சிறப்பு பதிவர் -கிருஷ்ணகுமார் ஆதவன்
சினிமா எவ்வாறு சமூகத்தில் புரிந்து கொள்ளப்பட்டிருக்கிறது? மக்களுக்கும் சினிமாவுக்குமான உறவுமுறை என்ன? மேலும், ஒரு திரைப்படம் எப்படி பார்க்கப்பட வேண்டும்? - இது போன்ற அடிப்படை கேள்விகளை எழுப்புவதுடன் தமிழ் சினிமாவின் பல்வேறு பரிமாணங்களையும் அலசும் கட்டுரைகளைக் கொண்ட நூல் இது.
இந்த நூல் வழியே தியடோர் பாஸ்கரன் தன்னுடைய தனித்த பார்வையின் மூலம் சில முக்கிய விழுமியங்களை வாசகனுக்கு உருவாக்கித் தருகிறார். திரைப்பட வரலாறு, சினிமா அழகியல், ஆளுமைகள், திரைப்படங்கள் ஆகிய நான்கு தலைப்புகளின்கீழ் அவர் எழுதியிருக்கும் கட்டுரைகள் முக்கியமானவை.
ஏன் முக்கியமானவை?
சினிமாவைப் பற்றிய கட்டுரைகளுக்கு என்ன முக்கியத்துவம் இருக்கப் போகிறது என்று கேட்கலாம். ஏனென்றால், சினிமாவைப் பற்றி கட்டுரை எழுதுபவர்கள் சினிமா என்ற தனித்துறை நோக்கில் மட்டுமே எழுதுவார்கள். அவை சினிமாத் துறையினருக்கும், அது தொடர்பாக படிக்கும் மாணவர்களுக்கும் பயன்படும்படியாக இருந்தால் போதும் என்பது அவர்களுடைய கருத்தாக இருக்கும். அதாவது "சினிமாவைப் பற்றியது" என்ற ஒற்றைச் சொல்லினுள் அது மூழ்கிவிடுகிறது.
தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகள் சினிமாவோடு அதன் வரலாற்றுப் பிரக்ஞையை வெளிப்படுத்துகின்றன. சினிமாவின் தவறான அர்த்தமான "பொழுபோக்கு அம்சம்" என்பதன் பின்னணியை தெளிவாக உணர வைக்கிறது. அதுமட்டுமல்லாது, இந்த நூல் சினிமாவை நாம் எப்படி பார்த்துப் பழகியிருக்கிறோம் என்று சொல்ல வரும்போது ஒரு முக்கியமான நூலாகவே அறிய முடிகிறது.
இந்த நூலிலுள்ள கட்டுரைகள் அனைத்தும் தமிழ் சினிமாவைப் பற்றியதாக இருந்தாலும் தமிழி சினிமா என்று சொல்லாமல் "சினிமா" என்ற பொதுச்சொல்லுடன் இந்த கட்டுரையை ஆரம்பித்ததன் காரணம் பெரிதாக ஒன்றும் இல்லை. தமிழ் சினிமாவைக் குறித்து இருந்தாலும் கட்டுரைகளை வாசித்தபோது ஒரு பொதுமையான தளத்தில் தியடோர் பாஸ்கரன் எழுதியிருப்பதனால்கூட இருக்கலாம் என்று நினைக்கிறேன்.
திரைப்பட வரலாறு தலைப்பின் கீழுள்ள "போரும் தமிழ்த்திரையும்" என்ற முதல் கட்டுரை சுவாரசியமானது.
இரண்டாம் உலகப்போர் மூண்டபோது, பிரிட்டிஷ் அரசாங்கத்திற்கு ஆதரவாக தமிழ்நாட்டில் திரைப்பட கர்த்தாக்கள் போர்ப் பிரச்சாரப் படங்களை எடுத்தனர். இதற்கு முக்கிய காரணம் கச்சா ஃபிலிம் பற்றாக்குறையும், அதன் பயன்பாட்டில் பிரிட்டிஷ் அரசு விதித்த கட்டுப்பாடும். 11000 அடி நீளத்திற்குள் படங்கள் இருக்கவேண்டும் என்பதே அந்த நிபந்தனை. அதற்கு சுருக்கமாக காட்சிகளை எடுக்க வேண்டும், மேலும் பாடல்களைக் குறைக்க வேண்டும். இந்த வகையில் படங்களை எடுப்பதற்கு நாம் பழகியிருக்கவில்லை. நம்மவர்கள் ஒரு இசைக் கச்சேரிக்குப் போவதுபோல திரைப்படங்களுக்குச் செல்பவர்கள். இதனால் பெரும் எதிர்ப்பு இதற்கு கிளம்பியது. ஆனால், ஒரு பலனுமில்லை.
