சிறப்பு பதிவர் : ஸ்வப்னா அரவிந்தன்
தாயார் சன்னதி
பற்றி என்ன சொல்வது? யோசித்தால் என்னென்னவோ தோன்றுகிறது, ஆனால் யோசிக்காமலே
வரும் எண்ணம் இதுதான் - நான் கடைசியாக படித்த புத்தகங்களில் உறவுகளை இந்த
அளவுக்கு சீராட்டிப் பாராட்டும் புத்தகம் வேறு எதுவும் நான் படிக்கவில்லை.
கதைகளில் வேண்டுமானால் இந்த எழுத்தாளர் எழுதுவது போல் நட்பையும்
பாசத்தையும் கொட்டிக் கொட்டி எழுதலாம், சினிமாவில் கதை கதையாக நடித்துக்
காட்டலாம். ஆனால் நிஜமாகவே நெருங்கிப் பழகிய மனிதர்களைப் பற்றி இவ்வளவு ஆசை
ஆசையாக யாரும் இத்தனை எழுதி நான் படித்ததில்லை. அது கஷ்டமும்கூட. நீண்ட
நாட்கள் பழகியவர்களோடு நல்லது கெட்டது எல்லாம் நடந்திருந்தாலும், அப்புறம்
ரொம்ப நாள் கழித்து நினைத்துப் பார்க்கும்போது நமக்கெல்லாம் அதிகமாக
கோபமும் வருத்தமும்தான் வருகிறது. பழகப் பழக பாலும் புளிக்கும் என்று
சொல்கிறார்களே, அந்த மாதிரி. ஆனால் சுகா மற்றவர்களைப் பற்றி கேலியாகவும்
கிண்டலாகவும் எழுதும்போதுகூட அதில் பிரியம்தான் தெரிகிறது. சில பேர்
இருக்கிறார்கள், விளையாட்டாக நினைத்துத்தான் பேசுவார்கள், ஆனால் அதில்
குத்தல்தான் அதிகம் இருக்கும். சுகா எழுதுவது அந்த மாதிரி கிடையாது.
இந்த
அர்த்தத்தில்தான் நான் ஒரு தடவை என் கணவரிடம் தெரியாமல் சொல்லிவிட்டேன்,
"இந்த புக்கைப் படிச்சா எங்க அண்ணா குரல் காதிலேயே கேட்டுக்கிட்டு
இருக்குங்க," என்று. அதாவது என் அண்ணனின் குரலில் இருக்கும் பிரியம் காதில்
கேட்டுக் கொண்டே இருப்பதாக அர்த்தத்தில். அதற்கப்புறம் எப்போது நான் இதைப்
படித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தாலும், "என்ன, கல்லாப்பெட்டி சிங்காரம்
குரல் கேக்குதா?" என்று கிண்டல் செய்ய ஆரம்பித்து விட்டார் அவர். என்
அண்ணனின் குரல் கல்லாப்பெட்டி சிங்காரம் குரல் மாதிரி இருக்காது, சுகாவின்
குரலும் அப்படி இருக்காது என்று நினைக்கிறேன். அப்படியே இருந்தாலும் ஒரு
தங்கைக்கு இதெல்லாம் பெரிய விஷயமில்லை. இதைப் புரிந்து கொண்டால்
இப்படியெல்லாம் மற்றவர்கள் மனசைப் புண்படுத்தும் வகையில் கேலி பண்ண
ஒன்றுமில்லை என்பது தெரியும்..
இங்கே சென்னையில் மூன்று
வயது குழந்தை தொடங்கி எண்பது வயது பாட்டி வரை என்னை ஆண்ட்டி என்று
சொல்லும்போது கோபம் கோபமாக வருகிறது. ஷேப்பே இல்லாத ஒரு நைட்டிக்குள் தலையை
நுழைத்துக் கொண்டு தோளில் துண்டைப் போட்டுக் கொண்டு எல்லா இடங்களுக்கும்
இங்கே போய் வருகிறார்கள். ஆண்ட்டி என்று சொல்லும்போது எனக்கு இந்த
அக்கறையில்லாத்தனம்தான் ஞாபகத்துக்கு வருகிறது.
ஆனால்
தாயார் சன்னதியில் பக்கத்துக்கு பக்கம் அண்ணாச்சி, அண்ணன், மதினி, தம்பி,
சித்தப்பா, சித்தி, அத்தை, பெரியப்பா, பெரியம்மை, பாட்டா, ஆச்சி, மாமா,
மாமி, மருமகன் என்று எல்லாருமே உறவுகளாகதான் இருக்கிறார்கள். அதைப்
படிக்கும்போதே சுகமாக இருக்கிறது. அவர்கள் வீட்டில் வளர்ந்த நாய்
ஜாக்கன்கூட, "அம்மைக்கு தத்து புத்திரன்" ஆகிவிடுகிறான் (பக்கம் 206).
