சுஜாதாவுக்குத் தன் அபார மேதைமையைக் காட்ட வேண்டும் என்ற நோக்கம் கிடையாது. ‘வாசகருடைய ஆர்வத்தைத் தூண்ட வேண்டும், மீதியை அவராகவே தேடிப் படித்துக்கொள்வார்’ என்பது
அவர் கொள்கை.
- அ.முத்துலிங்கம்
உலக இலக்கியத்தின்
வெற்றிகரமான சிறுகதைகளாக
நமக்குக் கிடைக்கும்
கதைகளில் எவற்றுக்கும்
குறையாத பத்து
கதைகளையேனும் சுஜாதா
எழுதியுள்ளார் - ஜெயமோகன்
எண்பதுகளின் துவக்கத்தில்
சுஜாதாவைப் படிக்கத்
துவங்கிய நாட்களில்
அவர் தான்
நண்பர்களுக்கு வாத்தியார்.
எது தொடர்பான
சந்தேகம் உண்டானாலும்
வாத்தியார் ஏதாவது
எழுதியிருப்பார் பாரேன்
என்று உடனே
சுஜாதாவின் புத்தகத்தைத்
தேடி ஒடுவார்கள்.
அநேகமாக எழுதியிருப்பார்.
அல்லது எழுதிக்
கொண்டிருப்பார்.
- எஸ்.ராமகிருஷ்ணன்
**
தமிழ் எழுத்துலகின் மாஸ்டர்களில் ஒருவரான சுஜாதா அவர்களுக்கு மனம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகளை ஆம்னிபஸ் தெரிவித்துக்கொள்கிறது!
நவீனத் தமிழின் வயது 79.
கடந்த பிப் 28ஆம் தேதி ஒரு பதிவு போடலாமே என ஆம்னிபஸ் நண்பர் கேட்டபோது, சாகாவரம் பெற்ற சுஜாதாவின் சாதனைக்கு பிறந்தநாள் மட்டுமே முக்கியம் என ஒட்டுமொத்தமாக ஆம்னிபஸ் நண்பர்கள் கூறிவிட்டனர்.
சுஜாதாவின் அபுனைவுகளில் அனைவரும் பெரிதும் ரசித்தது அவரது `கடைசி பக்கங்கள்`. சுவாரஸ்யமானப் பத்தி எழுத்து என்பதை தமிழில் அறிமுகப்படுத்திய முன்னோடி என்பது அவரது ஒரு முகம். எழுத்தாளனின் மொழி ஆளுமை என்பது வாசகனோடு உடனடியாகத் தொடர்பு கொள்ளும் வேகத்தில் இருக்கிறது. குறிப்பிட்ட தேடல் இருக்கும் வாசகன் அதே தேடல் இருக்கும் எழுத்தாளனை சந்திக்கும் வெளி ஒரு விதம். பெரும்பாலும் தீவிர இலக்கிய தளத்தில் இது நடக்கும். ஒரு எழுத்தாளர் செல்லும் பாதையில் தம்மை ஈடுபடுத்திக்கொள்ளும் வாசகனை விட்டுவிடுவோம். அது ஒரு பிரத்யேகமான வெளி. தன்னுடைய ஆர்வங்களுக்குள் வாசகனை கட்டி இழுப்பது இன்னொரு வழி. சுஜாதா இதைச் செய்தவர்.
எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அதே சமயம் நவீன இலக்கியத்துள் புக முடியாமல் சலித்துக்கிடந்த வாசகர்கள் சுஜாதாவால் ஈர்க்கப்பட்டனர். ஒரு தீவிர தேடல் இருக்கும் எழுத்தாளனை விட இந்த வகை எழுத்தாளர்களுக்கு அதிக பொறுப்பு இருத்தல் வேண்டும். சுவாரஸ்யமான எழுத்து, நவீன மனப்பாங்கு, சம்பிரதாயங்களின் மீதிருக்கும் விமர்சனங்கள் போன்றவை தவறான வழிக்கு வாசகனை இட்டுச் சென்று விடக்கூடாது. சுவாரஸ்யமான எழுத்தின்பால் அவனை இழுக்க வேண்டும். அதே சமயம், தீவிரமான ஆர்வங்களை வாசகனுக்கு அறிமுகப்படுத்த வேண்டிய கட்டாயம் சுஜாதாவுக்கு இருந்தது. இன்று அவருக்கு இருக்கும் பல்லாயிரக்கணக்கான ரசிகர்களே அதற்குச் சான்று.
