'குருஷேத்திரம்’ தொகுப்பைத் தொடர்ந்து இன்னொரு சிறுகதைத் தொகுப்பு சென்னையில் நான்கு இளம் எழுத்தாளர்களால் வெளியிடப்பட்டது. ‘கோணல்கள்’ என்ற தலைப்பில் வெளிவந்த இந்த நூலில் இந்த நான்கு எழுத்தாளர்களும் தலா மூன்று கதைகள் சேர்த்திருந்தார்கள். ‘குருஷேத்திரம்’ அடைந்த இலக்கிய அந்தஸ்தை ‘கோணல்கள்’ பெறாது போயினும் பெருவாரிப் பிரசுர உலகில் இடம் அளிக்கப்படாத தரமுள்ள எழுத்தாளர்கள் கூட்டு முயற்சியில் நூல் வெளிக்கொணருவதற்கு இது நல்லதொரு தொடக்கமாயிற்று; அத்துடன் ஆண்-பெண் பாலியற் சஞ்சலங்களை இலக்கியக் கருப்பொருளாக எழுதும் போக்குக்கு முன்னோடியாகவும் அமைந்தது. - அசோகமித்ரன் (முன்னுரை - புதிய தமிழ்ச் சிறுகதைகள்)
அட்டைப் படம்: ஓவியர் கிருஷ்ணமூர்த்தி |
பொதுவாக எனக்குச் சிறுகதைகளின் மீது அவ்வளவு விருப்பம் கிடையாது. நாவல்களைக் காட்டிலும் சிறுகதைகள் தெளிவாக இருப்பதாக எனக்குத் தோன்றுவதில்லை. இல்லையில்லை, அதற்கு நீ இன்னுமும் சிரத்தையாகயும் ஆழமாகவும் சிறுகதைகளை நோக்க வேண்டும் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், இன்றைய நிலையில் நாவல்களே எனது விருப்பம். அதற்கான காரணங்களாக சிலவற்றை என்னால் சொல்லமுடியும். நாவல்களில் ஒரு எழுத்தாளரை என்னால் மிக அருகில் நெருங்க முடிகிறது. மாறாக சிறுகதைகள், எழுத்தாளர்கள் நடத்தும் வித்தைகளாகத் தெரிகின்றன. அவை எனக்குப் புரிவதில்லை என்பதும் ஒரு காரணம். புரிவதில்லை என்று சொல்லும் அதே நேரத்தில், இன்னது-இன்னதுதான் என்று முழுமையாகச் சொல்லிவிடும் சிறுகதைகளும் பிடிப்பதில்லை. நண்பர் ஒருவர், அவருடைய நண்பர் ஒருவர் எழுதியச் சிறுகதையை அனுப்பி, ‘இதைப் படித்துவிட்டுச் சொல்லு’ என்றார். 'இந்தக் கதைல வர்றவன் கடைசில செத்துட்டானா?’ என்று பதிலனுப்பினேன். கண்டிப்பாக நண்பர் என்னைச் சபித்திருப்பார். அதே நண்பர், “சிறுகதைகள் எல்லாவற்றையும் சொல்லிவிடாமல், கதை முடிந்த பின்பும் வாசகனிடம் எதையாவது விட்டுச் செல்ல வேண்டும். கதையை அவன் படித்த பின்பும் அதன் சொச்சம் வாசகனின் எண்ணத்தில் இருக்க வேண்டும்” என்றார். நண்பர் சொல்வது புரியாமலில்லை. ஆனால், சில சமயம் இந்தச் சிறுகதைகள் அடையாளச் சிக்கல்களை ஏற்படுத்திவிடுவதும் உண்டு. கதையே அப்படித்தானா இல்லையென்றால் நான் தான் pervert ஆகச் சிந்திக்கிறேனா?
