சினிமாவாக எடுத்தால் கௌரவம் படத்தின் பழிவாங்கும் படலம் இல்லாத இரண்டாம் பாதிதான் ‘கவிழ்ந்த காணிக்கை’. அப்பாவிடம் சவால் விட்டு ஜெயிக்கும் சின்னஞ்சிறு பிள்ளைக் கதைதான் என்றாலும் சிவாஜி போல கண்கள் சிவக்க, கன்னக்கதுப்புகள் அதிர சவால் விடும் அப்பாவெல்லாம் இல்லை ஆதிச்சப் பெருந்தச்சன். சுருள்முடியைச் சுற்றிக் கொண்டு கண்களால் சவால் விடும் இன்னொரு சிவாஜியும் இல்லை மகனான சோமதேவன். தஞ்சை பெரிய கோயில் கட்டுமானம் நிகழும் ராஜராஜசோழனின் வரலாற்றுக் காலகட்டத்தில் நடக்கிறது கதை.
தஞ்சைப் பகுதியானது பாறைகளின் பிரதேசமன்று. தமிழகத்தின் பிற பகுதிகளிலிருந்து பாறைகள் தருவிக்கப்பட்டு உலகின் தன்னிகரற்ற அந்தப் ”பெரிய” கோயில் கட்டப்பட்டது என்பது ஒரு ஆச்சர்யமான வரலாறு.
விழுப்புரம் மாவட்டத்தில் புதுவைக்கு அருகே ‘திருவக்கரை’ என்னும் சிவத்தலம் உண்டு. வக்ரகாளியம்மன் திருக்கோயில் இந்தத் தலத்தின் பெருஞ்சிறப்பு. நம்மூர் பக்தி சிகாமணிகள் பெரும்பாலானவர்கள் இந்த ஊரில் நிச்சயம் கால் பதித்திருப்பார்கள். நானும் சமீபத்தில் இங்கே சென்று வந்தேன். நம் ஆன்மிக அன்பர்கள் பெரும்பாலானோர் அறியாத மற்றுமோர் சிறப்பு இந்த ஊருக்கு உண்டு. ”திருவக்கரையில் கிடைக்கும் பாறைகள் போல் உலகில் வேறெங்கும் கிடைக்காது”, என்பதுதான் அது.
திருவக்கரை ஆதிச்சப் பெருந்தச்சனைத் தேடி ராஜராஜன் வருகிறான். பெரிய கோயில் லிங்கமும், நந்தியும் திருவக்கரையில் வடிக்கப்பட வேண்டும் என்பது அவன் வேண்டுகோள். பெருந்தச்சன் அதை ஏற்கிறார். நந்தீஸ்வரரின் வருகைக்குப் பிறகே லிங்கம் எந்தக் கோயிலுக்குள்ளும் புகவேண்டும் என்பது விதி. சம்பிரதாய தோஷமாக முதலில் பெருவுடையார் தஞ்சை புகுகிறார்.
அடுத்ததாக பெரிய நந்தியின் பிரயாணத்தின் போது நிகழும் சவாலும் ஆதிச்சப் பெருந்தச்சனின் தலைகுனிவும், நந்தீஸ்வரரின் பயண mission failiure'மே மிச்சக் கதை.
கார்ட்டூனிஸ்ட் மதன் விகடனின் இணை ஆசிரியர் பதவியைத் துறந்த காலகட்டத்தில் என்று நினைவு.... அப்போது “விண் நாயகன்” என்றொரு மாதமிருமுறை இதழ் வெளிவரத் தொடங்கியது. ஒன்றிரண்டு வருடங்கள் வந்தபின் நின்றுபோன இதழ் அது. தொடங்கிய புதிதில் மதன், சுஜாதா, பாலகுமாரன் என்று ஃப்ரண்ட்லைன் பிரபலங்கள் எழுத்துகள் மிளிர்ந்த இதழ் அது.
காதல் பற்றிய தொடரை மதன் எழுதினார்; கடவுள் பற்றி சுஜாதா எழுத; இந்த வரலாற்று நிகழ்வை ஒட்டிய இந்தக் குறுந்தொடரை பாலகுமாரன் எழுதினார். அப்போது அந்த மூன்று தொடர்களையும் அந்த காலகட்டத்தினையொட்டிய ஆர்வக்கோளாறுடன் கத்தரித்து எடுத்து வைத்து, நம் வாழ்க்கையின் எல்லா கட்டங்களிலும் தொடரும் சோம்பேறித்தனத்தினையொட்டி இன்றுவரை பைண்ட் பண்ணாமல் வைத்திருக்கிறேன்.
சொக்கனின் ‘மென்கலைகள்’ புத்தகத்தின் “நூறு போதும்” படித்துவிட்டுப் பரணைக் குடாய்ந்து கொண்டிருந்த போது இந்த கத்தரிப்புகள் கண்ணில் ஆப்ட.... கடவுளையும், காணிக்கையையும் மறுவாசிப்பு செய்ய நேர்ந்தது.