விமர்சனங்கள் பற்றி சுஜாதா கடைசி பக்கங்களில் எழுதியது கீழே:
பொதுவாகவே இந்த விமர்சகர்கள், விமர்சனம் செய்யும் புத்தகத்தையோ, திரைப்படத்தையோ பற்றிக் கவலைப்படுவதில்லை. அவர்களுக்கெல்லாம் முக்கியம் தத்தம் சொந்த அறிவுகளின் விஸ்தாரத்தைக் காண்பிப்பதே. விமர்சனம் எதற்குத் தேவைப்படுகிறது? பார்ப்பவர்களின் அல்லது படிப்பவர்களின் ரசனையை உயர்த்துவதற்காக எனக் கொள்ளலாமா?
நான் தமிழ் படிப்பதில்லை என பெருமைப்படும் கூட்டத்தை இந்த விமர்சகர்கள் எப்படி அடையப் போகிறார்கள் என 1972-இல் எழுதியிருக்கிறார். அந்த கவலை இன்றும் உள்ளது. சொல்லப்போனால் விகடன், குமுதம் போன்ற ஜனரஞ்சகப் இதழ்களில் சிறுகதைகள் குறைந்ததும் இந்த இடைவெளி அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இலக்கியம் என்பது ஒரு பயணம் - வாசிப்பினால் மட்டுமே அந்த இடைவெளியை ஈடுசெய்ய முடியும். தமிழில் வரும் நல்ல புனைவு/அபுனைவு பற்றிய அறிமுகம் சிறுபத்திரிக்கை சூழலில் முடங்கிப்போவதால் பரவலாக வாசிப்பு குறைந்துள்ளது. இப்படி சுஜாதா எழுதும் காலத்துக்கும் இன்றைக்கும் அதிக வித்தியாசமில்லை.
கடைசி பக்கத்தை வாசக ரசனை உயர்த்துவதற்கான பத்தி எழுத்து என எளிதில் சொல்லிவிடலாம். எத்தனை எழுத்தாளர்கள், புத்தகங்கள், கவிதைகள், சினிமாக்கள், விளையாட்டு வீரர்கள், சமூக ஊடக ஆளுமைகள் என வகைதொகையில்லாமல் அறிமுகப்படுத்தியிருக்கிறார் என நினைக்கும்போது ஆச்சர்யமாக உள்ளது.
சிறுகதைகள், கவிதைகள் அறிமுகம் செய்வதோடு மட்டுமல்லாது நல்ல படைப்பை எப்படி அடையாளம் காண்பது எனச் சொல்வதும் சுஜாதாவின் பாணி. ஒருவிதத்தில், மீனைக் கொடுக்காமல் மீன் பிடிக்கக் கற்றுக்கொடுக்கும் டெக்னிக். 1973 இல் சிறந்த சிறுகதைகளை மானசீகமாகத் தொகுக்கத் தொடங்குகிறார். பதினைந்தைத் தாண்டவில்லை என வருத்தப்படுகிறார். சிறுகதை தேர்வு செய்ய அவர் சொல்லும் முக்கியமான விதி:-
வார, மாத, வருஷ அவசரங்களை மீறி 1985 ஆம் வருஷம் படித்தால் கூட அப்பொழுதும் அதற்கு relevance இருக்க வேண்டும்.
சிம்பிள். ஒரு பத்து வருஷம் என வருஷக்கணக்கில்லை. சிறுகதையில் சொல்லப்படும் விஷயம் அன்றன்றைய சூடான செய்திகளாக இல்லாமல், காலததுக்கும் பொருந்தும் அம்சம் ஏதாவது அதற்கு இருந்தால் அது சிறந்த சிறுகதை. இப்படி வகுப்பது ரொம்ப எளிமையாக வரையறுப்பதுதான். ஆனால் முக்கியமானதும் கூட.