சில சமயம் இன்றைய சிறுகதைகள், கட்டுரைகளை ஒத்திருப்பது போன்ற ஒரு தோற்றமும் ஏற்படுவதுண்டு. சமூகத்தைப் பற்றிப் பேச வேண்டும் என்கிற நோக்கம் வலுவடைவதாலும், இறுதியில் ஒரு punch கொண்டு முடிப்பதாலும் இப்படிச் சொல்கிறேன். என்னைப் பொறுத்தவரை சிறுகதைகள் எழுதுவதற்கான உத்திகள் நிலைபெற்று, திரும்பத் திரும்ப ஒரே மாதிரியான அல்லது ஒரே வடிவம் கொண்ட சிறுகதைகள் வருவதாகத் தோன்றுகிறது. க.நா.சு தன்னுடைய ஒரு நாவலில், கலைகளில் ஐதிகம் பற்றிப் பேசியிருப்பார். அதாவது, ஐதிகத்தைப் பின்பற்றுகிறவன் சாதாரணக் கலைஞனாக இருந்தாலும் கூட, அவன் ஐதிகங்களைப் பின்பற்றி கலையை உருவாக்குவதால், அவனுடைய கலைக்கு மதிப்பு உண்டாகிவிடுகிறது. மேதமை இல்லாதவன் கூட ஐதிகங்களை அப்படியே பின்பற்றி தன்னுடையதை கலையாக பரிணாமிக்க வைத்துவிடுகிறான்.
புத்தகத்திற்கு வருவோம். நான்கு ஆசிரியர்களில் இதற்கு முன், எனக்கு சா.கந்தசாமியை மட்டும் தான் தெரியும். மற்றவர்களை இப்போது தான் கேள்விப்படுகிறேன், படிக்கிறேன். மொத்தமாகச் சொல்வதென்றால் இந்த பன்னிரெண்டு சிறுகதைகளும் நன்றாகவே எழுதப்பட்டிருக்கின்றன. ஆனால், வாடிக்கையாக எனக்கும் சிறுகதைகளுக்கும் இருக்கும் பிரச்சனைகள் இங்கும் வந்துவிட்டன, மன்னித்துவிடுங்கள்.
இராஜாராமின், கதையான மரக் கப்பலில் அன்றைய சிறுகதை எழுத்தை உத்திகளை கிண்டல் செய்திருப்பதாகத் தோன்றுகிறது. அவருக்கும் நண்பருக்குமான உரையாடல் தான் கதை. வாசகன் எதிர்பார்க்காத வண்ணம் கதையெழுதும் முயற்சி. இதைச் சிறுகதையென்று சொல்ல முடியுமா என்பது எனக்குத் தெரியவில்லை. ஆனால், மற்ற இரண்டு கதைகளான புதிய அத்தியாயமும், நட்சத்திரம் கீழே இருக்கிறது என்கிற கதையும் நன்றாக இருந்தன. புதிய அத்தியாயம் ஒரு பதின் பருவத்து சிறுவனுடைய கதை. பெண்களிடம் அவனுக்கு இருக்கும் கூச்சத்தைப் பற்றிச் சொல்லிக்கொண்டே அவன் ஒரு பெண்ணை நெருங்குவதையும் ஒரு குழந்தை ரூபாய் நோட்டைக் கிழப்பதையும் வைத்து கடைசியில் கதையை முடிக்கிறார். நட்சத்திரம் கீழே இருக்கிறது, கதை அருமை. நான் புரிந்து கொண்ட வரையில், சாதாரணர்களுக்கு அறமும் மானமும் பணம் இருந்தால் மட்டுமே காப்பாற்றி வைக்கக் கூடியவை என்பதைச் சொல்லும் கதை.