மேலும், கச்சா ஃபிலிம் வேண்டுமென்றால் போரில் தங்களை ஆதரித்து திரைப்படங்கள் எடுக்க வேண்டுமென பிரிட்டிஷார் சட்டம் கொண்டுவந்தனர். கண்ணம்மா என் காதலி, பர்மா ராணி, மானசம்ரக்ஷணம் ஆகியவை அப்போது எடுக்கப்பட்ட மூன்று படங்கள். இவற்றில் பர்மா ராணியை இந்திய திரை வரலாற்றில் முக்கியமான படமாகக் குறிப்பிடுகிறார்.
ஒரு முரண்நகையை இங்கு பார்க்கலாம். பிரிட்டிஷார் விதித்த தணிக்கைகளை காங்கிரஸார் அவர்களின் ஆட்சியின்போது தளர்த்தினர். அன்று தேச முன்னேற்றம், மாத்ரு பூமி, தியாக பூமி,
பாரத கேசரி, ஹரிஜன சிங்கம் போன்ற தேசியப்பற்று சார்ந்த படங்களை எடுத்த அதே நிறுவனங்கள் பிரிட்டிஷ் அரசின் நிலைப்பாட்டை ஆதரித்து ஏகாதிபத்திய சக்திகளைப் போற்றி படங்கள் எடுக்கத் தயங்கவில்லை என்பதே அது.
முதன்முதலாக இரட்டை வேடம் திரையில் தோன்றியது பி.யூ.சின்னப்பாவின் உத்தமபுத்திரன் அல்லது துருவன் என்ற படம். முதல் சமூகப் படம் கௌசல்யா. மேலும், தடைசெய்யப்பட்ட படங்களின் பட்டியல் என அனைத்தையும் சமகால பத்திரிக்கைகளில் அச்சானதை ப்ரமாணமாக வைத்து தியடோர் பாஸ்கரன் கூறியிருக்கும் தகவல்கள் "திருத்தப்பட வேண்டிய பதிவுகள்" என்ற கட்டுரையில் இருக்கின்றன.
"இடைவேளை எனும் குறுக்கீடு" என்ற தலைப்பிட்ட கட்டுரை, இடைவேளை சினிமாவின் வடிவமைப்பை எப்படி பாதிக்கிறது என்பதில் தொடங்கி அந்த சிறிய நேரத்தை நம்பி இருக்கும் தொழிற்சமூகத்தின் அன்றாட வாழ்க்கை வரை சொல்லிச் செல்கிறது.
"எழுத்தாளர்களும் தமிழ் சினிமாவும்", "அச்சிலிருந்து திரைக்கு" போன்ற கட்டுரைகள் ஒரு இலக்கியப் படைப்பை எப்படி சினிமாவாக மாற்றுவது என்பதைப் பற்றியும், பல்வேறு எழுத்தாளர்கள் சினிமாவை எந்த வகையில் அணுகியிருக்கிறார்கள் என்பது குறித்தும் சொல்கின்றன.
ஒரு நூலை சினிமாவாக மாற்றுவதற்கு இரண்டு முறைகளைச் சொல்கிறார் தியோடோர் பாஸ்கரன். ஒன்று, மூலப்படைப்பை அப்படியே வரிக்கு வரி பிசகாமல் திரைப்படமாக எடுப்பது. இரண்டு, சினிமாவின் சாத்தியக்கூறுகளை வைத்து தனியொரு படைப்பை மூலத்திலிருந்து உருவாக்குவது.
இதில் இரண்டாவது வழிமுறையே சிறந்தது என்பதை இந்த கட்டுரையின்வழி அழகாகச் சொல்கிறார். இதற்கு அவர் சாட்சியமாக சொல்லும் படங்களும், வசனங்களைக் குறைத்து காட்சிப் படிமங்களின் வழி கதை சொல்லும் முறையை உருவாக்கும் உத்திகளும் முக்கியமானவை.
அக்காலத்தில் சினிமாவில் புகழ்பெற்ற நடிக, நடிகையர்கள் அனைவரும் நாடக கம்பெனியிலிருந்து வந்தவர்கள். கேமராவின் ஒரே கோணத்தில் பல பக்கம் வசனங்கள் பேசும் பாத்திரப்படைப்பு முறையே விளங்கிவந்தது. அன்று தோன்றி இன்றுவரை அத்தகைய சினிமாவுக்கு பழக்கமாகியிருக்கும் தமிழ் ரசிகர்களைப் பற்றியது "தமிழ் மக்களும் சினிமா ரசனையும்" என்ற கட்டுரை.
