சிறப்புப் பதிவர்: ஆர்.அனுராதா
யாமம் என்னும் வசீகரமான தலைப்பைப் போலவே விதவிதமான இரவுகளின் வசீகரமான வர்ணனைகள் கதை நெடுகிலும்.
சுதந்தரத்திற்கு முன் பிரிட்டிஷார் இந்தியாவில் காலூன்ற ஆரம்பித்த காலமே கதைக்களம். ஆனால் பிரிட்டிஷாரின் அடக்குமுறையோ, சுதேசிகளின் போராட்டமோ என எதையும் தொடாமல், தேர்ந்தெடுத்த... ஒருவருக்கு ஒருவர் தொடர்பில்லாத சில சாமானியர்களின் (மத்யமர்!) வாழ்வை சொல்லுகிற கதை.
மூன்று மனைவியருடன் போகத்தில் திளைத்து பின் சூதாட்டத்தில் நொடித்து ஒரு யாமத்தில் கரைந்து மறைந்த அத்தர் வியாபாரியின் கதையில் அவன் அத்தர் தயாரிக்கையில் நாம் வாசிக்கும் அறையெங்கும் அத்தர் மணம் கமழ்ந்து மூச்சு முட்டுகிறது.
நாயைப் பின் தொடர்கிறான் ஒரு பரதேசி.
கணிதமேதை ஆவான் என்ற நம்பிக்கையில் தன் தம்பியை இங்கிலாந்திற்கு அனுப்பும் அண்ணன். தன் சபலத்தால் இருவர் வாழ்வையும் சிதைத்துக் கொள்கிறான்.
சந்தர்ப்பவசத்தால் வேசையாகிவிட்ட பெண்ணொருத்திக்கு மறுவாழ்வு கிடைக்கிறது.
கலைடாஸ்கோப்பில் டிஸைன்கள் மாறுவதுபோல் காலம் ஒன்று ஆனால் வெவ்வெறு மனிதர்கள், வேறு சூழல்கள், வேறு வாழ்க்கை எனச் செல்கிறது கதை.
கதை மாந்தர்களின் வாழ்க்கையின்வழி நமக்கு எதையும் உணர்த்த வேண்டும் என முனைந்து எஸ்.ரா. எந்த கருத்தையும் திணிக்கவில்லை. யார் வாழ்க்கையின் முடிவும் நாடகத்தன்மை கொண்டதாக இல்லாமல், இயல்பாய் இருக்கிறது. குறிப்பாக போகத்தில் திளைக்கவே இங்கிலாந்து செல்லும் சற்குணம் அங்கே கருப்பர்களின் உரிமைக்குப் போராடுவது, மகன் போல் கருதிய தம்பியைப் படிக்க அனுப்பிவிட்டு அவன் மனைவியுடனே உறவாடுவது போன்ற முரண்கள் கூட கதையின் ஓட்டத்தில் இயல்பாகவே சொல்லப்பட்டிருக்கிறது.
தேயிலை இந்தியாவில் பயிரிடப்பட்டதன் ஆரம்பப்புள்ளியில் ஒருகதை நிறைகிறது. அறுபது வருடங்கள் எடுத்துக் கொண்ட இந்திய நில அளவையின் ஆரம்பகாலக் கஷ்டங்களைத் தொட்டுச் செல்கிறது இன்னொரு கதை.
பெரும்பாலும் சாலைகளே இல்லாத நம் நாட்டில், அவற்றைக் கட்டமைக்க நியமிக்கப்பட்ட பிரிட்டிஷ் அதிகாரிகள் பட்ட சிரமங்களையும் புத்தகம் ஒருபக்கம் எடுத்துரைக்கிறது. ஆசாரமான ஒரு பெண் மதம் மாறியதை ஜாதியோடு (எப்படி எழுதினாலும் பிரச்னை செய்யாதவொரு ஜாதி) குறிப்பிடுகிறார் எஸ்.ரா., இப்படி அந்தக் காலகட்டத்தின் நுணுக்கமான சில சித்திரங்கள் நம் முன்னே விரிகிறது.
ஆங்கிலேயர்களை முற்றிலும் வன்மம் பிடித்து நம்மைப் பழி வாங்குபவர்களாகவோ, அதிகாரம் செலுத்தி அடக்கியாள்பவர்களாகவோ மட்டும் சித்தரிக்காமல், சில இடங்களில் நம் சக பாத்திரங்களாகவே படைத்திருக்கிறார் எஸ்.ரா., எனினும் நம்மவர்கள் அவர்களிடம் மரியாதைக்குரிய தூரத்திலிருந்தே அவர்கள் கட்டளைகளை இயல்பான விசுவாசத்துடன் செய்து முடிக்கிறார்கள்.
நம் மனச்சித்திரத்தில் பதிந்துள்ளதைப் போல, அக்காலத்தில் எல்லோரும் ஆங்கிலேயர் வரும்போதெல்லாம் ஒன்று தெருவில் இறங்கி, “வெள்ளையனே வெளியேறு” என கோஷம் போடுபர்களாகவோ அல்லது கூஜா தூக்கிக் கொண்டு அவர்கள் பின் சென்று சேவை செய்யும் கருங்காலிகளாகவோ இருந்திருக்கவில்லை. தேவைப்பட்டபோது ஆங்கிலேயர்களுடன் கலந்தும், விலகியும் தங்கள் வாழ்க்கை ஓட்டத்தை அதன் இயல்பில் வாழ்ந்து முடித்தவர்களின் இயல்பான கதை இது.
ஆங்கிலேயர்களின் காலகட்டத்தில் நிகழும் கதையாக இருந்தாலும் போராட்டம், அடக்குமுறை, எழுச்சி, என்ற பெரிய பிரச்னைகளைத் தொடாமல் மேம்போக்காகக் கதை சொல்லியிருப்பதாகத் தோன்றினாலும், அரசர்கள் அல்லது தலைவர்களின் திருப்பங்கள் நிறைந்த வெற்றி, தோல்வியைப் பதிவு செய்யும் வரலாறாக இல்லை யாமம். சாமானியர்களின் வரலாறு எனக் கொள்ளலாம்.
சில வருடங்களுக்கு முன் ஒரு பயணத்தின் போது ஓர் இடிந்து சிதைந்து பாழடைந்த பழங்காலக் கருங்கல் கட்டிடத்தைப் பார்த்தேன். எந்தப் பயணம், ஏது ஊர் என்ற விவரங்கள் நினைவில் இல்லை. எனினும் அக்கட்டிடத்தின் பிம்பம் இப்போதும் மனக்கண்ணில் அப்படியே உறைந்திருக்கிறது. காரணம் ஏன் எனப் புரியாவிட்டாலும் அதேபோல ஒரு பிம்பத்தைத்தான் யாமமும் எனக்கு ஏற்படுத்துகிறது.
யாமம் | எஸ்.ராமகிருஷ்ணன் | உயிர்மை பதிப்பகம் | 360 பக்கங்கள் | விலை ரூ.275/- |
No comments:
Post a Comment