உயிர்கள், தேஜ்பூரிலிருந்து, தேடல் என்று சா.கந்தசாமியின் மூன்று கதைகள் இந்தத் தொகுப்பில் இருக்கின்றன. தேடல், ஆண் பெண் நட்பை ஒட்டிய கதை. இந்தக் கதையில் நான் ரொம்பவே குழம்பிவிட்டேன். உயிர்கள் அருமையான கதை. ஆசிரியர் மாணவர்களுடன் பழகுவதைப் பற்றிய கதை. கதையின் தொடக்கம் எனக்கு சா.கந்தசாமியின் ‘ஒரு வருடம் சென்றது’ கதையை நினைவூட்டியது. ஆனால், இது வேறு விதமான கதை என்பது சீக்கிரமே புரிந்துவிட்டது. இத்தொகுப்பில் ஆகச்சிறந்த கதை என்று ‘தேஜ்பூரிலிருந்து’ கதையைச் சொல்வேன். கிட்டத்தட்ட மனிதர்களின் சகல உணர்ச்சிகளையும் கொண்டுவந்துவிட்டார்.
அடுத்தது நா.கிருஷ்ணமூர்த்தி. உதிரும் மலர்கள், மனிதர்கள், காலமெனும் தூரம் இவருடைய கதைகள். உதிரும் மலர்கள், ஒரே நாளில் வேலைக்குச் சேரும் பெண்ணும் ஆணும் அதன் பிறகு வாழ்க்கைப் பயணத்தில் எப்படிப் போகிறார்கள் என்பது தான் கதை. வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிய தன் அபிப்ராயத்தைச் சொல்லியிருக்கிறாரோ? இன்றைய காலகட்டத்தில் இந்தக் கதையை ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மனிதர்கள் கதை அருமை. ஒரு மனிதன், ஊருக்கு எவ்வளவு உதவியாய் இருந்திருக்கிறான் என்பதைச் சொல்லிக்கொண்டே, அவன் தனக்கு ஆபத்து வரும் போது எப்படி மாறுகிறான் என்பதைச் சொல்லியிருக்கிறார். அனைவருக்குமே தன் உயிர் போகத்தான் அடுத்தவன் உயிர். காலமெனும் தூரம் ஒரு feel good கதை. இவருடைய எழுத்து எனக்குப் பிடித்திருந்தது.
ராமகிருஷ்ணனின் மூன்று கதைகள், சங்கரராமின் நாட்குறிப்பு, கோணல்கள் மற்றும் அவளிடம் சொல்லப்போகிறான். இவற்றில் கோணல்கள் அருமையான சிறுகதை. ஆனால், இந்தக் கதைக்கு ஏன் கோணல்கள் என்று பெயர்? அது ஓரின உறவைப் பற்றிப் பேசுகிறதா? அதைத் தான் சொல்ல வருகிறாரா அல்லது நான் அப்படிப் புரிந்து கொண்டேனா?
அடுத்தது நா.கிருஷ்ணமூர்த்தி. உதிரும் மலர்கள், மனிதர்கள், காலமெனும் தூரம் இவருடைய கதைகள். உதிரும் மலர்கள், ஒரே நாளில் வேலைக்குச் சேரும் பெண்ணும் ஆணும் அதன் பிறகு வாழ்க்கைப் பயணத்தில் எப்படிப் போகிறார்கள் என்பது தான் கதை. வேலைக்குப் போகும் பெண்கள் பற்றிய தன் அபிப்ராயத்தைச் சொல்லியிருக்கிறாரோ? இன்றைய காலகட்டத்தில் இந்தக் கதையை ஒருவரும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். மனிதர்கள் கதை அருமை. ஒரு மனிதன், ஊருக்கு எவ்வளவு உதவியாய் இருந்திருக்கிறான் என்பதைச் சொல்லிக்கொண்டே, அவன் தனக்கு ஆபத்து வரும் போது எப்படி மாறுகிறான் என்பதைச் சொல்லியிருக்கிறார். அனைவருக்குமே தன் உயிர் போகத்தான் அடுத்தவன் உயிர். காலமெனும் தூரம் ஒரு feel good கதை. இவருடைய எழுத்து எனக்குப் பிடித்திருந்தது.