சுஜாதாவின் புற உலகங்களில் பெரிய பயணங்கள் இல்லை. அவர் வேலை விஷயமாகவோ, ஏதேனும் விழா சம்பந்தமாகவோ வெளியே செல்லும்போது பார்க்கும் விஷயங்களை எழுதுகிறார். சாதாரணமான நிகழ்வுகள். தில்லி தெருக்களின் ஏழ்மை, பம்பாயின் நெரிசல் என எல்லாருக்கும் தெரிந்தவிஷயம் தான். ஆனால், அதிலும் அவர் மட்டுமே கவனிக்கும் விஷயமும் இருக்கிறது.
அரசாங்கக் கட்டிடங்களில் உட்காரும் நாற்காலிகள் கூட `ஆப் கி மர்ஜி ஹை சாப்` என லஞ்சம் கேட்கிறது.
பிரமிளாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் உண்டு என ஒரு பத்திரிக்கை கட்டத்துள் பதிப்பிக்கிறது. பிரமிளாவுக்கு நகம் கடிக்கும் பழக்கம் இருந்தால் என்ன, வேறு எவளுக்கோ தொடையில் மச்சம் இருந்தால் நமக்கு என்ன என ஒருவரும் கேட்பதில்லை. .இதைவிட அதிகமாக ஒரு ஜனக் கூட்டத்தை எவனும் அவமானப்படுத்த முடியாது என எண்ணுகிறேன்
சுஜாதாவின் கடைசி பக்கங்களைப் இப்போது திருப்பிப் பார்க்கும்போது, சில பொதுப்படுத்தல்கள் தெரிகின்றன. தீவிர அங்கதமும், எல்லைக்குட்பட்ட பொதுப்படுத்தல்களும் பத்தி எழுத்தின் சாராம்சம். குறிப்பாக, பத்திரிக்கை உலகில் நடக்கும் சம்பிரதாயங்களைக் அனாவசியமாகக் கிண்டல் செய்கிறார். வாசகர் கடிதத்தை நகல் பண்ணுவதாகட்டும், வாசகன் எப்படி அந்த கடிதத்தை எழுதியிருப்பான் என சொல்வதாகட்டும், சிறுகதை கிராஃப்டுகளை விமர்சிப்பதாகட்டும் சுஜாதாவின் அக்மார்க் கிண்டல் ஜோராக வெளிப்படும் இடங்கள் இன்றும் ரசிக்க வைக்கின்றன.
மரபுக் கவிதைகளின் அவசியம் பற்றி சுஜாதா கூறியுள்ளதை பலர் பிற்பாடு விரித்துப் பேசியுள்ளனர். ஆனால், தமிழ் இலக்கிய உலகத்திலிருந்து மரபுத் தமிழுக்கு ஆதரவாக எழுந்த முதல் குரலாக சுஜாதாவைப் பார்க்கிறேன். எந்தளவு அவருக்கு அறிவியல் மற்றும் நவீன மனப்பான்மை தொடர்பான அபிலாஷைகள் இருந்தனவோ அந்தளவுக்கு அவருக்கு மரபுத் தமிழின் நவீனப் பயன்பாடு பற்றியும் ஆர்வம் இருந்தது. அதற்கு கடைசி பக்கங்கள் கட்டுரைகள் மிகச் சிறந்த உதாரணம். புறநானூறு, சங்கக் கவிதைகள், ஆழ்வார் பாசுரங்கள், தேவாரம், திருவாசகம் என முத்தாய்ப்பாய் பல விஷயங்களை ரசிக்கும் மனப்பாங்கை உருவாக்கினார். சங்கப்பாடல்களை மொழிச் சுரங்கமாகக் கருதினார் என்றாலும், கவிதை ரசிகராக பல பொக்கிஷங்களை ரசிக்கக் கற்றுக்கொடுத்தார். மகுடேஷ்வரன், ஞானகூத்தன் பற்றி தனித்தனியாக எழுதிய கட்டுரைகள் இன்றும் ரசிக்கவைக்கின்றன.
