டின் மீதிருந்த வெறுப்பு, ... எதிர்பாராத உரசல்கள் எல்லாவற்றாலும் அவர்கள் வீட்டை விட்டுத் தம்மைத் துண்டித்துக் கொள்ள விரும்பினர்.
குடித்துச் சீரழியும் தம் தம்பியை சரிப்படுத்தக்கூட அவர்களுக்கு நேரமோ கவலையோ இல்லை.
இத்தனை பெரிய சம்சாரத்தில் பெண்கள் நிலைமை கேட்கவே வேண்டாம்:
தினசரி உயர்ந்தும் தாழ்ந்தும் எரியும் அடுப்பு நெருப்பில் மாற்றி மாற்றி தங்கள் பொழுதுகளைப் போட்டுக் கொளுத்திக் கொண்டிருப்பார்கள் அந்த வீட்டின் பெண்கள்.
அத்தனை உழைத்தும் திருப்தி செய்ய முடியாத கணவன்மார். வயதுக்கு வந்ததுமே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டதில் சமுதாயம் பற்றிய குறுகிய நோக்கு. தாம் சுமந்த அதே சிலுவைகளை, அதே சுமைகளைக் கொஞ்சம்கூட கேள்வி கேட்காமல் தம் பெண் குழந்தைகள் மேல் சுமத்தும் அதே கட்டுப்பாடுகள், கண்டிப்புகள்.
சமுதாய மாற்றங்கள் பற்றி எல்லாம் சிந்திக்கும் அளவு ஞானமோ ஆர்வமோ இன்றி மருமகள், மனைவி, தாய் என்ற கடமைகளில் சிக்கிக் கொண்ட அவர்களுக்கு குழந்தைகளுடன் நேரம் செலவிடவோ அவர்களைப் புரிந்து கொள்ளவோ அவகாசமும் இல்லை, முனைப்பும் இல்லை.
வெளியே உலகம் மாறிக்கொண்டிருக்கலாம். அந்த வீட்டில் காலம் ஏதோ ஒரு புள்ளியில் நின்று போய் விடுகிறது. பணத்தை விரட்டி ஒடும் ஆண்களும், வீட்டுச் செக்கில் மாடாய் சுழலும் பெண்களும் எத்தனை பாடுபட்டாலும், எத்தனை முன்னேறினாலும், ஒரே இடத்தில்தான் நின்று கொண்டிருக்கின்றனர்.
இவை எல்லாம் புரியாமல் தங்கள் ரகசிய உலகில் குழந்தைகள். இவர்களை எல்லாம் பரிவாலும், நிஜ அன்பாலும் சேர்த்துப் பிடித்திருக்கும் சங்கிலிகள் இரண்டு – தாய் அன்னம்மா, கடைசிப் பையன் குணா. இந்த இருவரும் வீட்டில் இல்லாமல் போனபின், வீட்டுப் பெரியவரும் இறக்க, சொத்துப் பிரிவினையில் கூட்டுக் குடும்பம் உடையும்போது, இத்தனை காலமும் யாரும் யாருடனும் இல்லாமலிருந்தது வெட்டவெளிச்சமாகிறது.
கதையின் அத்தியாயங்களேகூட சம்பவங்களின் தொடர்ச்சியாய் இல்லாமல் தனித்து நிற்கின்றன – ஒவ்வொன்றும் சம்பந்தமற்ற ஒவ்வொருத்தரின் கதை போல. இது கதையின் கருவை மனதில் வைத்து, உத்தேசித்து செய்யப்பட்டதா அல்லது அமைந்து போனதா என்று தெரியவில்லை. ஒரு சில கணங்கள் சம்பவங்கள் தவிர கதாமாந்தர் ஒருவருக்கொருவர் சம்பந்தமற்ற தனிமனிதர்களாகத்தான் சித்தரிக்கப்பட்டிருக்கிறார்கள். கதை சொல்லும் விதமும் வேறுபட்டிருக்கிறது. சில சம்பவங்கள் குழந்தையின் பார்வையில் சொல்லப்படுகின்றன, சில கதைசொல்லியின் குரலில்.
பூரணி, சுப்பு போன்ற சில கதாபாத்திரங்களின் கதைகள் உபகதைதான், அவை எதற்காக அத்தனை விரிவாக சொல்லப்பட்டன என்பது புரியவில்லை. சுப்புவின் கதை பொன்னையா மற்றும் அன்னம்மாவின் கருணையைப் பற்றி சொல்வதற்காகச் சொல்லப்பட்டிருந்தால், அப்படிப்பட்ட விழுமியங்களுடன் வளர்க்கப்பட்ட மகன்களிடம் (குணாவைத் தவிர) இந்த குணம் தென்படவில்லை. கார் வாங்கி குதிரைவண்டித் தாத்தாவை வேலையில்லாமல் செய்து விடுவதிலும், தந்தையுடன் வாழ்ந்த பெண்ணை அவரது இறப்பின்போது விரட்டி அடிப்பதிலும் அவர்களிடம் மனித உறவுகளுக்கும், உணர்வுகளுக்கும் எந்த ஒரு மதிப்பும் இருப்பதாய்த் தெரியவில்லை. சுப்பு, சுப்பு என்று கதை கேட்க அவளைச் சுற்றிக் கொண்டிருந்த குழந்தைகளும் சில நாட்களிலேயே சுப்புவை மறந்துபோய் விடுகின்றனர். இது சற்று சங்கடமாக இருக்கிறது. அந்த வீட்டில் அவளது வாழ்வு ஒரு அர்த்தமும் இல்லாமல் போகிறது.