ராமகிருஷ்ணனின் மூன்று கதைகள், சங்கரராமின் நாட்குறிப்பு, கோணல்கள் மற்றும் அவளிடம் சொல்லப்போகிறான். இவற்றில் கோணல்கள் அருமையான சிறுகதை. ஆனால், இந்தக் கதைக்கு ஏன் கோணல்கள் என்று பெயர்? அது ஓரின உறவைப் பற்றிப் பேசுகிறதா? அதைத் தான் சொல்ல வருகிறாரா அல்லது நான் அப்படிப் புரிந்து கொண்டேனா?
இந்தத் தொகுப்பின் நோக்கம், பத்திரிக்கைகளின் பந்த நிர்பந்தங்களுக்குள் சிக்கிக் கொள்ளாமல் தரமான இலக்கியத்தை பதிப்பிப்பதே. “இக் கதைகளைப் பிரசுரிக்கிற திராணி உள்ள தமிழ்ப் பத்திரிகை எதுவும் இன்றையச் சூழ்நிலையில் இருப்பதாகப்படவில்லை. தப்பித் தவறி ஒன்றிரண்டு பிரசுரிக்கப்படுகிற வாய்ப்பு உண்டு என்று யாரேனும் சொல்வீர்களேயானால், அது பத்திரிகை ஆசிரியர்களும் சமயங்களில் அவர்கள் அகராதிப்படி நிதானம் இழக்கக்கூடும் என்பதைத்தான் நிருபிக்குமே அன்றி அவர்களின் இலக்கிய பிரக்ஞையை நிரூபிக்காது” என்று முன்னுரையில் சொல்லியிருக்கிறார்கள்.
இந்த விவாதம் இன்றைக்கும் இருந்துகொண்டே இருக்கிறது. பரவலாக வாசிக்கப்படும் எழுத்தாளர்கள் மட்டுமே நல்ல எழுத்தாளர்கள் அல்ல என்பதைச் சொல்ல முயன்றவர்கள், கடைசியில் பரவலாக வாசிக்கப்படும் எழுத்தாளர்கள் நல்ல எழுத்தாளர்கள் அல்ல என்று நிருபிக்க பாடுபடுகிறார்கள். பரவலாக வாசிக்கப்பட்ட எழுத்தாளர்கள் அனைவரும் சிறந்த இலக்கியகர்த்தாக்கள் இல்லை யென்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். ஆனால், சில இடங்களில் பரவலாக வாசிக்கப்படாமல் போவதாலேயே சில இலக்கியங்கள் தங்களுக்கான சிறப்பு அந்தஸ்தை பெற்றுவிட்டதாக ஒப்புக் கொள்ள முடியாது. மோசமான எழுத்துக்கள் பரவலாக வாசிக்கப்படுவதைப் பற்றிய பயம் இருக்கும் அதே நேரத்தில், தரமில்லாத எழுத்துக்கள் தீவிர இலக்கியப் போர்வை போர்த்திக் கொண்டு விடுமோ என்கிற பயமும் எனக்கு இருக்கிறது. தீவிர இலக்கியத்திற்கான வழக்குச் சொற்கள், தீவிர இலக்கியத்திற்கான பேசு பொருள்கள், தன்னை ஒரு குழுவில் நிறுவிக் கொள்ளுதல் (இது எழுத்தை தாண்டி நடக்கும் உத்தி, அல்லது அரசியல்) போன்ற அம்சங்களைக் கொண்டு இலக்கிய அந்தஸ்தைப் பெற்றுவிட முடியும். எழுத்தாளர்கள் இலக்கியத்தைப் பகுப்பதைவிட, அதை வாசகன் செய்வது உகந்ததாக இருக்கும்.
கோணல்கள் | சிறுகதைத் தொகுப்பு | ம.இராஜாராம், சா.கந்தசாமி, நா.கிருஷ்ணமூர்த்தி, ராமகிருஷ்ணன் | கவிதா பதிப்பகம் | 200 பக்கங்கள் | விலை ரூ.40 | இணையத்தில் வாங்க
No comments:
Post a Comment