நாளை மற்றொரு நாளே நாவலை black
humour வகையில் சேர்க்கிறார். அதை மிக அருமையான இலக்கியப்படைப்பு எனக் கொண்டாடி தனி கட்டுரை எழுதியுள்ளார். சம்பிரதாயமான கட்டமைப்புகளை மட்டுமே முன்வைத்திருந்த சூழலில், இப்படி ஒரு படைப்பைப் பற்றி எழுதியிருக்கிறார்.
சின்னச் சின்ன துணுக்குகள், திடீரென சொல்லப்படும் ஆப்த வாக்கியங்கள் போன்றவை (லா.சா.ராவின் பாற்கடல் படித்துப்பாருங்கள். அதற்கு ஈடானக் கதை இதுவரை எழுதப்படவில்லை) இந்த கட்டுரைகளை சுவாரஸ்யமாகப் படிக்க வைக்கின்றன. ஒருவிதத்தில் இன்றைய ட்விட்டரைப் போல, சட்டென ஒரு அபிப்ராயம், சரேலென ரெண்டு நக்கல், சூடான அடல்ட் ஜோக் என ஒவ்வொரு கடைசி பக்கமும் ஒரு தனி பத்திரிக்கை போலத் தெரிகின்றது.
மிருணாள்சென்னின் திரைப்படங்கள், சத்யஜித்ரே, ஹிட்ச்காக், ஸ்ரீதர், கிரீஷ் கர்னார்ட் என பலவகையானத் திரைப்படங்களை அறிமுகப்படுத்தியிருக்கிறார். இன்றைக்கு ஒரு சொடக்கில் கிடைக்கும் விஷயங்கள் தாம். ஆனால், சுஜாதாவின் தனித்துவமான விமர்சகங்களை நீங்கள் ஒரு சொடக்கில் பெற்றுவிடமுடியாது. அது ஒரு மனநிலை. கூர்மையான பார்வை. ரெண்டும் கலந்த கலவை. என்னுடை கல்லூரிப் பேராசியர் இருபது வருடங்களுக்கு முன்னால் சொல்வார் - எதிர்காலத்தில் data, voice எல்லாமே இலவசமாகக் கிடைக்கப்போகிறது. ஆனால் அதைப் பற்றிய நமது அபிப்ராயங்கள் நமது திறமையைப் பொருத்து மாறுபடும்.
இது சுஜாதாவுக்குக் கச்சிதமாகப் பொருந்தும். இன்றைக்கு ஒரு மிருணாள்சென்னை , சத்யஜித்ரே, ஆலன் டூரிங், நாலடியார், லா.சா.ரா, குமுதம், ஸ்டீபன் ஹாக்கிங் என எதைப் பற்றியும் நம்மால் செய்திகளை உடனுக்குடன் சேகரிக்க முடியும். ஆனால், அவற்றைக் கொண்டு நமது ரசனையை மேம்படுத்திவிட முடியாது. அவற்றைக் கொண்டாடி வழிநடத்திச் சென்றவரின் ஆவணம் இந்த புத்தகம். தமிழ் எழுத்துலகின் ஒரு அரிய சாதனைப் படைப்பு.
சுஜாதாவுக்குப் பிறந்தநாள் வாழ்த்துகள்.
புத்தகம் - கணையாழியின் கடைசி பக்கங்கள்.
எழுத்தாளர் - சுஜாதா
சந்தோஷம். "கணையாழியின் கடைசிப்பக்கங்கள்" தொகுப்பில் இல்லாதவை கணையாழியின் களஞ்சியம் என்ற மூன்று பாகத் தொகுப்புகளில் இருக்கின்றன.
ReplyDeleteசாம்பிள் கீழே:
கணையாழி களஞ்சியத்திலிருந்து -1965 -75 எஸ். ரங்கராஜன்
வெளியே மரங்கள் புயலில் கோபமாகத் தம்மைத் தாமே சவுக்கால் அடித்துக் கொண்டிருந்தன"
"போட்டோ ப்ளாஷ்கள் கணங்களை நிரந்தரப்படுத்திக் கொண்டிருந்தன"
- லென் டெய்ட்டனின் இரண்டு வர்ணணைகள் இவை.