பார்த்து அறிந்துகொள்ள வேண்டிய விஷயத்தை கேட்டுப் பழகியிருப்பவர்களாக ரசிகர்கள் இருப்பதை சுட்டிக் காட்டுகிறார். செவியளவில் மட்டுமே கிரகிக்கும் பழக்கத்தை உருவாக்கிக் கொண்டுவிட்டார்கள். காதைத் தீட்டிக்கொண்டு சினிமாவுக்குச் செல்கிறார்கள். மேலும், சினிமா விமர்சனமும் தமிழ்நாட்டில் வளரவில்லை, நடிக-நடிகை ரீதியிலேயே விமர்சனங்கள் எழுதப்படுகின்றன.
கட்டுரையின் இறுதியில், பிரெஞ்சு எழுத்தாளர் ஆந்ரே மால்ரா கூறியுள்ளபடி, "சிறந்த திரைப்பட ரசிகர்கள் இருந்தால்தான் சிறந்த திரைப்படங்கள் தோன்றும்" என்ற கருத்தோடு கட்டுரையை முடித்திருப்பது கனகச்சிதமாக பொருந்தி வருகிறது.
"ஒருத்தி" என்ற படத்தை இயக்கி தேசீய அளவில் அங்கீகாரம் பெற்ற அம்ஷன் குமாரின் கட்டுரை நூலான "பேசும் பொற்சித்திரம்" குறித்து எழுதியிருக்கும் கட்டுரையில் - அம்ஷன் குமாருக்கு இலக்கியத்திலும் சினிமாவிலும் இருக்கும் ஈடுபாட்டையும் சினிமா குறித்த அவரது கண்ணோட்டத்தையும் விவரித்திருக்கிறார். அம்ஷன் குமாரின் கட்டுரையொன்றில் குறிப்பிட்டபடி இராஜாஜி சினிமாவைப் பற்றி நல்லெண்ணம் கொண்டிருந்தார் என்ற தகவல் சரியானதல்ல என்பதையும் சுட்டிக் காட்டியிருக்கிறார்.
ஆளுமைகள் - என்ற தலைப்பின் கீழ் பாலு மகேந்திராவின் சினிமா, சுவாமிக்கண்ணு வின்சென்ட் - தமிழ் சினிமாவின் அடித்தளம், கே. ராம்நாத்: மறக்கப்பட்ட மேதை ஆகிய கட்டுரைகள் என்னைக் கவர்ந்தவை.
அக்குறிப்பிட்ட கட்டுரைகளைப் பற்றி சொல்வதற்கென்றால் அதன் அச்சுப் பிரதியை அப்படியே தரவேண்டியிருக்கும். வாசித்துப் பாருங்கள் என்று மட்டுமே சொல்ல தோன்றுகிறது.
ஒருத்தி: மண்ணில் வேர்கொண்ட கதை என்ற கட்டுரையைத் தவிர "திரைப்படங்கள்" என்ற தலைப்பின் கீழுள்ள கட்டுரைகள் முக்கியமாக தோன்றவில்லை.
நூலிலுள்ள சில கட்டுரைகள் "ஓ.கே." ரகம்தான் என்றாலும் மற்ற கட்டுரைகளின் கனம் இச்சிலவற்றிலுள்ள குறைகளை பெரிதாக்கவில்லை. அதைவிட, இந்த மொத்த நூலையும் முழுமையாக விமர்சித்துவிட்டேனா? சிறப்பாக விமர்சித்துவிட்டேனா? என்பதும் கேள்விக்குரியதென்று நினைக்கிறேன். இந்த கட்டுரையை வாசித்துக்கொண்டிருக்கும் நீங்கள் மட்டுமே அதை சொல்ல வேண்டும்.
காந்தி, காமராஜர், பெரியார், இராஜாஜி போன்ற பேராளுமைகளின் சினிமாவுக்கு ஏதிரான கருத்துக்கள், சினிமாதானே என்ற அலட்சிய மனப்பான்மை போன்றவை தியடோர் பாஸ்கரனின் கட்டுரைகளில் நேர்மையாக மறுக்கப்படுகின்றன. சினிமா ஒரு சிறந்த ஊடகம் என்பதை உணர்த்துகிறது இப்புத்தகம். மக்களிடம் இருக்கவேண்டிய சினிமா ரசனைய உள்ளடக்கிய கூர்மையான பார்வையில் எழுதப்பட்ட இக்கட்டுரைத் தொகுப்பினை வாசிப்பது சினிமாவை வெறுப்பவர்களுக்கும், குறைத்து எடைபோடுபவர்களுக்கும் சினிமாவைக் குறித்து மாற்று அர்த்தத்தைக் கொடுக்கும் என்று நம்புகிறேன்.
மீதி வெள்ளித்திரையில், தியடோர் பாஸ்கரன்,
காலச்சுவடு பதிப்பகம்
No comments:
Post a Comment