"விநாயகத்துப் பெரியப்பா ஒன்றும் எனக்கு ரத்த உறவு இல்லை. ஆனாலும் பெரியப்பா. இப்படி பல உறவுகள் எனக்கு உண்டு,"
என்று சர்வசாதாரணமாக எழுதுகிறார் சுகா (பக்கம் 245). இந்த மாதிரி என்
பையன் யாரையாவது நினைத்துப் பார்ப்பானா? சொந்த பெரியப்பாவையே அங்கிள்
வந்திருக்காங்க என்று சொல்கிறான். திரும்பத் திரும்ப திருத்த
வேண்டியிருக்கிறது. ஆனால் சுகாவைப் பொறுத்தவரையில் என் கணக்கில், அவரவர்
வயசுக்கும் சைஸுக்கும் தகுந்த மாதிரி (இரண்டு அல்லது மூன்று உறவுகளைத்
தவிர) பொருத்தமான உறவு ஒன்றைச் சொல்லி எல்லாரையும் சொந்தம் கொண்டாடுவார்
இவர் என்று நினைக்கிறேன் - அதே சமயம், என்னை மட்டுமில்லை, யாரையுமே ஆண்ட்டி
என்று சொந்தம் கொண்டாட மாட்டார் என்றும் நம்புகிறேன். ஆண்ட்டி என்பது துணி
மாட்டுகிற கிளிப் மாதிரி. ஒட்டாத உறவு.
அதே மாதிரி
தாயார் சன்னதியில் இருக்கும் தாய் வீட்டுப் பாசமும் நம்மை நெகிழ வைப்பதாக
இருக்கிறது. திருநெல்வேலியில் உள்ள இடங்களின் பெயர்களை ஆசை ஆசையாக
எழுதுகிறார். ஒரு ஊரைப் பற்றி எழுதினால், அங்கு உள்ள இடங்களின்
பெயர்களையும் யாருமே எழுதுவார்கள்தான் என்று நீங்கள் சொல்லலாம். ஆனால், அது
கூடவே அவர்கள் பேசும் பேச்சும் வரும்போது நாமே அந்த இடத்துக்குப்
போய்விட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு வருகிறது. இதை உதாரணத்தோடு சொன்னால்
நன்றாகப் புரியும்.
அநேகமாக திருநெல்வேலியில் எல்லோரையும் கல்யாணி ஆச்சிக்கும், எல்லோருக்கும் அவளையும் தெரிந்திருந்தது.
"எத்தை, நீங்க மட்டும் எலக்ஷன்ல நின்னா அன்னப்போஸ்ட்ல ஜெயிச்சிருவியெ," அம்மா கேலியாகச் சொல்வாள்.
"நின்னுட்டாப் போச்சு. யார் போட்டாலும் மாமியாளுக்கு நீ போடுவியாக்கும்?"
அடக்க முடியாமல் சிரித்தபடி பதில் சொல்வாள் ஆச்சி. (பக்கம் 47).
இந்த
ஆச்சிகூட சொந்த ஆச்சி இல்லை என்று நினைக்கிறேன். அப்படியானால் சொந்த
அத்தையுமில்லை, மாமியாருமில்லை. ஆனாலும்கூட அந்த அந்த உறவுகளை உதட்டோடு
நிறுத்திக் கொள்ளாமல் அதற்குத் தகுந்த மாதிரியான நெருக்கமான உணர்வுகளோடு
இதயத்திலிருந்து பேசிப் பழகுகிறார்கள். இந்த காலத்தில் இப்படியெல்லாம்
நம்மால் இருக்கவே முடியாது. ஆனால் தாயார் சன்னதி நம்மாலும் அப்படி இருக்க
முடியும் என்று ஞாபகப்படுத்துகிறது. உறவுகள், திருவிழாக்கள், பழக்க
வழக்கங்கள் என்று பாரம்பரிய உணர்வுகளைக் கொண்டாடுகிறது இந்தப் புத்தகம்.
ஆனால்
எல்லாவற்றையும்விட முக்கியமாக, எல்லாரையுமே உண்மையாகச் சொந்தம்
கொண்டாடுவது, எல்லாரைப் பற்றியும் பிரியமாக எழுதுவது என்று இருப்பதாலேயே
தாயார் சன்னதி எனக்குப் பிடித்திருக்கிறது, திரும்பத் திரும்பப் படிக்க
நன்றாக இருக்கிறது. படித்துப் படித்து அண்ணன் மாதிரியான சொந்தமாகவே
ஆகிவிட்ட மாதிரியான உணர்வு வருகிறது. இதைப் படித்த பெண்கள் பலரும் இந்த
எழுத்தாளருக்கு இந்த மாதிரிதான் நெருக்கமாக உணர்வார்கள் என்று
நினைக்கிறேன். இப்படி நினைப்பதற்கு காரணமும் இருக்கிறது.
ஏனென்றால்
என் அலுவலக தோழிகள் இரண்டு மூன்று பேரிடம் இந்தப் புத்தகத்தைப் படிக்கக்
கொடுத்தேன், "இதை எழுதியவரை உனக்குத் தெரியுமா, நாமெல்லாம் போய் பார்த்து
பேச வேண்டும்," என்று சொல்கிறார்கள். அழைத்துப் போகாவிட்டால் விட
மாட்டார்கள் போலிருக்கிறது. ஒரு நாள் அதையும் செய்ய வேண்டும். நானும்
அப்போது எழுத்தாளர் சுகா அவர்கள் எங்களோடு பிரியமாகப் பேசுவதை நேரில்
பார்க்க ஆசைப்படுகிறேன்.
தாயார் சன்னதி, சுகா,
சொல்வனம் பதிப்பகம்.
புகைப்பட உதவி : சொல்வனம்
நல்ல பதிவு. நன்றி ஆன்ட்டி. :)
ReplyDeletea drop rolled out of my eyes....
ReplyDeleteஏன் ஸார், என்னாச்சு?
Delete