இது
நான் வாசிக்கும் ஆதவனுடைய இரண்டாவது நாவல். என்றைக்காவது உங்களுடைய
எண்ணங்களைக் கூர்மையாக கவனித்தது உண்டா? ஒவ்வொரு நிகழ்வின்போதும் உங்கள்
மனதின் எண்ணங்களைக் கொஞ்சமாவது உற்று நோக்கியது உண்டா? உங்கள் வாழ்வின்
முக்கியமான காலகட்ட எண்ணங்களை உங்களால் இப்போதும் நினைவுகூர முடியுமா? இது
மாதிரியான சில கேள்விகளுக்கு இந்நாவல் பதில் கூற முற்படுகிறது.
ஆதவனின்
காகித மலர்கள் – என் பெயர் ராமசேஷன் இரண்டுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு,
ஆனால் அது நம்மை நாவல் வாசிப்பதில் இருந்து அந்நியப்படுத்துவதில்லை.
அப்படி என்றால் நாவலில் எனக்கு பிடிக்காத அம்சமே இல்லையா என்றால் உண்டு,
அது பற்றி இடை இடையே.
இந்த
நாவல் ஒரு நடு மத்தியதர வர்க்க - Middle middle class (upper middle
class, lower middle class மாதிரி) ராமசேஷனுடைய நான்கு வருட கல்லூரி
வாழ்க்கையை, அவனுடைய அடையாள தவிப்புகளைச் சித்தரிக்கிறது. இந்தக் கதை
முழுக்க முழுக்க ராமசேஷன் பார்வையில் இருந்தே சொல்லப்படுகிறது என்பதை இங்கே
கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாவலை
வாசிக்காமல் இந்த விமரிசனம் வாசிக்கும்போது கொஞ்சம் புரியாமல் இருந்தால்
மன்னிக்கவும். காகித மலர்கள் போலவே இந்த நாவலிலும் மனித உறவுகளின்
சிக்கல்களை மிக கூர்மையாக கண்முன் நிறுத்துகிறார். அது ஆதவனின் வெற்றியும்
தோல்வியுமாகும்.
எப்படி
என்றால், பிரேமா கதாபாத்திரம் குறித்து முதல் சில பத்திகளிலேயே ஒரு
பிம்பம் உருவாகி விடுகிறது. ஆனால் அதைக் கொஞ்சம் கொஞ்சமாக நீட்டி எழுதிக்
கொண்டு போகும்போது ஒரு விதமான ஆயாசம் ஏற்படுகிறது. இதையே ராமசேஷனின்
பார்வையில் இருந்து கொண்டு பார்த்தால், அவனை நம்மில் நாம் கொஞ்சம்
காணலாம். நமக்கு பிடித்தும் பிடிக்காத ஒரு நபர், அவரிடம் இருந்து விலகியும்
இருக்க முடிவதில்லை, மிக நெருங்கியும் இருக்க முடிவதில்லை, அந்த நேரத்தில்
அவர்கள் செய்யும் ஒவ்வொரு செயலையும் நம் மனம் எப்படி விமர்சனம் செய்யும்,
அதுவே இந்த நாவலின் கரு என்று சொல்லாம்.
இந்த
நாவலில் செக்ஸ் கொஞ்சம் அதிகாகவே பேசப்படுகிறது. மாலாவுடன் ஏற்படும்
உடலுறவும், நட்பும் அதன் எதிர்மறை பிம்பமாக பிரேமா இருப்பதும், ஆனால்
இருவருமே ராமசேஷனை அடக்கி ஆள முற்படுவதும். அதை அவனும் அனுமதிக்கிறான்.
எனக்கு
நானே சில சமயம் கேள்வி கேட்டு கொள்கிறேன் - எனக்கு இந்த மாதிரி சம்பவங்கள்
ஏற்படாத சூழ்நிலை இருப்பதால் என்னால் இந்நாவலை முழுமையாகப் புரிந்துகொள்ள
முடியவில்லையா? இத்தனைக்கும் அங்கங்கே சில சமயம் என்னில் இந்த ராமசேஷனை
நான் காண்கிறேன். ஆனால் அது ஒரு சிறு துளி மட்டுமே.