திருவக்கரை சென்று வந்தபின் நான் எழுதிய பதிவில் இந்தத் தகவலைப் பகிர்ந்திருந்தேன்; இந்தப் புகைப்படத்துடன்...
கோயிலின் பின்னணியில் இந்த மலை தென்பட்டது. உடைந்த கற்குவியல்களாலான ஒரு மலை. அதென்ன என்று விசாரித்தபோதுதான் தெரிந்தது அது பக்கத்தில் கல்குவாரிகளில் உடைபடும் பெரிய கற்களிலிருந்து சிதறும் சிறிய (தேவையற்ற) கற்களின் குவியல் என்று. கர்மசிரத்தையாக அது ஒரு மலையாக உருவாகி நிற்கிறது.
”கவிழ்ந்த காணிக்கை” அப்போது வாசித்தபோது மனதில் பதியாத ‘திருவக்கரை’ இப்போது பழகிவிட்ட தலமாகி நிற்கிறது. இப்போது மறு வாசிப்பு செய்தபின், “அடடா! அந்த ஊரில் ஏதேனும் ஒரு பாறைக் கொல்லைக்கு விசிட் அடிக்காமல் வந்துவிட்டோமே” என்று நினைத்துக் கொண்டேன்.
’கவிழ்ந்த காணிக்கை” - பெருநாவலாக வந்திருக்க வேண்டியதை எழுத்துச் சித்தர் குறுநாவலாக வடித்திருக்கிறார் என்றே சொல்ல வேண்டும். முழு நாவலுக்கான அத்தனை ஸ்கோப்பும் உள்ளதொரு கதைக்களம். விண் நாயகனுக்காய் இந்தக் கருவைத் தாரை வார்க்கத் தலைப்பட்டதால் ”நான்கு அல்லது ஆறு வாரம் வெளிவர்றாப்ல சார், ஒரு குறுநாவல்?”, என்ற வேண்டுகோளுக்கு இந்தக் குறுநாவலை அவசரமாக எழுதித் தந்தாரோ அல்லது வேறு எழுத்துப் பணிகளுக்கிடையே எழுத நேர்ந்ததால் இந்தக் கதையை சுருக்கமாக முடித்துக் கொண்டாரோ, நாம் அறியோம்.
’பொன்னியின் செல்வனு’க்கு கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோப் தந்திருக்கலாம், தஞ்சை பெரிய கோயில் புகழை கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக பாடியிருக்கலாம், பெருவுடையார் பிரதிஷ்டையைச் சுற்றிய நிகழ்வுகளை அத்தனைச் சுருக்கமாய்ச் சொல்லியிருக்க வேண்டாம் என எனக்கே படிக்கையில் தோன்றும் போது, எழுதும்போது அல்லது எழுதி முடித்தபின் எழுத்துச் சித்தருக்குத் தோன்றாமல் போயிருக்குமா என்ன?
ஓகே... தஞ்சை வரை பயணப்படாத அந்த ‘கவிழ்ந்த காணிக்கை’யான நந்தீஸ்வரர் விழுப்புரம் மாவட்டத்தில் திருவக்கரையிலிருந்து புதுவை செல்லும் வழியில் திருவக்கரை எல்லையில் இன்னமும் கவிழ்ந்த கோலத்தில் காட்சி தருகிறாராம். அந்தப்புறம் செல்பவர்கள் மறக்காமல் தரிசனம் செய்வீராக.
இந்தக் குறுநாவலானது பாலகுமாரனின் ஏதோவொரு புத்தகத் தொகுப்பில் வெளிவந்துள்ளது. அந்தத் தகவல் தெரிந்த பாலகுமார ரசிக அன்பர்கள் அந்தத் தகவலை இங்கே பின்னூட்டமாய்க் குறிப்பிட்டால் இந்தப் பதிவைப் படிக்கும் பிற பாலகுமார கண்மணிகள் பயன் பெறுவார்கள்.
அப்படி எங்கும் இந்தக் குறுநாவலின் வடிவம் கிடைக்காத பட்சத்தில்.... ....இந்தக் குறுநாவலின் தட்டச்சு வடிவம் வேண்டுவோர் எனக்கு மின்னஞ்சல் அனுப்பினால் ( rsgiri @ gmail ) அவர்களுக்கு மின்னஞ்சலில் குறுநாவலை அனுப்பி வைக்கிறேன் (என் பதில் அஞ்சலின் வேகம் என் சோம்பேறித்தனத்தின் வீரியத்தின் அளவைப் பொறுத்தது என்பதை மனதில் கொள்ளவும்).
கவிழ்ந்த காணிக்கை | பாலகுமாரன் | குறுநாவல் | வரலாறு
No comments:
Post a Comment