ஒரு கூட்டுக் குடும்பத்தில் அத்தனை பேருக்கு மத்தியில் அண்ணியுடன் மைத்துனனுக்கு இருக்கும் உறவு எப்படி யாராலும் கவனிக்கப்படாமல் தொடர்வது சாத்தியமாயிற்று என்பது கொஞ்சம் நம்ப முடியவில்லை. இது ஒரு சுவாரசியமான திருப்பமாக இருந்தாலும், இது கதையோடு ஒட்டாமல் வலிய திணிக்கப்பட்டது போல இருக்கிறது. இந்த ஒரு முடிச்சைத் தவிர மற்ற சம்பவங்கள் எல்லாம் தனித்தே இருக்கின்றன, ஒரு குடும்ப ஆல்பத்தைப் பிரித்து ஒவ்வொரு போட்டோவும் சொல்லும் சம்பவத்தை விவரிப்பதுபோல. ஆனாலும் படிக்க சுவாரசியமாக இருக்கிறது. உமா மகேஸ்வரியின் நடை மிகச் சரளமாய் சில சமயங்களில் கவிதை போல இருக்கிறது. ஆரம்பப் பத்தியிலேயே: குழந்தையின் அழுகையுடன் வீட்டின் வர்ணனை:
தெருக்கள் முழுக்க முழுக்க அமைதியுற்றிருந்தபோது சூடான ஊற்றாகப் பீரிட்டெழுந்தது அந்த அழுகுரல். அந்த வீட்டின் பெரிய பழைய கதவின் பித்தளைப் பூண்களின் குளிர்ந்த நிசப்தம், அகலமான கருஞ்சுடர்போல இருட்டிலும் பளபளத்த பெரிய தூண்களில் உறைந்த அமைதி, வரிசையான நீண்ட மர உத்தரங்களின் நீண்ட மௌனம் எல்லாவற்றையும் அந்தப் பிடிவாதமும் மெலிவும் கூடிய குரல் உடைத்து நொறுக்கியது. செவ்வோட்டுத் தரையில் நெளிந்து பெருகியது.
இதுபோல் பல இடங்களில் பளீரென்ற, கண்ணைப் பறிக்கும் வர்ணனைகளில் கவிதாயினி உமா மகேஸ்வரி தெரிகிறார்.
புத்தகத்தின் முடிவில் இவரது குறிப்பில் இந்தக் கதை இவர் சிறுவயதில் வளர்ந்த சூழலில் சுற்றிலும் பார்த்த பெண்கள், அவர்களின் பிரத்தியேக குணாம்சங்கள், உள்மனதின் துக்கங்கள் இவற்றை கவனித்ததிலிருந்து பிறந்ததாகச் சொல்கிறார். 1971ஆம் ஆண்டு பிறந்தவர் இவர் எனும்போது, இந்தக் கதையில் விவரிக்கப்படும் பெண்கள் எழுபது, எண்பதுகளுக்கு முந்தையர்களாக இருக்க வாய்ப்பில்லை. இந்தப் புத்தகத்தைப் படிப்பவர்களுக்கு, குறிப்பாக நகர்புறங்களில் வளர்ந்தவர்களுக்கு, இதில் சித்தரிக்கப்பட்டிருக்கும் பெண்களின் நிலையைப் படிக்கையில் ‘இன்னும் இப்படியெல்லாம் வாழும் குடும்பங்கள் இருக்கின்றனவா?’ என்று கண்டிப்பாகத் தோன்றும்.
இன்னும் நம் சமுதாயத்தின் பல மூலைகளில், மேல்தட்டுக் குடும்பங்களில்கூட, பெண் குழந்தைகள் சுமையாக நினைக்கப்படுவதும், பெண்களுக்குக் கல்வி மறுக்கப்படுவதும், இளம் வயதில் அவர்களுக்குத் திருமணம் செய்வித்து (15 வயதிலா? இந்தியாவில் சட்டங்களுக்கு மதிப்பே கிடையாதா?), அவர்களை பிள்ளை பெறும் யந்திரங்களாய் மாற்றுவதும் நடக்கிறது என்பது வேதனையான விஷயம்தான். வெளியுலகில் என்ன நடக்கிறது என்பதையே அவர்களுக்குக் காட்டாமல் இருப்பதும், இதுதான் வாழ்க்கை என்று நம்பிக்கொண்டு அவர்களும் தம் பெண்களை இதேபோல் வளர்ப்பதும் இன்னும் கொடுமை.
