'எவரை எங்ஙனம் சமைத்தற்கு என்னமோ அங்ஙனம் சமைப்பாய்' - என பராசக்தியிடம் பாரதி முறையிட்டதைப் பற்றிய ஒரு முன்னுரைக் குறிப்பு பாவண்ணன் எழுதிய `ஒட்டகம் கேட்ட இசை` கட்டுரைத் தொகுப்பை வாங்கத் தூண்டியது. `அதனை அவன்கண் விடல்` என்பது போல் ஒவ்வொரு மனிதனும் தனித்துவமானவன். அனுபவங்களின் கூட்டுத்தொகைதான் ஒட்டுமொத்த மனிதனின் ஆளுமை எனச் சொன்னால் தவறில்லை. அனுபவங்களைக் கொண்டு அமைக்கப்பட்ட இந்தத் தொகுப்புக்கு பாரதியின் வரிகளைவிட சிறப்பானத் தொடக்கம் இருக்காது.
அனுபவங்களே படைப்பின் ஊற்றுக்கண். கலை நோக்கு அந்த ஊற்றுக்கண்ணைக் கீறிவிடும் கருவி. ஒரு படைப்பு தீவிரமாக வாசிக்கப்படும்போது புதுய அனுபவங்களை வழங்குவதுபோலவே படைப்பூக்கத்துடன் எதிர்கொள்ளப்படும் ஒரு அனுபவம் புதிய தரிசனங்களையும் புதிய படைப்புகளுக்கான விதைகளையும் வழங்குகிறது. படைப்பாளியாகவும் விமர்சகராகவும் செயல்பட்டுவரும் பாவண்ணன் தனது அனுபவங்களைப் படைப்பூக்கத்துடன் எதிர்கொண்டதன் தடையங்களை இந்த நூலில் காணலாம்.
எழுத்துக்கும் வாசிப்புக்கும் தேவையான அனுபவங்கள் நம்மைச் சுற்றி விரவிக்கிடக்கின்றன - எல்லா படைப்பாளிகளும் சொல்லும் வசனம். ஆனால் அனுபவங்களை படைப்பூக்கமாக மாற்றும் கலையைத் தெரிந்தவர்கள் மிகச் சிலரே. கொஞ்சம் சுரணையும், அளவுக்கதிகமான பொறுமையும், உழைப்பும், நடைமுறைப்பார்வையும் ஒருசேர அமையும்போது நல்ல படைப்பு உருவாகிறது. ஆனால், மாபெரும் கதையாக மாறும் அனுபவங்கள் சிறு ஜன்னலைப் போன்றவை. அதைத் திறந்து பார்க்கும்போது காணக்கிடைக்காத அற்புதங்களும், யதார்த்தமே பிரம்மாண்டப் புனைவாக மாறியதையும் நம்மால் பார்க்க முடிகிறது.
திப்புவின் கண்கள் - எனும் கட்டுரை ஸ்ரீரங்கப்பட்டணத்தில் வீரத்தையும் துணிச்சலையும் பறைசாற்றிய திப்புவின் திடலில் பாவண்ணனுக்குக் கிடைக்கும் அனுபவம். பெரும் அழிவுகளையும், சாவுகளையும் எதிர்கொண்ட இடத்தில் ஒரு ஓவியத்தின் மூலம் திப்புவின் கண்களை சந்திக்கிறார் ஆசிரியர். கண்களே மனதின் வாசல் என்பதுபோல, காலம்காலமாக ஒவ்வொருவரும் பகிர்ந்துகொள்ளும் சிரிப்புகள், கோபங்கள், கருணை, காதல், மயக்கம், சீற்றம் எல்லாமே இரு கண்கள் வழியே படம்படமாகத் தெரிந்துவிடும் மாயம் தான் என்ன? இதை அனைத்தையும் மீறி ஓவியர் பிடிக்க வேண்டிய கணத்தை நம் முன்னே நிறுத்தப்பார்க்கிறார். காலம் காலமாக பல்லாயிரக்கணக்கானவர்கள் நினைவில் பதியவேண்டிய உருவம் - திப்பு என்றவுடன் சட்டென நினைவு வரவேண்டிய கண்களைப் படம் பிடிப்பதுதான் ஓவியரின் வெற்றி. திப்புவின் மன ஆழத்தில் உறைந்திருந்த அந்த வேட்கையை அந்த ஓவியனும் உணர்ந்துகொண்டதை பாவண்ணன் பேரனுபவமாக நினைக்கிறார்.
