The Valmiki Syndrome
ஆசிரியர் : Ashok K. Banker
பக்கங்கள்: 278
விலை: ரூ.250
Random House Publishers
***
வால்மீகி பெயரைப் பார்த்ததும் இது இராமாயணக் கதையோ என்றுதான் நினைத்து எடுத்தேன். ஆனால் அப்படி இல்லை. Work Life Balance என்று சொல்லக்கூடிய, வேலை செய்யும் அனைவரும் சந்திக்கும் ஒரு முக்கியப் பிரச்னையைப் பற்றிய புத்தகம் என்று தெரிந்தது. ஆங்கிலம் என்றாலும், தட்டித் தடவி படித்திடலாம்(!!) என்றெண்ணி எடுத்துப் படித்துவிட்டேன்.
தான் ஒரு குரு இல்லை, இது ஒரு சுயமுன்னேற்றப் புத்தகம் இல்லை, இதைப் படித்து நீங்கள் திருந்தவும் போவதில்லை, சும்மா படிங்க. பின்னர் உங்கள் தன்னம்பிக்கை மற்றும் முயற்சியிலேயேதான் Work Life Balanceஐ எட்டுவீர்கள் என்று முன்னுரையில் மிகவும் விரிவாகச் சொல்லிவிடுகிறார் ஆசிரியர். ஏன் அவ்வளவு பெரிய பீடிகைன்னு தெரியல. இருந்தாலும் ஒருமுறை புத்தகத்தை படிக்கலாம் என்று எண்ணி, இதை படித்து முடித்தேன்.
இராமாயணம், மகாபாரதம் - இவைகளின் அடிப்படையில் பல புத்தகங்களை எழுதியுள்ளார் அஷோக். இவை பல்வேறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு பரவலாக வாசிக்கப்படுகின்றன. புராணத்தை வைத்து சமகால பிரச்னைக்கு தீர்வு காண முயலும் இவரின் முதல் புத்தகம் இதுவேயாகும்.
மொத்தம் மூன்று கேள்விகளுக்கு நம்மை பதில் அளிக்கச் சொல்கிறார் அஷோக். ஏன் மூன்று கேள்விகள், அவை அவ்வளவு முக்கியமானவையா என்று புரிய வைப்பதற்கு மூன்று கதைகளையும் சொல்கிறார். அவற்றில் ஒன்று வால்மிகியின் புராணக் கதை. மற்ற இரண்டும் தற்போதைய சூழலில் நடைபெறும் சம்பவங்கள். இதற்கு நடுவில், புத்தரின் வாழ்க்கையிலிருந்தும் உதாரணங்கள் என ஒரு கதம்பச் சரமாக அத்தியாயங்களை நகர்த்திச் செல்கிறார்.
Work Life Balance என்றால் என்ன? சொந்த வாழ்க்கை, செய்யும் வேலை இரண்டையும் சரிசமமாக பாவிப்பது. ஒன்று, மற்றொன்றை பாதிக்கக் கூடாது. ஒன்றை கவனித்து விட்டு மற்றொன்றை விட்டுவிடக் கூடாது. இரண்டிலும் பிரச்னைகள் வராமல் சமாளித்தால் மட்டும் போதாது, அவற்றில் முன்னேறவும் வேண்டும். இதே கருத்துகளையே ஆசிரியர், புராண மற்றும் சமகால உதாரணங்களைக் கொண்டு விளக்குகிறார்
அந்த மூன்று முக்கியமான கேள்விகள் என்ன?
* நான் யார்?
* (வருங்காலத்தில்) நான் என்னவாக ஆக வேண்டும்?
* அது எப்படி ஆவது?
இந்த மூன்று கேள்விகளையும் நாம் நம்மையே கேட்டுக் கொள்ள வேண்டுமாம். தெளிவான பதில்கள் கிடைத்தபிறகு, அதன்படி நடந்தால் வாழ்க்கையிலும் வேலையிலும் வெற்றி பெறலாம் என்பது ஆசிரியரின் கருத்து.
சரி. அந்த மூன்று கதைகள் என்ன?