பொதுவாக இக்கதையில் பெண்கள் சித்தரிக்கப்பட்டுள்ள விதம் என்னை மிகவும் ஆச்சரியத்துக்குள்ளாக்கியது. ஆண் குழந்தை பிறக்கவில்லை என ஒதுக்கும் கணவனைப் பற்றியோ, அல்லது பார்த்துப் பார்த்து செய்த சமையலில் சதா குற்றம் சொல்லும் கணவனைப் பற்றியோ, நேரம் பொழுதின்றி சதா குடிபோதையில் இருக்கும் கணவனைப் பற்றியோ இப்பெண்கள் கொஞ்சம்கூட கோபப்படுவதில்லை. மாறாய் அவனது கண்பார்வைக்கும் ஆமோதிப்புக்கும் ஏங்கியவர்களாய் இருக்கிறார்கள்.
ஓட்டப்பந்தய வீராங்கனை ஆக வேண்டும் எனக் கனவு காணும் பெண் சர்வசாதாரணமாய் மணவாழ்வை ஏற்றுக்கொண்டு விடுகிறாள். வினோதினியின் எதிர்ப்புகூட ஒரு கள்ள உறவில்தான் வெளிப்படுகிறது, இதுகூட எதிர்ப்பா அல்லது அவள் தேவைக்கான தீர்வா எனப் புரியவில்லை. அவர்களின் ரகசிய உறவு வெளிச்சத்துக்கு வருகையில் தன் கணவனின் கையாலாகாத்தனமும், குடும்பத்தினர் அதற்காக எந்தக் கவலையும் காட்டாததும்தான் இதற்குக் காரணம் எனச் சாடாமல் பழியை குணா மீது போட்டு தப்பித்துக்கொள்ளும் பெண்ணாகத்தான் அவளைச் சித்தரித்திருக்கிறார். தாங்கள் உழலும் அவல நிலையைப் பற்றிய ஒரு பிரக்ஞைகூட இல்லாத இந்தப் பெண்களின் மேல் நமக்கு பரிதாபம் வருவதில்லை. உமா மகேஸ்வரி ஒரு பெண்ணிய எழுத்தாளர். தன் கவிதைகளிலும், சிறுகதைகளிலும் பெண்களின் அந்தரங்க உணர்வுகளை தைரியமாக வெளிப்படுத்துபவர். அவர் இப்படிப்பட்ட ஒரு சமகாலப் படைப்பில் பெண்களை இத்தனை சக்தியற்றவர்களாய் படைத்திருக்கிறார் என்பது ஆச்சரியமாய் இருக்கிறது.
ஏதோ நகரங்களில்தான் தனித்தனியாய் வாழும் நாம்தான் மனித உறவுகளின் ஈரத்தையும், பலத்தையும் இழந்துவிட்டோம், நம் பாரம்பரிய கூட்டுக் குடும்பத்தின் பாதுகாப்பையும் வசதிகளையும் உறவுகளையும் இழந்துவிட்டோம் என்றெல்லாம் வருத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, கூட்டுக் குடும்பங்களிலும் யாரும் யாருடனும் இல்லை, பணம்தான் எல்லாவற்றுக்கும் ஆதாரமாய் இருக்கிறது என்ற அதிர்ச்சி கொடுக்கிறது இந்தக் கதை. முடிவில்கூட இந்த விஷயங்கள் அடுத்த தலைமுறையில் மாறலாம் என்பது போன்ற ஒரு நம்பிக்கையெல்லாம் கொடுப்பதில்லை. தன் மண்ணில் வேர் விட்டிருக்கும் முல்லைக் கொடி தன் அண்ணனுக்குப் பிரித்துக் கொடுக்கப்பட்ட இடத்தில் பூத்துக் கொட்டும் ஆத்திரத்தில் செடியையே வெட்டிப் போடுகிறார் ஒரு மகன் என முடிகிறது கதை.
வாழ்வு முழுதும் சேர்ந்தே வாழ்பவர்களுடன் தன்னை மீறிய ஒரு ஒட்டுதல் வந்துவிடாதா? இவர்களுக்கு அது ஏன் சாத்தியமில்லாமல் போனது? இது ஒரு தனிக் குடும்பத்தில் இருந்த நிலை, இது எல்லா கூட்டுக் குடும்பங்களுக்கும் பொருந்தாது, மனித உறவுகளுக்கு இன்னும் மதிப்பு இருக்கிறது என நம்பவே நான் ஆசைப்படுகிறேன்.
யாரும் யாருடனும் இல்லை (2003),
No comments:
Post a Comment