என்னுடைய
நண்பர்கள் சிலரிலும் ராமசேஷனின் குணாதிசயங்களைக் காண்கிறேன். ஆனால் அது
அவர்களில் ஒரு பகுதியே. உண்மையில் ராமசேஷனைப் போன்ற ஒருவனைக் காண்பது
சிரமம் என்றே கருதுகிறேன்.
எனக்கான
சில கேள்விகள் - இந்த நாவல் எழுதப்பட்ட காலம் 1980. இதில் வரும் இரண்டு
பெண்களும் மிக சுலபமாக தங்களை இழக்கிறார்கள். ஓகே, கொஞ்சம் யோசித்துப்
பார்க்கும்போது நான் படித்த சுஜாதா நாவல்களில், விக்ரம் சேத் எழுதிய ”தி
சூடபிள் பாய்”, ஏன் காகித மலர்களில் வரும் விசுவத்தின் தாய், எல்லாரும்
மிக சுலபமாக தங்களை இழக்கிறார்கள். இந்த காலத்தோடு இதை ஒப்பிட்டு
பார்த்தால், என்னால் பதில் சொல்ல முடியவில்லை. நான் இன்னும் அப்படிப்பட்ட
பெண்களை சந்திக்கவில்லை என்று மட்டும் சொல்லுவேன்.
காகித
மலர்களில் நிறைய கதைமாந்தர் ஒருவரை ஒருவர் எப்படி அடிமைத்தனம்
செய்துகொண்டு அதில் தங்களை நிலை நிறுத்திக் கொள்கிறார்கள் என்பதை எழுதி
இருப்பார். இந்த நாவலும் டெல்லியை மையமாக வைத்துதான் எழுதப்பட்டு
இருக்கிறது. இந்த நாவலிலும் முழுக்க முழுக்க ராமசேஷன் தன்னுடைய வாழ்வில்
சந்திக்கும் மனிதர்களையும், அவர்கள் இவனிடம் ஏற்படுத்திக் கொள்ளும்
நட்பையும், இவன் பிரேமா மாலாவிடம் ஏற்படுத்திக் கொள்ளும் நட்புயும்
உறவையும் கூர்மையாக ஆராய்கிறார். அது சில சமயம் Fascinatingஆக இருக்கிறது,
சில சமயம் frustratingஆக இருக்கிறது. எந்த ஒரு உறவையும் அதிதீவிரமாக
ஆராய்ந்தால் கசப்பு மட்டுமே மிஞ்சும். இல்லை என்றால், என்னால் அப்படி
உறவுகளை ஆராய முடியவில்லை என்று சொல்லலாம்.
ஆதவன்
பற்றிய ஒரு விவாதத்தின்போது ஆதவனுடைய எழுத்துகள் எப்போதும் தன்னை நோக்கியே
இருக்கும் என்று நண்பர் குறிப்பிட்டு இருந்தார். அது முழுக்க முழுக்க
இந்த நாவலுக்கும் பொருந்தும். சம்பவங்கள் மிகக் குறைவாகவும், ஆழ்மன
எண்ணங்கள் அதிகமாகவும் காணப்படும் இந்நாவல், ஒரு தனி மனிதனின் அடையாள
தவிப்பு என்னும் பார்வையில் இருந்து பார்க்கும்பொழுது வண்ணமயமானது என்பது
உண்மைதான். ஆனால், அது ஒட்டு மொத்த சமுதாயத்துக்கும் பொருந்துமா? இல்லை,
பெரும்பான்மையான மத்தியதர வர்க்கத்தினருக்கு மட்டுமே இப்போது பொருந்துகிறதா
என்பதை வாசகன்தான் தீர்மானிக்க வேண்டும். இதற்கான விடையை விவாதத்தால்
காண்பது சுலபமல்ல, உணர்வால்தான் அறிய வேண்டும். சிக்கலான, முரண்பாடுகள்
நிறைந்த உறவுகளை விவரிப்பதற்கும், அதில் உள்ள உணர்வுகளைப் பகிர்ந்து
கொள்ளவும்தான் கதை எழுதுவது, இல்லையா? - விவாதித்து விடை காண முடிவும்
என்றால் கட்டுரை எழுதிவிட்டுப் போகலாமே!
No comments:
Post a Comment