1. ரத்னாகர், வால்மீகி ஆவதற்கு முன் காட்டில் வேட்டை, வழிப்பறி, கொலைகளைச் செய்து தன் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார். ஒரு நாள் அவ்வழியில் நாரதர் வந்தபோது, அவரையும் ரத்னாகர் மடக்க, அப்போது நாரதர் கேட்ட கேள்வி, ரத்னாகரின் வாழ்க்கைப் பாதையையே மாற்றியது. "நீ எதற்காக இப்படி கொலைகளைச் செய்கிறாய்? உன் குடும்பத்தார்க்கு இவை தெரியுமா? இதனால் விளையும் பாவங்களை உன் குடும்பத்தார் பகிர்ந்து கொள்வார்களா?" இவற்றிற்கு விடை கண்டுபிடித்த ரத்னாகர், பின்னர் இராமாயணம் எழுதிய வால்மீகியாக மாறினார்.
2. சுஹாசினி, தன் கணவன் ரவியைவிட அதிகம் சம்பாதிப்பவர். இன்னும் மேன்மேலும் வேலையில் முன்னேறவேண்டும் என்னும் ஆசையில் கணவனையும் குழந்தையும் கவனிக்காமல் விட்டுவிட ரவி மற்றொரு பெண்ணான கரேனை விரும்பித் திருமணம் செய்து கொள்கிறான். தொழிலில் நன்கு முன்னேறிய சுஹாசினி, சொந்த வாழ்க்கையில் தவற விட்டது நிறைய என்றும் உணரும்போது காலம் கடந்துவிட்டது.
3. சாரா. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி, ஒரு வேலைக்குச் சென்றாலும், பின்னர் அதில் வெற்றி பெற்ற பெண். பின்னர், தன் குடும்பத்தைத் தேடி வந்து, அவர்களுடன் சேர்ந்தாரா இல்லையா என்பது மூன்றாவது கதை.
இந்த மூன்று கதைகளிலும், அந்த மூன்று கேள்விகளைக் கேட்டு, அவர்கள் பெற்றது என்ன, இழந்தது என்ன என்று விளக்கி அதன் மூலம் நமக்கும் செய்தி சொல்கிறார்.
இந்த உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதருக்கும் என்ன விருப்பங்கள் இருக்க முடியும்? ஒரு பட்டியலே கொடுக்குறாரு.
* செய்யும் வேலையில் / தொழிலில் மேன்மை / உயர்ந்த நிலையை அடைதல்
* சுகமாய் வாழ நிறைய செல்வம் சம்பாதித்தல்
* தங்கள் கணவன் / மனைவியுடன் சந்தோஷமாக வாழ்தல்
* வாரிசுகளை உருவாக்குதல்
* குழந்தைகளுக்கான கடமைகளை நிறைவேற்றுதல்
* சக வேலையாட்கள் / நண்பர்களுடன் நட்பு பேணுதல்
* சமூகத்தில் மதிப்புடன் இருத்தல்
* இறந்தபிறகும், பலர் நினைக்கும்படி நல்ல பெயரை சம்பாதித்தல்
மேற்சொன்னவற்றில் அனைத்தையும் ஒருவரால் தம் வாழ்நாளில் செய்ய முடியுமா? கண்டிப்பாக முடியும். எப்படி? முதலில் சொன்ன மூன்று கேள்விகளுடன் பயணத்தைத் துவக்குங்கள். இவற்றை செய்து விட்டீர்களேயானால், நீங்கள் work life balance வெற்றிகரமாக செயல்படுத்தியவர் என்று பெருமைப்படலாம் என்கிறார் ஆசிரியர்.
சுவாரசியமான / படுவேகமாகப் போகும் புத்தகம் என்றெல்லாம் சொல்ல முடியாது. இருந்தாலும், ஒரு வித்தியாசமான முயற்சியாக நினைத்துப் படித்து, இதிலிருந்து சில பாடங்களை கண்டிப்பாகக் கற்கலாம்.
***
நூல் விமர்சனமென்பது அப்புத்தகத்தை வாங்கத் தூண்டுவது மட்டுமல்ல; வாசிப்பவருக்கு அன்னூலிலில் இருந்து சில செய்திகளையேனும் தருவது எனும் வகையில் நல்லதொரு விமர்சனம்.
ReplyDelete