லெய்ட்டன் எழுதுபவை "ஸ்பை" நாவல்கள்தான். இருந்தாலும் வார்த்தைகளை விளையாட வைக்கும் கவிஞர் இவர். ஒரு துப்பாக்கியைப் பற்றிப் பேசினால் அதை எடுத்துக் கையாண்டு அதைச் சுட்டுப் பார்க்காமல் எழுத மாட்டார். ஒரு இடத்தைப் பார்க்காமல் வர்ணிக்க மாட்டார்.
இந்தப் பழக்கம் நம்மில் சிலரிடம்தான் இருக்கிறது. இருக்கிறவர்கள் கூட மிக அதிகமாகக் காட்டிக்கொள்கிறார்கள். அலுக்கும் வரை. கிராமச் சூழ்நிலையை வர்ணிப்பது அழகுதான். ஆனால் தெருவில் போகும் ஆட்டுக்குட்டியை அது வடக்கு வாசல் தாண்டி துருத்தியான் தெரு மேட்டுக்கரைப் பக்கம் மறையும் வரை வர்ணித்தால் ஆட்டுக்குட்டிக்குக் கூட அலுத்துவிடும்.
**********************************************
சிவா கிருஷ்ணமூர்த்தி
இன்னொன்று:
ReplyDeleteகணையாழி களஞ்சியத்திலிருந்து -1965 -75 எஸ். ரங்கராஜன்
'தீபத்'தில் பட்டி மன்றம் என்று க.நா.சுப்ரமண்யம் அவர்களும் கு.அழகிரிசாமியும் தொடங்கி வைத்த விவாதம் நடக்கிறது. தமிழ்ச் சிறுகதை பற்றி இந்த விவாதம். சுப்ரமணியம் அவர்கள் ஒரேயடியாக `மினி ஸ்கர்ட்` போல் நல்ல எழுத்தாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்துவிட்டார். அழகிரிசாமி ஜானகிராமனை அதன் விவாத மதிப்பிற்காகப் புறக்கணித்துவிட்டார். இந்த விவாதத்தில் கலந்துகொள்ளும் மற்ற எழுத்தாளர்களுக்கு முதல் வெறுப்பு லிஸ்டில் தத்தம் பெயர்கள் இல்லாதது. கு.பா.ராஜகோபாலன் (அ.ஆ.சாந்தி அடைவதாக) எல்லாரும் குடல் ஆபரேஷன் பண்ணுகிறார்கள். செக்ஸ், ப்ராய்ட் அது இது என்று. (அவருடைய பண்ணைச் செங்கான் என்ற கதை இந்த அலசல்களுக்கு எல்லாம் அகப்படுமா?)
ஒரு விசேஷம். விவாதத்தில் ஒருத்தராவது சிறுகதைகளின் பெயரைக் குறிப்பிடுவதில்லை. இதில் நாலு, அதில் இரண்டு என்று பட்டாஸ் விளம்பரம் பண்ணுகிறார்கள். சம்பந்தப்பட்ட எழுத்தாளர்கள் புன்சிரிப்புடன் ஓரத்திலிருந்து சிறுவர்கள் சண்டையைப் போல் கவனித்துக் கொண்டிருக்கிறார்கள்.
*******************************************
நன்றி சிவா. இந்த புத்தகம் யார் வெளியிடு?
Deleteகலைஞன் பதிப்பகம் வெளியிட்ட கணையாழி களஞ்சியம் தொகுப்பு 1 ல் இருந்து. மொத்தம் இரண்டு அல்லது மூன்று தொகுப்புகள். பல "கணையாழியின் கடைசிப் பக்கங்கள்"லில் இல்லாதவை.
Deleteமிக அருமை..
ReplyDeleteவாங்க ரசனை அண்ணே!
ReplyDeleteஅருமையான பதிவு.
ReplyDeleteநன்றி.