குருவிமடம் - என்றொரு கட்டுரை இத்தொகுப்பில் மிகச் சிறப்பான கட்டுரை. தொலைபேசித் தொடர்புக்கான கட்டுமான வளர்ச்சிக்காக பல ஊர்களுக்குப் பயணம் செய்யும் வேலை ஆசிரியருக்கு. சிக்கமகளூருக்கு அருகில் ஒரு கோபுரத்தை முடுக்குவதற்காக பயணம் செய்கிறார். பழுதுபார்க்கும் வேலை தொடங்கிய பிறகு அங்கு வேலை செய்ய வந்த மஞ்சுநாத் என்பவரோடு பேசத்தொடங்குகிறார். காடு பற்றி பல சுவாரஸ்யமானத் தகவல்களை மஞ்சுநாத் தரத்தொடங்க, ஆசிரியருக்கு பேச்சு மிக சுவாரஸ்யமாகத் தோன்றுகிறது.மணிக்கணக்கில் பறந்துவந்த பிறகு ஒரு கிலையில் எல்லா குருவிகளும் சேர்ந்திருக்கும். அதை குருவிமடம் எனக் குறிப்பிடுகிறார் பஞ்சுநாத். குவெம்புவின் கவிதைகளைப் பற்றி பேசத்தொடங்க, மஞ்சுநாத்தைப் பற்றி பல சுவாரஸ்யங்கள் வெளிவருகின்றன. ஒரு விதத்தில் எழுத்தாளர் சந்திக்கும் மனிதர்களும், அனுபவங்களும் குருவி மடம் போன்றதுதான். விதவிதமான மனிதர்கள், பெயரே தெரியாமல் பழகிச் செல்லும் உறவுகள் என வாழ்வே ஒரு குருவிமடம்.
சிற்பம், ஓவியம், கவிதை என வெவ்வேறு வடிவங்களைப் பற்றி எழுதப்பட்ட கட்டுரை மிக ய்தார்த்தமான ஒன்று. தோற்றத்தின் அடிப்படையில் சிற்பவம் வடிவம் சார்ந்ததும், ஓவியம் கற்பனை சார்ந்ததும், கவிதை மொழி சார்ந்ததும் போலத் தோன்றினாலும் உண்மையில் அனைத்துமே மனம் சார்ந்து இயங்கும் தன்மை கொண்டவை தான். கலைஞனின் மனம் காட்சிகளால் நிறைந்த ஒரு மாபெரும் தொகுப்பு. அதை அவன் எப்படி உள்வாங்குகிறான் என்பதிதான் கலைஞனின் மொழி ரூபம் வெளிப்படுகிறது. ஓவியம், சிற்பம் மட்டுமல்ல ஒவ்வொரு வார்த்தைகளும் கூட பெரும் பண்பாட்டின் பின்புலத்தில் இயங்குகிறது. இதை முன்வைத்து ஹம்பி நகரில் கண்ட ஓவியத்தைப் பற்றி அற்புதமான கட்டுரையை எழுதியுள்ளார் ஆசிரியர். கவிதையாகவும் ஓவியமாகவும் சிற்பமாகவும் புதிரின் தருணங்கள் மீண்டும் மீண்டும் மனிதகுலத்தின் முன் படைக்கப்படுகின்றன.
ஒட்டகம் கேட்ட இசை - பாடல்கள் வழியே பாவண்ணன் எனும் படைப்பாளியை அறிந்துகொள்ளும் முயற்சி. சிறு வயதில் பாடல் கேசட்டுகள் வழியே அவருக்குள் உருவான இசை உணர்வுகளை மிகத் துல்லியமாகப் படம் பிடித்துள்ளார். அருணா சாய்ராம், மகாராஜபுரம் சந்தானம், ஜெயஸ்ரீ, சஞ்சய் சுப்ரமணியம் என பலரது பாடல்களை கேட்ட அனுபவங்கள் இக்கட்டுரையில் உள்ளன. இசை கேட்டு மனபாரத்தைக் குறைத்துக்கொள்ளும் அனுபவத்தை மிக அழகாகக் காட்டியுள்ளார். சிலருக்கும் இசை ஒரு மருந்து, சிலருக்கு உள்ளம் உவக்கும் வாழ்க்கை.
எல்லா எழுத்தாளர்களும் தாங்கள் சந்தித்த மனிதர்கள், படித்த புத்தகங்கள், பார்த்த திரைப்படங்கள் பற்றி நிறைய எழுதியுள்ளனர். வெறும் செய்திகளாக எழுதுவதைக் காட்டிலும் மனிதர்களை ரத்தமும் சதையுமாக நம்முன் நிறுத்துவதை மிகச் சில எழுத்தாளர்கள் மட்டுமே செய்கிறார்கள். பாவண்ணன் இவ்விஷயத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
பாவண்ணன் பேட்டி
பாவண்ணன் பேட்டி
ஆசிரியர் - பாவண்ணன்
தலைப்பு - ஒட்டகம் கேட்ட இசை
இணையத்தில் வாங்க - ஒட்டகம் கேட்ட இசை.
No comments:
Post a Comment